சாகாத வானம் தந்த செயப்பிரகாசம் - சாகுல் இன்குலாப்


நானும் அண்ணனும் சிறுபிள்ளைகளாய் இருந்த காலத்தில் சூரியதீபன் மாமா என்று அறிமுகமானார். நா. காமராசன், முன்னாள் அவைத்தலைவர் சேடப்பட்டி முத்தையா, அமைச்சர் கா. காளிமுத்து, 'சுடர்'முருகையா ஆகியோரோடு அத்தாவின் (இன்குலாப்) கல்லூரித் தோழராகவும் தன்தோழமையைத் தொடங்கியவர். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது களப்போராளியாகவும் தோள் சேர்த்து நின்றவர். மூன்று மாதங்கள் சிறையிலிருந்தார்கள். என்னுடைய கண்பார்வை குறைபாட்டை நீக்க வேண்டி அரவிந்த் ஆசிரமத்தில் கண் பயிற்சி செய்வதற்காக தொடர்ந்து பத்து நாட்கள் பாண்டிச்சேரியில் தங்க வேண்டியிருந்தது. அதற்காக  தோழர் பஞ்சு (எ)பஞ்சாட்சரம் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த செயப்பிரகாசம் மாமா அவர்கள் மேற்கொண்டர்கள். அத்தாவுடன் இயக்கச் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றினார்கள். எந்தவொரு காலத்திலும் அவர்களுக்குள் கொள்கைமுரண் இருந்ததாகத் தெரியவில்லை. ஜானி ஜான் கான் சாலையில் இருந்த நாட்களில் வீட்டிற்கு வந்த சில தோழர்கள் பேசத் தொடங்கிய பத்து பதினைந்தாவது நிமிடங்களில் அவர்களது உரையாடல்களில் காரசாரமான விவாதங்கள் வெளிப்படத் தொடங்கி வீட்டிலிருந்து விடைபெறுகையில் முரண்பட்டு செல்வார்கள். இப்படியொரு முரண்பாட்டை செயப்பிரகாசம் மாமாவிடமோ அத்தாவிடமோ காணவியலாது. தங்கை ஆமினாவிற்கு  மருத்துவம் படிப்பதற்காகக் கலந்துரையாடலில் உடனிருந்தும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான அனுமதிகிடைத்து அங்குச் சேர்த்தது வரையிலும்  செயப்பிரகாசம் மாமா தந்தையின் இடத்தில் நின்று அனைத்தையும்  செய்தார்கள்.  அச்சமயத்தில் அத்தா, அமெரிக்க தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்று விட்டார்கள். எங்கள் வீட்டின் முக்கியமான நிகழ்வுகளில்  உடன் நின்ற தோழர்களில் செயப்பிரகாசம் மாமாவைத் தவிர்த்து நடந்ததில்லை. 2002ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற  தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அத்தாவுடன் செயப்பிரகாசம் மாமா, ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். இதைப் பல இடங்களில் நடைப்பெற்ற உரையாடல்களில் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது. ஈழவிடுதலைப்போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரஞ்செறிந்த தியாகங்களையும். அறிந்தவராக இருந்தார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கவாதிகளும் புலிகளின் செயல்பாட்டை விமர்சித்து எதிர்த்த வேளைகளில் அவ்வியக்கத்தின் குறைகளை விமர்சித்த போதிலும் இறுதிவரை அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அத்தாவும் மாமாவும் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.அத்தாவிற்கு விருதுகள் வழங்கப்படுகிறதென்ற செய்தி வெளியாகும் முன்னர் செயப்பிரகாசம் மாமாவிடம் ஆலோசனைக் கேட்பார்கள். அதைப்போலவே அத்தாவின் மறைவுக்குப் பின்னர் வழங்கப்படவிருந்த சாகித்திய அகாதமி விருது குறித்தும் மாமாவின் ஆலோசனைகளைக் கேட்டோம். உங்கள் விருப்பம் என்ன ? என்று எங்களைக் கேட்டார்கள். நாங்கள் விருதை மறுக்கப் போகிறோம் என்றோம். சரி, அதன்படியே செய்யுங்கள் என்றார். மாறாக அவருடைய கருத்தை எங்கள் மீது திணிக்கவில்லை. உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அத்தாவின் உடலைத் தானமாக செங்கல்பட்டு  மருத்துவ மனைக்கு ஒப்படைத்தது வரையில் தன் தோழமையை ஆழப்படுத்தும் வகையில் எங்களுக்குத்  நிழலாக இருந்தார்கள். தன் தோழர் உடற்கொடை தந்தது போலத் தனது உடலையும் மருத்துவ மாணவர்கள் பயில்வதற்குக் கொடையாக தந்துள்ளார்கள். மாமாவின் உடல்நலம் குன்றி சென்னையில் இருந்தபோது, செல்வம் அண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். வாழ்க்கையின் வெறுமை அவர்களின் இறுதி காலத்தை ஆக்கிரமித்தது எனலாம். 23.10.2022 அன்று மாலை செயப்பிரகாசம் மாமாவின் இறப்புச் செய்தியைச் செல்வம் அண்ணன் கண்ணீர் மல்க அலைபேசியில் தெரிவித்தார்கள். மாமாவிடம் நான் ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலங்குறித்து விசாரிக்கையில் முதுமையின் காரணமாக ஏற்படுகின்ற குறைபாடுகளைப் பற்றிப் பேசினார்கள். என்னுடைய கவிதைத் தொகுப்பை அனுப்பி வைக்கிறேன். உங்கள் முகவரியை அனுப்பி வையுங்கள் என்றேன். சரிப்பா! என்று, முகவரியும் அனுப்பி வைத்தார்கள். புத்தகத்தை அனுப்ப நாள் பார்த்துக் கொண்டிருந்தேன். காலம் முந்திக்கொண்டது.

சாகுல் இன்குலாப்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்