“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்


கார்ப்பரேட் பன்னாட்டு கும்பல்களின் லாபவேட்டையிலிருந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உலகமெங்கும் செங்கொடி இயக்கம் களமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மார்க்ஸ் முதல் இன்றைய மார்க்சிய வாதிகள் வரை, கம்யூனிஸ்டுகளுக்கு சூழலியல் குறித்து ஞானமில்லை என்கிற பல்லவியைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் கூட்டத்தை நாம் பார்த்து வருகிறோம். இயற்கையழிவை கொண்டாடும் கூட்டமாகக் கம்யூனிஸ்டுகளை சிலர் சித்தரிப்பதில் உவகை அடைகின்றனர். இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கு இரையாகுவோரும் உள்ளனர். இத்தகைய சூழலில் சூழலியல் குறித்து மார்க்சிய சிந்தனைகளை, கோட்பாடுகளை உரையாடுவதும் விவாதிப்பதும் அவசியமாகும். மேலும் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களை, கள அனுபவங்களைத் தொகுப்பதும், புனைவாக்குவதும் இன்றைய தேவை. அந்தத் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆற்றை, ஆற்றுமணலை கொள்ளையடித்த அதிகாரவர்க்கத்தை எதிர்த்துப் போராடிய நிகழ்வுகளை மிக நுட்பமான சொள் கொண்டு “மணல்” நாவலை எழுதியுள்ளார் பா. செயப்பிரகாசம்.

 “ஒரு ஆறு உண்டாக எத்தனை ஆண்டுகளாயிருக்கும்? ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாயிருக்குமா? மூவாயிரம் ஆண்டுகள் சேர்த்து வைத்த மணல் அடுக்குகளை, தண்ணீரெனும் வெள்ளத் தங்கத்தை பத்து ஆண்டுகளில் தோண்டித் தீர்த்த பாதகரை எதிர்த்துக் களமாடும், இன்றும் களமாடும் போராளிகளுக்கு” காணிக்கையாக்கப்பட்டுள்ளது “மணல்” நாவல். ரத்தமும் சதையுமாக உயிரைக் கொடுத்து நிகழ்காலத்தில் கரிசல் மண்ணில் உழைக்கும் மக்கள் நடத்திய, போராட்டத்தைக் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பைப் பக்குவமாக எடுத்தாள்கிறது நாவல். இயற்கை குறித்து, மனித சமூகம் பரிணமித்த வரலாற்றுப் பாதையை கம்யூனிஸ்ட்கள் பார்க்கும் பார்வைகளை நாவலை வாசிப்போர் உணரமுடியும். “பாளை சீவினால் பதநீர் சுரக்கும் என முதலில் தெரிந்து கொண்டவன் பெரிய விஞ்ஞானியாக இருப்பான். வாழ்வின் ஞானி அவன்தான். நியூட்டன் மரத்துக்குக் கீழிருந்து கண்டுபிடித்த அதிசயத்தை, இவன் மரத்துக்கு மேலிருந்து கண்டுபிடித்தான். மரத்திலிருந்து விழுந்த பழம் நியூட்டனுக்கு புவியீர்ப்பு விசையைக் காட்டிற்று. பனைமரத்தின் மேலிருக்கும் பாளை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காற்றுக்கு உரசி முறிந்து சொட்டுப் போட்டிருக்கும். இல்லையெனில் பறவை, அணில் கொறித்துப் போட்டு முனையிலிருந்து நீர்ச்சொட்டு உதிர்ந்திருக்கும். பார்வையில் கண்டு, நாக்கால் அண்ணாந்து ஏந்திச் சுவைத்திருப்பான். பிறகுதான் கலயத்தில் சேமிப்பு ஆரம்பித்த சரித்திரமெல்லாம்” என்பது இதற்கோர் எடுத்துக்காட்டு. போராட்டவரலாற்றைச் சொல்வதன் ஊடாக இயற்கையோடு இயைந்த மனிதவாழ்வை பழமொழிகள், சொலவடைகள், இயற்கைவைத்தியம் ஆகியவற்றை பொருத்தமான இடங்களில் கதைமாந்தர்கள் வழி பேசவைத்துள்ளார் செயப்பிரகாசம். இது வாசிப்பை சுகமாக்குவதோடு மனிதவாழ்வை ரசனைமிக்கதாக்குகிறது. போராட்டக்களம் எப்படியிருக்கும் என்பதை ஒவ்வொரு படியாக வளர்த்தெடுத்து அதற்குத்தகுந்த ஆவணங்கள் அத்தாட்சிகள் ஆகியவற்றை நாவலின் வாசிப்புக்கு இடையூறில்லாமல் கட்டமைத்துள்ளார் நூலாசிரியர். சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதிய ஒடுக்குமுறை, பெண்ணடிமை, அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறை அதையெதிர்த்து நடைபோடும் மக்களின் வாழ்வியல் “மணல்” நாவலெங்கும் விரவியிருக்கிறது. ஓட்டுக் கட்சியாக இல்லாதவர்களைத் தான் அதிகார வர்க்கத்தால் வளைக்க முடியாதென போகிறபோக்கில் நாவலின் ஓரிடத்தில் சொல்லிச்செல்வது போராட்டக்களத்தை சுருக்கி பார்ப்பதாக உள்ளது. “முதுமையொரு பறவைகளில்லா மரம்; ஊர்வன, நடப்பன என விலங்குகள் நடமாட்டமில்லா வனம்; வனப் பயணியரும் யாத்திரீகரும் வந்து சேராத திசை; கட்டுமரம், தோணி, படகு, நாவாய், கப்பல் என மிதப்பன எதுவும் இல்லாக் கடல். ஒரு திசைப்பயணமே இனியுண்டு. நினைவுகளெனும் பழம்பாத்திரத்தை விளக்கி, தேய்த்துப் பளபளப்பாக்குவதல்லாமல் வேறேதும் புதிதுபுதிதாய்ப் படைக்கவியலா நிலை.” என நாவலின் ஓரிடத்தில் முதுமை குறித்து செயப்பிரகாசம் எழுதியிருப்பார். ஆனால் “மணல்” நாவலை உயிர்ததும்பும் வார்த்தைகளால் உருக்கொடுத்து சமகால இளையதலைமுறையை தனது எழுத்தின்வழி சவாலுக்கு அழைப்பதில் வெற்றிபெற்றுள்ளார் மூத்த எழுத்தாளர் செய்பிரகாசம்.

- ஜி.செல்வா
- தீக்கதிர் 13 ஜனவரி 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி