வார்ஸா முதல் கோவை வரை

28-3-2021 அன்று ஒரு செய்தி!

இந்திய மொழிகளுக்கான இருக்கைகள் வெளிநாடுகளின் 69 கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன; அதிகபட்சமாக இந்திக்கு 25க்கு மேற்பட்ட இருக்கைகள். இந்திக்கு அடுத்து சமஸ்கிருதத்துக்கு அதிக இருக்கைகள்.

தமிழுக்கு வெறும் இரண்டு இருக்கைகள்: போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் 47 ஆண்டுகளாக இயங்கிவரும் இருக்கை ஒன்று: அந்நாட்டின் கிராக்கூப் நகரின் ’எலோனியன் பல்கலைக்கழகத்தில்’ இயங்கிவரும் தமிழ் இருக்கை மற்றொன்று. ஏழு ஆண்டுகளாய் இவ்விரு தமிழ் இருக்கைகளுக்கும் பேராசிரியர்கள் நியமிக்கப் படவில்லை. பேராசிரியர் பணி நியமன அறிவிப்பை ஐசிசிஆர் (ICCR) என்று சொல்லப்படும் மத்திய அரசின் கல்வி அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாக ’போலந்து தமிழ் இருக்கைகள்’ காலியாக இருப்பது ஏன்? பா.ச.க அரசின் தமிழுக்கு எதிரான மனநிலை மூலகாரணம்: முன்னர் காங்கிரஸ் ஆட்சியிலும் இப்போது காணுகிற தமிழ் ஒதுக்கல் கொள்கைதான். இப்போது எல்லா மொழிகளுக்கும் நாமம் தீட்டுகிற இந்தி வெறி பா.ச.க! இரு ஆட்சியினருக்கும் தமிழ், தமிழருக்கு எதிரான இந்துப் பார்ப்பன மனோநிலை. நாம் யார்? நாம் தமிழர்: நமது மொழி தமிழ்: நாம் தமிழினம்: ஆனால் கோலோச்சுகிறது ஒற்றை மத, இன, மொழிக் கோட்பாடு. கூட்டாட்சி சனநாயக மனோநிலை கிஞ்சித்தும் காணக் கிடைக்காது.

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்று வட இந்தியர்களால் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டுமென்று நாடாளுமன்ற மேலவையில், 1967-ல் அண்ணா முழக்கமிட்டார். அந்தத் திசைக்கே கருத்துச் செலுத்தாத இன்றைய மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்திப் பரப்புரை செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.53 கோடி ஒதுக்குகிறது. இந்தி பேசும் வட மாநிலங்களில் பிற மாநில மொழிகளுக்குத் தெருக்கோடி.

”ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா தமிழ் போல் சீரிளமைத் திறம் கொண்டதல்ல“ சமஸ்கிருதம். மற்ற மற்ற மொழி பேசுகிறவர்கள் பல கோடிக்கணக்கில் வாழும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் 24 ஆயிரம் பேர் மாத்திரமே. அது செத்துப் போன மொழி. அதை சாகாமல் வைத்திருக்க கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 630.43 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மூன்று 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாய் தரம் உயர்த்தி சமஸ்கிருதத்தைக் கற்றுத்தர தீவிரமாய் ஏற்பாடு செய்யப்பட்டாகிவிட்டது. ஆனால் லேசுபாசாய்க் கடந்து போய்விடக் கூடாது. பார்ப்பனர் போல, உயர்சாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று 453 பேர்.

இதன் தொடர்ச்சியில் கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் என்ற பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக இந்தியிலேயே முழக்கங்கள் எழுப்பி பேரணி நடைபெறுகிறது. பேரணியில் சென்றவர்கள் மார்வாடி, குஜராத்தி, இந்தி மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள். “வானதி அக்கா எங்கள் அக்கா” இந்தியில் வாக்கு சேகரிக்கிறார்கள்.


போலந்து பல்கலைக் கழகத்திலும் கோவை தெற்குத் தொகுதியிலும் சூட்டுக்கோலைக் காயவைத்து நமக்குச் சூடு போட்டிருக்கின்றனர். “வானதி அக்கா, எங்கள் அக்கா“ - சொல்லி முடித்தாகிவிட்டது. பிறகு? ”மோடி அய்யா எங்கள் அய்யா” தொடரும் தேர்தல் முழக்கம். ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை நாடு, ஒற்றை பா.ச.க என்கிற கொடி உயருகிறது.

- ஏப்ரல் 2021, கணையாழி இதழில் “படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்“ என்னும் தலைப்பில் வெளிப்பட்ட கட்டுரை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்