ஊடகவியலாளர் மீது பாயும் ’ மெக்கார்த்தியிசம்’

கால வளர்ச்சிக்கேற்ப தத்துவங்கள், கோட்பாடுகள் உருவெடுக்கின்றன. கோட்பாடுகளுக்கு இடையேயான தர்க்கம், விவாதம் அனைத்தும் கால வளர்ச்சியை முன்னெடுக்கும் கோட்பாடு எது என அறியும் போராட்டமாக இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்னதான வேதகால மதத்தை - மத தத்துவத்தை - சமகால சமுதாய அறிவியல் ஆய்வினடியாய் பிறந்த கோட்பாடுகளை தடுத்து நிறுத்தும் முட்டுச் சுவராக கண்டதுண்டா? அதைச்செய்வது மதவெறி கொண்ட இந்துத்வா கூட்டம். 

இரு தத்துவார்த்த முகாம்களுக்கு இடையேயான மோதலாக இதனைக் கொள்ளலாமா, முடியாது. வேதகால பழமைவாதம், வேதகால பிராமணியம் என துருப்பிடித்தவைகளைப் புளிபோட்டு விளக்கிப் பளபளப்பாக்குதலன்றி, வேறொரு புண்ணாக்கும் அதிலில்லை. நவீன சமுதாய அறிவியல்களான, மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிருத்துபவை; இவற்றோடு ஒடுக்குவோரின் கைத்தடியான பழமை அடிப்படை மதவாதத்தை நிறுத்தி மல்லுக்கட்டுவது, இந்துத்துவர்களுக்கு கைவந்த தொழில்.

சரி, இந்துத்துவா கோட்பாட்டுப் பயணத்தில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பா.ச.க போன்றவை உறுதிகொண்ட நெஞ்சினனாய் முனைப்பில் பாய்கின்றன; அதுபோல் இங்குள்ள திராவிட இயக்கங்கள் உள்ளனரா? திராவிட இயக்க உணர்வாளர்கள் ஆட்சி அதிகாரச் சுவையைச் சப்ப ஆரம்பித்ததும், நீர்த்து முதுகெலும்பு அற்றுப் போனார்கள். எதிர் நிலையாக எந்த அதிகாரம் திராவிடஇயக்க வாதிகளின் கொள்கைகளை நீர்த்துப் போக வைத்ததோ, அதே அதிகாரம் மத்தியிலும் மாநிலத்திலும் பாசக என்னும் இந்துத்துவர்களை வீரியத்துடன், வீறாப்புடன் நடைபோடத் துணை செய்து வருகிறது. இந்துத்துவா காடுகள் அமோக வெள்ளாமை எடுத்துவருகின்றன.

இந்துத்துவா செயற்பாட்டாளர்களின் கருத்து என்னவாக இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது? பிரதமர் மோடிக்கு எதிரானது எதுவோ, அது பாசகவுக்கு எதிரானது; பாசக-வுக்கு எதிரான எல்லாமும் இந்துத்துவாக்கு எதிரானது. சட்டம் அடக்குமுறை வருகிறதோ இல்லையோ நாங்கள் கொடியேந்தி நேரடியாக களத்திற்கு வருவோம் என களமிறங்கினர் தமிழ்நாட்டில் சங்பரிவாரங்களின் இந்து முன்னணியினர். தொலைக்காட்சி நிலையங்கள், அச்சு ஊடக அலுவலகங்களின் முன் திரண்டு நேரடியாகத் தாக்குதல் நடத்தினர். அந்தப் போராட்டத்தை ஒளிபரப்பி தொலைக்காட்சிகள் மக்கள் முன் நீதி கேட்டன. “இனி முன் வாசல் வழி வரப்போவதில்லை, பின் வாசல் வழி நுழைந்து, எந்த விசையை அழுத்தினால் இருள் கப்புமோ அந்த விசையை அழுத்துவோம்“ என சூளுரைத்து சூழ்ச்சியான போர்த்தந்திர முறையையைக் கையிலெடுத்தனர்.

அது அதிகாரத்தைப் பயன்படுத்துகிற போர்த்தந்திர முறை. எதிரியின் படையை நிர்மூலமாக்கும் யுத்தகளத் தாக்குதல் சாத்தியமில்லாமல் போகையில் கரந்தடிப் போர் முறை (கொரில்லா போர்) கைக் கொள்ளல் விடுதலைப் போரின் களப்போர் உத்தி. அதே உத்தியை மோடியைக் காப்பாற்றும் அரசியல் களத்தில் கையாளத் தொடங்கினர். ஊடகங்களின், தொலைக்காட்சிகளில் உரிமையாளர்கள், முதலாளிகளின் நுரையீரலில் கை வைத்தது மூச்சுத்திணறல் உண்டாக்குதல், ஆட்சியின் அதிகார அழுத்ததைத் தொடர்தல் என்பது – அதிலொன்று.

இந்தக் கரந்தடிப் போர்முறைக்கு (கொரில்லாப் போர்முறைக்கு) முதலில் பலியானவர் உத்தரப்பிரதேசத்தில் இயங்குகிற ஏபிபி என்ற இந்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளர் புன்ய பிரசூன் பாஜ்பாய். ஏபிபி தொலைக்காட்சியில் ”மாஸ்டர் ஸ்றோக்“ (Master Stroke) என்னும் பிரதான நேரடி (prime time) நிகழ்வின் நெறியாளரை, தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கரந்தடி முறையில் நெருக்கடிகள் கொடுத்து, உச்சமாய் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றினார்கள்.

பிரசூன் பணியாற்றும் ஏ.பி.பி தொலைக்காட்சியின் உரிமையாளர், அவர்தான் தலைமை நிர்வாக ஆசிரியர் திடீரென ஒரு நாள் அவரை அழைத்தார். ”உங்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயரைக் குறிப்பிட வேண்டாம். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பெயரைச் சொல்லுங்கள். மோடி பெயர் எந்த இடத்திலும் வேண்டாம்’’.

”அவரது உத்தரவை செயல்படுத்துவது அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து நான் விவாதிப்பதாக இருந்தால் 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு குறித்தும், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பேசாமல் இருக்க முடியாது. நாடு முழுவதும் திறக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களில் 10-இல் 8 பூட்டிக்கிடக்கிறது என்பதையும் சொல்லதிருக்க முடியாது.

”கடந்த நான்கு ஆண்டுகளில் ‘தற்போதுள்ள அரசால்’ 106 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திட்டங்களையும் அறிவித்தவர் மோடி. துறை சார்ந்த அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை; தேடிக்கொள்ள வேண்டிய பெருமையை, அவரே தன் பெயரால் செய்தார். ஆகவே, மோடியின் பெயரை குறிப்பிடக்கூடாது; புகைப்படத்தைக் காட்டக்கூடாது என்றால், யார் குறித்தும், எது குறித்தும் முணுமுணுக்கக் கூடாது என்று அர்த்தம்.

”ஜூன் கடைசி வாரத்தில் பா.ச.க-வில் இருந்து வேறொரு அழுத்தம் வரத் தொடங்கியது. பா.ச.க சார்பாக ஏபிபி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரும் வர முடியாது என்று மறுத்தார்கள். அதில் இருந்து சில நாட்கள் கழித்து பா.ஜ.க பிரமுகர்கள் ஏ.பி.பி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க மறுத்தனர். நேரலை விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஒரு பேராசிரியருக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவர் அடுத்த விநாடி, நிலையத்திலிருந்து எழுந்து, மைக் ஒயரை கழட்டிவிட்டு, அவர் போக்கில் வெளியேறிச் சென்றார். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த செல்போன் அழைப்பு வந்தபோது, அவரது முகம் அச்சத்தால் வெளிறிப் போயிருந்ததைக் கண்டேன்.”

”இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்காக பா.ஜ.க அரசு நியமித்திருக்கும் 200 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நண்பர் எனக்கு அழைத்தார். “எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். இதன்பிறகு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மட்டும் எங்களுடைய செயற்கைக்கோள் இணைப்பு தடைபடத் தொடங்கியது. அந்த ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சித் திரை கருப்பானது. ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ முடிந்ததும், மிகச் சரியாக 10 மணிக்கு டி.வி. திரை பழையமாதிரி சரியாகிவிடும். எங்கள் தொழில்நுட்பக் குழுவால் இதை சரிசெய்யவே முடியவில்லை. உடனே தொலைக்காட்சியின் ஸ்க்ரோலிங் பகுதியில்,’’கடந்த சில நாட்களாக பிரைம் டைம் நிகழ்ச்சியின்போது எங்கள் ஒளிபரப்பில் சில தடங்கள் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய முயற்சித்துவருகிறோம். அதுவரை நேயர்கள் ஒத்துழைக்கவும்” என்ற செய்தியை ஒளிபரப்பினோம். ஆனால் இரண்டே மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டது. அதை ஒளிபரப்பக்கூடாது என்று நிர்வாகத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது.

‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி நியூஸ் நெட்வொர்க்கின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது.

”இதே நேரத்தில் ஏ.பி.பி சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் இத்தகைய அழுத்தம் தரப்படுவதாக எங்களுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது. ஒருநாள், இந்த நீண்ட நெருக்கடி நிலை ஒரு முடிவை எட்டியது. ஏ.பி.பி. தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் என் முன்னே கைகளை இறுக மடக்கிக்கொண்டு நின்றனர்.

“என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அநேகமாக விடுமுறையில் செல்லலாம் அல்லது பணியிலிருந்து விலகலாம்” என்றார்.

”இந்த அதிர்ச்சிகளை விட ஓர் அதிசயம் நடந்தது. நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஏ.பி.பி சேனலில் பதஞ்சலி விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கின. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வழக்கமாக 15 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க அழுத்தம் காரணமாக இது வெறும் 3 நிமிடங்களாக சுருங்கியிருந்தது. நான் விலகிய பிறகு இது திடீரென 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ராஜினாமா செய்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவில் இருந்தே செயற்கைக்கோள் இணைப்பில் எந்த தொந்தரவும் இல்லை. டி.வி திரைகள் கறுப்பாகாமல், வழக்கம்போல் ஒளிபரப்பாகின.”
தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.
(தமிழாக்கம்: வழுதி, நன்றி: வினவு இணைய இதழ்)

2

ஒரு நாளிலோ, ஒரு சில நாட்களிலோ இவர்கள் இந்த யுத்தம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஒற்றை மத பாரதத்தை உருவாக்க நினைக்கும் அவர்களின் யுத்தம் இது. அரசியல் மொழி இனம் பண்பாடு கலை இலக்கியம் என்று ஒவ்வொரு துறையாக விதைகளை ஊன்றி பரப்புரைநீர் வார்த்து வளர்க்க எத்தனிப்பார்கள்.நடுவணரசின் சிபிஎஸ்இ பள்ளிப் பாடப் புத்தகத்திலிருந்து பெரியார் சிந்தனைகளை நீக்கினார்கள்; தொடர்ச்சியாய் இட ஒதுக்கீடு, கூட்டாட்சித் தத்துவம், சனநாயகம். மனித உரிமைகள், எல்லைப் போராட்ட வரலாறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பலவற்றையும் அகற்றியிருக்கிறர்கள். (’தமிழ்மறையான திருக்குறளை இமத்தின் உச்சியில் நின்று பேசியிருக்கிறார் எங்கள் பிரதமர் மோடி’ என தமிழக பா.ச.க தலைவர் எல்.முருகன் தம்பட்டம் அடித்திருப்பது செம நகைச்சுவை.)

ஊடகவியலாளர், சிந்தனையாளர், அறிவுஜீவிகளை - இவர் இடதுசாரி, இவர் பெரியாரியலாளர், இவர் மார்க்சியர் என அவர்கள் நினைத்தால் போதும், அதை நிலைநிறுத்தும் செயல்கள் அனைத்தையும் தொடங்கிவிடுவார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவில் ஒரு களையெடுப்பு நடந்தது. இவர்கள் கம்யூனிஸ்டு சிந்தனையாளர்கள், கம்யூனிஸ்டுகள் அரசுக்கு எதிரானவர்கள். அமெரிக்க அரசுக்குள் இவர்கள் இயங்குதல் கூடாது என முதலில் அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் தொடங்கியது களையெடுப்பு. House committee on un American activities என்பது நடவடிக்கைக் குழுவுக்குப் பெயர். இந்தக் குழு பொய்யாக ஒரு குற்றச்சாட்டை சுமத்துவது, அதை வளர்ப்பது, பிறகு அவர்களைப் பணியிலிருந்து அப்புறப்படுத்தி விடுவது இப்படி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் அகற்றப்பட்டனர். மெக்கார்த்தி என்னும் சாணக்கிய சிந்தனையாளரால் முன்னெடுக்கப்பட்ட இந்நக் களையெடுப்பு அரசுத்துறையில் தீவிரமாய் நடைமுறைப்படுத்தப் பட்டது. இதுவே ’மெக்கார்த்தியிசம்’;

இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசுதுறைகளுக்கு அப்பால் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவி கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர். கலை இலக்கியம் இதழியல் ஊடகம் பண்பாடு மொழி என்று பலதுக்குள்ளும் ’மெக்கார்த்தியிசத்தை’ முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இடதுசாரிகளை அடையாளப்படுத்தி அமெரிக்காவில் நடைபோட்ட மெக்கார்த்தியிசம் போல், பா.செயப்பிரகாசம் என்ற எழுத்தாளர் மீது ஜெயமோகன் பரப்பிய அவதூறு - அதுவும் ”ஒரு இடதுசாரியின் முன்னாள் கடிதம்“ என்றுதான் தொடங்கியது. ஜெயமோகன் பரப்பிய அவதூறுக்கு எதிரான கண்டன அறிக்கையில் இருநூறுக்கும் மேலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒப்பம் அளித்த போது, கொதிப்புத் தாங்காமல் ” கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் அவதூறு வழக்குகள் தொடரப்படும்; குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறு வழக்கும், துறை ரீதியான புகார்களும் அளிக்கப்படும், அவர்கள் செயப்பிரகாசம் மீதான வழக்கிலும் சாட்சியாக அழைக்கப்படுவார்கள்.” என ஜெயமோகன் குதித்தார். துறை ரீதியாக புகார்கள் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள முனையும் இந்தச் சின்னப் புத்திதான் ’மெக்கார்த்தியிசம்’.

2013-ல் நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது சன் தொலைக்காட்சியிலிருந்து வீரபாண்டியன் வெளியேற்றப்படுகிறார்; சன் தொலைக்காட்சி அதைத் தடுத்திருக்க முடியும். ”வீரபாண்டியன் தனக்கென்று தனிக் கருத்து வைத்திருக்கலாம், அதை வெளி நிகழ்வுகளில், அரங்குகளில், உரையாடலில், எழுத்தில் வெளிப்படுத்தலாம். அதில் நாங்கள் தலையிட இயலாது; எமது நிறுவனத்தில் பணியாற்றுகிற நேரத்தில் தனது பணிகளை நிறைவு செய்கிறாரா என்பதுதான் எமக்கு முக்கியம்” என்று சன் தொலைக்காட்சி முடிவு எடுத்து அறிவித்திருந்தால், இது ஒரு முன்மாதிரியாக இருந்திருக்குமென்பது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இதே மாதிரியான தலையீட்டை இந்துத்துவா கூட்டத்தினர் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த ஆட்சி மோடி ஆட்சியாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களை நடுங்கச் செய்தது.

1990-வரை காட்சிஊடகங்களில் தூரதர்ஷன் மட்டும் கோலோச்சியது. பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் தனியார் மய, தாராள மயத்துக்கு இந்தியா திறந்து விடப்பட்டது. 1991 முதல் தொலைக்காட்சிகள் தனியார்மயம் ஆகின. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தலைவரான கலைஞர் குடும்பத்தின் கலாநிதி மாறன் ’சன் தொலைக்காட்சியைத்’ தொடங்குகிறார். அப்போது பல தொழில்களிலும் கலைஞர் குடும்பம் முதலீடு செய்யத்தொடங்கி வளமாகிக் கொண்டிருந்தனர். “தொழில்துறையில் இந்தியாவின் மிகச்சிறந்த இளம் தொழில் அதிபர் என்று” டாடாவிடம் கலாநிதி மாறன் பாராட்டுப் பெறுகிறார். பலப் பல தொழில் நிறுவனங்களை நிலைப்படுத்த காட்சி ஊடக பலம் அவசியமானது. தொடர்ந்து மளமளவென்று தொலைக்காட்சிகளை பிற மாநிலங்களிலும் சன் குழுமம் தொடங்கிற்று. 2000 –ஆம் ஆண்டில் சன் செய்திகள், கலைஞர் தொலைக்காட்சி. 2009-ல் திமுக பிரமுகர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் ராஜ் தொலைக்காட்சியை தொடங்குகிறார். தமிழகத்தில் இயங்குகிற பாதி தொலைக்காட்சிகள் சன் குழுமத்தின் கைவசமிருக்கின்றன.

கல்வி வணிகத்தில் சக்கை போடு போட்ட எஸ்.ஆர்.எம் குழுமத்தின் பாரிவேந்தர் 2011-இல் ’புதிய தலைமுறை‘ தொலைக்காட்சி தொடங்குகிறார். கட்சி சாராத அதன் நடுநிலையான ஒளிபரப்பு பெரும்பான்மையான மக்களை ஈர்க்கிறது 2014-இல் தந்தி டிவி - 2014-ல் கனிமக் கொள்ளை வைகுண்ட வாசனின் குழுமம் (vv group) நியூஸ்7 - 2016-இல் முகேஷ் அம்பானியின் நியூஸ்18.

அரசியல் சூதாட்டத்தில் ஒரு காய் நகர்த்தலாக, அப்போது பா.ச.க.வின் ஆதரவாளராக இருந்த பாரிவேந்தரின் புதிய தலைமுறைக்குள் இந்துத்துவ அறிவுஜீவிகள் நுழைகின்றனர். புதிய தலைமுறையில் ஜென்ராம், குணசேகரன், கார்த்திகைச் செல்வன், தியாகச் செம்மல், போன்ற இடதுசாரி, பெரியாரியச் சிந்தனையாளர்கள் உட்கார்ந்திருப்பது இந்துத்துவர்களுக்கு உறுத்தலாக மாறுகிறது.

சமகாலத்தில் ஆகப்பெரிய பேரம்பேசும் சக்தி ஊடக பலம்; தினத்தந்தி ஆதித்தனார் அமைச்சரானது முந்தைய வரலாறு; புதிய தலைமுறையின் பாரிவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினரானது சமகாலக் கதை.

மனித சமூகத்தின் மேல் இதயம் வைத்திருப்போர், சனநாயக விழிகள் பெற்றோர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சு ஊடகத்தை, காட்சி ஊடகத்தை நடத்தும் ஆற்றல் ஆற்றல் கொண்டவர்கள் அல்லர். அனைத்துக்கும் தேவையான முதல் திறன் மூலதனத் திறனே! மூலதனத் திரட்சியால் ஒரு ஊடக நிறுவனம் உண்டாக்கப்படதும், நடுத்தர வர்க்கத்திலிருந்து அறிவி ஜீவிகளைத் தேடுகின்றனர். முந்திய தலைமுறையினர் பெரும்பாலும் உயர் சாதி ஊடகவியலாளர்கள். அடுத்த கட்டம் சூத்திர அறிவுஜீவிகள் கை ஓங்கியது.

அன்று மோடி ஆட்சிக்கு வந்திருந்தார். ”ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள். விமர்சனத்துக்கு உரியவர்களே பதில்கூற பொறுப்புள்ளவர்கள், அதனால் அழைக்கிறோம்” என விளக்கம் தரப்பட்டது. இருக்க இடம் கேட்டவனே பின்னர் படுக்கப் பாய் எடுத்துக் கொண்டான். இன்னார், யாரிவர் என மக்கள் அறியாதிருந்த முகங்களை தமிழ்நாட்டின் பாசக தலைமைகள் ஆகிவிட்டது புதிய தலைமுறை. பங்கேற்றவர் ஒவ்வொருவரும் நெறியாளர்கள், நிகழ்ச்சி செய்தித் தொகுப்பாளர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். கண்காணிப்புச் சங்கிலியின் இறுதிக்கண்ணி அவர்களை இடதுசாரி இயல் சிந்தனையாளர்களாக, பெரியாரியலாளர்களாக, தமிழ்த் தேசியர்களாக அடையாளப் படுத்திற்று. அச்சு ஊடகங்களில் இவர்கள் முன்னர் எழுதிய பதிவுகள் சேகரிக்கப்பட்டு, நிர்வாகத்தின் முன், நிறுவன உரிமையாளர் முன் குவிக்கப்பட்டன. அம்பானி குழுமம் தொடங்கிய நியூஸ்18-ல் குணசேகரன் போய்ச் சேருகிறார். இல்லையெனில் வெளியேற்றப்பட்டிருப்பார். நீ ஒரு இடதுசாரி என்ற குற்றம் சுமத்தி ஜென்ராம் 2014-இல் வெளியேறிட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இன்றைய’ புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் இரு நெறியாளர்களின் தலைக்குமேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. நெறியாளராய் செயல்பட்ட தியாகச் செம்மல் முகம் திரையில் தெரியாத தனிமூலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இடதுசாரி இயல் அறிந்தவர்கள், இடதுசாரி இலக்கியம் தெரிந்தவர்கள் காவிகளின் ஊடுருவல் தொடங்கி ஆதிக்க உச்சம் வரை, முழுமையாகக் கணிக்க இயலும். மற்றையோர் ஒவ்வொரு நிகழ்வையும் தனிப்படுத்தி அதற்கு மட்டும் விளக்கம் சொல்வார்கள். முழுமையும் கண்டு மொத்தக் கண்ணியையும் பிடித்து உலுக்குதல் செய்யார். அதற்கான பகுப்பாய்வு முறை அவர்களிடம் இல்லை. இடதுசாரி சிந்தனையாளர்களை இதன் காரணமாகவே தமிழின் ‘தலை சிறந்த இலக்கிய மாஸ்டர்கள்’ வெறுக்கிறார்கள் .

3

’மாரிதாஸ் பதில்கள்’ என்கிற ’யூடியூப்’ முகவர், மாணவர்களையும் இளையோரையும் இந்துத்துவா, பா.ச.க திசைநோக்கித் திருப்பி விடுகிற ஊழியம் புரிந்து வருகிறார். சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தினரும் பெரியாரியலாளர்களும் இந்துமத சமுக்கத்துக்கு கேடு விளைவிக்கிறார்கள் என்பதுதான் இந்த மாரிதாஸ் உதிர்க்கும் அர்த்தமுள்ள உரையாடல்கள். அற்பமானவை; அதீதமானவை; இட்டுக்கட்டபட்டவை என்று ’ஸ்குரோல்’ (scroll) என்ற இணயச்செய்தி தெரிவிக்கின்றது. நியூஸ்18 தொலைக்காட்சி நெறியாளர் குணசேகரன் பற்றி யூடியூபில் மாரிதாஸ் செய்த முக்கியமான பரப்புரை அவர் திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவரின் மருமகன் என்பது. அதனால் அவர் திராவிடக் கருத்தியல் அடிப்படையில், இந்துமத வெறுப்புப் பரப்புரையைக் கக்குகிறார், குணசேகரனை மட்டுமல்ல, தொலைக்காட்சியில் பணிசெய்யும் அவரது கூட்டாளிகளையும் வெளியேற்றவேண்டும் என யூடியூப் பார்வையாளர்களை நியூஸ் 18-க்கு புகார் அனுப்பச் சொன்னார் மாரிதாஸ். ’அவருடைய குற்றச்சாட்டுகளில் பெருபாலானவை உண்மை;எனவே நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக’ மின்னனஞ்சலில் நியூஸ் 18 தெரிவித்ததாக மாரிதாஸ் பரப்பினார். வினய் சரவஹி என்ற நியூஸ் 18 ஆசிரியர், ”தங்கள் பெயரில் அனுப்பிய மின்னஞ்சல் பொய்யானது. போலியான மின்னஞ்சலைக் கையாண்டு அனுப்பிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென” ஜூலை 10-இல் காவல்துறை ஆணையருக்கு புகார் அளிக்கிறார். கந்தத சஷ்டி கவசத்தை நிந்தனை செய்ததாக, ‘கருப்பர் கூட்டத்தை’ உடனே கவ்விப்பிடித்து கைது செய்த காவல்துறை, பொறுப்புள்ள நியூஸ்18 அலுவலக ரீதியாக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

நியூஸ்18 நிறுவனம் பாஜக அழுத்தம் காரணமாக ஹாசிப் முகமது என்பவரை முதலில் வெளியேற்றுகிறது. இன்னும் குணசேகரன் இங்குதான் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக அவரைத் தங்களுடன் வைத்திருக்கிறார்கள். செந்தில் வேலை பறிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டு விட்டார். அதுபோல் இளையபாரதி சமூக ஊடகங்களில் பங்கேற்றார் என்ற காரணம் காட்டி அவருடைய ’சட்டியை உடைத்து’ (வேலையைப் பறித்து) அனுப்பியுள்ளது நிர்வாகம். நியூஸ்7 தொலைக்காட்சியிலிருந்து அல்ஃபோன்ஸ் சேவியர் முடக்கப்பட்டுள்ளார்; இந்துத்துவ மோடி அரசை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் உயிர்கொண்டு வாழ முடியாது என்பதை இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னான செய்தியாக அறிவிக்கிறார்கள்.

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனை வளத்துடன், அவைகளின் போர்க் குணச் செயல்பாட்டாளர்களுடன் இவர்களால் நேருக்கு நேர் நிற்க இயலவில்லை. இயக்கவாதிகளாக அவர்களை சித்திரப்படுத்தி வெளியேற்றுவது என தூர்த்துத் துடைப்பதைத் தொடங்கியுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் அசைக்க முடியாத ஒன்று பெரியாரியம். ஏனெனில் அது நேருக்கு நேர் நின்று அவர்களின் மூடநம்பிக்கைகளை, பகுத்தறிவை, சாதி மத புராணப் புளுகுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

” ராமர்கோவில் பணிகள் தொடங்கியதும் (ஆகஸ்டு 6-ல் மோடி தொடங்கிவைக்கிறார்.) கடவுள் ராமரே கொரோனா தொற்றுநோயை அழித்து விடுவார். பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும்போது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான தொற்று நோயின் அழிவு ஆரம்பமாகும்” என்கிறார் ஒருவர்.

சொன்னவர் பாஜக தலைவரும் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தலைவருமான ராமேஸ்வர் ராவ்.

இதுபோன்ற அறிவுச்செறிவான முத்துக்கள் உதிர்க்கையில் பெரியாரியலாளர்கள் என்ன, ஒவ்வொருவரும் மனசுக்குள் கெக்கலிகொட்டிச் சிரிக்க மாட்டர்களா? இந்நிலையில் உ.பி.யில் ஏபிபி இந்தி தொலைக்காட்சி நெறியாளருக்கு நேர்ந்தது தான், இங்கும் ஊடகங்களில் பணியாற்றும் பெரியாரியலாளர்களுக்கு நேரும் என்று சங் பரிவாரங்கள் சொன்னால், இவர்களை அடிக்காத விளக்குமாறு இனி வீட்டில் இருக்கலாமா?

கேட்போம் நாம்.

- ’காக்கைச் சிறகினிலே‘ ஆகஸ்ட் 2020 (மின்னிதழாக வெளிவருவதால் ’காக்கைச் சிறகினிலே‘ இதழில் இக்கட்டுரை சுருக்கி வெளியிடப்பட்டது).

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்