காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் - நூல் மதிப்புரை

நூல்: காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
ஆசிரியர்: பா.செயப்பிரகாசம்
வெளியீடு: வம்சி
விலை: ரூ.180

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஒரு கரிசல் எழுத்தாளர். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார். 11 சிறுகதைத் தொகுப்புகளும், 12 கட்டுரை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். இது இவரது 12 வது சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலில் 13 சிறுகதைகள் உள்ளன.

இந்நூல் முழுவதும் கரிசல் வாழ்வைப்பற்றி பதிவு செய்கிறார். செலவடைகள் சிரமமில்லாமல் வந்து விழுகின்றது. இடையே கவிதை, புதுக்கணக்கு என்று நம்மை கதைகளோடு பயணிக்க வைக்கிறார். எகத்தாளம் நிரம்ப உண்டு.

நண்பனிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூலிப்பது "மொச்சிக் கொம்பில் வில்லேத்துர" மாதிரி இருந்தது என்று கரிசல் மொழியில் உணர்த்துகிறார்.

மதுரை மீனட்சி கோயிலுக்கு கிழக்கில் ஒரு மொட்டை கோபுரம் உள்ளது, அதை மதுரைக்காரர்கள் மேற்கு மொட்டை கோபுரம் என்று கூறுகின்றனர்!!!

"பணக்காரன் என்றால் தர்மம் செய்யணும் படித்தவன் என்றால் நூல் செய்யணும்."

"நொங்கையெடுத்து நோனியை கழட்டிபோடுவேன்"

ஒரு கவிதை
சீனக்கவிதை

"ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்
நீ விரும்புவது மழையில் நனைவதையா?
வெயிலில் காய்வதையா?
குடை புன்னகைத்து
என் கவலையெல்லாம்
என் மக்களை நனையவிடக்கூடாது
அதோடு
என் மக்களை காயவிடவும் கூடாது"

என்ற கவிதையை கூறிவிட்டு, 'வாழ்ந்தா இப்படி வாழனும்' என்றார் அய்யப்பன். அப்படிப்பட்ட அய்யப்பன் அரசியலில் ஈடுபடப்போவது என்ற முடிவை எடுக்கிறார். அதோடு கதை முடிகிறது. கதையின் தலைப்பு "அய்யப்பனின் மரணம்".

மக்கள் கட்சிகளை கடந்து விட்டனர், அவர்களின் பிரச்னைகளுக்குப் போராட புதிய களங்கள் பிறந்துள்ளன. அவையெல்லாம் ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்கு உண்மையாய் தலைமை ஏற்காமல், "மேக்குதிரை ஏறலாமுன்னு எல்லோரும் நினைக்கிறாங்க, அந்த திசைக்கு தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது" என்று ஐயப்பனிடம் கூறுவது போல் நிகழ்கால அரசியல் போக்குகளை உரித்துக்காட்டுகிறார்.

"பேனைப் பெருமாளாக்கி, பெருமாளைப் பேனாக்கும்" தகவல் தொழில் நுட்ப கந்தர் கூலம் பண்ணும் காலம் இது என்று இன்றுள்ள நிலையைத் தெளியவைக்கிறார்.

'அருட்பெரும் சோதி தனிப்பெருங்கருணை' என சாதுவாக, தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என வாழ்ந்து வரும் ராமைய்யாவிற்குள்ளும் சாதிப் பேய் நங்கூரமிட்டுருந்ததை வெளிக்கொணருகிறார், அது மட்டுமல்ல தன் கோபத்தை காட்ட, அதற்கு ஆதரவு திரட்ட சாதியை கையிலெடுக்கிறார். இதை "ஆதலினால் காதல் தீது" என்ற கதையில் சிறப்பாகக் கூறுகிறார். 

"வண்ணாத்தி மாத்து, சும்மா போட்டு லாத்து" என்று சேலைக்கு வந்த கேடு இப்போது பெண்களுக்கும் வந்துவிட்டது என்று ஒருவனுடைய மனைவி வேறொருவனுடன் ஓடிப்போவதைக் காட்டுகிறார். ஓடிப்போன உன் மனைவியை என்ன செய்வதாக உத்தேசம் என சாதித் தலைவர்கள் கேட்க அவமானத்தால் கொந்தளித்து போயிருந்த கணவன் "குச்சியை முறிச்சு போய்கிட்டே இருப்பேன்" என்று கூறுகிறான். அதே கணவன் ஓடிப்போன மனைவி தன் கையைப்பிடித்து "மாமா என்னை கைவிட்றாதீங்க" என்று கெஞ்சவும், மெல்லக் கனிந்து மனைவி மீது இரக்கம் கொள்கிறான். அவளை காப்பாற்றுகிறான். இது "உயிர்வேலி" என்ற கதை.

இக்கதையில் தோவாளை என்ற ஒரு முதியவளை அறிமுகப்படுத்தும்போது, "தோவாளைக்கு சொளகு போல நாக்கு, எடுக்கிற வார்த்தையை புடைத்து போட்டுவிடுகிறது" என்கிறார். மற்றொரு இடம், கணவனின் மனம் மாறிப்போனது என்று தெரிந்ததும், சாதித்தலைவர் இப்படி கூறுகிறார். "படுதா போட்டுட்டான்" என்கிறார், எப்படிப்பட்ட சொல்லாட்சிகள், ஆஹா போடவைக்கிறது. 

சமூக கலாச்சாரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெத்தநாயகம். குளிர்பானங்களை மிக இழிவாகக் கூறி 'பானக்கரம்' என்ற புளிக்கரைசலை உயர்த்தி கூறும்போது, "சூட்டில் சுருக்கி மூத்திரம் விட்ட பசங்களெல்லாம் நீளநீளமாய் ஒண்ணுக்கு அடிச்சாங்களேடா போன வருசம், அதெல்லாம் மறந்து போச்சா" என்று பழமையின் பெருமையை கூறுகிறார். அப்படிப்பட்டவர் மகள் வாங்கி வந்த பீட்ஸாவை எடுத்து வாயில் வைக்கும்போது, அம்மா வைத்த மீன் சட்டியெல்லாம் எப்படி உடைப்பட்டது என்பதெல்லாம் நினைவுக்கு வர, சரி நம் பேச்சு ஏலாது என முடிவுக்கு வந்து சாப்பிடத் தொடங்குவார். இது 'உலகத்தினுள் ஓரு ஊர்' என்ற கதை.

கிராமப்பகுதிகளில் மிக இறுக்கமாக இருக்கும் சாதி கட்டுகள் நகரத்தில் நெகிழ்ந்து போவதெப்படி என்றும், இப்போதுள்ள தலைமுறை சாதி படிநிலைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அருமையாக சொல்லப்பட்டுள்ளது.

"கட்டியோர் எட்டுக்கட்டி

கால், அரை, முக்கால் மாத்து

செட்டியார் இறந்துபோனார்

வெட்டிராமல் பகிர்ந்து தரவும்"

என்று புதிர் கணக்கோடு தொடங்குகிறது.

 இன்னொரு புதிர்,

"சந்தைக்கு முப்பது வாசல், ஒரு விவசாயி முப்பது முப்பது தேங்காயாக இரண்டு சுமைக்கட்டிட்டு சந்தைக்கு போகிறான். ஒரு வாசலுக்கு ஒரு மூடைக்கு ஒரு தேங்காய் வீதம் தீர்வை கொடுக்கணும். அந்த விவசாயி அந்த தீர்வையை கொடுத்து, மீதி தேங்காய்களை விற்று விட்டு வருகிறான், அது எப்படி?" என்கிறார் மின்னல் என்ற சின்னமணி.

இப்படி புதிர் போட்டும் அதை விரித்து காட்டியும் மகிழ்விக்கிற மின்னலின் வாழ்க்கை பரிதாபப்படும் சூழலில் உள்ளது. மின்னலின் மனைவியுடன் வேறொருவன் தொடர்பில் இருக்கிறான். அதை தெரிந்தும் மின்னல் சலனமில்லாமல் கடந்துகொண்டுள்ளான். இறுதி காட்சியில் வீட்டிற்கு வெளியே மின்னல் அமர்ந்துள்ளான், உள்ளே அந்த மனிதன், இவன் மனைவியை கை நீட்டி அடித்துக்கொண்டுள்ளான், அது தெரிந்ததும் மின்னல் கையில் ஒரு குண்டாந்தடியுடன் உள்ளே போகிறான். கதை முடிகிறது. முடிவு வாசகர்களிடம் விட்டு விட்டு தலைப்பை எப்படி வைத்துள்ளார் என்று பாருங்கள். "கடைசி விடை". படித்தால் சுவையை அப்படியே உணரமுடியும்.

'நிர்மலாவின் நாட்கள்' என்ற கதையில் வரும் சிந்தாமணி என்ற நிர்மலா மாதிரி அக்காக்கள் கிடைக்கும் தங்கைகளுக்கு, அது ஒரு வரமாகும். வர்க்கவேறுபாடுகளை இக்கதை சொல்கிறது.

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் என்ற கதையில், பனை ஏறி, ஏறி உடலை வலுவாக வைத்து, தினந்தோறும் வாழ்க்கை பாட்டை உழைத்தே கடத்தும் ஒருவனுக்குள் இருக்கும் கலைஞன் தன்னை வெளிகாட்டிக்க முடியாமல் போவதும் சொல்லப்படுகிறது. இக்கதையில்தான் கரிசலின் கடைசி ஊரான தங்கம்மாள்புரம் களமாக காட்டப்படுகிறது.

கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமிருந்தது. அவை உழவு, விதைப்பு, களையெடுப்பு, பயிரடிப்பு, பீட்டைக் கட்டுதல், பால்பிடிக்கும் காலம், கருதறுப்பு, பிணையடிப்பு போன்ற பல காலங்கள் இருந்தன. இப்போது அக்காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க்கொண்டுள்ளது.

அடுத்து நாளின் பொழுதுகளாக, கோழி கூவுகிற, சாமக்கோழி கூப்பிட, தலைக்கோழி கூப்பிட, முத்தம் தெளிக்க, சங்கு ஊதுகிற, பால் கறக்கிற, ஏறுபத்துகிற, கிடை பத்துகிற, மறுமாடு விடுகிற, ஏர் திருப்புகிற என்ற எத்தனையெத்தனை பொழுதுகள் இருந்தன, அந்த பொழுதுகள் இப்போது எங்கே போனது? டிஜிட்டல் உலகத்தில் வாழ்பவரை பற்றி கொஞ்சம் பொறாமையும், கொஞ்சம் பரிதாபமும் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

அன்புடன்
பெ.அந்தோணிராஜ்
தேனி
13 மே 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்