பா.செயப்பிரகாசம் பற்றி ஓவியர் பல்லவன்கி.ராஜநாராயணன் கரிசல்மண் கதைகளுக்கு ஏர் பூட்டினார். அந்த மண்ணில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்த படைப்பிலக்கிய பாதிப்பால் பேனாக்கள் துளிர்விட ஆரம்பித்தது. பூமணி, வீர வேலுச்சாமி, பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் என நீண்ட பட்டியலில் இடம் பெறுபவர் பா.செயப்பிரகாசம் என்கிற சூரியதீபன்.

1971 காலத்தில் அவர் எழுத ஆரம்பித்தாலும் எனக்கு 1982இல் அவரின் வாசிப்பு வாசல் திறக்கப்படுகிறது. நான் தீவிர வாசகன் இல்லை. மேடைப் பேச்சுகளில் மூழ்கி திளைப்பவனில்லை..... ஆனால் கலை ஈடுபாட்டின் உந்துதலால் நல்ல சொல் ஆளுமைகளின் மேல் ஈர்ப்பு உடையவன் மாணவப் பருவத்தில் அங்கீகரிக்க பட்ட பாட நூல்களால் காயப்பட்டவன். சராசரி மாணவனுக்கும் கீழ் இருந்ததால் பள்ளியும் பாட ஆசிரியர்களும், பாடம் என்ற பெயரால் எனக்கு நிறைய கசப்பு அனுபவங்களை போதித்து வந்தனர். அது என் துரதிருஷ்ட காலமானது. ஆர்வமில்லாத வார்த்தைகளால் வகுப்பறைகள் நீர்த்துப் போயின. ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த பூமரங்கள், கற்கோயில்கள் எனக்கு விருப்பப்பாடம் ஆயின. இயற்கை வெளி வானம், ஏரி, ஆறு. குளம் என எல்லாமும் மகிழ்ச்சி உண்டாக்கியது. அப்போது எழுத்து பழகும் என் விரல்களை, ஓவியம் தத்து எடுத்துக் கொண்டது. நான் பட்ட சந்தோஷங்களை, காயங்களை துடைத்தெறிய தூரிகை தேவைப்பட்டது. வரைகின்ற கோடுகளே என் உணர்வுகளின் வடிகால் ஆனது... வடிவம் தந்தது.

சந்தோஷமாக இருக்கும்போது பூக்களும் துக்கம் தொண்டைக்குழிக்குள் முகாமிடும் போது , வானம். நதி, கடல் என வரைதலில் மனது தொலைத்தேன்.

அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்பவர்களை விட... பசுமை படர்ந்த
மனிதர்களும் ... மனுஷிகளும் தேவைபட்டார்கள். அதுதான் நான் இன்றுவரை எல்லோர் மீதும் வைத்திருக்கிற உறவு கொள்கை!

டேனிஷ் மிஷன் பள்ளியில் எனக்கு பணி கிடைக்கும் முன்பும் , பின்பும் , மாணவ பருவத்திலிருந்து, என்னை என் ஓவியக் கூடத்தை, நிழலாய் தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் பவா என்கிற இன்றைய கதைசொல்லி! அவன் என் வாசிப்பு தன்மைக்கு உயிரூட்டிய வன். அன்று ஒரு ஜெருசலேம் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து, பா.செயப்பிரகாசம் அவர்களைப் பற்றிக் கூறினான்.... ஒரு மாயக் காரனை போல் மயக்க வார்த்தைகளால், பா.செயப்பிரகாசம் "பவா" வாயில் பிரசன்னமானார்! சிறு கதைகளை படிக்க படிக்க கவிதையாய் விழுகின்ற வரிகள் என்னை கரிசல் மண்ணுக்கே அழைத்துச் சென்றது. கதை மாந்தர்கள் மனக்கசிவில் ஓவியமாய் உருவெடுத்தனர்.கடும் இருட்டைக் கூட கிழித்தெறியும் மெல்லிய வெளிச்சக் கீற்று எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் என் மனதில் ஊடுருவியது. அவரின் சிறுகதைகள் மனிதவாழ்வின் துயர நெடிகளை சொல்லாமல் வாசகனே உணர்ந்து கொள்ளும் தன்மையை உருவாக்கி தந்தது. என்னைப்போல் சிறுவயதில் தாயை, இழந்த குமாரசாமியின் கண்களில், அக்னி ரூபம் இன்னும் அனல் வீசுகிறது. சுடு சாம்பல் மீது அம்மா சாம்பலாணி நினைவு ... தாய் இல்லாத குழந்தைகள் நெஞ்சில் நெருடல் ஆகிறது. அம்பலக்காரர் வீடு மக்களையும் மண்ணையும் இணைக்கிறது. கதை தளத்தை அவரவர் மண்ணுக்கு ஏற்ப. அவர்களது வட்டார மொழியை வாழ்வை உணரவைக்கிறது. கரிசல் மண்ணில் பிசைந்த ஈரம், திருவண்ணாமலை, வடாற்காடு என் பூர்விக கிராமமான மின்னல் நரசிங்கபுரம் வரை மக்களின் இயல்பு நிலை வாழ்வை பிரதிபலிக்கிறது.

தான் வாழ்ந்த மண் வாசத்தை, துயரக் கீதமாக, மனம் கனத்த வரிகளால் கவிதையை போல் சமைத்து தருபவர்களில் என்னை மிகவும் கவர்ந்தார். வசவுகளை, சொலவடைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, நெஞ்சுக்கூட்டில் மின்னலைப் போல் இறக்குகின்றார். தனக்கென ஒரு எழுத்தின் உயிர்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு அரசு ஊழியராக இருந்து, படைப்பு மொழியை உணர்ந்துள்ளார் என்பது ஆச்சரியம் மூட்டியது.

எழுத்துக்கள் மூலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த பா.செயப்பிரகாசம் தோழர் தா.மா.பிரகாஷ் மூலம் திருவண்ணாமலை, ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில், 38 ஆண்டுகள் கழித்து நேரில் அறிமுகமாகிறார். முதல் முதலாய் ஜெருசலேம் சிறுகதைத் தொகுப்பில் அட்டையில் பார்த்த அவர், உருவ தோற்றப்பிழை இளமையின் கோலத்தைக் கலைத்திருந்தது. வயதின் முதிர்வு நிலை பருவ மாற்றத்திற்கு நுழைந்து இருந்தது. கதைகளை நினைவு கூற... புன்முறுவல் முகத்தில் பூத்தது. என் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுகிறார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில், மணல் நாவல் வெளி வருவதாகவும் கூறுகிறார். இருவரின் உள்ளங்கை பற்றலிலும், வார்த்தைகள் சப்தமின்றி, நரம்பின் வழியே ஊடுருவுவதை உணர்கிறேன்!
வாய்வழியே பேசும் வார்த்தைகளுக்கு, வலுவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறோம். எங்களின் மௌனம் கூட, அந்த நேரத்தில் கண்களால் மொழி பெயர்க்கப்படுகிறது ..... அன்றைய எனது ஓவிய பார்வை அவருக்குமானது! வழிந்தோடும் ஈரப்புன்னகையோடு விடைபெறுகிறேன்... அதன் தொடர்ச்சிதான்... அவரின் இந்த ஓவியமும்.

- பல்லவன் முகநூல் பதிவு - 27 ஜனவரி 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்