குஷ்டரோகிகள்

சமூகத்திலிருந்து, மனித நேய உறவுகளிலிருந்து விலகிப்போன தொழுநோய் மனப் போக்காளர்களை வைத்து சோதனைமுறையில் எழுதப்பட்ட ஒரு கதை இது. உலகில் பாதியைச் சப்பித் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என ’கரோனா தொற்று’ நட்டுக்க நிற்கும் காலத்தில், தொற்றுநோய் குறித்த (Epidemic) கதைகள் தொகுப்பினை வெளியிட வேண்டுமென பிரான்சிலிருந்து வெளியாகும் France-based Editions Jentayu இதழ் விரும்பியது. தமிழிலிருந்து எனது இக்கதையைத் தேர்வுசெய்து அண்மையில் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இந்த சிறப்புத் தொகுப்பு மின்னிதழாக வெளியாகவிருக்கிறது. ’டைபாய்டு காய்ச்சலால்’ உயிர் பறிக்கப்பட்ட ஏழைச் சிறுமியின் கதை 1977-ல் கண்ணதாசன் இலக்கிய மாத இதழில் வெளியானது.

- பா.செயப்பிரகாசம் (28 ஏப்ரல் 2020)



மதுரையிலுள்ள மாமா வீட்டில் இருந்து அப்பாவுக்கு அவன் எழுதினான்,
”தங்கை விஜிக்கு உடம்பு சரியில்லை என்றால் மதுரைக்கு கூட்டி வந்து விடுங்கள், தாமதப்படுத்த வேண்டாம்” எழுதி ஒரு மாதம் ஆகிறது. பதில் வந்திருந்தால் இவ்வளவு சோகங்கள் அரங்கேறி இருக்க வேண்டாம்.

அந்த சிறுமிக்கு எல்லாத் தண்டனைகளிலும் அதுவே கொடுமையானதாக இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு பெண். அவளுடைய உடலின் எல்லா பாகங்களிலும் டைபாய்டு ஜுரம் ஊடுருவிக் கொளுத்தியது. ஜுரத்தின் வெப்ப அலைகளில் படுக்கையில் அங்குமிங்கும் மிதந்தாள். அதன் வேகத்தில் ஒவ்வொரு நிமிசமும் பொசுங்கி எலும்புகள் மட்டுமே மீதியாகக் காட்சியளித்தன.

இருள் போர்த்தியிருந்த சின்ன அறை, ஒளிக்கு தண்டனை கொடுத்தது போல் சன்னல் கம்பிகள் இடையே சிறிது வெளிச்சம் நுழைய அனுமதித்து இருந்தார்கள். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அவளுக்கு கட்டளையிட்டு இருந்தார்கள். ”டைபாய்டு ஜுரம் வெளியே போனால் மீறிடும் கண்ணே" என்று அப்பா கண்ணீருக்கிடையே சொன்னார்.

வயதுக்கு மீறிய சிறைத்தண்டனை; சில நாட்களில் ஜன்னல் முழுதுமாக திறந்துவைக்கப்பட்டது. அந்த வேளைகளில் ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே உள் முற்றத்தின் மேலே பொங்கிப் பிரவகிக்கும் மழைக் கால மேகங்களை அகன்ற விழிகளால் பார்த்துக் கொண்டிருப்பாள். மேகங்களுடன் மௌனமான மொழியில் பேசிக் கொள்வாள். அவளுக்கும் கார்கால மேகங்களுக்குமிடையே சில காலத்திற்குள்ளேயே ஒரு சௌந்தரிய மொழி உருவாகியிருந்தது.

வெளியில் வெயிலும் மழையும் மாறுகிற உலகில் கால் வைத்து நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஒரு காலையில் அவள் எழுந்து உள் முற்றத்துக்கு வந்தபோது, இரவு பெய்த மழையில் பூமி நனைந்திருந்தது. இரவு முழுதும் பூமி வானம் பூமிக்கு முத்தம் கொடுத்து ஓய்ந்திருக்க வேண்டும். ஏனெனில் வானத்தில் நட்சத்திரங்களே மீதியில்லை.

அவளால் நடக்க முடியவில்லை. ரத்தவிருத்தி இழந்து சோகை பிடித்த உடல் நடக்கையில் காற்றில் மிதப்பது போல் இருந்தது. மழைக்கால மேகங்களின் கீழே இப்படி ஒரு மழையில் அவள் நனைந்தது எவ்வளவு காலமாயிற்று. விஜயம் பின் கொல்லைக்குப் போனாள். ராத்திரித் தூறலில் குளித்த தக்காளியும் பச்சைச் செடியும் மினுமிப்போடு அவளைப் பார்த்தன. சிறுமி அந்த இனிய குளுந்த செடிகளை தொட்டாள்.

அவளுக்குத் தாய்மை விரல்கள். எதைத் தொட்டாலும் அதில் ஒரு ஆறுதல் பிரவகிக்கும்.

கடந்த ஒரு மாத காலமாய் அவளுக்கு அந்தச் செடிகளுடன் சம்பந்தமில்லாமல் போனது. அவளின் விரல்களின் அர்த்தத்தை ஒரு தொடலில் புரிந்துகொள்ளும் அவருடைய குழந்தைகள் அல்லவா! ஒரே இரவின் மழையில் கம்பீரம் கொண்ட செடிகளை பார்த்து சிறுமியின் இதயம் விம்மியது.

“ நீ வெளியே போகக்கூடாது மகளே.. டைபாய்டு ஜுரம்; உடம்பு குணமானதும் நாம எங்கெல்லாம் போகலாம், படுத்துக்கோ”

அப்பா அவளை மயில் தோகையைக் கைகளில் ஏந்துவது போல் ஏந்தி மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தார். ”உனக்கு என்ன வேணும்மா?” அவர் கேட்டார்.

”நிறைய எல்லாம் சாப்பிடணும்பா”

”சாப்பிடலாம். விஜயத்துக்கு எல்லாம் வாங்கலாம், காய்ச்சல் தீந்த உடனே என்னெல்லாம் வாங்கலாம்”

அப்பா அவளுடைய ஒரே இரட்சகர். அந்த இருண்ட அறைக்குள் அப்பாவை பார்க்கிறபோது என்னை எடுத்துக்கொள் என்று அவளுடைய பார்வை சொல்லும். ஒரு மாத காலமாய் உணவு வகைகளையே கண்ணால் காணாமல், திரவ உணவை அருந்தி தாகமும் பசியும் கொண்ட நாக்கும், ஏக்கம் கொண்டு உள்ளடங்கி போன கண்களும் அப்பா உள்ளே நுழைகிற போதே ’என்ன வாங்கிக் கொண்டு வந்தாய்’ என்று கேட்கும்.

லட்சுமிபுரத்து செல்லையா பண்டிதன் தான் வைத்தியம் பார்த்தான். அம்மாவுக்கும் முதலில் இந்த வீட்டில் அவன் வைத்தியம் பார்த்தான். ஒரு உயிர் புதைகுழிக்குப் போனபின் மீண்டும் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க அவன் பயந்தான். ஆனாலும் அவனை விட்டால் சுற்றுப்பட்டில் வேறு ஆள் இல்லாமல் போயிற்று. மூன்று வயதிலே அம்மா போனபிறகு ஒரே நேரத்தில் அன்னையையும் தாய் பாசத்தையும் இழந்த சிறுமிக்கு அப்பா தான் எல்லாமுமாக இருந்தார்.

֎

இருள் மூடிய பகல் நேரமது. படுக்கையில் கையும் காலையும் நிலையற்றுப் போட்டபடி ஜுரத்தின் கணப்பில் அந்த உடல் வசமற்றுப் புரண்டது. இதயத்தை துயரமய் வருடும் முணகல் சக்தியில்லாமல் வெளியானது.

இருள் கரி திட்டுத்திட்டாய் படிந்த கட்டிலின் அருகில் உட்கார்ந்த படி இன்னொரு உருவம் துயர நிலையில் அமர்ந்திருந்தது. அவருடைய கனிந்த கண்களுக்கிடையில் மகளை அருவமாகத் தான் அவரால் பார்க்க முடிந்தது.

அறைக்கு வெளியே பெரியப்பா வந்து நின்றார். திரும்பிப் பார்க்காமலே அவருடைய வருகையை அப்பாவால் உணரமுடிந்தது. பழையபடியே உட்கார்ந்த நிலையில் அசையாமல் அப்பா கேட்டார், ”எனக்கு ஒரு பதினஞ்சு ரூபா வேணும். குழந்தைக்கு சாத்துக்குடிப் பழம், மருந்து வாங்க என் கையில் ஒரு காசு இல்ல”

பெரியப்பாவிடம் இருந்து பதில் இல்லை. சிறிது நேரம் கழித்து பிசிரற்ற குரல் வந்தது ”என்கிட்ட ஏது பணம்?”

அப்பா திரும்பிப் பார்க்கவில்லை. திரும்பிப் பார்க்காமலேயே எல்லாவற்றையும் அவரால் ஜீரணிக்க முடிந்தது; 50 வருசத்திய ரத்த தொடர்பு நொறுங்கி உதிர்வது தெரிந்தது. எதிர்பாராத நிலையில் ஆவேசம் கொண்ட குரல் அப்பாவிடமிருந்து வெடித்தது. அந்த சத்தத்தைக் கேட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி அதிர்ந்து அசைந்தாள்.

”ஊரெல்லாம் வட்டிக்கு விளையாட விட்டிருக்கியே, அந்தப் பணம் என்னாச்சு? மில்லில் வேலை எழுதிக் கொடுத்துட்டு ஐயாயிரம் ரூபா கொண்டு வந்தியே, வீட்டுக்கு வீடு வட்டிக்குக் கொடுத்து வாங்கிறயே, அது எங்க போச்சு?”

அப்பா கத்தினார். அவர் உடம்பு சூடு பரவி கொதித்து ஆடியது.

எதிர்த் தரப்பில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் இருந்தது. சலனமேதுமில்லாமல் பெரியப்பா சொன்னார் ”அதெல்லாம் ஒன்னும் வரலே. எல்லாம் பால்மாடு வாங்கி, வியாபாரத்தில் முடங்கியிருக்கு. வெளியில் விட்டது ஒன்னும் வரலே”

வெறிகொண்ட கத்தல் அப்பாவிடமிருந்து வெடித்தது ”இன்னைக்கு காலையில ஏகாலி நூறு ரூபா கொடுத்துட்டுப் போனானே, அது எங்கே?”

“கையிலே பணம் இல்ல, இருந்தா கொடுக்காம என்ன?”

நீர் வழியத் துடித்த கண்களுடன் அப்பா பொறுமலுடன் வெடித்தார் ”என் குழந்தை உயிருக்கு மன்றாடிட்டுக் கெடக்கு. உன்னால கொடுக்க முடியுமா முடியாதா?”

இந்த மண்ணின் குண விசேடம் எல்லா இரத்தத்திலும் ஊறிப்போயிருந்தது. ஒருவரை ஒருவர் யாரென மறந்து நடந்து கொண்டார்கள். தன்னை மறந்து குழந்தைகளைப் போல் திட்டிக் கொண்டார்கள். மனதை இறுகக் கட்டிக்கொண்டு போல் பணத்தை மடியில் இறுகக் கட்டிக்கொண்டு பெரியப்பா எந்த சலனமும் இல்லாமல் வெளியேறினார்.

உஷ்ணத்தால் பளபளப்பேறிய கண்களுடன் அப்பா கத்தினார் ”நீ நாசமா போவடா, என் குழந்தையை வேதனைப்பட வைக்கிற நீ நல்லா இருக்க மாட்டே” அப்பா கத்தியது தெருவில் கூடியிருந்தோர் காதுகளிலும், வெளியேறிக் கொண்டிருந்த பெரியப்பா காதிலும் விழுந்தது.

֎

ஒளியின் கதிர்களே செல்லாமல் மூச்சு மண்டிய அறைக்குள்ளிருந்து அந்தப் பூவுடலை வெளியே எடுத்துப் போட்டிருந்தார்கள்; நான்கு சுவரின் பிரதேசத்திலிருந்து இன்றைக்குத்தான் அந்த உடலுக்கு வெளியுலகின் சுவாசம் கிடைத்தது. இரண்டு மாதங்கள் நோய் பூத்துப் பூத்து பாரித்து அலர்ந்த உடல் தொட்ட இடமெல்லாம் நெழுநெழுத்தது. வெள்ளரிப் பழம்போல் தொட்டவுடன் தோல் கசிந்து வந்தது.

எண்ணை தடவிய பெரிய வாழை இலையில் அந்தச் சிறுமியின் மேனியை இன்னொரு சிறிய வாழை இலை போல் கிடத்தினார்கள்; சுற்றிலும் வாழை இலையை வைத்து இறுகக் கட்டினார்கள். விழிகள் விரிந்திருந்தன. அப்பாவின் வருகைக்காக ஆரஞ்சுப் பழம் கேட்டு காத்திருக்கும் விழிகள். உள் நுழையும் போது அப்பாவிடம் என்னை எடுத்துக்கொள் என்று சொல்லும் பாவனையில் சிறகு விரிக்கும் கைகள். இப்போதும் அந்தக் கோலத்துடன் விரிந்திருதன.

தொட்டிலும் இல்லை, பாடையும் இல்லை, வாழையிலையில் சுற்றினார்கள். மழக்காலத் துளிகளில் நனைந்து அலைய ஆசையுள்ள ஒரு சிறுமிக்கும், இளங் கனா மலரும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடைப்பட்ட பருவம்; ஆதலால் தொட்டிலும் தேவையில்லாமல் பாடையும் தேவையில்லாமல் போனது. சுற்றிய வாழை இலைக்குள் பொதிந்த வாழைப் பூவைக் கையில் ஏந்துவது போல் முறைமாமன் சிவகுரு பிரேதத்தை கையில் ஏந்திக் கொண்டான். வீதி வழி அந்தச் சிறு சடலம் செல்கையில் முந்தானையால் வாய்பொத்திக் கொண்டு பெண்கள் அழுத கோலத்தில் வீதி நிறைந்தது. சோகம் உருகி ஓடிய அந்த ஊர்வலத்தின் கடைசியில் பெரியப்பாவும் நடந்து போனார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்