2013 டாப் 10 பிரச்னைகள் - மாணவர்கள் போராட்டம்

இந்திய வரலாற்றில் 1847-ம் ஆண்டு நடந்த 'பிளாசி யுத்தம்’ ஒரு திருப்புமுனை. இந்தியாவை அடிமைப் பிரதேசமாக ஆக்கியது அந்த 1847. பிளாசி யுத்தத்தில் மன்னர் சிராஜ் உத்தௌலாவை வெற்றிகொண்ட பிரிட்டிஷ் தளபதி ராபர்ட் கிளைவ், 144 சிப்பாய்களுடன் நகரைக் கடந்துபோகிறான். வெறும் 144 சிப்பாய்கள். மக்கள் வீதிகளில், வீடுகளில், சன்னல்களில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க நகரைக் கடந்த கிளைவ், 'அப்பாடா, இப்போதுதான் உயிர்வந்தது. கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து வீசியிருந்தால்கூட நாங்கள் அத்தனை பேரும் இல்லாமல் போயிருப்போம்’ என்றான். வரலாற்றின் முக்கியமான சந்திப்பில் மக்கள் செயலற்று நின்றார்கள். முதல் கல்லெறிதலைச் செய்து ஒருவர் வழிகாட்டியிருந்தால், மற்றவர்கள் தொடர்ந்திருப்பார்கள். வரலாற்றில் வாழுதல் என்பது, இந்த முதல் கல்லெறிதல்தான்!


இலங்கையில் 1956-ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டம் வந்தது. எதிர்ப்புக் குரல் எழுப்பி யாழ் பல்கலை மாணவர்கள் ஊர்வலம் எடுத்தார்கள். 1976-ல் கல்வியில் தரப்படுத்துதலை சிங்களப் பேரினவாதிகள் புகுத்தியபோது உதித்தது, தமிழ் மாணவர் பேரவை. எந்த ஓர் அரசியல் கட்சியின் துணையும் இன்றி கிளர்ந்தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை, யாழ்ப்பாண நகரிலும், தமிழ்ப் பிரதேசத்தின் மற்ற நகர்களிலும் தெருவுக்குத் தெரு, சந்திக்குச் சந்தி, வீட்டுக்கு வீடு மக்கள் மதிப்போடும் ஆர்வத்தோடும் வரவேற்று மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கி ஆதரவு அளித்தனர்.

1965 சனவரி 26, 'இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழி’ என அறிவித்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்தத் திணிப்பை எதிர்த்து தமிழகம் கிளர்ந்து எழுந்தது. எந்த மாநிலத்துக்குள்ளும் புகுந்திராத ராணுவம் முதன்முதலாக தமிழகத்தில் நுழைந்தது. அந்த 65-ன் உணர்வுத் தீ, 50 ஆண்டுகள் கடந்தும் அணைந்துவிடவில்லை என்பதை, இந்த ஆண்டு தமிழகக் கல்லூரி மாணவர்களின் உணர்வெழுச்சியின்போது கண்டோம்!

கையளவு ரொட்டித்துண்டைத் தன் கடைவாயில் ஒதுக்கிய பாலகன் பாலசந்திரன் வியப்பில் நோக்கிய விழிகளில் மரணத்தை வைத்தது யார்? கைதுசெய்து பங்கருக்குள் வைக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுட்டுக் கொல்லப்படுகிறான். 'பாதுகாப்பு வளையம் - இலங்கையின் கொலைக்களம்’ என்ற தனது ஆவணப்படத்தில் இருந்து இந்தக் காட்சியை வெளியிட்ட கெலம்மெகரே, 'இப்போது ஐ.நா. மனித உரிமை அவையில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத்தான் எங்கள் கவனம்’ என்றார். 12 வயதுப் பாலகனின் சடலம் இந்திய அரசின் மனசாட்சியைத் தொட்டதோ இல்லையோ, இங்குள்ள மாணவர் இதயங்களில் நெருப்பை மூட்டியது. லயோலா கல்லூரி மாணவர்கள் கொளுத்திப் பிடித்த முதல் கங்கு, தமிழகம் நெடுக நெடுந்தீயைப் பற்றச்செய்தது.

எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல், அதேநேரம் அனைத்துக் கட்சிகளையும் அந்நியப்படுத்தி மேலெழுந்தார்கள் மாணவர்கள். இது முதல் சாதனை. மாணவ எழுச்சி, தன்னைத் தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிந்து விடுமோ என்ற நடுக்கத்தில், நடுவண் அரசின் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வேகவேகமாக விலகிவந்தது தி.மு.க. இது அடுத்த சாதனை. 'தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இனப் படுகொலையாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பன்னாட்டு விசாரணை நடத்திட ஐ.நா. முன்வர வேண்டும்’ எனும் சிறப்பான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தது மூன்றாவது வெற்றி. போராடும் தம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக, அவர்களின் பெற்றோரும் உடன் இருந்தது இதுவரை காணாத காட்சி!

ஈழத் தமிழருக்கு உண்மையாகக் குரல்கொடுக்க எவரும் இல்லை என்ற கொடுங்கனவின் காலத்தில் தமிழக மாணவர்கள் பிறப்பெடுத்தார்கள். ஆனால், தக்க தலைமை இல்லாமல் அந்தப் போராட்டம் ஒரு கட்டத்துக்குப் பிறகு தணிந்துவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கான சமூக ஆய்வையும் மாணவ சக்தி ஆராய்ந்திட வேண்டும். இங்கே தனித்தீவாக ஒடுக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் தலித்கள். ஒடுக்குமுறைத் தீவில் இருந்து சகமனிதர்களை விடுதலை செய்ய, போராட்டக் கருவியைக் கூர்மைப்படுத்த மாணவ சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும்.

அரசியல் இயக்கங்கள் போல நாற்காலிக் கனவுகளில் மாட்டிக்கொள்ளாமல், இங்குள்ள அடித்தள மக்களின் விடுதலைக்கும் களம் அமைக்க முன்வரவேண்டும் மாணவர்கள்!''

- விகடன் 1 ஜனவரி 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்