ஈழத்தமிழர் படுகொலை - எழுத்துலக மெளனம் ஏன்?

பகிர் / Share:

தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல - "இந...

தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல -

"இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலை முகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித் துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும், பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதை யரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை. அதுபோல இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச் சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக் காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணிலே தான் எமது இனம் காலாதி காலமாக, கொப்பாட்டன், முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது."

- அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களினதும், இலங்கையின் பூர்வீகக் குடியினரான தமிழர்களினதும் மூல வரலாற்றுப் புள்ளிகள் ஒன்றாகவே இருக்கின்றன. செவ்விந்தியக்குடி ஒரு பழங்குடி இனமாகவே இருந்து கழிந்தது. ஆனால் தமிழர்கள் என்ற பூர்வீகக் குடியினர் ஒரு இனமாக வளர்ச்சி பெற்று தனக்கென தனி அரசை நிறுவி, தனி இறையாண்மை கொண்டிருந்தனர்.

செவ்விந்தியத் தலைவன் "அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - என்று சொன்னது போலவே, தமிழ ருடைய வரலாற்று மேன்மையும் சிங்களருக்குப் புரிவதில்லை. வரலாற்று உண்மையை ஆதிக்க இனம் என்ற நிலையிலிருந்து முற்றிலும் அழித்திடவே முயற்சி செய்கின்றனர்.

"இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு, இது சிங்களருக்குச் சொந்தமானது" - ஓராண்டு பதவி நீட்டிப்புப் பெற்ற இலங்கை இராணுவத் தளபதி பொன் சேகா சொன்னார். (இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவராக வாழுகிறார் என்பது சிறப்புச் செய்தி)

"தமிழர்களுக்குப் போவதற்கு இன்னொரு நாடு இருக்கிறது. அதுபோல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு தேசம் உண்டு. சிங்களர்களுக்கு இதுதான் நாடு" - புத்தனுடைய சொல்லைப் புதைத்துவிட்டு, அவனுடைய பல்லை வைத்து (அனுராதபுரம் புத்த விஹார்) ஆராதனை செய்கிற புத்த பிக்குகள் முதல் அதிபர் ராஜபக்ஷே வரை இந்த வாசகத்தை உதிர்க்கிறார்கள்.

1958ல் இனக்கலவரம் வெடித்து தலைநகர் கொழும்புவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் காடையர் கள் தாக்குதல் நடத்தினர். பண்டார நாயகா தலைமையிலான அரசும் போலிசும், ராணுவமும் வேடிக்கை பார்த்ததோ டன்றி "பழி எடுங்கள்" என தூண்டியும் விட்டார்கள். அப்போது மே 26. தல் பவில சீவன் சதேரா என்ற புத்தத் துறவி "ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமி ழர்கள் சமம்" என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கொழும்பு மாலைத் தினசரி யான ஆங்கில அப்சர்வர் வெளியிட்டிருந்தது.

"தமிழர்கள் எந்தப் பகுதிகளில் வாழுகிறார்களோ அங்கு தங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். சிங்களவர்கள் தமிழர்களால் அழிக்கப் படும் ஆபத்து இருக்கிறது. இதற்கு இடம் கொடுக்கப் போகிறோமா?" என்று பொரணை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாகர பலன சூரியா நாடாளுமன்றத்தில் கேட்ட நேரத்தில், அம்பாந் தோட்டை எம்.பி.யான லக்ஸ்மண் ராஜபக்ஷே குறுக்கிட்டு "அவர்களை அழித்து விடுங்கள்" என்று கத்தினார். ஆனால் சாகர பலன சூரியா தெரிவித்ததற்கு மாறாக யதார்த்த நிலைமைகள் வேறொன்றைச் சித்தரித்துக் காட்டின.

இலங்கைப் பரப்பில் 29 விழுக்காடு தமிழ் வழித் தாயகப் பகுதியாகும். ஓரின ஒற்றையாட்சி முறையினால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டு, தமிழர் நிலம் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கிழக்கில் பெரும்பான்மையும், வடக்கில் முப்பது விழுக்காட்டுப் பரப்பிலும் சிங்களர் குடியேற்றப்பட்டனர். 1948ஆம் ஆண்டில் கல்முனை மாவட்டத்தில் 4.5 சதவீதமாக இருந்த சிங்களர் குடியேற்றம் 1950ஆம் ஆண்டு முதல் அதிகரித்தது, 1990ல் 38 சதவீதமாக உயர்ந்து பின்னர் அதுவே பெரிய சமுதாயமாகி கல்முனை மாவட்டத்தை "திகாடுமல்ல" என்று சிங்களப் பெயர் மாற்றுமளவுக்கு குடியேற்றப் பெருக்கம் நடத்தப்பட்டது.

அரசுப் பணிகள், ராணுவம் அனைத்திலும் சிங்களர் உயர்ந்து கொண்டே வர இரு விழுக்காட்டுக்கும் குறைவாக தமிழர்கள் கீழாகிக் கொண்டே போனார்கள். இலங்கைத் தீவில் தமிழர் கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் செய்வதற்கு எத்தனிப்புகள் எடுக்கப்பட்டன. ஐ.நா அவையில் முதலில் தமிழ் பேசிய இலங்கை அதிபர் என்ற பெயரை வாங்கிக் கொண்டே, ராஜபக்ஷே கிபீர் விமானங்களால், பீரங்கிகளால், ஏவுகணைகளால் அக்னி அர்ச்சனை நடத்திக்கொண்டு வருகிறார். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் முகாமிற்கு அருகில் தடை செய்யப்பட்ட ‘கிளாஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன. இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த இந்நிகழ்வில் அகதிகள் பலர் காயமடைந்தனர். நவம்பர் மாதத்தில் மட்டும் வன்னியில் ஐந்து முறை கிளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன. இந்த "கிளாஸ்டர்" குண்டுகள் இரண்டாம் உலகப் போரில் நாகஷாகி, கிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டுக்கு அடுத்தபடியான பேரழிவு கதிர் வீச்சு ஆயுதம். இந்தக் குண்டுகள் வீசப்படுவது தடையில் இருந்த போதிலும் இலங்கை பயன்படுத்தியுள்ளது. இது யுத்த நெறி முறைக்கு மாறானது. நூற்று ஏழு நாடுகள் கூடி 3ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கிளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்துவதற்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

வேறெங்கோ ஏழு கடல் தாண்டி, சத்தா சமுத்திரம் தாண்டி இந்த மானுட அவலம் கேட்கவில்லை. நமக்கு அருகிலேயுள்ள சிறு கடல் தாண்டிக் கேட்கிறது. நமது தோளில் வந்து உட்கார்ந்திருக்கிற அந்த அவலம், நமது தொப்புள் கொடி உறவாகவும் இருக்கிறது.

தமிழகமெங்கும் எழுச்சிகள், எதிர் வினைகள் பெருகியுள்ளன. மாதம் அரைக்கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் கணினிப் பொறியாளர்கள் (Tidel Park 17-11-2008) உடல் ஊனமுற்றோர் அமைப்பு என சமூகத்தின் சகல பகுதியினரும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க - தமிழகத்திலுள்ள 221 ஓவியர்களும் 14-11-2008 முதல் 21-11-08 வரை ஓவியப் படையல் செய்து, ஓவியங்கள் விற்ற தொகையை ஈழ மக்களுக்கு உதவிட - திரையுலகினரின் ஆவேசம் நம்மைப் பிரமிக்க வைத்திட அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கையர் 8-12-2008 தேதி ஒரு நாள் போராட்டம் நடத்துகின்றனர். கோவையில் அனைத்துக் கலை இலக்கிய அமைப்புக்களின் கூட்டமைப்பு 22-11-08 உண்ணா நிலைப் போராட்டத்தினை எடுத்தது.

சென்னை புழல் சிறையில் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம், 24-10-08 அன்று கொட்டும் மழையில் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி என மக்களின் சகல பிரிவினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மானுடம் எங்கெல்லாம் சிதைவுக்கு ஆளாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் போய் தாங்கி நிற்பது கலைஞனின் நெஞ்சம்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறது ஈழம். ஆனால் தமிழ் எழுத்துலகில் மெளனம்.

கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமகாலத்தில் நடப்பவற்றை கூர்மையாய் உள்வாங்கி, எதிரொலிப்புச் செய்ய வேண்டியவர்களாதலால் சமூக விஞ் ஞானிகளாகவும் இயங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நமக்கு அருகாமையிலுள்ள தேசத்தில் மானுட அவலமும் விடுதலை நோக்கிய ஒரு போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதும் - மானுட அவலம் மனசை உடைக்கிறபோதும் - மெளனம் காக்கிற இந்த அறிவு ஜீவிகள் வரலாற்றுக்கு எதிர்த் திசையில் நடக்கிறார்களோ என்ற ஐயம் துளிர்க்கிறது. இந்த மெளனத்துக்கு என்ன பொருள்? உடன்படாமை அல்லது எதிர்த்திசை என்றுதானே அர்த்தம்.

22-09-08 அன்று சென்னையில் ஒரு நாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தினை தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்து, தமிழகம் தழுவிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலகத்தினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அது சிலர் பங்கேற்ற சிறிய கூட்டமாகவே முடிவு பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு படைப்பாளிகள் வட்டத்திலிருந்து வந்தாரில்லை. தமிழ் எழுத்துலகில் அதிகமாக வாசிக்கப்படுகிற எழுத்தாளர்கள் அந்தத் திசைக்கே தென்படவில்லை.

"நாம் நாமாக இருப்போம். நமது படைப்புக்களும் எழுத்துக்களும் அவ்வாறே இருக்கும்" தன் மோகக் கோட்பாட்டில் இயங்கும் சுய மோகிகள், தமது ஆற்றலின் உயரம் பற்றி அதீத எண்ணம் கொண்டோர்களாக இருக்கிறார்கள். தமது அறிவுத் திறன் பற்றிய பாராட்டுதலுக்காகக் காத்திருக்கும் இவர்கள், தமது படைப்புக்களின் விலைப்படுத்தலுக்கானதாக இந்தப் பாராட்டுதலை மாற்றிக் கொள்வார்கள்.

நவீன தமிழின் முதலிரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஈழம் சந்தையாக இருந்தது. சமகால எழுத்தா ளர்களுக்கு உலகப் பரப்பெங்கும் புகலிடம் அடைந்த ஈழத்தமிழர்களே சந்தை யாகியுள்ளனர். புகலிடத் தமிழர்களை நோக்கியே இங்கு பதிப்பகச் செயல் பாடுகளைக் குவிக்கும் சிலரும் உருவாகி யுள்ளனர்.

திரைக் கலைஞர்களின் உண்ணா நோன்பு நிகழ்வில் கவிஞர் தாமரையின் ஆவேசம், எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் நல்லதொரு கட்டுரை - என அங்கொரு, இங்கொரு எதிர்வினைகள் போதுமானவை அல்ல, உணர்வு பூர்வ தொடர்ச்சியான செயல்பாடுகள் உருவாக் கப்பட வேண்டும்.

எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருக்கக் காணுகையில், சொந்த மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளாத மெளனிகள் கூட்டத்தால் எழுத்துலகம் சூழப்பட் டுள்ளதோ என நினைக்கத் தோன்று கிறது. எதிர்வினை - ஒரு படைப்பாக்கமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு கருத்தறிவிப்பாக இருக்கலாம். பேச்சு வடிவத்தில் கூட வெளிப்படலாம்.

எரியும் ஈழப் பிரச்சனையிலிருந்து விலகியிருக்கும் இந்த மெளனக் கூட்டத்திற்குள் த.மு.எ.ச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் அடக்கமாவதுதான் வேதனையானது. இலக்கியவாதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை கட்டுக்குள் வைப்பதுதான் கட்சி ரீதியான அரசியல் என்பது உள்ளுக்குள் உலவிடும் உண்மை.

தமிழின் நவீன இலக்கிய முன்னோடி பாரதி போல் கவிதை, உரைநடை என சலக துறைகளின் இலக்கியப் பங்களிப்பில் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியாகப் போற்றப்படுபவர் மகாகவி பாய்வீர்சிங் (1872-1959). அவருடைய ஆயிரக்கணக்கான இலக்கியக் கொடைகளில் ஒரு பக்கத்தில் கூட இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியதான குறிப்பு ஒன்றும் இல்லை. பாய்வீர் சிங் அமிர்தசரஸில் வாழ்ந்தவர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அவரது ஒரு எழுத்தும் இல்லை. ஒரு கண்டனப் பேச்சும் இல்லை. பொற்கோயிலைப் பற்றி படைப்புகளில் பேசியவரிடமிருந்து, கல்லெறி தூரத்தில் நடந்த கொலைச் சம்பவம் பற்றி சிறு பதிவும் இல்லை. பாய்வீர் சிங்கை வழிகாட்டியாகக் கொள்கிற இளைய தலைமுறையினர் "அவர் வரலாற்றின் எதிர்த் திசையில் நடந்தார்" என விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய தமிழினப் பிரச்னைகளில் குறிப்பாக ஈழப்போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்த் திசையில் நடந்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவும் பழியும் தேவைதானா?

- பா.செயப்பிரகாசம் - தென்செய்தி, தமிழ்த்தேசியம் (டிசம்பர் 2008)

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content