நமது மண்வாசம்


கி.ரா, கு.அழகிரிசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா.செயப்பிரகாசம். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர். தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘சூரியதீபன்’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார். தாமரை, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கணையாழி, காலச்சுவடு, மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட மனஓசை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இலக்கிய மேடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் பாடுகளையும் தன் புனைவிலக்கியத்தில் சித்தரிக்கிறார் இவரின் கதைகள் மனிதர்களின் துயருற்ற சொற்களால் எழுதப்பட்டவை. தலித்துகளின் எழுச்சி தொண்ணூறுகளில் எழுந்ததாக பொதுவான கருத்துண்டு. ஆனால் எழுபதுகளிலேயே ஆதிக்கத்திற்கு எதிரான கலகக் குரல் செயப்பிரகாசத்தின் கதைமாந்தர்கள் வழி ஒலிக்கத் தொடங்கியது.

‘அம்பலக்காரர் வீடு’ வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதை. கோபுரத்தின் உச்சியிலிருந்து விழும் கலசம் போல் உன்னத வாழ்வு வாழ்ந்த ஒருவரின் வீழ்ச்சியைப் பாடுவதே துன்பியல் நாடகமாகும் என்று மேற்கத்திய செவ்வியல் நாடகக் கோட்பாடு வரையறுக்கும். இக்கோட்பாட்டினை ஒத்ததொரு செவ்வியல் துன்பக் காவியமாக ’அம்பலக்காரர் வீடு’ கதை துலங்குகிறது. கிராமத்தின் மேலவீட்டில் வாழ்ந்த அம்பலக்காரர் ஊர்க்காரர்களின் இதயங்களில் பொன் ரேகைகளால், தனக்கு ஒரு கூடு கட்டியிருந்தார். தனிக் கௌரவங்கள் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டின் மேலவாசல் வழியாக நுழைந்து, கீழவாசல் வழியாக ஊருக்குள் போகும் பிச்சைக்காரர்கள், யாத்திரிகர்கள், ஏகாலி, குடிமகன், அஞ்சுமணிக்காரன், பாம்பாட்டி, எல்லோரும் பிச்சைப் பாத்திரங்கள் நிறைந்து முக மலர்ச்சியுடன் வெளியேறுவார்கள். மேலவீட்டு அம்பலக்காரர் இறந்தபோது ஊரே கண்கலங்கி சவ ஊர்வலத்தில் நடந்து வந்தது. இந்த எண்ணங்கள் மேலோங்க மாரியம்மன் கொண்டாடி உடுக்கையும், அக்கினிச் சட்டியுமாக ஒரு முன்னிரவில் ஊர்வந்து சேர்கிறான். அம்பலக்காரர் இறந்தபின் அந்த ஊரை ஐந்து வருடங்களாக சாமியாடி மிதிக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் காலங்கொண்டு சேர்த்த மாற்றங்களை அவனறியான். வழக்கம்போல் ஊரின் மேற்கோடியில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் நின்று கால் சிலம்பை அணிந்து கொண்டான். நெற்றி, மார்பு, தோள்பட்டை, கைகளில் திருநீறு பூசிக்கொண்டான். அக்கினிச் சட்டியை மூட்டிக்கொண்டான். இடது கையில் உடுக்கை பிடித்து முழக்கினான். நெடுநெடுவென நடந்து மேலவாசல் வந்தடைந்தான். வீட்டின் முகப்பே சிதலமடைந்து கிடந்தது. பெரிய பரந்த முற்றத்தில் நின்று மச்சு வீட்டை நோக்கி ‘அம்மணி!’ என உருகும் குரலில் அழைத்தான். நீண்ட நேரம் அருள்கொண்டு ஆடினான். “மாரியாத்தாவுக்கு படி போடு தாயே” என்று உரக்கக் கத்தினான். அம்பலக்காரர் இறந்த சில நாட்களில் பெரிய அம்மணியும் இறந்துவிட்டார் என்பதையும் அவனறியான். பெரிய அம்மணி இறந்திருக்கலாம் என்றெண்ணி ’தேவீ’ என்று பாசத்தோடு சின்ன அம்மணியைக் கூப்பிட்டான். முன்பெல்லாம் பெரிய அம்மணியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வேரில் பூத்த பூப்போல் சிறுமி தேவி நிற்பாள். அவளை நினைத்தவாறே ”மாரியம்மன் கொண்டாடி வந்திருக்கேன் தேவீ!” என்று மீண்டும் ஒருமுறை குரல் கொடுத்தான். உடுக்கையை நிறுத்தினான். வீட்டிற்குள் ஒரு பெண்ணின் நளினக் குரல் கேட்கிறது. குரல் ரகசியமாக ஒலித்தது. ”நீண்ட நேரமா பாடிட்டிருக்கேன், தேவீ! என் சின்ன அம்மணி!” என்று மீண்டும் அழைத்தான். வீட்டிற்குள் ஆடைகளின் சரசரப்பும், காலடிச் சத்தமும், மங்கிய மெதுவான குரலில் ஒரு ஆண் பேசுவதும் கேட்டது. கூர்ந்து கவனித்தான். ஒரு ஆள் வேட்டியை மடித்துக்கட்டி சுவரேறிக் குதித்து இருளோடு இருளாக ஓடுவதைப் பார்த்தான். சாபங்கள் தீண்டியவனாய் சாமியாடி கல்லாகி நின்றான். முகம் வெளுத்து அதிர்ச்சியில் மூச்சற்றுப் போனான். அம்பலக்காரத் தம்பிரானும், பெரிய அம்மணியும் உலவிய வீட்டில் கொடிய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது கண்டு அவன் அதிர்ச்சியில் நிற்க சின்ன அம்மணி வெளியே வந்தாள். அவள் முன் நெற்றி வியர்வையில், முடிக்கற்றை நனைந்து ஒட்டிப் போயிருந்தது. அவன் தேடிவந்த தேவீ எங்கே? பல்லக்கிலிருந்து ராஜ பதுமை கீழே விழுந்து உடைந்து தூள் தூளாகிப் போய்விட்டிருந்தது. கண்களில் கண்ணீர் பனிக்க சாமியாடி சிலையாகி நின்றான். அவன் கையில் வெள்ளிக் காசைக் கொடுத்து “இன்று இவ்வளவுதான் கிடைத்தது” என்றாள். அவன் காசை வாங்கிக் கொள்ளவில்லை. அக்கினிச் சட்டி, உடுக்கை, சாட்டை, விபூதிப் பை, அனைத்தையும் தூக்கியெறிந்தான். நார் பெட்டியில் தன்னிடமிருந்த தானியம், கொஞ்சம் ரூபாய் அனைத்தையும் அம்மணியின் முன்வைத்துவிட்டு இரு கைகளையும் கூப்பியபடி, “அம்மணி! இது என் காணிக்கை” என்று சொல்லிவிட்டு மேலவாசல் வழியாகவே கால் சிலம்புகள் ஒலிக்க வெளியேறினான். அக்கினிச் சட்டியும், உடுக்கையும், சாட்டையும் அங்கேயே அனாதைகளாய்க் கிடந்தன என்று கதை முடிகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய அவமானம் அதன் சாதியக் கட்டுமானம். பிரமிடுபோல் கட்டப்பட்டுள்ள சமூகத்தின் கீழடுக்கில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகள் இன்றும் பல வழிகளிலும் தொடர்வது மிகப் பெரிய அவலம். “இப்பெல்லாம் யார் சாதி பாக்கிறா” என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு. தீண்டாமைக் கொடுமைகளின் கோர வடிவத்தை செயப்பிரகாசம் பல கதைகளிலும் சித்தரித்துள்ளார். ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ கதை சேரியில் வாழும் பள்ளர் குடியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியினரால் படும்பாட்டை விவரிக்கிறது. பள்ளர் குடியைச் சேர்ந்த மாடசாமியை மணமுடித்து ஊரின் சேரியில் புதிதாக வந்து சேருகிறாள் தைலா. தைலா வாட்டசாட்டமான உடலும், நீண்டு அடர்ந்த கூந்தலும் பெற்று வாலிபத்தின் பொலிவுடன் விளங்கினாள். அதுவரை சேரிப் பக்கம் வந்திராத மேல்சாதி வாலிபர்கள் எல்லாம் இப்போது சேரியைச் சுற்றி வந்தவண்ணமே இருந்தனர். மாடசாமி வீட்டெதிரில் இருந்த பொட்டலில் கூடுவதும், விளையாடுவதுமாக இருந்தனர். அவர்கள் பார்வை எப்போதும் தைலா மீதுதான். வாலிபர்கள் மட்டுமின்றி ஊர்ப் பெரிசுகளுக்கும் தைலா மீது சபலம். வரரெட்டி ஊரின் பெரும் புள்ளி. தைலா வந்ததிலிருந்து நிலைகொள்ளாமல் இருந்தார். வரரெட்டியின் மனைவி தும்மக்கா கணவனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே இருந்தாள். வீட்டு குலுக்கையில் சேர்த்து வைத்திருக்கும் தானியங்களை பள்ள வீட்டுப் பெண்களுக்கு கொடுத்துவிடுவாரோ என்ற பதற்றத்திலேயே இருந்தாள். மாடசாமிக்கு வாக்கப்பட்டு தைலா பள்ளக்குடியில் குடியேறியதிலிருந்து ஊர் நிலைமைகளைக் கண்காணித்து வந்தாள். சேரிப் பெண்கள் தலையில் பூச்சூடக்கூடாது; தாலியில் மட்டுமே பூச்சூடிக் கொள்ளலாம்; வெயிலானாலும், மழையானாலும் ஊரைச் சுற்றியே கம்மாய்க்குப் போக வேண்டும்; காலில் செருப்பு அணியக்கூடாது; கடையில் எவ்வளவு நேரமானலும் ஒதுங்கி நின்று ரெட்டியார் வீட்டுப் பெண்கள் வாங்கிய பின்னரே பொருட்களை வாங்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை எல்லாம் கண்டு மனதுக்குள் வெம்பினாள். ஆதிக்க சாதியினரின் திமிரை அடக்குவதற்கு சரியான தருணம் வருமெனக் காத்திருந்தாள். ஒரு நாள் வரரெட்டி முதலாளி தோட்ட வேலைக்கு தைலாவை வரச்சொன்னார். தண்ணீர் எடுத்துவர கம்மாய்க்கு அனுப்பினார். ”ஊரைச் சுற்றி என்னால் இந்தக் கடும் வெயிலில் போகமுடியாது, நடுவீதியில் தான் செல்வேன், அதுவும் செருப்பு மாட்டிக் கொண்டுதான் செல்வேன்” என்று நிபந்தனைகளை விதிக்கிறாள். தைலா மீதான சபலத்தில் ஊர்க் கட்டுப்பாடுகளை மறந்து வரரெட்டி அவளை அனுமதிக்கிறார். தைலா நடுவீதியில் செருப்புக் காலில் ஒய்யாரமாக நடக்கிறாள். ரெட்டிமார் வீட்டுப் பெண்கள் இக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர். இதெல்லாம் வரரெட்டியார் கொடுக்கும் இளக்காரம்தான், இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று பொருமுகிறார்கள். அடுத்த நாள் ஊர்ச்சபை கூடுகிறது. ஊர்ப் பெரியவர்கள் தைலாவிற்குத் தண்டனை கொடுக்கிறார்கள். தனக்கு ஆதரவாக வரரெட்டி பேசுவார் என்று தைலா அவர் முகத்தைப் பார்க்க, அவர் நைசாக நழுவிச் சென்றுவிடுகிறார். நீண்ட நாள் வழங்கப்படாமல் இருந்த தண்டனை தைலாவிற்கு வழங்கப்படுகிறது. விடிந்ததும் புளியந்தோப்பில் ஊர்க்காலி மாடுகளை பத்திக்கொண்டு சிதறிவிழும் நீண்ட கூந்தலோடு தைலா மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாள்.

”சாதிக் கொடுமைகள் வேண்டாம்/ அன்பு தன்னிற் செழித்திடும் வையம்/ ஆதரவுற்றிங்கு வாழ்வோம்” என்ற பாரதியின் கனவு நனவாகுமா? இப்போதைக்கு சாத்தியமே இல்லை என்பதை செயப்பிரகாசத்தின் ‘சாதி’ கதை உறுதிப்படுத்துகிறது. நாளுக்கு நாள் சாதிவெறி கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாக இல்லை. மடத்துக்குளம் ஒரு மணல் தேரி. ஊர் மக்களுக்கு ஒருபோதும் வளத்தைக் கொடுத்ததே இல்லை. இருப்பினும் ஊர் மக்கள் நாயக்கமார்களும், கோணார்களும் ஒத்துமையாகத்தான் இருந்தார்கள். ஒரு சமயம் பொன்வண்டுக் கோணார் ஆட்டுக்கிடையில் கிடந்த ஆடுகள் திருடுபோயின. ஊரே திரண்டு திருடர்களைப் பிடிக்கச் சென்றது. திருட்டைத் தடுக்க ஊர்க்காவல் போடப்பட்டது. அனைத்து சாதியினரும் ஒன்றாக நின்று டார்ச் லைட், ஈட்டிக் கம்பு சகிதம் விடிய விடியக் காவல் காத்தனர். மடத்துக்குளத்தில் சாதிவெறி ஒரே நாளில் வந்துவிடவில்லை. மெல்ல மெல்லவே கவ்வியது. இதோ! ஊர்ப் பெரிசுகள் நாச்சியப்ப நாயக்கரும், பாலகுமார் நாயக்கரும் பேச்சிலிருந்து மெல்ல வெளிப்படுகிறது சாதிய உணர்வு. “இப்பவெல்லாம் சாக்கிலியன் எங்கே செருப்புத் தைக்கிறான்? இங்கேதான் சக்கிலியன், பறையன்னு வித்தியாசம் தெரியுது. டவுன்ல என்ன எழவு தெரியுது. வெள்ளை வெள்ளையா டிரஸ் மாட்டிக்கிட்டு நம்ம பக்கத்திலேயே உட்கார்றான். யாருன்னு தெரியுது. மில்லில, கம்பெனியில, எல்லாப் பசங்களும் ஒன்னாத்தான வேலை செய்றான். முதலாளிக்கு காசுதான் வேணும். நிறம், சாதி வேண்டாங்கிறான். ராத்திரி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு ஊர்ச்சனம் பஸ் ஏறி வருகிறார்கள். பஸ்சில் நாயக்கமார் எல்லாம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு பஸ் மேலே ஏறிக்கொள்கிறார்கள். நாயக்கமார் உட்கார்ந்திருக்க நாம் நிற்பதா என்ற ஆணவம்” இவ்வாறு பெரிசுகள் சாதியம் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதை பொன்வண்டு கோணார் கேட்டுக்கொண்டுதான் வந்தார். ஆட்சேபகரமாக இருந்தாலும் மறுப்பு பேசவில்லை. திடீரென்று ஊரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. எம்எல்ஏ ஏற்பாட்டில் நாயக்கமார்களுக்கு ஆதரவாக போஸ்டர். போட்டிக்கு கோணாக்கமார்கள் போஸ்டர் “பாதிக்கப்பட்ட நமது சமுதாய மக்களுக்கு வாழ்வு தாரீர்! நன்கொடை தாரீர்!” என்றது. சாதிச் சங்கங்களாலும், சங்கத் தலைவர்களாலும் மடத்துக்குளம் வன்முறைக் காடானது. ஒரு நாளிரவு அழகிரிசாமி முத்தையாபுரம் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஊருக்குள் நுழையுமுன் எச்சரித்தார்கள். ஊரில் ஒரே கலவரம். அப்படியே திரும்பிவிடுங்கள் என்றார்கள். ”என்னை என்ன செய்யப்போறாங்க; நான் என்ன தெரியாத ஆளா” என்று சொல்லி ஊருக்குள் நுழைந்தார். ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்தது. எல்லாம் பழக்கமானவர்கள்தான். ”என்னண்ணே நாந்தான்” என்றார். “அண்ணனா, நாயக்கமாருக்கும், கோணாக்கமாருக்கும் என்னடா அண்ணந் தம்பி உறவு? கொல்லுங்கடா அவனை. நாயக்கனுகளையெல்லாம் கருவருக்கனும்” என்றது கும்பல்.

ஊர் யுத்த களமாகியது. பொன்வண்டுக் கோணார் இருதரப்பினரையும் நிறுத்தி சமாதான முயற்சியில் இறங்கினார். ‘ஏ கிழடு! உனக்கென்ன பைத்தியமா! என்று தள்ளிவிட்டனர். “இவனைப் பலியெடுங்கடா” என்றான் ஒருவன். இதே பொன்வண்டுக் கோணாருக்கு ஊரே திரண்டு நின்றது ஒரு காலத்தில்.

- பேரா. பெ.விஜயகுமார் (மதுரை மண்ணிலிருந்து வரும் ”நமது மண்வாசம்“ ஜூலை 2020 இதழில் வெளியான கட்டுரை.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்