தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்
மிகத் தெளிவான, அழுத்தமான வெளிப்படையான அரசியல் பார்வை கொண்ட படைப்பாளி பா.செயப்பிரகாசம். இடதுசாரி இயக்கத்தில் 60களின் பிற்பகுதியில் “வசந்தத்தின் இடிமுழக்கம்” எனப் புறப்பட்ட நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் வேர் பிடிக்கத் தன் பங்கைக் களத்திலும் இலக்கியத்திலும் குறைவற ஆற்றியவர் ஜே.பி என இலக்கிய வட்டாரத்தில் அன்புடன் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம். அவ்வியக்கத்தின் இலக்கிய இதழான ’மனஓசை’ யின் ஆசிரியராக 1981 முதல் 1991 வரை பத்தாண்டுகாலம் இயங்கியவர். மக்கள் கலாச்சாரக் கழகம் என்கிற அமைப்பின் முன்னோடியாகச் செயல்பட்டவர். 2014இல் வெளிவந்த அவருடைய “காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்” என்கிற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்:” எதற்கு முன்னுரிமை தருவது? படைப்புக்கா? பணிக்கா? இரண்டுக்கும் என்பது என் பதிலாக இருக்கிறது”
அப்படித்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறார். களம், இலக்கியம் இரண்டுமே தனித்தனியாகவே முழு வாழ்வையும் பலி கேட்கும் இயக்கங்கள். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் என்று முடிவெடுத்தால் அதற்குரிய பாதிப்புகள், பலவீனங்கள் இரண்டிலும் இருக்கும்.
அதே சமயம் இரு அனுபவங்களும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் வாய்ப்பும் நேர்மறையான அம்சமாக இருக்கும். பா.செயப்பிரகாசத்தின் பிற்காலச் சிறுகதைகளில் வெளிப்படும் கண்ணோட்டம் அவருடைய அரசியல் இயக்கம் அவருக்குத் தந்தது. முதல் மூன்று தொகுப்புகளின் (ஒரு ஜெருசலேம், காடு, ஒரு கிராமத்து ராத்திரிகள்) சிறுகதைகள் நம்மைப் ’படுத்தி எடுப்பது’ போல பிந்தைய கதைகள் பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்து போவதற்கான காரணத்தை ”அமைப்பு மனம், படைப்பு மனதை விழுங்கி விட்டது” என்கிற வரியில்தான் தேட முடியும். ஆனாலும், பிற்காலத்தில் எழுதிய கதைகளை எளிதில் அல்லது முற்றிலும் புறக்கணித்து விடவும் முடியாது.
கரிசல்காட்டு வாழ்வை நவீன இலக்கியத்தில் முதன்முதலாக எழுதியவர் கு.அழகிரிசாமி. ஆனால் கரிசல் இலக்கியத்தை அதற்கான அடையாளத்துடன் - தன்னுணர்வுடன் - விரித்துச் சென்ற முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன். கரிசல் எழுத்தாளர் கதைகளை கி.ரா தொகுத்தபோது அதில் கரிசல் நிலப்பரப்பென ஒரு வரைபடத்தையும் வெளியிட்டிருந்தார். கங்கை கொண்டானிலிருந்து திருமங்கலம் வரை, சங்கரன்கோவில் தாலுக்காவிலிருந்து விளாத்திகுளம் தாலுக்கா வரை என விரியும் நிலப்பரப்பு அது. கரிசல் நிலப்பகுதிக்குள்ளேயே வேறு பட்ட வாழ்முறைகள் உண்டு. சாதி அடிப்படையிலும் நிலப்பரப்பு அடிப்படையிலும் பன்முகம் கொண்டது கரிசல் வாழ்வு.
கங்கை கொண்டானுக்கு அருகில் இடைசெவலிலிருந்து கு.அழகிரிசாமியும், கி.ராவும் எழுத, சாத்தூர் வட்டாரத்திலிருந்து தனுஷ்கோடி ராமசாமி, லட்சுமணப் பெருமாள், காமராஜ், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி எழுத, திருமங்கலத்திலிருந்து ஷாஜகான் எழுத, விருதுநகரிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணனும், கோவில்பட்டியிலிருந்து பூமணியும், சோ.தருமனும், உதயஷங்கரும், நாறும்பூநாதனும், கௌரிஷங்கரும் எழுதிக்கொண்டிருந்தார்கள். கரிசல் என்கிற நாவலை குமரிக்காரரான பொன்னீலன் எழுதினார். ஆறுமுகநேரிப் பக்கமிருந்து வந்து சாத்தூரில் நிலைகொண்டு ஜா.மாதவராஜ் எழுதிக்கொண்டிருக்கிறார். அதெல்லாம் புலம் பெயர்ந்த கரிசல் எழுத்தெனலாம்.
இந்த விரிந்து படரும் கரிசல் வரைபடத்தில் விளாத்திகுளம் தாலுக்காவின் இந்தக் கடைசிலிருந்து சுயம்புலிங்கமும் சூரங்குடி முத்தானந்தமும் அந்தக் கடைசியிலிருந்து பா.செயப்பிரகாசமும் எழுதுகிறார்கள். எப்போதும் காய்ந்தே கிடக்கும் கரிசல் பூமியின் காட்டாறு வைப்பாறு. இந்தப் பூகோளம் குறித்த முழு ஓர்மையுடனும், தன்னுணர்வுடனும் இயங்கும் படைப்பாளி என பா.செயப்பிரகாசத்தைத்தான் சொல்ல வேண்டும். வைப்பாற்றை வைத்து கரிசலில் எந்த கிராமமும் விவசாயம் செய்ததில்லை. செய்வதில்லை.
மழையையும் மழை நீரைச் சேமிக்கும் கண்மாய்களையும் நம்பித்தான் கரிசல் வாழ்க்கை. வாய்த்தவர்களுக்குக் கிணறும் போர்குழாயும் வாழ்க்கை தரும். ஆகவே நிச்சயமற்ற, உத்தரவாதமற்ற பொருளியல் வாழ்வும் அது உண்டாக்கும் சமூக, தனிமனித உளவியல்களும் உறவுச் சிக்கல்களும், வாழ்க்கைப்போராட்டங்களும் பா.செயப்பிரகாசத்தின் சிறுகதைகளின் அடித்தளமாக, மைய நீரோட்டமாக அமைகின்றன. வறுமையும் பஞ்சமும் பிடித்தாட்டும் கரிசல் வாழ்க்கையில் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்போடும் அறத்தோடும் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று பா.செயப்பிரகாசம் பூசி மெழுகவில்லை. அவருடைய கதைகள் கரிசல் மக்களின் அழகுகளையும் அசிங்கங்களையும் சேர்த்தே பேசுகின்றன துரோகங்கள் வக்கிரங்கள் என எல்லாமே அவர் சிறுகதைகளில் பதிவாகி இருக்கின்றன.
சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி வட்டாரத்தின் கரிசல் வாழ்வில் வெடிக்கும் கருமருந்தாகப் பின்னர் வந்து சேர்ந்த தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலும் கருமருந்து வீச்சமும் பா.செ பிறந்து வளர்ந்த ராமச்சந்திராபுரம் வட்டாரத்தில் கிடையாது. சிவகாசி நகரத்தைப் பற்றி 1980 இல் வெளியான அவருடைய ‘இரவுகள் உடையும்’ தொகுப்பில் ஒரே ஒரு கதை “நெருப்பு வெள்ளமும் சுல்தான்களும்” இருக்கிறது. மற்ற கதைகள் எல்லாமே விவசாயம் பொய்த்த வாழ்க்கையிலிருந்து வெடித்துக் கிளம்பியவையே.
֎
“தனது சிறிய பூப்பாதங்களால், ஏழே வயதை அவன் கடந்திருந்தான். அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. அந்தச் சோகமயமான நிகழ்ச்சி, அவன் உள் மனசின் கூட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்தது. அவனது நினைவின் ஸ்பரிசங்கள் பட்டவுடன், அது பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து எல்லா கம்பீரங்களையும் தின்றுவிட்டு, உறங்கிவிடும்.
அம்மாவின் கூந்தலைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் அப்பா ஓங்கி அறைந்தார். ”அம்மா” என்று அடி வயிற்றைப் பிடித்து அம்மா சுருண்டு விழுந்தாள். கூந்தலைப் பிடித்த கை இன்னும் விடவில்லை. கீழே விழுந்தவளை கூந்தலைப் பிடித்துக்கொண்டு தரையில் தரதரவென்று அப்பா சுற்றினார். கதறலுக்கும், அழுகைக்கும் இடையே – அவர் ஓங்கி அவளுடைய இடுப்பில் ஒரு உதை கொடுத்தார்.
அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டிருந்த அவனும், அண்ணனும், சின்னத் தங்கச்சியும் சேர்ந்து கதறினார்கள். அவர்களுடைய கதறலைக் கேட்ட பக்கத்து வீட்டுச் சித்தப்பா, ஒரு ஆகாயப்பருந்து மண்ணில் பயந்து போயிருக்கிற கோழிக்குஞ்சை கால்களால் தாக்குவது போல் யுத்தம் செய்துகொண்டிருந்த அப்பாவை விலக்கிவிட்டார்.
பாட்டி, அப்பாவைப் பெற்றவள், வாசல்படியில் நின்று இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகள் அடிபட்டுச் சிதைபடுவதைப் பார்த்து ”பொன்னையா என்ன இது நிறுத்து” என்று அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அம்மாவைத் திண்ணையில் படுக்க வைத்திருந்தார்கள். மரணம் தனது விதைகளை அந்த உடலில் ஆழமாகத் தூவியிருந்தது. அவை பூப்பூக்கும்போது, அவள் இறந்து விடக்கூடும்.
விட்டு விட்டு வருகிற சுவாசம், அவள் உயிர் போய்ப் போய் வருகிறது என்பதைச் சந்தேகமில்லாமல் காட்டியது.
வயிற்றில் உதை விழுந்ததால், சிறு கர்ப்பம் கலைந்து காய் விழுந்துவிட்டது….. நினைவிழந்து மூச்சடங்கிப் போய்க் கிடந்தாள் அம்மா. சுற்றிலும் பெண்கள் கூடி நின்று சோக முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.”
’ஒரு ஜெருசலேம்’ கதையின் துவக்கப் பகுதி இது.
பா.செயப்பிரகாசத்தின் கதை இது என அடையாளம் காட்டும் பகுதி. இங்கு விவரிக்கப்படும் துயரக்காட்சி அழியாச்சித்திரமாக நம் மனங்களில் என்றென்றும் நிலைத்து நின்று உருக்குகிறது. பா.செயப்பிரகாசத்தின் கதைகளின் முத்திரையே இதுபோல காட்சிப்படுத்தலும் ஓவியம்போல அக்காட்சியை உறைந்து நிற்க வைத்து, வாசக மனதில் உணர்ச்சி அலைகளையும் விவாதங்களையும் கிளர்த்துவதும்தான்.
இந்த உலகமே பார்த்திருக்க, ஒரு ஆண் ஒரு பெண் மீது செலுத்தும் வன்முறை. ஏற்கனவே அவள் மீது செலுத்தப்பட்ட பாலியல் வன்முறையால் மூன்று குழந்தைகள் வயிற்றில் இன்னும் ஒரு சிறு கர்ப்பம். அவனுடைய தாயின் மௌனம். இந்த ஆணின் வன்முறையை அங்கீகரிப்பதுபோல வேடிக்கை பார்க்கும் பெண்மனம். நம் வரலாற்றில் நிகழ்ந்த எண்ணற்ற வன்முறைக்காட்சிகளை நினைவூட்டும் ஒரு சித்தரிப்பு.
திண்ணையில் படுக்க வைக்கப்பட்டுச் சாகக் கிடக்கும் ஒரு பெண். என்ன ஒரு துயர்தரும் சித்திரம். இதைவிடவும் துயர்கூட்டும் இன்னொரு காட்சி கதையில் தொடர்கிறது.
“தலைமாட்டில் அம்மாவைப் பெற்ற பாட்டி, தலையில் முக்காடிட்டு உட்கார்ந்திருக்கிறாள். ஒரு வாரமாக அவளை மகளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிற அவளை – அந்த இடத்திலேயே எல்லோரும் பார்த்தார்கள். அந்த மெலிந்த எலும்புக் கூட்டில், கண்ணீர் எங்கிருந்து ஊறி வருகிறது என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவள் இரண்டு பெற்றாள்: மூத்தவள் கல்யாணமாகி, முதல் வருசத்திலேயே இந்த உலகத்தை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டாள். அந்தச் சோகம் அழுது தீருமுன்னரே, இப்போது இரண்டாவது வாரிசும் மரணக்கோலத்தில் அவள் முன்னால் வைக்கப்பட்டதால் அவள் கல்லாகி நின்றுவிட்டாள்.”
பையன்களை அம்மாவுக்குப் பால் ஊற்றச் சொல்லி அழைக்கிறார்கள்.
“அவன் கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. இதுவரை அவன் கண்ட காட்சிகளாலே அந்த இடம் துக்கப்பட்டுப் போயிருந்தது. அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. பாலில் பஞ்சைத் தொட்டு அம்மாவின் வாய்க்கு அருகில் கொண்டு போனவன் ஓவென்று கதறி அழுதான். பால் சிதறி வாயில் விழாமல் அம்மாவின் முகத்திலும் கழுத்திலும் விழுந்தது.”
தாயைப் புதைத்த சுடுகாட்டு மேடு சின்னவனுக்கு புனிதத்தலமாக, ஒரு ஜெருசலேம் ஆக, இருப்பதைச் சொல்லத்தான் இக்கதை. ஆனால் மேற்சொன்ன இரு காட்சிகள் ஏற்படுத்தும் துக்கமே பெரிதாக மனதில் நின்று உருக்குகிறது. அதைக் கடந்து வர முடியவில்லை. இத்தனைக்கும் பா.செ கைக்கொள்ளும் மொழி இடையூறான ஒரு கவித்துவ மொழிதான். அதையும் தாண்டி இக்காட்சிகள் நம் மனதிற் பாய்கின்ற விந்தை நிகழ்கிறது. அப்பெண்ணை அந்த ஆண் அடிக்க என்ன காரணம் என்பது கதையில் சொல்லப்படவில்லை. ஆண் பெண் மீது வன்முறை செய்ய காரணமும் ஒரு கேடா? என்கிற கோபத்தைக் கிளர்த்துவதில் கதை வெற்றி பெற்றுவிடுகிறது. இதுதான் பா.செ.யின் சிறுகதைகளின் பலம்.
பா.செயப்பிரகாசத்தின் ஆகச்சிறந்த கதைகளென ஒரு முப்பது கதைகளுக்குமேல் சொல்ல முடியும். முப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு சிறிய எண்ணிக்கை அல்ல. அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் 1980களுக்குள் எழுதிவிட்டார். இந்த முப்பது கதைகளுமே பஞ்சமும் பசியும் பட்டினியும் துரத்தும் கரிசல் மனிதர்களின் வாழ்வைப் பேசுகின்றன. கரிசல் எழுத்தாளர்களில் இத்தனை துயரங்களையும் இத்தனை விதமான மனித முகங்களையும் விரிவாகவும் நுட்பமாகவும் சிறுகதைகளில் வேறு யாரும் எழுதிவிடவில்லை. கிராமப்புறங்களில் அந்தக் காலத்தில் வெடிமருந்தைக் குழாயில் கிட்டித்து ஓங்கி அடித்து வெடிக்க வைப்பார்கள். ’படாங்கு’ என்றும் டாம் டாம் என்றும் சொல்லப்படும் அந்த வெடிக்கு மருந்து கிட்டிப்பது போல ஒவ்வொரு கதைக்குள்ளும் உணர்ச்சியைக் கிட்டித்து வைத்துள்ளார் பா.செ. வாசகன் அதைத் தொடும்போது வாசக மனத்தில் அது வெடித்துச் சிதறுகிறது. பா.செ.யின் பல கதைகளைக் கண்களில் கண்ணீர் திரையிடாமல் வாசிக்கவே முடியாது.
அவருடைய கதைகளில் அதிகம் பேசப்பட்ட கதை ‘அம்பலகாரர் வீடு’.
ராத்திரி நேரங்களில் அக்கினிச் சட்டி எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று உடுக்கடித்து, அவர்கள் தரும் தானியங்களைக்கொண்டு வாழும் சாமியாடி ஊர்வழமைப்படி முதலில் அம்பலகாரர் வீட்டுக்கு முன்னால் நின்று முதல் பிச்சை வாங்க நிற்கிறான். ஐந்து ஆண்டுகள் இத்தொழிலை கைவிட்டு வெளியூர்களில் சுற்றியலைந்து இப்போது மீண்டும் உடுக்கையைக் கையில் எடுத்து வருகிறான்.
“உள் முற்றத்தில் போய் நின்று உடுக்கையை முழக்கினான். தனக்குரியவர்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட தன்மையில், அது துள்ளல் நடையில் பேசியது. ஒரு கைக்குழந்தையைப் போல் அவன் உடுக்கையை அணைத்திருந்தான். தாய் கிச்சு கிச்சுக் காட்டுவதுபோல் அவன் செய்தபோது, சிரிப்பை அடக்க முடியாமல் அந்தக் கைக்குழந்தை துள்ளிச் சிரித்தது….. முற்றத்தில் நின்ற அவன், மச்சு வீட்டை நோக்கி ‘அம்மணி’ என உருகும் குரலில் அழைத்தான்.
அவன் வந்திருப்பதைத் தெரிவித்தாகிவிட்டது. பழையபடி அவன் உடுக்கையை முழக்கிப் பாட ஆரம்பித்தான்….. உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சாமி கொண்டாடி நினைத்தான். அம்பலகாரர் இறந்த இந்த ஐந்து வருஷங்களில் பெரிய அம்மாவும் போயிருக்க வேண்டும். ’அம்மணி’ என்று அழைத்த இந்நேரத்துக்குள் வெளியே வராமல் இருக்க மாட்டார்கள். நெற்றியில் ஒரு மின்னலுடனும், இதழ்களில் ஒரு புன்னகையுடனும் கை ஏந்திய சொளகில் ஒரு படிக் கம்புடனும் அவனுடைய நார்ப்பெட்டியில் கொட்டாமல் இருக்க மாட்டார்கள்… இவைகளையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்தான். பெரிய அம்மணி இப்போது இல்லை. அவர்கள் சமாதியாகி நீண்ட நாள் ஆகியிருக்க வேண்டும். இதை நினைக்கிற போது அவனுக்கு நெஞ்சை அடைத்து மூச்சு தாமதப்பட்டது. துக்கத்தினால் தொண்டை கரகரக்க லேசாக விம்மினான்.
அம்மணியின் பெரிய உருவத்திற்குக் கீழே வேரில் பூத்த சின்னப் பூப்போல் அவரது மகள் சின்ன அம்மணி இருப்பாரே என்று யோசிக்கிறான். அருள் வழியும் அழகு, அவள் முகத்தில் பொலிவதைப் பார்த்து ‘தேவி’ என்றுதான் அவன் உருகி அவளை அழைப்பான்.
வீட்டினுள் அரவம் கேட்டதால் பேராசை பொங்கிட ‘நீண்ட நேரமா பாடிட்டிருக்கேன். தேவீ, என் சின்ன அம்மணி’ என்று அழைக்கிறான். சொல்லிவிட்டு அவன் அமைதியாக நின்றான். வீட்டிற்குள்ளிருந்து ஆண் குரலின் மங்கின மெதுவான பேச்சுக் கேட்கிறது. பின்புறக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது, வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு ஆள் கட்டைச் சுவரேறிக் குதித்து வெளியேறுவதைக் கண்டான். அவன் இருளோடு இருளாய் மறைந்து விட்டான்.
சாபங்கள் தீண்டியவனாய் சாமி கொண்டாடி கல்லாகி நின்றான்.
தேவி வருகிறாள். அக்கினிச்சட்டியின் தீ வெளிச்சத்தில் பார்க்கிறான். அவள் இதழ்களின் பல்லக்கிலிருந்து புன்னகை என்ற ராஜபதுமை கீழே விழுந்து உடைந்து தூள் தூளாகிப் போய்விட்டிருந்தாள். கண்கள் கண்ணீரால் கனக்க சாமி கொண்டாடி சிலையாகி நின்றான். தேவி அவன் கையில் ஒரு வெள்ளிக்காசை வைத்துத் தடுமாறிய குரலில் சொன்னாள் ”இன்று இவ்வளவுதான் கிடைத்தது.”
சாமி கொண்டாடி வேதனையால் விம்மினான். ”தேவி! என் சின்ன அம்மணி” என்று தழுதழுத்த குரலில் கூறினான், ”யாருமே இல்லையா அம்மணி”. அவன் காசை வாங்கிக்கொள்ளவில்லை. மௌனமாக அக்கினிச் சட்டியைக் கீழிறக்கி வைத்தான். தோளில் தழுவிய சாட்டையைச் சுருட்டி மடக்கினான். உடுக்கையைச் சுற்றி எடுத்து உறைக்குள் வைத்தான். விபூதிப் பையை எடுத்துச் சுருக்கிட்டு, தூரத்தில் தூக்கி வீசி எறிந்தான்.
பக்கத்தில் நார்ப்ப்பெட்டியில் மற்ற ஊர்களில் அவன் வாங்கிய தானியமும், கொஞ்சம் ரூபாய்களும் நிறைந்திருந்தன. நார்ப்பெட்டியோடு எடுத்து அம்மணியின் முன் வைத்துவிட்டு இரு கைகளையும் கூப்பியபடி அவன் சொன்னான் ”தேவி அடியேனின் காணிக்கை”
சொல்லிவிட்டு அவன் வெளியேறினான். மேலவாசல் வழியாகவே, கால் சிலம்பு ஒலிக்க அவன் வெளியேறினான். அவன் விட்டுச் சென்ற அக்கினிச் சட்டியும் உடுக்கையும் சாட்டையும் அங்கேயே அனாதைகளாய்க் கிடந்தன.”
சோகத்தில் தோய்ந்த காவியமாக ‘அம்பலகாரர் வீடு’ இன்றைக்கும் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. இளவயதில் திராவிட இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த காரணத்தால் கவித்துவமான நடையின் மீதிருந்த மயக்கம் தன்னுடைய ஆரம்பகாலக் கதைகளில் இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார். ஆனால் அந்த மொழி ‘அம்பலகாரர் வீடு’ கதைக்கு மிகத் தேவையானதாகவும் செறிவூட்டுவதாகவும் இருப்பதைக் காண்கிறோம். ஒரு குடும்பத்தின் சிதைவைக் கண்ணாரக் கண்டு அதைத் தாள முடியாமல் அந்தச் சாமியாடி என்னும் கலைஞன் எல்லாவற்றையும் துறந்து ஓடுகிறான்.
முதல் மூன்று தொகுப்புகளிலும் உள்ள கதைகள் முற்றிலும் கரிசல் கிராமங்களின் வாழ்க்கையை மட்டுமே பேசுகின்றன. காடு தொகுப்பிலுள்ள ‘விடிகிற நேரங்கள்’ மற்றும் ‘இருளுக்கு அழைப்பவர்கள்’ போல ஒன்றிரண்டு விதி விலக்கு. மில் தொழிலாளிகளின் போராட்டம் பற்றி முதல் கதையும் மலைவாழ் மக்கள் பற்றி அடுத்த கதையும் பேசுகின்றன.
வறண்ட காற்றே எப்பவும் வீசும் கரிசல் மண்ணில் வறுமையும் இல்லாமையும் போதாமையும் என்கிற புறநிலை யதார்த்தங்கள் மனித குணங்களை எப்படிச் செதுக்குகின்றன என்பதை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறது. காலத்தின் கைகளில் சிக்கிய மானுட வாழ்வும் மானிடரும் இந்தக் கொடும் சூழலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாகிவிடுவதைச் சித்தரிக்கும் கதைகளே பா.செயப்பிரகாசத்தின் கதைகள்.
கரிசல் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு நடுத்தரவர்க்க ஊழியனாகப் போய், அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கி அழுந்திப் பின் வெடிக்கும் இளைஞனின் கதையை ’ஆறு நரகங்கள்’ பேசும். கிராமப்புறங்களில் வாழும் வெள்ளை ஆத்மாக்கள் கண நேரக் கோப வெறியில் குற்றவாளிகளாய் உருவெடுக்கும் துயரை ‘புஞ்சைப் பறவைகள்’ முன் வைக்கும். சொத்துக்கு ஆசைப்பட்டு விருப்பமில்லாத பெண்ணின் கழுத்தில் கட்டாயத்தாலி கட்டும் கொடுமையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் ’சுயம்வரம்’ பேசும். கரிசல்காட்டுப் பள்ளிக்குழந்தைகள் பொய் பேசக்கற்கும் சூழலைச் சொல்வது ’பொய் மலரும்’.
கரிசல் கிராமத்துக்குள் போலீஸ் புகுந்தால் என்ன கதியாகும் என்பதை முதலைகள், பிணந்தின்னிகள் ஆகிய கதைகள் பேசுகின்றன. கரிசல்காட்டுக்குள் கம்யூனிஸ்ட் சிந்தனையையும் செயல்பாடுகளையும் கொண்டுவரும் ஒயிலாட்ட வாத்தியாரை ‘தெற்கின் ஆத்மாக்கள்’ என்கிற நெடுங்கதை அறிமுகம் செய்யும். ஊருக்குள் பஸ் வரவேண்டி மக்கள் நடத்தும் நேரடிப் போராட்டத்தை ’கமலாபுரம்' கதை விரிக்கும்.
’சாதி’, ’மயானகாண்டம்’, 'தாலியில் பூச்சூட்டியவர்கள்’ கதைகள் கிரமங்களில் நின்றாடும் சாதியத்தையும் அதற்கெதிராகக் கிளம்பும் குரல்களையும் அடையாளம் காட்டுகின்றன.
காடு தொகுப்பிலுள்ள ‘சரஸ்வதி மரணம்’ கதை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் தாரகை போன்று ஜொலிக்கும் உயிர்த்துடிப்பு மிக்க கதை.
“கம்மாய்க் கரை மேட்டில் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருக்கிற போதுதான் அவர்கள் வந்தார்கள். மதிய வெயிலைப் பிளந்து கொண்டு திடீரென்று அழுகைக்குரல் கேட்டது. சோலை ஆட்டத்தை நிறுத்திவிட்டுப் பார்த்தான். களத்து மேட்டிலிருந்த பையன்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, வண்டிப்பாதைப் புழுதியில் வந்து நின்றிருந்தார்கள்.
சித்தி, கம்மாய்க்கரை மேட்டு வழியாய் அழுத படி வந்து கொண்டிருந்தாள்….. பெரியப்பாவின் மகனான அண்ணன் இறந்து போனதற்கு துக்கம் விசாரிப்பதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
முகத்து வியர்வையை அழுக்குக் கையால் துடைத்துக்கொண்டே பையன்கள் சோலையப்பனிடம் கேட்டார்கள், ”யாரு உங்க சின்னம்மாவா?”
“ஆமா” சொல்வதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. தெரு வழியே எல்லோரும் பார்க்க அழுதுகொண்டு போவது, அவனுக்கு எப்படியோ இருந்தது.”
கதையின் துவக்கத்திலேயே மையமான கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு விடுகிறார்கள். சோலையின் அப்பா இறந்த துக்கம் கேட்கத்தான் தாமதமாக அவர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் திரும்பும்போது சோலையைத் தங்களோடு அழைத்துச் செல்வதாகப் பாட்டியிடம் கேட்கிறார்கள்.
“அங்க வந்தா ரெண்டு கஞ்சித்தண்ணியக் குடிச்சிக்கிருவான். பிள்ளை தூக்கறதுக்கும் ஆள் வேணும்”
சித்தப்பா சொன்னார். ”அண்ணன் பிள்ளைகள்ளேயே அவன் தான் பெரிய வகுத்துக்காரன். கம்மங்கஞ்சி எடுத்து வச்சி, மங்கு நிறைய ஊத்தி ஊத்திக் குடிக்க வச்சா எவ்வளவு வேணுமானாலும் குடிப்பான். அவனுக்கு மொடா வயிறு”
சோலையின் முகத்தில் இனிய நினைவுகள் நிழலாடின.
அவனைப் பொறுத்தவரை வெளியூர்ப் பயணம் என்றால் அது தின்பண்டங்களோடு இணைந்தது. அப்பா இருந்தபோது அவன் அவரோடு போன பயணங்கள் அப்படித்தான் அமைந்திருந்தன.
சித்தப்பாவுடன் போகிறபோது கரிசல்குளத்தில் பஸ்ஸில் இறங்கி நடந்து போக வேண்டும். ஏழு மைல் தூரம் நடக்க வேண்டும். பஸ் நிற்கிற இடத்தில் வரிசையாய் ’சேவு’க்கடைகள் இருந்தன.
…கரிசல்குளத்தில் இறங்குகிறவர்கள் எல்லோரும், குழந்தைகளுக்கு சேவோ மிக்சரோ வாங்கிக் கொடுத்தே கூட்டிப்போனார்கள். பத்து வயதுப் பாலகன் அவர்களுடன் வருகிற போது, யாரும் வாங்கிக் கொடுக்காமல் போக மாட்டார்கள்.
“நா அவங்க கூடப் போறேன்” நடுவழியில் கிடைக்கவிருக்கிற தின்பண்டத்தை எதிர்பார்த்திருந்த அவன் சொன்னான்.
“படிப்பு போயிருமே” பாட்டி வெதுவெதுப்பான குரலில் மெதுவாகச் சொன்னாள். கண்களில் இதமான பார்வையும், தொண்டையில் வெதுவெதுப்பான குரலும் பாட்டியைத்தவிர வேறு யாருக்கும் வராது.
பாட்டி சொன்னபோது சித்தப்பா பதில் சொன்னார் ”என்ன அஞ்சாம் வகுப்புத்தானே படிக்கிறான். அதுக்கு மேலே படிச்சு என்ன செய்யப்போறான்?”
தின்பண்டத்துக்கு ஆசைப்பட்டு சோலை சித்தப்பா சித்தியுடன் கிளம்புகிறான். பிள்ளை தூக்க அவர்களுக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான். பாட்டிக்கு ஒரு பிள்ளைக்குக் கஞ்சி ஊத்தும் சுமை குறையும். ஆனால் கரிசல்குளத்தில் போய் இறங்கியதும் அவன் எதிர்பார்த்து வந்த பண்டம் வாங்கித்தர சித்தப்பாவிடம் காசு இல்லை.
வண்டிப் பாதைப்புழுதி கால்களில் தைத்தது – கன்றிச் சிவந்த கால்களை, சூடு தாங்க முடியாமல் ஓரத்திலுள்ள கொழுஞ்சிச் செடிகளின் மேல் மாற்றி மாற்றி வைத்து நடந்தான்.
சித்தப்பாவும், சித்தியும் முன்னால் நடந்தார்கள். பக்கத்தில் சேவுக் கடைகள் இருப்பதையே மறந்து விட்டவர்கள் போல் நடந்தார்கள் பார்வைபடுகிற இரண்டு திசைகளிலுமே சேவுக் கடைகள் இருந்தன. பஸ்ஸை விட்டு இறங்கிய போதே அவன் அங்கே நின்றான். அந்த நினைப்பே இல்லாதது போல், அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சின்ன நகரத்தின் எல்லையைத் தாண்டுகிற வரை அங்கொன்று இங்கொன்றாய்க் கடைகள் இருந்தன. இன்னும் கூட வாங்க முடியும்.
கரிசல் குளத்தின் எல்லையைத் தாண்டி, வண்டிப்பாதைப் புழுதியில் போய்ச் சேர்ந்த போதுதான், அந்தச் சின்ன உள்ளம் தாறுமாறாக உடைந்தது. எதிரே ஏழு மைல் தூரம் ஒரே வாலாய் நீண்டு கிடக்கு கரிசல் பாலை தெரிந்தது. கண் பார்வை போன வரை கானல் அலைகள் படைபடையாய்ப் பறந்தன. மரம், செடிகள் எல்லாம் வெயில் நீரில் வளைந்து மிதந்தன. மண்ணிலிருந்து மேலெழும் ஆவிக் கொழுந்துகளில் அக்கினிப் பிரவேசம் செய்தபடி, ஒன்றிரண்டு உருவங்கள் தூரத்தில் போய்க் கொண்டிருந்தன.
சோலையின் கண்களில் நீர் திரையிட்டது. நாக்கு வறண்டு ஒட்டியது. தனக்குப் பின்னாலிருந்த கரிசல் குளத்தைப் பார்த்தான் அவன் இதற்காக வரவில்லை. ஊருக்குப் போவதற்கு அவனுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. “சின்னம்மா” என்றான். நாக்கு மேலண்ணத்தில் ஓட்டி, வார்த்தை தடைப்பட்டது. அடிவயிற்றிலிருந்து குரல் மேலெழும்பி வேகு, வேகு என்று குரல் இழுத்தது.
சித்தி திரும்பிப் பார்த்தாள். பையனின் விழிகளும் முகமும் மாறிய போயிருந்தன. புறப்பட்டபோது இருந்த முகமாக இல்லை. அந்த முகத்தில் கெத்தளித்த சந்தோஷம் இல்லை. கண்களில் ஊர் போகும் ஆவல் இல்லை.
அரைப் பகலிலேயே முகம் சுருங்கி வதங்கிப் போயிருந்தது. சூடு தாங்க முடியாமல், ஒரு கொழுஞ்சிச் செடியின் மேல் நின்று கால்களை மாற்றி மாற்றி வைத்த பையனைப் பார்த்து சித்தி கேட்டாள்.
”என்னப்பா?”
இப்படின்னா, நா வந்திருக்க மாட்டேன்” விக்கலுக்கிடையே வார்த்தைகள் வந்தன.
“என்ன?”.
”எனக்குச் சேவு வேணும்” சித்தி கைக்குழந்தையை சித்தப்பாவின் கையில் கொடுத்தாள்.
நெஞ்சடைக்கக் கீழே குத்துக் காலிட்டு, அவனைக் கட்டியணைத்தாள். கட்டியணைத்து வெடித்து அழுதபடி சித்தப்பாவைப் பார்த்தாள்.
காசில்லாத உண்மையை அக்குழந்தைகளுக்குப் புரிய வைக்க முடியாத அவலத்தைப்போல வேறொரு அவலம் இப்பூமியில் உண்டா? பா.செயப்பிரகாசத்தின் கதைகளில் குழந்தைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இழப்புகளைத் தாங்குபவர்களாக, பால் குடி மறந்த மறுநாளே வயக்காட்டுக்குப் போய் உழைக்கிறவர்களாக, ஊரில் எது நடந்தாலும் முதல் பார்வையாளர்களாக ஓடிப்போய் நிற்பவர்களாக, எல்லா நிகழ்வுகளுக்கும் மௌன சாட்சிகளாக பா.செயப்பிரகாசத்தின் குழந்தைகள்….
கரிசக்காட்டில் கால்பதித்து நின்று அவர் சொன்ன கதைகள் எல்லாமே ஜீவகளையுடன் துலங்குகின்றன. நான்காவது தொகுப்பான இரவுகள் உடையும்-1980 தீர்வு, பிணந்தின்னிகள், நெருப்பு வெள்ளமும் சுல்தான்களும் ஆகிய மூன்றுதான் கரிசக்காட்டுக் கதைகள். மற்ற ஐந்திலும் யூனியன், போராட்டம் என களம் மாறுகின்றன.
ஐந்தாவது தொகுப்பான மூன்றாவது முகம் (1986) சாதி, கோவில் மாடு என இரு கரிசல்காட்டுக் கதைகளைக் கொண்டுள்ளன. “பால்ராஜு மெட்ராசுக்குப் போனான்” கதையில் வரும் பால்ராஜைப் போல பா.செயப்பிரகாசத்தின் கதைகளும் பட்டணத்துக்குப் பயணப்பட்டு நடுத்தர வர்க்க வாழ்வையும் அரசியலையும் அதன் கீழ்மைகளையும் என வேறு பாடுபொருள்களை பேசத்துவங்குகின்றன.
மீண்டும் 90 களில் வெளிவரும் ’புதியன’ தொகுப்பில் இழிவு, கிராமத்துக்குறிப்புகள், சாவு இல்ல, தொடக்கம் என மீண்டும் பாதிக்கதைகளுக்கு மேல் கரிசல்காடு வந்து விடுகிறது. 1996 இல் வெளியான 'புயலுள்ள நதி' தொகுப்பில் ’மயானகாண்டம்’ மட்டுமே கரிசல் காட்டுக் கதை. இப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை எங்கெங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் கதைகளும் கூடத்தானே வரும் என்றாலும் இப்படியும் ஒரு பார்வை பார்த்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.
பிற்காலத்தின் தன் மொழியை அமைப்புப் பணிகளின் காரணமாக இழந்துவிட்டதாக ஜே.பி கூறுகிறார். அமைப்புப் பணி மட்டும்தான் காரணமா? கரிசல் காட்டை விட்டு மனம் விலகியதாலும் அந்த இழப்பா என்று பார்ப்பதற்காக இப்படி ஒரு பட்டியல் எடுத்துப் பார்த்தோம். கள்ளழகர், இலக்கியவாதியின் மரணம் ஆகிய தொகுப்புகளில் மீண்டும் வடிவ நேர்த்திமிக்க கதைகளை பா.செ தந்திருக்கிறார்.
பெண்கள், பெண் விடுதலை குறித்து பா.செ கொண்டிருக்கும் பார்வை பரிவானது மட்டுமின்றிப் புரட்சிகரமானது. இரவுகள் உடையும், சிறை மீட்பு ஆகிய இரண்டு கதைகள் போதும் அதை நமக்கு உணர்த்த. ”அவர்கள் வருகிறார்கள்” கதையும் வேறொரு கோணத்தில் தடை உடைக்கும் பெண்ணின் கதைதான்”.
பா.செ.யின் படைப்புகளில் "பெண்கள்” எனத் தனியாகவே ஆய்வு செய்யலாம். அத்தனை வகைமையான பெண்களை, பாட்டிகளை, குமறுகளை, கணவனை இழந்த பெண்களை, ஒருவருக்கு வைப்பாக மாறும் பெண்களை, தைலியைப்போல சாதியை எதிர்க்கும் தைரியமான தலித் பெண்களை, கணவனைப் பழி வாங்க என்ன செய்வதெனத் தெரியாமல் நடுச்சாமத்தில் மொட்டை மாடியில் கொட்டும் மழையில் அப்படியே விடியும் வரை அமர்ந்திருக்கும் பெண்ணை, ஆணுக்குச் சமமாக ஈகோ கொண்டு கார் இருந்தும் புறக்கணித்து ஆட்டோவில் போகும் பெண், தானே பாட்டுக்கட்டிப் பாடும் வேல்த்தாயி என்னும் நாட்டுப்புறக்கவி என எத்தனை எத்தனை விதமான பெண்களைப் படைத்துவிட்டார்.
தமிழின் மகத்தான படைப்பாளியான ஜி.நாகராஜனிடம் மாணவராகப் பாடம் கேட்டவர் ஜே.பி. அவர் மூலமாக ’சரஸ்வதி’ இதழின் அறிமுகம் பெற்றவர். இள வயதிலேயே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். மூன்றாவது லைன் என மார்க்சிய வட்டாரத்தில் அறியப்பட்ட நக்சல்பாரி இயக்கப் பார்வையை உள்வாங்கியவர். ஆகவே சிபிஎம் ஒரு சமரசக் கட்சி என்கிற பார்வை அவருடைய கதைகளிலேயே (வேர்ப்புழுக்கள்) வெளிப்படும். 2014 இல் அவர் வெளியிட்ட “காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்” தொகுப்பில் உள்ள ‘அய்யப்பன் மரணம்’ கதையில் எல்லாக் கட்சிகளும் மோசம், கட்சிகளைத் தாண்டிய அரசியல்தான் வேண்டும் என்கிற பார்வையை வெளிப்படுத்துகிறார். இதில் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனினும் அது அவருடைய அரசியல்.அவருடைய பார்வை என்பதை மதிக்க வேண்டும்.
விவாதத்துக்குரிய விஷயம் என்னவெனில் அமைப்பில் பணியாற்றுவது படைப்புக்குக் குந்தகம் விளைவிக்குமா? என்பதை பா.செயப்பிரகாசம் விவாதிக்க வேண்டும் என்கிறார். காலச்சுவடு இதழுக்காக அவரைப் பேட்டி கண்ட பெருமாள் முருகனும் தேவிபாரதியும் இதற்கான பதிலைக் கோரி அவரை மடக்கி மடக்கிக் கேள்வி கேட்கிறார்கள்.
கேள்வி:
புகழ்பெற்றிருந்த கரிசல்காட்டு இலக்கியத்தின் முக்கியமான பிரதிநிதியாக வாசகர்களுக்கு அறிமுகமானீங்க. கரிசல்காட்டு வாழ்வின் உயிர்ப்பான கூறுகளை நீங்க உங்க கதைகளின் மூலமாகத் தொட்டிருக்கீங்க. அப்ப உங்க கதைகளில் ஒரு நேர்த்தி இருக்கும். பிறகு உங்க படைப்புகளில் பிரச்சாரத் தன்மை மேலோங்கத் தொடங்குது.
‘காடு‘ தொகுப்புல அதற்கான விதைகள் தென்படத் தொடங்குது. கடைசிக் கதையான ‘ விடிகிற நேரங்கள்‘ல வெளிப்படையான பிரச்சாரம் இருக்கும். அதுக்கு முன்னாடி உள்ள கதைகள்ல விளிம்பு நிலை வாழ்க்கைமீது, கிராமத்து வாழ்க்கை மீது, ஏழை விவசாயிகள் மீது ஒரு பரிவு இருக்கும், சாதிய அமைப்புக்கு எதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குரல் இருக்கும். எல்லாமே அந்த வாழ்க்கையின் பகுதிகளாத்தான் இருக்கும்.
‘தெக்கத்தி ஆத்மாக்கள்‘ கதையக்கூடச் சொல்லலாம். அதுல பிரச்சாரம் இருந்தாக்கூட அது கலையாத்தான் இருக்கு.
‘விடிகிற நேரங்களுக்குப் பிறகு‘ வந்த கதைகள் குறிப்பா உங்களோட நான்காவது தொகுப்பான ‘இரவுகள் உடையும்‘ தொகுப்புல இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே நேரடியாகப் பிரச்சாரம் பண்ற கதைகள்தான். அநேகமாகப் படைப்பிலக்கியம் சார்ந்து உங்ககிட்டப் பேச வேண்டிய விஷயம் இதுதான். இதை மையப்படுத்திப் பேசறது முக்கியமானதா இருக்கும் இல்லையா?
என்று ஒரு பென்னம்பெரிய கேள்வியைத் தூக்கிப் போடுகிறார்கள். அதற்கு பகுதி பகுதியாக அவர் சொன்ன பதில்களைத் தொகுத்தால் இப்படி வருகிறது.
”சுய அனுபவங்களச் சமூகரீதியான அனுபவங்களோடு இணைத்து அந்த எதார்த்தத்தை வெளிப்படுத்துபவை தான் என்னுடைய தொடக்ககாலக் கதைகள்னு நெனைக்கறேன்.
எழுதத் தொடங்குறபோது ஒரு பொதுவான சமூக அக்கறை இருந்துது. சமூக நெருக்கடிகள், கிராம வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அது உருவாக்குகிற வாழ்வியல் நெருக்கடிகள் குறித்த அக்கறையும் கோபமும்தான் என் தொடக்ககால எழுத்துக்கான அடிப்படையாக இருந்தவை. ஆனா அவற்றுக்கான காரணம், தீர்வு குறித்தெல்லாம் போதிய தெளிவு கிடையாது. தீர்வுகள் வைக்கப்பட வேண்டும்ங்கிற புரிதல், தேவை வர்றபோது எழுத்து இயல்பாவே பிரச்சாரத் தன்மை கொண்டதா மாறிடுது..
இலக்கியம் ஒரு பிரச்சார வடிவங்கிற முடிவுக்கு நான் எப்போதும் வரல. மற்றவங்க யாராவது அப்படியரு தீர்மானத்தோட எழுதுனாங்களான்னும் சொல்ல முடியல. ஆனா பிரச்சினைகளப் பேசறபோதே அதுக்கான தீர்வையும் தேட வேண்டியது ஒரு எழுத்தாளனுக்குள்ள தார்மீகப் பொறுப்பாயிடறதுன்னு நெனச்சேன். அந்த மாதிரியான என் கதைகள்ல அதற்கான தேடல் இருக்கும். வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தீர்வு அந்தப் படைப்புக்குள்ள இருக்கும். தீர்வைப் பத்தி பேசும்பொழுது அது பிரச்சாரமாகப் பார்க்கப்படுதுன்னு நெனைக்கறேன்.
சிறுகதை வடிவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா வெளிப்படுத்துறாங்க. உள்ளடங்கி வெளிப்படுத்துதல் அல்லது உரக்கப் பேசுதல் அப்படிங்கிறது வெவ்வேறு உத்திகள். என் கதைகளில் வெளிப்படையான பிரச்சாரத்தன்மை இருந்ததற்குக் காரணம் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் பற்றி பேசியதுதான். இந்தச் சமூகம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டுப் போகனும்ங்கற ஆசை. இந்த மாதிரியான புரிதல் காரணமாகப் பிரச்சாரத்தன்மை மேலோங்கிவிடுகிறதுன்னு நெனைக்கறேன்.
சமூக விமர்சனங்களைப் படைப்பாக்குவதற்குப் பதிலா சமூக விமர்சனங்களைப் படைப்புக்குள்ளேயே நேரடியாகப் பேசுவதுங்கிறது கலையாக முடியாது. அது ஒரு தத்துவார்த்தப் பார்வை, தத்துவத் தெளிவு வேண்டியதில்லை எனச் சொல்ல முடியாது. அதைப் பற்றிய தேடல் இருக்கணும். அதை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கணும். படைப்பாக்கம்னு வர்றபோது அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு நிறுத்திட்டு, நீங்கதான் ஏறி உட்கார்ந்திருக்கணும் அப்படின்னு தொ.மு.சி.ரகுநாதன் சொல்வார். அதுபோல சமூக விமர்சனங்கள் முடிவுகள் இவற்றை நேரடியாக முன்வைக்காமல் படைப்பாக மாத்துறதுங்கறது அந்தக் கதைகள எழுதின காலகட்டங்கள்ல குறைஞ்சு போயிருந்ததுன்னுதான் நான் நினைக்கிறேன். ஆனா அப்பவும்கூடச் சில கதைகள் அதனதன் இயல்புத் தன்மைலயே வெளிப்பட்டுதுங்கற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
பின்னாடி வந்த படைப்புகளில் வாசகர்களுக்கான இடம் படைப்பாளி பேசுவதற்கான இடமாக மாறிடுது. அது நிகழ்ந்திருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி வாசகனுக்கு அவனுக்குரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கணும். என் பிந்தைய கதைகளில் அது இல்லைங்கிறதை நான் உணர்றேன். இப்ப எடுத்துக்காட்டா ‘காடு’ கதையில கடைசில் அந்த ஊரைவிட்டு இரண்டு ஜோடிக் காலடித் தடங்கள் நீங்கிவிடுகின்றனன்னு முடியும். அதையே நான் பிற்காலத்தில் எழுதியிருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன்னு நெனைக்கறேன்.
ரொம்பச் சுருக்கமா சொல்றதுன்னா ஒண்ணு தான், கட்டுரையில வெளிப்படுத்த வேண்டியதெல்லாம் கதைகள்ல வெளிப்படுத்துனோம். இவையெல்லாம் கட்டுரைகளில் சொல்லப்பட வேண்டியது. சொல்லப்பட்டிருந்தா விவாதத்துக்குரியதா மாறியிருந்திருக்கும் ஆனா ஒரு கலைப் படைப்புக்கு அதற்குரிய நியாயங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.”
தன் படைப்பு குறித்த மனந்திறந்த சுய விமர்சனத்தோடு பா.செ அளித்திருக்கும் இந்நேர்காணல் மிக முக்கியமானது.
இந்தக் கேள்வியும் ஜே.பி.யின் இந்தப் பதிலும் எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் இன்னும் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை. அவ்விவாதத்துக்கான முன் குறிப்புகளை பா.செ இப்பதிலிலும் தன் பல கதைகளிலுமாக வழங்கியிருக்கிறார்.
இக்கட்டுரையை முடிக்கும்போது நான் முதன் முதலாக வாசித்து பா.செயப்பிரகாசத்தின் எழுத்தில் சரணடைந்த ஒரு கதையைப் பற்றிச் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும். ’நீலக்குயில்’ இதழில் தான் அதை வாசித்த ஞாபகம்.அக்கதை “வேரில்லாத உயிர்கள்”. 70’களில் தென் மாவட்டங்களில் ரிக்கார்டு டான்ஸ் என்கிற சினிமாப்பாடல்களுக்கு மேடை போட்டு ஆடுகிற நிகழ்ச்சி ஒன்று பரவலாக நடைபெறும் கோவில் திருவிழாக்களில் அதுதான் நிகழ்ச்சியாக இருக்கும். காலப்போக்கில் அது ஆபாசக் களஞ்சியமாக மாறி கிராமப்புற ஆண்களின் வக்கிரங்களுக்கான வடிகாலாக மாறிப்போனது. 2007இல் வெளியான ‘கள்ளழகர்’ தொகுப்பிலும் ‘ஆட்டம்’ என்றொரு கதை இதே ரிக்கார்டு டான்ஸ் பார்க்க வரும் கூட்டம் பற்றி எழுதியிருக்கிறார். அது வேறு களம்.
கரிசல் காட்டுப் பெண்ணான மீனாட்சி வறுமையின் காரணமாக டான்ஸ் வாத்தியாரை நம்பி ஊரைவிட்டுக் கிளம்பி அவளறியாமல் இத்தொழிலுக்குள் வருகிறாள். வெவ்வேறு நிலப்பரப்புகளிலிருந்தும் வந்த பெண்கள் அக்கா தங்கைகளாகி புதிய உறவுகளுடன் வாழும் அந்த வாழ்க்கையைப்பற்றி ஜே.பி மட்டும்தான் எழுதியிருப்பதாகக் கருதுகிறேன். அதையும் அவர் எழுதிவிட்டார் என்பதில் மகிழ்ச்சி. அக்கதையிலிருந்து ஒரு பகுதி:
“சோகக் கதைகளையும், சுயசரித்திரத்தையும் பேசுகிறபோது, விஜயாவின் முகம் வதங்கிப்போகும். அவள் பேச்சுக்களிடையே பெருமூச்சு பதிந்திருக்கும். விழிகள் மேல்நோக்கித் திரும்பியிருக்கும்."
“எனக்கு இதை விட்டால் வேற யார் சோறு போடுவா?” –
ஆண்டு முழுவதும் வயலுக்குத் தலைவாரிப் பொட்டிடும் சீர்காழியை நினைத்தபடி சொல்வாள்.
“சீர்காழியில் வயலெல்லாம் நெல் இருந்தது; எங்க வயித்துக்கு மட்டும் இல்லை.”
இது மாதிரி நேரங்களில் அவள் விழிகள் கண்ணீராகியிருக்கும். அந்த வாழ்க்கை வாழ்வதற்காய் வெட்கப்பட்ட நாணங்கள் பிரதிபலிக்கும். ஒரு பேச்சை எல்லா ஆட்டக்காரிகளும் கேட்டார்கள். என்ன ஆடி என்ன செய்ய, எல்லாம் வயிற்றுக்குச் சரியாகப் போகிறது.
மற்ற ஆட்டக்காரிகளுக்கும் இதுதான் வாழ்க்கையாக இருந்தது. கையில் கொஞ்சம் ஒன்றோ இரண்டோ பணம் சேர்ந்து விட்டால், அவர்கள் இதிலிருந்து தப்பிப்போக ஆசைப்பட்டார்கள்; வேறு ஏதாவது உத்தியோகத்திற்குப் போக ஆசை தோன்றியது. எல்லாமே முனை முறிந்து போகிற ஆசைகள்.
இது ஒரு தொழில். உடல் ஒன்று மட்டுமே, மூலதனம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தலையில் ஒரு வெள்ளை நிறமும், முகத்திலொரு சுருக்கமும் விளைகிறபோது, அவர்கள் வாழ்க்கை நின்று போகும். அது ஒரு சோக அணிவகுப்பின் எக்காளமாக இருக்கும். சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல், தவிக்கிற ஊர்வலத்தில் அவர்களும் போவார்கள்.
பயத்தின் சிறகுகள் படபடக்க சாரு இப்படித்தான் ஒரு நாள் மேடையேறினாள்.
முதல் முதலாய் இதைக் கேள்விப்பட்டபோது இது அசிங்கமான ஆட்டம் என்று மட்டும் தெரிந்தது. மேடையில் ஒலிக்கும் ரிக்கார்டுக்கு, டான்ஸ் ஆட வேண்டும் என்று சொன்னபோது குமட்டல் வந்தது. ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு, அரைகுறை ஆடையுடன் மேக்கப் அறையில் நின்றபோது, தோலை உரித்துவிட்டாற்போல் இருந்தது.
மேடைக்குப் போக படியேறுகையில் கால் நரம்புத் தண்டுகள் குளிர்ந்தன. உடல் நடுக்கம் கண்டது. படியிலேயே நின்றுவிட்டாள். ஆனால் வாழ்க்கை இருந்தது. வாழ்க்கை அவள் கால்களுக்கு முன்னாலும் நாணம் அவள் கால்களுக்குப் பின்னாலும் ஓடிவிட்டன. மேடை ஏறி விட்டாள்.”
பிப்ரவரி 2020 இல் வெளியாகி உள்ள அவரது ’மணல்’ கரிசல் வாழ்வில் இன்று புகுந்து விட்ட மணல் திருட்டையும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களையும் அழுத்தமாகப் பேசுகிறது. மீண்டும் கரிசல் மண்ணில் அழுந்தக் கால் பதித்துவிட்டார் பா.செ.
காத்திருப்போம்.
பா.செயப்பிரகாசத்தின் சிறுகதைகள் அத்தனையும் அரசியல் கதைகளே. அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தின் அரசியலைப் பேசிய கதைகள் பெரும்பாலும் கலையாகாமல் நிற்கின்றன. ஆனால் கரிசல் கிராமத்தில் நின்று பேசிய கதைகள் அத்தனையிலும் வாழ்வும் இருக்கிறது. கலையும் இருக்கிறது. அரசியலும் அழுத்தமாக இருக்கிறது.
நன்றி: பாரதி புத்தகாலயம் - 19 மே 2020
கருத்துகள்
கருத்துரையிடுக