"நாமே வெல்வோம்" எனும் மாவீரர் நாள் உரை

பா.செயப்பிரகாசம்,
எழுத்தாளர், செயலாளர்,
தமிழ்ப்படைப்பாளிகள் முன்னணி.

ஜனவரி 2009

இந்த மண் எமது மண். தமிழர்கள், அந்தப்பூமியின் பூர்விகக் குடிகள்:

அமெரிக்கப் பூர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல "இதே பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஓர் அங்கம். வாசமலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளி பறவையும் எங்கள் சகோதரர்கள், பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல: அது எங்கள் மூதாதையரின் இரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - அது போல

"இந்த மண்ணிலே தான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணிலே தான் எமது இனம் காலாதி காலமாக, கொப்பாட்டன். மூப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது". முன்னைய மூல வரலாற்றுப் புள்ளியில் கால் பதித்து மாவீரர் நாள் உரை மேலெழுகிறது.

1948இல் இலங்கையை காலி செய்துவிட்டு பிரிட்டன் வெளியேறுகையில் இரு தேசிய இனங்கள் என்பதை அங்கீகரித்து இந்தியா, பாகிஸ்தான் போல் இரு நாடுகள் உதயமாக வழி செய்யாமல், சிங்களரிடமே அதிகாரத்தை கைமாற்றி தந்த நிகழ்வு - தமிழ் மண் எங்கள் மண் என்ற நியாயமான எண்ணத்துக்கு வாய்க்கரிசி போடுவதாக ஆனது.

சதத்ஹஸன் மாண்டோ, எனும் எழுத்தாளர் பஞ்சாபில் பிறந்தவர். பிரிவினையின் பின் பாகிஸ்தானுக்குப்போய் வாழ்ந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிந்தன என்று ஊடகங்கள் எழுதின, ஒலிபரப்பு செய்தன, நூல்களில் பதிவாகின.

"இரு நாடுகள் பிரிந்தன என்று சொல்லாதே, இரு நாடுகள் உதயமாகின என்று எழுது" என்று இந்த வரலாற்றுச் சொல்லாடலை மாற்றிச்சொன்னார் மாண்டோ.

ஏகாதிபத்தியம் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணைத் துரத்திவிட்டுவிட விரும்பியதில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்ணைத் திறந்துவிட்டு, நிரந்தரமாக வைத்துக் காப்பதுதான் ஏகாதிபத்தியக்குணம்.

இலங்கையில் இரு நாடுகள் உதயமானதின் பொருட்டு அங்கு பேராளிகள் போரிடுகிறார்கள். மனிதகுலமாக உள்ள அனைவரும் அதற்கு ஆதரவாக நிற்கிறோம். நம்மை விடுதலை செய்வதின் வழியே சிங்களரையும் விடுதலை செய்கிறோம். இனவெறிப் பாசிஸத்திலிருந்து விடுபட்டு மனிதராய் வாழும் வாய்ப்பைச் சிங்களருக்கு தரிசிக்க கொடுக்கிறோம்.

"நீங்களும் மனிதர்: எம்மையும் மனிதராக வாழவிடுங்கள்" - என்பது எவ்வகையிலும் பிரிவினை வாதம் அல்ல.


சிங்களத்தின் கனவுகள், நிச்சயம் கலையும்:

இலங்கை புத்தனுடைய சொல்லை விதைக்கவில்லை.

அவனது பல்லை விதைத்து ஆராதனை செய்கிற பூமி.

ஆசையே அனைத்து துயரங்களுக்கும் மூலம் என்ற புத்தனுக்கு எதிர்த்திசையில் "இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் அறியாமையிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசையின் பிடிலிருந்து மீட்சிபொறாத வரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது" - என்ற புத்தனைத்தொட்டு இன்னொரு மண்ணைச் சொந்தமாக்கிட எண்ணும் ஆசையிலிருந்து உண்டானதே இன்றைய இலங்கையின் சோகம் என வாசகத்தை படைக்கிறபோது உரை விசாலமான வெளியை உண்டாக்குகிறது.

"தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்தும் சிங்கள அரசின் ஆசை நிறைவேறாது" - என்று புத்தனை புதைத்த இடத்தை காட்டுகிறார்.

இன்னொரு மண்ணைத் தமக்காக்கிடத் துடிக்கும் பேராசைக்கு எடுத்துக்காட்டுகள் அந்த நாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.

இன்னும் ஓராண்டு பதவி நீடிப்பு செய்யப்பட்ட இராணுவத் தளபதி பொன்சேகா சொல்கிறார்.

"இலங்கை ஒரு பௌத்த - சிங்கள நாடு: அது இலங்கைக்கு சொந்தமானது".

(இலங்கை இராணுவத் தளபதி அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவராக வாழுகிறார் என்பது வேறு செய்தி)

"தமிழர்களுக்கு போவதற்கு இன்னொரு தேசம் இருக்கிறது: முஸ்லிம்களுக்கும் இன்னொரு நாடு இருக்கிறது. சிங்களர்களுக்கு இதுதான் நாடு". மூவாசைகளும் துறந்த புத்த பிக்கு முதல் இன்றைய அதிபர் ராஜபக்சே வரை முழங்குகிறார்கள்.

"மண்ணாசை பிடித்து சிங்களம் அழிவுப் பாதையிலே இறங்கியிருக்கிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒரு நாள் நனவாகும் இது திண்ணம்" என சூளுரைத்து,

"எனது அன்பான மக்களே! என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது". உயிரினும் மேலான மக்களை அழைக்கிறார் பிரபாகரன்.


எதிர்ப்பியல் வரலாறு:

அருவருப்பான ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வீரர்கள் போராடி வருகின்றனர்.

எதிர்ப்பில் எழுந்து வந்தது தமிழின உரிமைப் போராட்டம். காலா காலத்தில் முடிக்காமல், பிணக்குகளும் குழப்படிகளும் தொடர்ந்ததால் சிங்களரின் அதிகாரக் கதவுகள் 1948-லிருந்து ஒவ்வொன்றாக திறவு கொண்டன.

சிங்களரின் தந்தை என புகழ் பெற்ற டி.எஸ்.சேனநாயகா இலங்கையில் முதல் பிரதமரானதும், இந்திய வம்சாவழித் தமிழரான மலையகத் தமிழரின் குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்தார்.

"இன்றைக்கு மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் சிங்களம் நாளை ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளையும் பறிக்காதென்பது என்ன நிச்சயம்?" என்ற கேள்வியை எழுப்பிய எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக்கட்சி (சமஸ்டி கட்சி) உருவானது.

1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டம். 1957 சனவரி முதல் இலங்கையில் இதுவரை காலமும் வாகனங்களில் எழுதப்பட்டுவந்த ஊநுணு என்ற ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்களத்தில் 'சிறி" என்ற எழுத்தை இடம்பெறும் என்ற கட்டளை. 1958-ல் சிங்களம் மட்டுமே கல்விமொழி, தேர்வு மொழி.

1960-ல் சிங்களமே நீதிமன்ற மொழி.

1970-ல் தரப்படுத்துதல் என்ற பெயரில் தமிழ் மாணவர்கள் கல்லூரிகளில் சேர, சிங்கள மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று வஞ்சிகப்படுதல்.

1972-ல் இலங்கையின் பெயரை சிறிலங்கா என மாற்றி சிறிலங்கா குடியரசென அறிவித்த புதிய அரசலமைப்பு சட்டம்.

1978-ல் மீளப் புதுப்பிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டம்.

காந்திய வழியில் போராடிப் போராடியே தோல்வியை கண்டார்கள். 30 ஆண்டுகளாய்; கண்ட தோல்வியின் தொடர்ச்சியில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வந்தார்கள்.

1968 ஏப்ரல் ஏழு முதல் ஒன்பதாம் தேதி வரை நடந்த தமிழரசு கட்சியின் மாநாட்டில் சாத்வீகப் போராட்டத்தின் தோல்விகளை வரிசையாய் பட்டியலிட்டார் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்.

"முதியவர்களான நாங்கள் தோல்வியடைந்தால் வாலிபர்கள் வெற்றியீட்டுவார்கள். அதன்பின் இன்று சிங்கள மக்களுக்கு பொய் சொல்லி தவறாக வழிகாட்டும் சிங்களத் தலைவர்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்".


வரலாறு ஆயுதத்துக்கு இழுத்துச் சென்றது:

"ஆரம்பத்தில் அமைதியான மென்முறை வடிவில், சனநாயக வழியில், அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டு போராடினார்கள். அரசியல் உரிமைக்கோரி தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களை சிங்கள இனவாத அரசு, ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

..... சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித்தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாக கையளித்தது".

ஆயுதப் போராட்டத்துக்கு வந்தடைந்த விதத்தை வரலாற்றுப்படி நிலை மாற்றங்களுடே விளக்குகிறார் பிரபாகரன். அதற்கான நியாயம் வரலாற்று படிநிலைகளில் தங்கியிருக்கிறது.

மாவோவின் நீண்ட பயணப் போராட்டத்தை "செஞ்சீனத்தின் மீது ஒரு விடிவெள்ளி" என்று எட்டகார் ஸ்நோ அடையாளப்படுத்தியது போல், பிரபாகரன் 'தமிழீழ விடுதலையின் வெள்ளி" எனவே வரலாற்றில் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிங்களத் தலைமைகள் மாறிமாறி வந்தாலும் இனவெறியுட்டி, தமது மக்களை திசை திருப்புவதில் குறியாய் தொடர்ந்தார்கள். அதனுடைய உச்சம் ராஜபக்சே என்ற கொலையாளியின் உருவில் வந்தது. டி.எஸ்.சேனநாயாக முதல் கொலையாளிகளே மாறிமாறி ஆட்சி செய்த போதும், இந்தக் கொலையாளி இறுதிப் போர் நடப்பதாக கொக்கரிக்கிறது.

அண்மையில் இலங்கை அரசு தனது நிதிநிலை மசோதாவை சமர்ப்பிக்கையில் "கடந்த நான்கு ஆண்டுகளில் யுத்தத்துக்காக 583 மில்லியன் ரூபாய்" செலவிடப்பட்டிருப்பதாக அறிவித்தது.

இராணுவத் தளபதி பொன்சேகா கடந்த ஆண்டுகளில் 13 ஆயிரம் விடுதலைப் புலிகள் சொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். இந்தக்கணக்குப்படி ஒரு விடுதலைப் புலியை கொல்வதற்கு 4.83 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்துகிறார்.

ஒரு விடுதலைப் புலி மட்டுமல்ல, தமிழ் மக்களும் சேர்ந்தே கொல்லப்படுகிறார்கள். வன்னியில் இராணுவத் தாக்குதலால் இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் விடுதலைப் புலியை மட்டும் தனியாக அழித்துவிட முடியுமா? அவர்களோடு இணைந்துவிட்ட மக்களையும் சேர்ந்தே கொன்று குவித்து வருகிறார்கள்.


அமைதி ஒப்பந்தம்:

யுத்தம் எப்போதும் மேலிருந்து திணிக்கப்படுகிறது. அதிகாரம் எங்கு உச்சத்திலிருக்கிறதோ, அங்கிருந்து யுத்தம் புறப்படுகிறது. எல்லாவற்றையும் பறித்துக்கொள்கிற அதிகாரம், யுத்தத்தை திணிக்கிறது. மக்கள் அதிகாரத்தை ஏற்பதில்லை, எதிர்க்கிறார்கள். மிண்டர் என்ற பஞ்சாபிக் கவிஞன், தன் கவிதையில் இதைப்பேசுகிறான்.

என் தோள்களில் ஒருபோர்வை இருந்தது
என் கைகளில் ஒரு புல்லாங்குழல் இருந்தது
நான் எங்கும் செல்லவில்லை ஏதோன்றும் செய்யவில்லை என் தோள்களில் துப்பாக்கி வந்ததெப்படி? என்கைகளில் பிணங்களைத் தந்தது யார்?

போராளிகளோ, மக்களோ ஆயுதச் சுவாசம் செய்யவில்லை. அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். எதிரி அமைதி வழியில் நம்பிக்கை இல்லாதவன்.

"எமது மக்களின் தேசியப் பரிசீலனைக்குச் சமாதான வழியில் தீர்வு காண நாம் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட்டபோதும், பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன..... புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இப்பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில் சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பினைச் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி தனது சிதைந்துபோன இராணுவ பலத்தை கட்டியெழுப்பியது" - என்று தெளிவான சித்திரம் தருகிறார் பிரபாகரன்.

பிரபாகரனுடனான ஒரு நேர்ப்பேச்சில் "இப்போது நார்வேயின் ஒத்துழைப்பால் அமைதி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் நார்வேயை நம்புகிறீர்களா?" என்று கேட்டோம். உலகப்பேரரசு ஆசைகொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகளை விளக்கியபின், பிரபாகரன் சொன்னார். "நாங்கள் நம்பவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் கொடூர முகம். நார்வே – அமெரிக்காவின் மென்மையான முகம்".

ஒவ்வொரு நாட்டின் அரசியலும், எதற்காக எவ்வாறு நடைபெறுகிறது என்ற தெளிந்த உண்மை அப்போது எங்களுக்குத் தரிசனமானது.

"அனைத்துலகத் துணையோடு நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒரு தலைபட்சமாக இலங்கை கிழித்தெறிந்தபோது, சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனை கண்டிக்கவில்லை. கவலைக்கூட கொள்ளவில்லை: மாறாக சில உலக நாடுகள் அழிவாயுதங்களை அள்ளி கொடுத்து இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன" என்று கூறுகையில் அனைத்துலக நாடுகளின் கபட வேடங்களை கலைக்கிறார்.

இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சீனா, பாகிஸ்தான் நாடுகளோடு போட்டியிட்டு முன்னிலையில் நிற்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

"இன்றைய யுகத்தில் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தில் யார் ஈடுபட்டாலும் அது ஏகாதிபத்தியம்தான். அதில் இடது, வலது என்ற வேறுபாடு இல்லை. ஏகாதிபத்திய தத்துவமே மைய அச்சாணி" - என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குறிப்பிடுவது இங்கு சரியாகவே பொருந்துகிறது. குறிப்பாக தமிழ் இன அழிப்புப்போரில் சீனா என்ற இடதோ, இந்தியா என்ற வலதோ வேறுபாடு எதுவும் இல்லை. அமெரிக்காவுடன் போட்டியிட்டு ஏகாதிபத்திய முகத்தை இடதும், வலதும் பொருத்திக் கொண்டுள்ளன.

வன்னி மக்களும் யாழ் குடா மக்களும் மழை வெள்ளத்தில் மட்டுமல்ல: யுத்த வெள்ளத்திலும் சர்வதேச சதி வெள்ளத்திலும் உருட்டிச் செல்லப்படுகிறபோது தம்மைக்காக்கும் கரம் எப்போதும் போல் காத்திருக்கிறது என்பது மட்டுமல்ல. சர்வதேசத்தை நோக்கி, குறிப்பாக இந்தியாவை நோக்கி அந்தக்கரம் நீண்டிருக்கிறது என்று காணுகிறார்கள். உலகம் முழுவதும் தமிழர் கரங்களையும், தாயகத் தமிழர்களின் எழுச்சிமிகு கரங்களையும் அது ஒற்றுமையுணர்வோடு பற்றிக்கொள்கிறது.

பல்வேறு நாடுகளில் அரங்கேற்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தப்பயனும் மக்களுக்குத் தரவில்லை என்பதைக் குமுறலோடு உணர்த்துகிறார். "தமிழர்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ, இன பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ, தீர்ப்பனவாக அமையவில்லை" என்கிறார். மாறாகப் போரினால் தமிழினம் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளதை வேதனையோடு பார்க்கிறார்.

"பாதைகளை மூடி, உணவையும், மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுகளையும் எறிகணை வீச்சுக்களையும் நடத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம் மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச் சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும், உடல் நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது".

தாய்க்கு மகனில்லை தந்தைக்குப் பிள்ளையில்லை: தாரத்துக்கு கணவனில்லை: தங்கைக்கும் சகோதரனில்லை என்று களமொன்றே கதியென நடக்கிறான் தமிழ் மகன்.

களமாடுகையில் உறவுகளில் சிந்தனை இல்லை. விடுதலை உறவு ஒன்றே உறவு என நடக்கிறான்.

அவரது உரை மக்கள் பலம், அரசியல் பலம், ஆயுத பலம் என்ற மூன்று முனைகளில் மையம்கொண்டு சர்வதேசிய பலத்தையும் குறி வைக்கிறது. தன்னந்தனியாய் தமிழினம் போரை எடுத்து வந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இனவெறி அரசு, ஆயுத பலத்தைக்கொண்டு மட்டுமல்ல. சர்வதேசிய துணையையும் தன் பக்கம் திரட்டி யுத்தத்தை நடத்துகிறது. ஆயுத வலிமையைக் கூட அனைத்துலகத் துணையால் அடைய முடிகிறது.

அவர் அதிகம் பேசாதவர். இந்த உரையாடல் மூலம் அனைத்துலகம் பற்றி அதிகமாகவே பேசியிருக்கிறார்.

"நாங்கள் மக்களைக் கண்டு பயப்படுவதில்லை: தமிழக அரசியல் தலைமைகள் மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுக்கு நேர்மையாக இல்லை. சொல்வதும், செய்வதும் வேறுவேறாக நிற்கிறது. நாங்கள் அப்படியில்லை" - ஒருமுறை நேர்ப்பேச்சில் எங்களிடம் தெரிவித்தார்.

அச்சந்திப்பு 2002-ல் நிகழ்ந்தது. இன்று ஆறு ஆண்டுக்காலத்தின் பின்னும் சொல்லுக்கும், செயலுக்கும் தூர தூரமாய் நிற்கும் தமிழக அரசியல்வாதிகளை குறித்து சிரித்துக் கொள்கிறோம். எவ்வளவு நேர்த்தியான படப்பிடிப்புகளை இந்தப் போராளி நடத்திக்கொண்டிருக்கிறார் என்று வியக்கிறோம்.

அனுபவங்களிலிருந்தும், சிந்திப்புகளிலிருந்தும் ஆளுமை உருவாகின்றது. அவர் ஆளுமைகளை சேகரித்துக்கொண்டே வருகிறார். அவருடைய பன்முக ஆளுமைகளில் 'மாவீரர் நாள் உரை" கூடுதலாக ஓர் இறகைச் சொருகி இருக்கிறது.

தமிழ்த்தேசியம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்