தோழர் தொ.பரமசிவன்

பகிர் / Share:

காட்சி - 1 அப்போதைய இராமநாதபுரம் மாவட்ட இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் தொ.ப 1972 முதல் கற்பித்தல் பணி. 1965-ன் இந்தி ஆதிக்க எதிர்ப்ப...


காட்சி - 1

அப்போதைய இராமநாதபுரம் மாவட்ட இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் தொ.ப 1972 முதல் கற்பித்தல் பணி. 1965-ன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோ இளையான்குடி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர். தொ.ப.வும் வீராசாமியும் அறை நண்பர்கள். இரு ஆண்டுகளின் பின் தொ.ப.வுக்குத் திருமணம். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இல்லறம்: பணியின் பொருட்டு இளையான்குடி போய்த் திரும்பினார்.

தொ.ப பரமக்குடியில் வீடெடுத்து தங்கியிருந்த ஆண்டுகள்; ஆண்டு நினைவு இல்லை; மேல்மாடி வீடு. இரவு உணவுக்குப்பின் அவருடன் தங்கிப் பேசிக்கொண்டிருந்தேன். புரட்சிகர மார்க்சிய லெனினியப் பாதையில் அப்போது நான் பாலர் வகுப்பில் நுழைந்திருந்தேன். புரட்சிகர அணிகளின் செயல்பாடுகள், அவைகளுக்குள்ளான கருத்து முரண்பாடுகள் பற்றி நிறையக் கேள்விகள் அவருக்குள் எழுந்தன. மார்க்சிய லெனினிய இயக்கங்களின் நிலைப்பாடு, நடைமுறைச் செயல்கள் போன்றவைகளை எனக்குத் தெரிந்த அளவில் பகிர்ந்து கொண்டிருந்தேன். புரட்சிகர அணிகளின் நடைமுறைகள் பற்றி புதிய புதிய செய்திகள் அறிதலில் அவர் முகம் மலர்வும் ஆச்சர்யமுமாக விரிவு கொண்டது.

அதிகார அரசு நிறுவனங்களை மா.லெ இயக்கத்தினர் எதிர் கொள்வதில் என்னென்ன முறைகளைக் கையாளுகின்றனர் என அறியும் ஆர்வம் அவருக்குள் துளிர்த்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே அதிகார எதிர்ப்பு அவருக்குள் ஊன்றி நின்றிருந்தது; கல்லூரியின் அதிகாரத் தோரணை தூண்டிவிட்டிருக்க வாய்ப்புண்டு.

அவருடைய கடைசி நேர்காணலில் ’மொழி ஆதிக்கம்’ பற்றிய கேள்வி ஒன்று:

”உங்கள் இளமைக் காலத்தில் நடந்த இன்றும் உங்களை பாதிக்கும் விசயம் என்ன?”

“இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் என்னைப் பாதித்த விசயம்”

”இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தி தெரியும் என்கிற கூடுதல் தகுதியால் மத்திய அரசில் பதவி வகித்தது விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?”

”அதிகாரத்துக்கு நாக்கைத் தொங்கப் போட்டால் அவ்வளவு தப்பையும் பண்ணித்தான் ஆகவேண்டும்”

’பட், பட்’டென்று பதில் தருவது தொ.ப.வின் இயல்பு.


காட்சி - 2

கல்லூரி நிர்வாகத்தின் அநீதிப் போக்கை எதிர்த்த ஆசிரியர் தொடர் போராட்டத்தின் விளைவாய் கல்லூரியில் இரு ஆசிரியர்கள், அரசின் தலையீட்டின் பேரில் மிகைப் பணியிடம் (Surplus) என்று கணக்கிட்டு மதுரைக்கு மாற்றப் படுகின்றனர். ஒருவர் இளையான்குடி பூர்வீகர். அவருக்குப் பணி ஒதுக்கீடு மதுரைத் தியாகராசர் கல்லூரி. பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர் தொ.ப.விடம். ”நமக்குள் இயல்பான மாற்றம் (Mutual Transfer) பெற முயற்சி மேற்கொள்ளலாமா” எனக் கேட்கிறார். ”செய்து கொள்ளலாம்; ஆனால் நான் கேட்க மாட்டேன். நீங்கள் முயற்சி செய்தால் முழு ஒப்புதல் தருகிறேன்” என்கிறார். அதன் பேரில் அவர் பணியிடமான தியாகராசர் கல்லூரிக்கு தொ.ப.வும், தொ.ப இடத்தில் அந்த விரிவுரையாளரும் மாறுதலாகிக் கொள்கிறார்கள்.

தமிழ் வளர்க்கும் பல்கலைக்கழகங்கள் என தமிழகத்தில் பெயர் பெற்றுக்கொண்டிருந்த மூன்று கல்லூரிகளில் மிக முக்கியமான ஒன்று மதுரைத் தியாகராசர் கல்லூரி. தொ.ப.வுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டிருக்கும்; தன் முன்னேற்றத்திற்கு புதிய கல்லூரிச் சூழல் கை கொடுக்கும் என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

அன்றைய மதுரையின் கீகோடி முனையில் நிறுவப்பட்டிருந்தது தியாகராசர் கல்லூரி. "முன்புறம் அலையடிக்கும் தெப்பகுளம்; பின்புறம் நீரோடும் வைகை. இரு நீர்நிலைகளின் இடையில் அமைந்த தமிழ்த் தாஜ்மஹால்” என்று 1960-களின் தொடக்கத்தில் கல்லூரியில் வாசித்துக் கொண்டிருந்த நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். எதையும் கற்பனை ரீதியாக சொல்லிப் பார்க்கிற இளமைக்காலம்! சூழல் அமைவிடம் என்கிற பருண்மைப் பக்கம் அல்ல; தமிழ் வளர்ச்சியில் பழமைமிகு பேராசிரியர்கள், சுற்றிலும் போர்க்குணமிக்க மாணவர்கள் என்னும் பொருண்மை மிகு கல்லூரி அவரை ஈர்த்தது. இயல்பான மாறுதல் இப்படியொரு இடமாக வாய்த்தது என்ற பெருமிதம் தொ.ப கொண்டிருக்கக்கூடும்.

”துறை மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளச் செல்கிறார் தொ.ப. தியகராசர் கல்லூரி, மதுரை பல்கலைக்கழகம் என ஒவ்வொரு படிக்கல்லாக கால் வைத்து ஆழம் காண இயலாத தமிழ் பண்பாட்டுக் கிணற்றில், ஒவ்வொரு படிக்கல்லாய் இறங்கி முங்கிக் குளித்து நீராடி புதிய உச்சங்களைத் தொட இது தொடக்கம். ”இளையான்குடியில் பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற பண்பாட்டு ஆய்வுத் தேடல் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதா” என நண்பர் வீராசாமியிடம் உசாவிய வேளை, நண்பரின் பதில் “அவ்வாறு ஏதும் அப்போது நான் காணவில்லை. ஆனால் திராவிட இயக்கச் சிந்தனையாளர். பேசுபொருள் ஒவ்வொன்றிலும் பகுத்தறிவுப் பூர்வமான தெறிப்புகள் இல்லாமல் பேசியதில்லை என்றார்.


காட்சி - 3

”அரண்மனைக்கு ஆயிரம் செல்லும்” என்பது மக்கள் வழக்காறு.

அரண்மனை அதிகார பீடம்; மக்களின் சொத்துக்களை தனதாக்கிக் கொண்டு, மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, மக்களின் வரிப்பணத்தில் தன் பிழைப்பை வரித்துக் கொண்டு வாழுகிற பீடம்! அதிகாரம் இருவகையில் செயல்படுகிறது: ஒன்று - அமைச்சரவை போன்ற கருத்தியல் வடிவம். மற்றொன்று தளபதிகள், சேனை என ஆயுத வடிவம். படாடோபம், பகட்டு, ஆடம்பரம், அனைத்தும், ஊரை அடித்து உலையில் போடும் காரியமாக இருத்தலால், ஊர் வாயை மூட முடிவதில்லை: மெல்ல மெல்ல முணுமுணுப்பு ஏறத் தொடங்கி எதிர்ப்புக்குரலாய் ஒலிக்கிறது. ’அரண்மனைக்கு என்ன ஆயிரம் செல்லும்‘ என்று அரச பீடத்தை இளக்காரமாய் பார்க்கிறார்கள் மக்கள். இன்று அரண்மனை இல்லை; மன்னர்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆயினும் ஆதிக்க மனோபாவம் சாகாது உயிர்த்துக் கொண்டிருக்கிறது; இதையும் இச் சொல்லாடல் வெளிப்படுத்திவிட்டது. நாட்டாரியல் மொழிகளின் சுருண்டு கிடக்கும் அர்த்தங்களை, வரலாற்று அசைவை சுருள்கத்தியை போல் விரித்து விளக்கப்படுத்தும் திறன் தான் தொ.ப. மக்களது அடியொற்றி நாட்டுப்புற வழக்காறுகளின் வேர் வரை போய் காலத்தை வரலாற்றை மதிப்பீடு செய்து காட்டுதல் அவரது விமர்சன முறையாய் உருவெடுத்தது.

சொல்லாடல், பாடல், கதைப் பாடல், சொலவம், கதை, அழிப்பாங்கதை என மக்களின் நூற்றுக்கணக்கான வெளிப்பாட்டு முறைகளை சேகரித்தல், தொகுத்தல் என சென்ற நூற்றாண்டின் ஐம்பது அறுபதுகளில் தொடங்கிய இதன் மூலவராக பேராசிரியர் நா.வானமாமலை அறியப்படுகிறார். பேரா.நா.வா தொகுத்து வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் 1960-ல் வெளியாகிறது. நா.வா தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் ஆண்டு 1964. நூலில் சேகரித்தோர் பெயர் முதன்முதலாக தரப்பட்டது. சேகரிப்பு முனைப்புக்குக் கிடைத்த முதல் மரியாதை எனக்கொள்ளலாம். நாட்டார் வழக்காறுகளை தொகுத்து வெளியிட்ட எத்தனையோ பேர் சேகரித்த பெயர்கள் குறிப்பிடாது சிம்மாசனம் ஏறிய வேளையில், நா.வானமாமலை அறம்சார்ந்து செயல்பட்டார்.

தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா, சிவகிரி எஸ்.எம்.கார்க்கி, கவிஞர் சடையப்பன், எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன், எம்பி ராஜவேலு, குமாரி பி.சொர்ணம், டி.மங்கை என பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் நல்லகண்ணு இரண்டொரு பாடல்கள் சேகரித்து அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் எஸ்.எஸ்.போத்தையாவின் பங்களிப்பு எழுபத்தைந்து விழுக்காடு இருந்தது என்பதை தன் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு ”எஸ்.எஸ்.போத்தையாவின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இத்தொகுப்பு முழுமையடைந்திருக்காது” என பெருமிதம் கொண்டிருப்பார் பேரா.நா.வா.

சேகரிப்பு, தொகுப்பு என பகிரப்பட்ட நாட்டார் வழக்காறுகளை முதன்முதலாக பொதுச் சமூகத்திற்கு பயன்படுத்தல் என்பதில் இருவர் முன்னோடி ஆகின்றனர்; ஒருவர் உரைநடையின் முன்னோடி கி.ராஜநாராயணன். மற்றொருவர் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன். கி.ரா கதைகள் சிறுகதைகள் நாவல் கட்டுரைகள் என தனது எழுத்துக்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்றார்.

பல்கலைக்கழகத்தின் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆய்வு அவரது வாசிப்பு, தேடல், புத்தாக்க சிந்தனை போன்றவற்றின் கோர்வையாய் மேம்பாட்டுக்கு வித்திட்டது முதலில் அவர் புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்வதாக இருந்தார்: சங்க இலக்கியங்கள், காப்பிய காலம் சிற்றிலக்கியங்கள் இவைகளில் இலக்கியம் நயம் தேடும் இதுவரையான ஆய்வுலக மரபிலிருந்து வித்தியாசப்பட்டு, நவீன இலக்கியமான நாவல் சிறுகதை புதுக்கவிதை ஆய்வு எனப் பலரும் புதிய களத்தில் கால் வைத்தபோது, பண்பாட்டு ஆய்வுகளுக்குள் நுழைய வேண்டிய அவசியம் நேர்கிறது; அவ்வாறான தலைப்புகளில் ஒன்று ’ஆழகர் கோயில்’. இத்தலைப்பை மதுரைப் பல்கலைத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் ஆய்வுலகில் நவீன சிந்தனைகளின் முன்னோடியுமான பேரா.சண்முகம் பரிந்துரை செய்தார்.


காட்சி - 4

பார்ப்பனியத்தின் பலமான அம்சங்களில் ஒன்று நிறுவன பலம்; இந்த நிறுவனம் பழைய காலத்தில் பார்ப்பனர்களுக்கு இரண்டு வகையாக இருந்தது- ஒன்று நிலபுலன்களும் அசையும் சொத்துக்களும் இருந்த பெருங் கோயில்கள்; மற்றொன்று - கண்ணுக்கு புலனாகாத கருத்தியல் நிறுவனம் - அதாவது வேதங்கள் சாத்திரங்கள் புராணங்கள்.

’இதுதான் பார்ப்பனியம்’ என்னும் நூல் 1992-இல் வெளியாயிற்று; ஆசிரியர் சிவகுமாரன் என்றிருக்கும். இதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கி ’இந்து தேசியம்’ என்ற முழு நூல் பிற்காலத்தில் தொ.பரமசிவன் பெயரில் வெளியாயிற்று. ஒருவேளை பார்ப்பனியக் கருத்துகளை அவர்களின் வழியிலேயே சூத்திரர் என்று சொல்லப்பட்ட அறிவுலகச் செயற்பாட்டாளர்கள் வாசித்து வசப்படுவார்களெனில், பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக்கொண்ட பார்ப்பனரல்லாத அவர்களும் மறுப்புக்கு உரியவர்கள் என்று முன்னுரையில் ஓங்கி அறை கொடுத்திருப்பார்.

புராணக் கதைகளும் சாத்திரங்களும் பார்ப்பனரல்லாத சூத்திர மக்கள் கூட்டத்தை சிந்தனை அளவில் அடிமையாக்கி இருந்தன. கோயில்கள் உலகியல் ரீதியாக அவர்களை நிரந்தரக் கருத்தியல் அடிமைகளாக்கியபோது, அரசும் அரசு போன்ற அதிகாரஅமைப்புகளும் அவைகளுடன் மக்கள் ஒத்துப்போதல் என நடைமுறைப்படுத்தின. மக்கள் ஒப்புதல் இல்லாமல் கருத்துக்கள் வெற்றி பெறுவதில்லை; பெண் ஏன் அடிமையானாள் என்ற சிந்தனைகளுக்கு அவளைப் பற்றிய ஆணாதிக்க கருத்தியலில் அவளே குடிகொண்டிருந்தாள் என்பதையே பெரியார் போன்றோர் வெளிப்படுத்தினார்.

தொ.ப வெளிப்படுத்துகிற நாட்டரியல் தொடர்பான ஒவ்வொரு தகவலும் வரலாற்றுத் துளிகளின் மூலம். இதில் இரண்டு வகைகளை அவர் கையாண்டார் இதுவரை கேள்விப்பட்டிராத, வாசிப்புக்கு வராத தகவல்களினைக் கண்டடைந்து பேசினார். இதுவரை நாம் கூர்ந்து பார்த்திராத புதிய விளக்கம் மற்றொன்று. ”அறியப்படாத தமிழகம்” நூல் வெளிப்பட்டபோது, அவரை அறியாதிருந்த தமிழகத்திற்கு அவரைக் கொண்டு சேர்த்தது; திராவிட இயக்கச் சிந்தனைகள், மார்க்சிய - லெனினியச் சிந்தனைகள் என்பவைகளின் இணைவில் வாசகருக்கு புதிய கருத்துக்களைத் தருகிற ஒருவராக அவர் வெளிவந்தார். இது தமிழ்ப் பண்பாட்டுக்கு இதுவரை கிடைத்திராத ஒரு பார்வை: நாட்டுப்புறத்தான் என்று சொல்வதில் எத்தனை இளக்காரம் கொண்டு பேசினோமோ, அவற்றையெல்லாம் அதே நாட்டுப்புறத்தானின் இயல் கொண்டு, தலைகீழாய்த் தூக்கியடித்தார். அவர்களையெல்லாம் தன் மடி மேல் ஏற்றிக்கொண்டு கொஞ்சினார்;

நாட்டுப்புறக் கலையை ஒரு கருத்தியலாக ஏந்தியவர். ஒவ்வொரு மனுசன் மனுசியின் அசைவும் முகபாவமும் அதன் வழியாக வெளிப்படும் குணமாகும் என்று அவர் அவர்களைக் கூர்ந்து கவனித்தார். என்ன வகையாக, எப்புள்ளியிலிருந்து என்பதை வாசித்தார். அதனால் மண் சார்ந்த படைப்புகளை விரும்பினார்.

”மண் சார்ந்த படைப்புகளைத் தருவதில் உங்களை கவர்ந்தவர்?”என்றொரு கேள்விக்கு, தன் இறுதி நேர்காணலில் நேர்படப் பேசினார். 
"பா.ஜெயப்பிரகாசம். தஞ்சாவூரை ஜானகிராமனும் திருநெல்வேலியை புதுமைப்பித்தனும் நன்றாகப் பதிவு செய்திருக்கிறார்கள். சோ.தர்மனையும் சொல்கிறார்கள்; நான் இன்னும் படிக்கவில்லை.”

உயிர்ப்புள்ள தெய்வங்களை கிராமத்தின் எளிய மக்கள் வணங்கிப் போற்றினார்கள்; அவர்கள் பேசினால் அவை பேசும்; அவர்கள் பாடினால், ஆடினால் அத் தெய்வங்களும் குதூகலித்துப் பரவசம்கொண்டு ஆடும் பாடும்; தங்கள் தெய்வத்துக்கு அவர்கள் உயிர்ப்பை உண்டாக்கினார்கள். நிறைவாழ்வு முடிந்த மூதாதையர் தெய்வங்களாகியதாக மக்கள் நம்பினர் பேராசிரியர் சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில் அழகர்கோவில் ஆய்வில் உட்கார்ந்தார் தொ.ப. எளிய மக்களின் பண்பாட்டு நிகழ்வு சார்ந்த நம்பிக்கைகளுக்குள் புகுந்தார். பேரா.நா வானமாமலை பள்ளியில் உருவானவர்களில் தொ.ப குறிப்பிடத்தகுந்தவர். அடித்தட்டு மக்களின் வரலாற்றை இலக்கிய வாசகங்கள், கூற்றுக்கள், செப்பெடுகள், கல்வெட்டுகள் ஆய்வு வழியாக பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தந்து கொண்டிருந்த வேளையில், தொ.ப நாட்டாரியலிலிருந்து எடுத்து வழங்கி, மக்களின் பண்பாட்டு ஆய்வுவை இன்னொரு திசையில் வழிநடத்தினார். நாட்டார் வழக்காறுகளின் வழி வெளிப்படும் பண்பாட்டு அழகில் கவனம் கொண்டார்.


காட்சி - 5

”இந்து என்ற சொல்லுக்கு பொருள் என்ன?”

”இந்து என்ற சொல் இந்தியாவிலேயே பிறந்த வேதங்களிலோ உபநிடதங்களிலோ, ஆரண்யகங்களிலோ, பிராமண்யங்கள் என்ற சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலும் இல்லை; இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில்’ ஓரியண்டலிஸ்ட்’ - அதாவது கீழ்த்திசை நாடுகளை பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்த சொல்லுக்கு மரியாதை என்றால், இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல் என்பது ஒன்றுதான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேறு சொல் கிடையாது.”

“இந்துக்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்”

”இந்து என்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தை பெற்ற சொல்தான். அது ஒரு சமயச் சார்புடைய சொல் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்படுகிறது. இந்து என்ற சொல்லுக்கு நேரிடையான வரைவிலக்கணம் கிடையாது. கிறிஸ்தவர் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத, ஆரியரல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்ற எதிர்மறையான வரைவிலக்கணம் தான் உண்டு. ஒரு மதம் என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமைய வேண்டும் ஒரு முழுமுதற் கடவுள்; ஆகமங்கள்; குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன. இந்து மதத்திற்கு அல்லது அப்படி அடையாளம் காட்டப்படும் ஏதுமில்லை. இந்து மதம் என்ற சொல்லாடலில் தமிழ்நாட்டில் சைவர்கள் வைணவர்கள் என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப் படுகிறது.

இந்துமதம் என்ற சொல்லாடலில் சைவர்கள், வைணவர்கள், ஸ்மார்த்தர்கள் - இந்த மூன்றும் இல்லாத நூற்றுக்கணக்கான வழிபாட்டு முறைகளை உடையவர்கள் என்று பல மக்கள் துகள்கள் உள்ளன.


காட்சி - 6

நீரழிவுநோய் காரணமாக, முழங்காலின் கீழ் நீக்கப்பட்டது. மாற்றுத் தோற் கால் சரியாகப் பொருந்தவில்லை; கனமும் அதிகமாக இருந்தது. பிறகு அதைச் சரி செய்தல்; இயல்பான நடமாட்டம் இல்லாமல்போனது. நோயின் நொய்மை அவரைப் பதகளிப்பாக்கிற்று.

கொரானா சூழல் உண்டாக்கிய தனிமை - அதனினும் மேலாய் அவரைப் பதகளிப்பாக்கியது.

10 ஆண்டுகள் தியாகராசர் கல்லூரி: 1998 முதல் 2008 வரை பத்தாண்டுகள் நெல்லைப் பல்கலைக்கழகப் பணி. பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றியபோது பார்க்கச் சென்றிருந்தேன். அழைத்துச் சென்று துணைவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர் தமிழ்த் துறையில் இருந்த பேராசிரியர் ஸ்டீபனிடம் தமிழிலக்கிய மாணவர்களோடு உரையாடலும் சந்திப்பும் நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுகொண்டர். பொறுப்பை ஸ்டீபனிடம் ஒப்புவித்து விட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.

உள் சலம்பல் துறைக்குள் முளைத்திருந்த நேரம். அது முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெறவைத்ததற்கான காரணம்.அதை லேசுபாசாய், ஒரு ரகசியம் போல் என்னிடம் கலந்து கொண்டார் தொ.ப ஓய்வு பெற்ற பின் வீட்டில் பல முறை சந்திப்பு. அதுமட்டுமல்ல, துறைக்குள் தன் சாதனைகளைவிட, அது தாண்டிச் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு என அவர் கருதினார். "வேலை இருக்கிறது நிறைய” என்ற கவிஞர் மீராவின் பாடல் எனக்குள் மேலெழுந்து வந்தது.

மற்றொரு சந்திப்பின் போது பேசிக் கொண்டிருந்த வேளையில், அவருடைய துணைவியார் சொன்னார் ”இவரே தன் உடம்பைக் கெடுத்துக் கொண்டார்”

புகைக்கும் பழக்கம்: உணவு இறங்குவதில்லை. தேனீர் மட்டும் உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது; கொரானோ சூழல் உண்டாக்கிய தனிமை இன்னும் தீவிரம் கொண்டடிருந்தது.

நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என தொடர்ந்து வந்து கொண்டே இருந்த வருகை கொரோனாவால் அருகிப் போயிற்று.

தனிமை தனிமை தனிம!

முதுமையை வேகப் படுத்துகிற தனிமை, மரணத்தையும்!

- பிப்ரவரி 2021, காக்கைச் சிறகினிலே ‘தொ.ப. சிறப்பிதழில்’ வெளியான பதிவு

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content