அந்த 49 பேர்

('பேசும் புதிய சக்தி' இலக்கிய மாத இதழ் - நவம்பர் 2019-ல் வெளியான கவிதை. கலை ஆளுமைகள், எழுத்தாளுமைகள், அறிவுத் தள ஆளுமைகள் 49 பேர், பா.ச.க அரசின் - சிறுபான்மையினர் மீதான வன்முறைக் கட்டவிழ்ப்பு, கருத்துரிமை பறிப்பு போன்றன குறித்து சான்றாதாரங்களுடன் இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். அந்த 49 பேர் மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கு ரத்து செய்யப்பட்டாலும், அவர்கள் தேசத் துரோகிகளே.)


இன்னும் உயிர்த்திருக்கிறது சங்கத்தமிழ் -
பிறக்கிறார்கள் சாகாத் தமிழ்ப்புலவோர்.
கருங்குயில் பாணர் இசைப்பாட்டு,
வசீகரக் கூத்தர் களியாட்டு,
உண்மைச்சொல் பாடினிப் பாட்டு,
நெளிந்தாடும் விறலித் தாண்டவம் –
அத்தனையும் உயிர்ப்போடிருக்கும்
இலக்கிய மாதுளையைக் கையளிக்க!
நுண்ணறிவுப் புலமைக்கு ஏது
அடைக்கும் நெடுங்கதவு?
நெற்றிக்கண் திறப்பினும்
நேர்ந்தது குற்றம் குற்றமே யென,
ஆய்வு இருட்டைக்
குலைத்த நக்கீரன்;

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
தேசபக்தி இல்லா ஒரு கவி உதித்தான்
‘பெரியோரை வியத்தலும் இலர்
பிம்பங்களைக் கட்டியமைத்தலும் இலர்’
என்றவன் ஒரு பெருமிதச் சாட்சியம்.

அவர்கள் 49 பேர்.
‘காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
சொல்வியாபாரி இலனெ’னப்
பரிசில் மறுத்த பெருஞ்சித்திரன் ;
“எத்திசைச் செல்லினும்
அத்திசைச் சோறே”
என வன்பாட்டுப் பாடின
அவ்வைப் பெருமாட்டி;

பிழைக்கத் தெரியா, பீடம் போற்றாப்
புலமை ஆயுதத்துக்கு
மூடுவிழா இல்லை அன்று.
வாய்ச்சொல் பொய்க்காத வலியோர்
பிடரியில் புத்தியைச் சுமந்ததுமில்லை !

பரணர், அவ்வை, கபிலர், பூங்குன்றன்,
நக்கீரர், நச்செள்ளை, நப்பின்னையாய்ச்
சிந்திப்பைச் சாகாது காத்த
அந்த 49 பேர்.

புழுப்போல் நெளிகின்றன
இவர்கள் வார்த்தைகள் எனப்
புருவம் நெறித்தது அதிகாரக் கட்டில் ;
புழுக்களும் பரிமாணம் கொள்ளும்
பட்டாம் பூச்சிகளாய்!
வானளாவிய அதிகாரத்தையும்
கிழித்துப் பறக்கும் பருந்துகளாய்!

பிம்பங்கள் அறியுமோ பறத்தலின் சுதந்திரம்?
‘இம்’ என்றால் சிறை;
‘ஏன்’ என்றால் வனம் ;
ஈராயிரம் காலத்தின்
முன்னிருந்ததில்லை.
பூச்சாண்டி காட்டுபவர்களை ஏற்றதில்லை,
அறிவின் குழந்தைகள் 49 பேர்.
கொட்டும் மழையில் கப்பல் விட்டுச்
சிரித்து மகிழ்பவர்கள் அல்லர்;
எதிர்த்திசைக் கப்பல் செலுத்தி
திசையெங்கும் கேள்வி நங்கூரமிட்டுக்
காத்திருக்கிறார்கள் -
அந்த 49 பேர்;
தேசத்துரோக குற்றத்துக்காய்!

- சூரியதீபன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்