பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு

 13.11.2022

ஓர் இனத்தின் முதன்மை அடையாளமாக இருப்பது மொழி ஆகும். தமிழ்மொழிக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமைமிக்கவரும் தமிழ்த்தேசிய உணர்வாளருமான பா.செயப்பிரகாசம் அவர்கள், 23.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தலைமையில் தமிழீழம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தப்பட்ட மானுடத்தின் தமிழ்க்கூடலிலும் பங்கேற்றதுடன், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் இவரை அழைத்துச் சந்தித்திருந்தார்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி – என்னும் அமைப்பின் செயலாளராக இருந்த இவர், தமிழின அழிப்பு யுத்தம் உச்சத்திலிருந்த வேளையில் 2008ஆம் ஆண்டு “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு அரசியல் நூலின் பத்தாயிரம் படிகளை இவரது முயற்சியில், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியினால் மறுபதிப்புச் செய்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழீழத்தில் நடாத்தப்பட்ட மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வின் அனுபவத்தை “ஈழக்கதவுகள்” என்ற நூலினூடாக வெளிப்படுத்தியவராவார். தமிழகத்தில் இருந்தபடியே தமிழீழ விடுதலைக்காக் குரல்கொடுத்துச் செயற்பட்டமைக்காகச் சிறைசென்றபோதும் சாவடையும் நாள்வரை தனது உறுதிதளராது செயற்பட்டவராவார்.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் நன்மதிப்பையும், பாராட்டுதலையும் பெற்ற பா.செயப்பிரகாசம் அவர்களின் இழப்பு, இட்டு நிரப்பமுடியாதது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், பா.செயப்பிரகாசம்; அவர்கள் தமிழ்மொழிக்காகவும், தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய பணிக்காகவும் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.
கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் வாழ்க்கை வரலாறு