பா.செயப்பிரகாசம் மறைவு - சமூக வலைதள அஞ்சலி குறிப்புகள்


எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பல்வேறு ஆளுமைகள் அஞ்சலி குறிப்புகள் /கட்டுரைகள் எழுதி இருந்தனர். அக்குறிப்புகளில் / கட்டுரைகளில்  சில...

























விளாத்திகுளத்துக்கு வந்த பிறகு சற்றே ஆசுவாசப்பட்ட மனநிலையில் மகிழ்வாகவே இருந்தார். பலமுறை தொலைபேசி வழி பேசிக்கொண்டிருந்தோம். செம்மலர் வரவில்லை எனில் உடனே அழைப்பார். நேரில் போகணும் போணும் என்று நினைத்துக் கடைசியில் அவருக்கு மாலை வைக்கத்தான் போகிறபடி ஆகிவிட்டதே. செவ்வணக்கம் தோழர்.


நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு விளாத்திகுளம் அம்பாள் நகரில் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் அஞ்சலிக் கூட்டம் நடைபெறும் அதன் பிறகு அவருடைய உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாகக் கொடுக்கப்படும். வாய்ப்புள்ளோர் நிகழ்வில் பங்கேற்பீர். கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளத்துக்கு பேருந்து வசதி உண்டு.மதுரையிலிருந்து வருவோர் எட்டயபுரம் வந்து செல்லலாம்.

- ச. தமிழ்ச் செல்வன்




இம்மாதம்  முதல் வாரத்தில் தோழரிடம் பேசும் போது 

நன்றாக பேசினார் !

“முதுமை 

செயல்பாட்டை

முடக்கிவிட்டது ! 

விரைவில் 

சிந்தணையும் 

முடக்கபடலாம் “

என வருத்தப் பட்டது 

மிகவும் 

வலித்தது ! 

இன்று 

அவரது சிந்தணை முடக்கப்பட்டாலும் 

அவரது படைப்புகள் மூலம் 

என்றென்றும் 

வாழ்வார் 

செவ்வணக்கம் 

தோழரே !

- Pavaday K Uthirapathi




முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமாகிவிட்டார் என்ற சோகமயமான செய்தி எட்டியுள்ளது. தமிழக அரசின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற போதிலும் காட்சிக்கு மிகவும் எளியவர். 

மூன்றாண்டுகளுக்கு முன்பு  புதுவையில்  நண்பர் எழுத்தாளர் தமிழ்மணியின் அறிமுகத்தோடு அவரைச் சந்தித்தேன்.  முதல் சந்திப்பிலேயே அவ்வளவு பிரியத்தைக் காட்டினார். எழுத்தாளர் கி.ரா அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் மணப்பாறை என்றதும் எழுத்தாளர் ஜெயந்தன் ஐயா குறித்து மகிழ்வுடன் பல செய்திகளை நினைவு கூர்ந்தார். அதன் பிறகு இடைவிடாமல் தொலைபேசித் தொடர்பில் இருந்தோம். வாஞ்சை மிளிரும் குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும்.

பாசமிகு பா.செ ஐயா அவர்களே!

கடந்தாண்டு ஜெயந்தன் ஐயா அவர்களது நினைவஞ்சலிக் கூட்டத்தை நேரலையில் நடத்தியபோது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரிய பல  செய்திகளை வழங்கினீர்களே.

புதுவையிருந்து சென்னைக்குக் குடியேறியதைச் சொன்னீர்கள். சென்னையிலிருந்து விளாத்திகுளம் சென்றதையும் சொன்னீர்கள். இன்று எவருக்குமே தெரிவிக்காமல் திடீரென்று விண்ணுலகம் சென்று விட்டீர்களே ஐயா, இது நியாயமா? 

உங்கள் உற்ற நண்பர் கி.ரா ஐயா அவர்களின் பிரிவுத் துயர் தாளாமல்தான் அவரைத் தேடிப்  புறப்பட்டுப் போனீர்களோ? 

உலகுள்ள வரை உங்களது  காத்திரமான இலக்கியப் படைப்புகள் உங்கள் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.

போய் வாருங்கள் ஐயா!

- அஷ்ரப் அலி




தெக்கத்தி ஆத்மா பா.செயப்பிரகாசம் காலமானார். என்னால் வேறொன்றும் சொல்ல இயலவில்லை. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். சென்ற வாரம் சந்தித்து என் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன். அதுதான் எங்களிருவருக்குமான கடைசி உரையாடலாக அமைந்து விட்டது.

- சோ. தர்மன்




அஞ்சலி: பா.செயப்பிரகாசம்.

பா.செ அவர்களின் இன்னொரு ஜெருசலேம், தாலியில் பூச்சூடியவர்கள் உள்ளிட்ட பல  சிறுகதைகளை வாசித்ததுடன் சூரியதீபன் பெயரில் அவரெழுதிய கவிதைகள், அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் நான் அறிந்திருந்த வேளையில் தான் நானும் அவரும் எழும்பூர் இக்சா மையத்தின் வெளியே ஒரு சிறிய தேநீரகத்தில் 2007 ஆம் ஆண்டின் வேனிற்காலத்து மாலைப்பொழுதில் சந்தித்துக் கொண்டோம். பிரபஞ்சனும் உடனிருந்தார். அப்போது என்  "மீன்காரத் தெரு" நாவல் வெளிவந்து பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது. மீன்காரத்தெரு நாவலுக்கு பா.செ தீராநதியில் ஒரு கட்டுரையும் எழுதினார். தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் அவர் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் எங்கள் தொடர்பு சிறிதுகாலம் நீடித்தது.அந்த காலகட்டத்தில் பா.செ படைப்பூக்கம் வற்றியவராக வெறும் அரசியல் தீவிரம் கொண்டவராக மட்டுமே எனக்குத் தோன்றினார். எப்போதுமே என் சுபாவம் மாதம் ஒரு சிறுகதை கூட எழுதாத எழுத்தாளர் வீண் என்பதாக இருந்தது. மேலும் பா.செ.விடம் அவருடைய பழைய கதைகளுக்காக மரியாதை கொண்டிருந்தேனே அந்த மரியாதை இன்றளவும் இருக்கிறது. ஆனால் இதைக்கடந்து அவர் எனக்குத் தருவதற்கு ஏதுமில்லாதவராகவே இறுதிவரை இருந்தார். நிறைய மின்னஞ்சல்கள் அனுப்புவார். ஒருமுறை ஒரு சிறுகதை அனுப்பி அபிப்ராயம் கேட்டார். மூத்த எழுத்தாளர் என்பதற்காக நான் பதில் அனுப்பினேன். அது அவருக்கு உவப்பாக இருந்திருக்காது என்று எனக்குத் தெரியும். இடையில் ஒருமுறை அவரை நான் புதுவையில் சந்தித்தபோது என்னுடனான அவருடைய அணுகுமுறையில் வித்தியாசம் தெரிந்தது. காரணம் கேட்டேன். பதில் "ஜெயமோகன்" என்கிற ரீதியில் முற்றிலும் அவர் சுபாவத்துக்கு முரணான விதத்தில் இருந்தது. அன்று விழுந்த முற்றுப்புள்ளியை நான் கடைசிவரை நீக்கிக்கொள்ளவில்லை. இன்று யோசிக்கையில், அவர் போன் கால்களை எடுத்திருக்கலாம், அவருடைய மின்னஞ்சல்கள் ஒன்றிரண்டுக்கேனும் பதில் தந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் ஒரு முன்னோடி... படைப்பூக்கம் கொண்டிருந்த காலத்தில் சில நல்ல கதைகளைத் தமிழுக்குத் தந்தவர், அன்பாகப் பழகியவர், தமிழீழம் குறித்த சிந்தனையாளர்.. இவ்வளவு விரைவில் விடைபெறுவார் என நான் எண்ணவே இல்லை. அவருக்கு என் அஞ்சலி.

- கீரனூர் ஜாகீர் ராஜா 




படைப்புகளில் எந்தளவு மேதமை இருக்குமோ, செயல்பாட்டிலும் அந்தளவு அர்ப்பணிப்பு கொண்ட செயல் வீரர்.தொன்னூறுகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டிருந்த சூழலில்  சென்னையில் ஒரே நாளில் காலையில் இயக்கங்களின் சார்பில் பேரணியும், மாலையில் எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.பேரணியில் கலந்து கொண்ட சீனியர் எழுத்தாளர் அநேகமாக அவர் ஒருவர் தான் என்று கருதுகிறேன். எங்களுக்கு முந்திய தலைமுறையின் ஆதர்சங்களில் ஒருவர். அவருக்கு வீரவணக்கம்!

- மதிவண்ணன் 




தோழர் பா.செயப்பிரகாசம் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி... தீக்கதிர், செம்மலரின் தீவிர வாசகர்... ஒருநாள் தீக்கதிர் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் உடனே தொலைபேசிடுவார்... ஒரு இதழ் செம்மலர் தம் இல்லம் வரவில்லையென்றாலும் தொடர்பு கொண்டிடுவார். அதனாலேயே அவருடன் அடிக்கடி பேசும் வாய்ப்பைப் பெற்றவன் நான்...

இலக்கியம், அரசியல் என பலவும் அவருடன் உரையாடியிருக்கிறேன்...

அன்பும் தோழமையும் நிதானமுமாகப் பேசுபவர் அவர்... இறுதிவரை வாசித்துக் கொண்டேயிருந்த ஒரு சிறந்த தோழரை இழந்துவிட்டோம்... வீரவணக்கம் தோழர்!

- சோழ. நாகராஜன் 




பா.செயப்பிரகாசம் - ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை

1996ல் நான் வசித்து வந்த திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவில் அதிகாலையில் ஒருவரை பார்த்தேன். வேறு யாரோ என்று விட்டுவிட்டேன். மீண்டும் அவரை அன்று மதியமும் மாலையிலும் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் பார்த்தேன். பிறகு மிகுந்த குழப்பத்துடன் அவர் வெளியே வந்த போது அவரிடம் மெல்ல விசாரித்தேன். ஆம் நான் தான் பா.செயபிரகாசம் என்றார், இது என் தங்கையில் வீடு மதுரை வரும் போது அவ்வப்போது இங்கே தான் வந்து தங்குவேன் என்றார்.

எங்களின் நட்பு அப்படித்தான் மலர்ந்தது. மெல்ல மெல்ல தோழர் செயபிரகாசம் என் மனதிற்கு நெருக்கமானார். நான் 2005ல் எழுதத்தொடங்கிய போது உடன் எனக்கு தொலைபேசியில் அழைத்து என்னை ஊக்குவித்தார். என் கட்டுரைகள் நூல்கள் வெளிவரும் போது எல்லாம் அழைத்துப் பாராட்டுவார்.

சென்னை, பாண்டிச்சேரி, கடைசியாக நுங்கம்பாக்கம் என அவரிடம் இருந்து அழைப்புகள் வரும், எல்லா அழைப்புகளிலேயும் அவரது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து உற்சாகமாக விவரிப்பார். 

‘மனஓசை’ காலத்தின் பலர் மக்கள் மீது உண்மையான நேசம் கொண்டிருந்தனர், அவர்கள் சார்ந்த அமைப்புகளை கடந்தும் சந்திக்கும் யாவரையும் அவர்கள் நேசித்தார்கள், மானுட சமுத்திரத்தின் மீது தீரா அன்பை கொண்டிருந்தார்கள். இன்குலாப் அவர்களிடமும் இந்த நேசத்தை நான் பார்த்திருக்கிறேன். அமைப்புகளின் கடுஞ்சுவர்களுக்கு வெளியே இயங்குபவர்களையும் நேசிக்க வழிகாட்ட உடன் சக பயணியாக அழைத்துச் செல்லும் பன்பை அவர்களிடம் பார்த்து வியந்தேன்.

புரட்சிகர அமைப்புகள் கடுமையான முகத்துடன் பார்க்கும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கும் பன்பை அறிந்த எனக்கு பா.செயபிரகாசம் இத்தகைய அமைப்பின் பெரும் பொறுப்புகளில் இருந்தவரா என்றே பல நேரங்களில் சந்தைகம் வரும் அளவிற்கு அவர் எளிமையாகவே இருந்தார். 

எங்கள் நட்பு மலர மலர தன்னுடைய ஒவ்வொரு மதுரை பயணத்திலும் எனக்கு சில முக்கிய நூல்களை அன்பளித்தார். எனது திருமணத்தை கேள்விப்பட்டதும் அன்று மாலை அரங்கில் வந்து எங்களை அவர் வாழ்த்திப்பேசும் இந்த புகைப்படத்தை லண்டனில் காலை முதல் பார்த்து வருகிறேன்.

இன்றைய எனது பாடம் என்பது சிலரை சந்திக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்தால் அன்றே செய்திட வேண்டும், அவரை சந்திக்க பல முறை முயன்றும் என் வேலைப்பளுவின் காரணமாக அது தள்ளிப்போனது. இனி அவரை எப்படி காண்பேன், அவர் எனக்கு கொடுத்ததில் எதையும் நான் அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லையோ என்கிற குழப்பத்துடன் இன்றைய இரவின் கடும் இருளுக்கு நுழைகிறேன்.....

புகைப்படம் : 30.10.2009 அன்று என் திருமணத்தில் வாழ்த்திப்பேசும் பா.செ (சூரியதீபன்)


- முத்து கிருஷ்ணன் 




பா.செயப்பிரகாசம் கூட்டங்களில் பார்வையாளராகவே வந்து அமர்வார். சந்திக்கும் வாசகர்களை கூர்ந்து முகம் பார்த்து தோழமைதோய்ந்து நீண்டநாள் பழகியது போல் உரையாடுவார். அவர் MA படிக்கும் மாணவப்பருவத்தில் அவர் எழுதிய கதை ஒன்று பாடமாக வந்து அதையும் அவர் தேர்வுக்காக படித்து எழுதியதாக படித்திருக்கிறேன். இளமை தொட்டே கவிதை கதைகள் எழுதிய மக்கள் எழுத்தாளர்களில் முக்கியமானவர் மறைவு வருந்தத்தக்கது வீரவணக்கத்தைப் பதிவு செய்கிறேன். பாண்டிச்சேரியில் இருந்து எழுதிவந்ததால் அவரை சரியாக இன்னும்போற்றாமல் விட்டுவிட்டது தமிழ்நாடு.

- அகவி என்கிற விநாயகமூர்த்தி 




என் எழுத்தை வாசித்த உடனே அழைப்பார். தொடர்ந்து எழுதுங்களென உற்சாகப்படுத்துவார். அரும்பாக்கத்தில் அவர் வசித்தபோது அடிக்கடி அவர் இல்லம் சென்று இலக்கியம் பேசி இருக்கிறேன். புறப்படும்போது பல நூல்கள் வாசித்த பெருமிதம் முகத்தில் பிரதிபலிக்கும். மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை ஐயா பா. ஜெயப்பிரகாசம். அவர் இனி இல்லை என்ற பதிவைப்பார்த்து என் மனம் ஏற்கவில்லை. தோழர் இரா.காமராசுவிடம் செய்தி கேட்டு வருந்தினேன். எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.

- அரங்க. மல்லிகா



கரிசல்காட்டுச் சூரியன் காலத்தில் கரைந்தது.

முற்போக்கு இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜே.பி. எனத் தோழர்களால் அன்போடு அழைக்கப் பட்ட சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் அவர்கள். 

எழுத்தாளர்களிலேயே மிகவும் மாறுபட்டவர் ஜே.பி. எழுத்தோடு வேலை முடிந்துவிட்டது என ஓய்வெடுப்பவரல்ல இவர். மக்களின் மீதான தாக்குதல் எங்கிருந்து வந்தாலும் களத்தில் குதிக்கும் போராளி. இது அவரது இரத்த அணுக்களிலேயே இருந்த ஒரு நற்கூறு ஆகும்.

அதனால்தான் கல்லூரிக் காலத்திலேயே இந்தித்திணிப்பை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய போராட்டக் கனல் இறுதிவரை அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொழிக் காப்புப் போராட்டமானாலும், ஈழத் தமிழர் சிக்கலானாலும், எழுதுகோலை வாளாகப் பயன்படுத்தியவர் அவர்.

மனித உரிமை மீறல் குறித்து எந்தவொரு முன்னெடுப்பினை எடுக்க நினைத்தாலும், எழுத்தாளர்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ஜே.பி. அவர்கள்தான். 

முற்போக்கு இலக்கிய உலகில் அடர்த்தியான சுவடுகளைப் பதித்த

"மன ஓசை" இதழ் மூலம் அவராற்றிய பணி காத்திரமானது. எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர்.

கதைகளையும், புதினங்களையும், விமர்சனங்களையும் எழுதிக் குவித்தவர்.

பட்டங்கள், விருதுகளுக்குப் பின்னால் ஓடாதவர்.

எப்பொழுதும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தவர். தோழமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். 

அவரோடான நினைவுகள் மறக்க முடியாதவை. அவரது சிறுகதைத் தொகுப்பாகிய இரவு மழை (2000) 

ஈழம் -  வன்மமும் அவதூறுகளும்  (2009) ஈழம் - உலகை உலுக்கிய கடிதங்கள் (2009) ஆகிய நூல்களை எமது புதுமலர் பதிப்பகம் சார்பாக வெளியிட்டோம்.

அவரது பங்களிப்போடு உருவான தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியோடு புதுமலர் பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் 

மு. திருநாவுக்கரசு அவர்களது "தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்" எனும் நூல், மிகப்பெரும் அதிர்வலைகளை அந்தக் காலகட்டத்தில் உருவாக்கியது.

அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்றாலும், அவரது இடம் வெற்றிடமாகி விடக்கூடாது. சனாதனம் சமூகத்தில் மட்டுமல்ல, இலக்கிய உலகிலும் மேலோங்கி வரும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் தோழரது இழப்பு, உறுதியாக ஈடுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதையே அவர் விரும்புவார் என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.

தோழருக்கு எமது நெஞ்சார்ந்த அஞ்சலி.

- கண. குறிஞ்சி 




சூரியதீபன்  எண்பதுகளின் நடுப்பகுதியில் மனஓசை கலை இலக்கிய இதழ் குறித்து அறிந்தேன். அது மா-லெ அமைப்பின் இதழாக வெளிவந்த அந்த இதழுக்கு எழுத்தாளர் சூரியதீபன் (பா.செயபிரகாசம்) அவர்கள் தான் ஆசிரியர். அவ்வாறுதான் அவர் பெயர் எனக்கு அறிமுகம். 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவர் எனக்கு நேரடியாக அறிமுகமானார். அவரை அறிமுகம் செய்துவைத்தவர் தற்போது ‘நிழல்’ திருநாவுக்கரசு என்று அறியப்படுகின்ற அப்போது தாமரைச் செல்வி பதிப்பகத்தின் ப.திருநாவுக்கரசு அவர்கள். 1993 ஆம் ஆண்டு என்னுடைய முதல் ஓவிய நூல் “எரியும் வண்ணங்கள்” வெளியிட முயற்சித்தபோது முன் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடலாம் என்றக் கருத்தை கவிஞர் இன்குலாப் அவர்கள் முன்மொழிந்து தமிழ் நாட்டின் பல்துறை ஆளுமைகள் பலரிடம் கையொப்பம் பெற்று நூல் வெளிவர வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்பதையும் முன்வைத்தார். அதற்கான வேண்டுகோள் அறிக்கையை கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதினார். தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைசார்த்த பதினேழு ஆளுமைகள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். அவர்களில் தோழர் எழுத்தாளர் பா. செயபிரகாசம் அவர்களும் ஒருவர். அன்றிலிருந்து தொடர்ந்து என் படைப்புச் செயற்பாடுகளுக்கு பக்கத்துணையாக நின்றார் ...

- ஓவியர் புகழ்




பா. ஜெயப்பிரகாசம் அவர்கள் காலமாகிவிட்டார் .எனது வாசிப்பு பழக்கத்தின் ஆரம்பத்திலே அவரை நான் வாசித்திருக்கிறேன். சூரிய தீபன் அவரது புனைபெயர், அவர் ஒரு புதுக்கவிதையாளர். வானம்பாடி இதழில்  எழுதி வந்தவர். தமிழக  கரிசல் காட்டு மக்களின் பிரச்சினைகளை அழகியலுடன் படைப்புகளாகத் தந்தவர். ”கிராமத்து ராத்திரிகள்” என்ற தொகுப்பே முதல் முதலாக நான்  வாசித்த  அவரது நூல். அதுதான் அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு என நினைக்கிறேன்.அவர் நடத்திய “மனஓசை” எம்மால் விரும்பிப் படிக்க ப்பட்ட சிறுசஞ்சிகை. அவர் கவிஞர் இன்குலாப் போன்றவர்களுடன் இணைந்து கள  செயற்பாட்டாளராக இயங்கியவர். மல்லிகை  2008 ஏப்ரல் மாத சஞ்சிகை யில்  தமிழ் இலக்கியத்தில் அழகியலுடனான ஓர் இடது சாரி சிந்தனைமிக்க மக்கள் எழுத்தாளர் என்ற வகையில் அவரை அட்டைப் படத்தில்  இடம்பெறச் செய்து ஜீவா அவரைக் கௌரவித்தார்.   

கடைசியாகச் செயப்பிரகாசம் அவர் இலஙுகை வந்தபொழுது அவருடன் நெருக்கமாகப் பழகக் கிடைத்தது.என் இளம் பிராயத்து காலத்தில் வாசித்த ஓர் ஆளுமையுடன் பழகக் கிடைத்தமை சந்தோஷமாக இருந்தது. அவரது மற்றும் கவிஞர் இன்குலாப் நூல்களை எனக்குத் தந்து சென்றார். பின்வந்த நாட்களில் தொடர்ச்சியாக  எம்மோடு தொடர்பில் இருந்தார்.அவருக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலி.

- மேமன் கவி




எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான பா.செயப்பிரகாசம் காலமாகிவிட்டார் என்பது கனத்த செய்தி. அவருக்கு என் இறுதி வணக்கம். நான் சென்னை போனபொதெல்லம் எந்த ஊரில் நின்றாலும் நீண்ட பயணம் செய்து பார்க்க வரும் அன்பும் அக்கறையும் கொண்ட மறக்க முடியாத உள்ளம்.  என் எழுத்துக்கு ஊக்கம் தரும் விமர்சகர். நஞ்சுண்ட பூமி என்று ஒரு தொடர் எழுதினார். அப்போதும் தொடர்பு கொண்டு உங்களின் நஞ்சுண்ட காடு நாவல் தலைப்பு என்னை கவர்ந்துவிட்டது. அதிலிருந்து எடுத்து நஞ்சுண்ட பூமி என்று எழுதுகிறேன் பரவாயில்லையா என்றார். அதற்கென்ன ரொம்ப மகிழ்ச்சியே என்றேன்.  அவர் பெரியவர் என்பதால் கேட்டார். நான் நஞ்சுண்ட காடு எழுதிய 2004  இல் அதனை வெளிக்கொண்டுவர முதலில் முயற்சி எடுத்தவரும் அவர்தான். அன்றைய சூழலில் ஏற்பட்ட இடையூறினால் அது அன்று நிறைவேறவில்லை.

- குணா கவியழகன்




அணையாது சூரிய தீபம்🔥

எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் மறைந்தார் எனும் செய்தியைப் படித்து அதிர்ச்சியுற்றேன். 

மண்ணையும் மக்களையும் எழுத்தில் வடித்தவர். ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும் முதலான சிறுகதைத் தொகுதிகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்கள். 

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் படைத்தவர் பா.ஜெயப்பிரகாசம். அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு 'தாலியில் பூச்சூடியவர்கள்'. தெற்கத்தி மக்களின் பண்பாடு அது. ஒரு அழியாத ஓவியக் காட்சி அது. ஒரு காலகட்டத்தின் பதிவு அது.

ஒரு கதையில்  கிழங்கு பறித்துச் சுட்டுத் தின்ன   வயல்காட்டு மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பார்கள் சிறுவர்கள். ஓரிடத்தைத் தோண்டும்போது 'அங்கு மட்டும் தோண்டாதே' என்று ஒரு சிறுவன்  மற்றொரு சிறுவனோடு சண்டை போடுவான். அது அவன் அம்மாவை புதைத்த இடம்.

இப்படிக் கரிசல் மண்ணின் கண்ணீர் ஓவியங்கள் பலவற்றை வரைந்தவர் ஜெயப்பிரகாசம். நாட்டுப்புறத்தின் எளிய மனிதர்கள் இவர் உலகின் நாயகர்கள்.

கரிசல் பிதாமகர் கி.ரா.வால் கொண்டாடப்பட்ட எழுத்து பா. ஜெயப்பிரகாசம் அவர்களுடைய எழுத்து.

சூரிய தீபன்' எனும் பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவின் போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் பனையூரில் கவிக்கோ இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இப்போது அவரே மறைந்து விட்டார்.

முற்போக்கு இலக்கியத்தின் முன்னணி முகம் ஒன்று மறைந்துவிட்டது. இந்திய இலக்கிய வானில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.

ஆனால் அது  ஏற்றிவைத்ததோ ஒரு சூரியதீபம். அது என்றென்றும் அணையாமல் ஒளிவீசும்.

இறந்த பிறகு தன் உடலைக் கூட மருத்துவ ஆய்வுக்காக அவர் வழங்கி இருப்பதாக அறிகிறேன். வாழும் போது மட்டும் அல்ல... சாகும்போதும் மக்களைச் சிந்திப்பவனே மகத்தான கலைஞன். பா.ஜெயப்பிரகாசம் அவர்களில் ஒருவர்.

அந்த மக்கள் கலைஞனுக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன். 

- பிருந்தா சாரதி




விளாத்திகுளத்தில் இருக்கிறார் என்று தெரியும். சந்திக்காமல் விட்டுவிட்டேன். துரத்தும் வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லை. எத்தனை அன்பாக அழைப்பீர்கள். தமிழ்தேசியக் கூட்டங்களில் உங்களோடு கலந்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை போனிலாவது உங்களிடம் பேசி இருக்கலாம். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று ஒரு கூட்டத்தில் ச.தமிழ்ச்செல்வன் உங்களைப் பேச அழைத்தார். கலாப்ரியாவுடன் இப்போதுதான் பேசினேன். அவரால் நம்பவே முடியவில்லை உங்கள் இழப்பை. அவர் உள்ளிட்ட உங்கள் எழுத்தாள நண்பர்களுடன் கொண்ட நட்பை புதுச்சேரிக் கூட்டத்தில் பேசியிருந்தீர்கள். சில இடங்களில் கண்ணீர் வந்தது எனக்கு. நினைவுகளை ஆழ்ந்து பகிர்ந்து கொண்டீர்கள்.  

அம்ருதாவில் கட்டுரை வரும் போதெல்லாம்  என்னிடம் கருத்து கேட்பீர்கள். தமிழ் தேசியக் கூட்டங்களில் உங்கள் பேச்சு தனித்துவமாக மிளிரும். அது இலக்கியக் கலையின் மீது நீங்கள் கொண்டிருந்த அன்பின் கனிவோடு சிறக்கும்.தீபாவளி நினைவுகள் பெரும் கனாதி கனம் கொண்டவை. இரண்டு நாளில் ஒரு நூற்றாண்டின் வலியை நம்மிடம் கடத்தி விடுபவை. தீபாவளியைக் கடப்பது என்பது கரிந்த புகையூட்டத்தின் ஊடே கரைந்து மீள்வது. கூட்டத்தோடு இல்லையென்றால்  நமக்கு மரணத்தின் கோரமுகங்களை கண்முன் நிறுத்திவிடும். நீங்களும் அப்படி ஒரு நினைவாக அழுத்தம் கூட்டும் தீபாவளி இது .  நினைவுகளின் சிதை மேட்டிலிருந்து எழுதப்படுவதுதானே புனைவுகள்.கூருணர்வு. சற்றும் மிகை இல்லாத மொழி, நடை. எளிமையின் தரிசனங்கள் உங்கள் எழுத்துகள். அந்த கூர்க்காவின் இரவை, அவனைச் சுற்றும் (பேசும்) காற்றை,  நினைவுகளை , பெருநகர வெறுமைகளை , வறுமையை எத்தனை அசலாக அந்த சிறுகதையில் வடித்து இருந்தீர்கள். சட்டென்று அந்த கதை தலைப்பு ஞாபகத்துக்கு வரவில்லை.தோழர் என்று முதல்முறையாக நான் வாய்நிறைய அழைத்தது உங்களைத்தான். செவ்வணக்கமும், வீரவணக்கமும் தோழர்.தமிழக அரசு முழுமையான அரச மரியாதையை மேதகு.  எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு வழங்கவேண்டும். எழுத்து மட்டுமல்ல . இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி தமிழீழ, தமிழின உணர்வுக்காக களப் பணியில் அர்ப்பணித்துக் கொண்ட ஒருசில எழுத்தாளுமைகளில் ஒருவர்.பா.செயப்பிரகாசம் இழப்பு இலக்கியம்,  தமிழ்தேசிய இடதுசாரி அரசியல் இரண்டிற்குமானது. இன்னும் எழுதுவேன் எங்கள் கரிசல் எழுத்துலக ஆசானே.

- ஆகாச மூர்த்தி 




பா.செயப்பிரகாசம்.ஒரு பெருங்கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து அதன் முடிவுக்கு வருவது போல தோழரின் உடலில் சிறிது சிறிதாகப் பயின்று மானுட உடலின் மகத்துவம்  அறிவார்கள் மருத்துவ மாணவர்கள். அவர்  காற்றில் கரைந்து போகலாம் ஆனால் அவரது 

நெல் வயலில் ரோஜாச் செடி முளைத்தாலும் விவசாயிக்கு அது களைதான்  -  போன்ற வரிகள் மறையவே மறையாது. இன்று தோழரின் உடல் தூத்துக்குடி மருத்துவமனைக்கு தானம்

- கலாப்ரியா




ஜெ. பி. மறைந்துவிட்டார். 

இளம் எழுத்தாளர்களைப் போற்றியவர். 

தான் கொண்ட கொள்கைக்கு நேர்மையாய் நடந்துகொண்டவர்.

எழுத்தை வாழ்வாகச் செய்தவர்.

முதுமையிலும் நம்பிக்கை ஒன்றையே விதைத்தவர்.

மனக்கசப்பும் எந்தச்சலிப்பும் எதன்மீதும் தனிப்பட்ட புகாரும் இல்லாதவர்.

சமூக மேன்மைக்காக எழுதுவதொன்றே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

- கண்மணி குணசேகரன்




எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்-மரணம்- அஞ்சலி

\சாந்தி அடையட்டும் 'தெக்கத்தி ஆத்மா' 

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் சேலம் கவிஞர் தமிழ்நாடன் மூலம் அறிமுகமானார். அப்போது நான் சிற்றிதழ்களில் அதிகம் எழுதி வந்தேன். அதனால் என் பெயரைச் சொன்னவுடன் நன்கு பரிச்சயமானவர். நினைவிலும் வைத்துக் கொண்டார். சேலத்தில் இரண்டொரு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசினார். அவரின் உரை உள்ளத்தில் பதியும் வண்ணம் இருந்தது. அவரின்  உச்சரிப்பு தனித்துவம் வாய்ந்தது.  அவரின் காந்தக்  குரலில் ஈர்க்காதவர் இருக்கமுடியாது. அதன் பிறகு சந்திக்கும் வாய்ப்பு இல்லை எனினும் அவரின் எழுத்துக்களை இதழ்களில் பார்ப்பதுண்டு.  வாசிப்பதுண்டு. எப்போதாவது பேசுவதுண்டு. சூரிய தீபனாக கவிதையும் பா. செயப்பிரகாசமாக உரை நடையும் எழுதினார். அவரின் ' மன ஓசை' மக்களுக்காகவே ஒலித்தது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அகவை தொன்னூற்று ஐந்து எய்த போது அவருக்கு ' கி.ரா 95'  என்னும் மலர் தயாரிக்கும் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார். கி.ரா 80 என்னும் தொகுப்பில் ஒரு கவிதை கி. ரா. குறித்து எழுதியிருந்தேன். கி.ரா 95க்கும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். அக்கட்டுரை குறித்து பேசியது முதல் தொகுப்பு வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். தொகுப்பிற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை கி.ரா மீது பா.செயப்பிரகாசத்தின் மீதான மதிப்பைக் காட்டியது. கி.ரா என்னும் எழுத்தாளனைக் கொண்டாடும் கலைஞனாக அறியப்பட்டார்.

எழுத்தாளர்களை விட்டுக்கொடுக்காதவர் பா. செயப்பிரகாசம். எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் குறித்து கால்க் காசு கடுதாசி என்னும் கட்டுரை எழுதி காலச்சுவடுக்கு அனுப்பிய போது காலச்சுவடு பிரசுரிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. காலச்சுவடை எதிர்த்து தி.க.சி.யை ஆதரித்து ஓர் அறிக்கையை வெளியிட்டு வெளியிட மறுத்த கட்டுரையை ஒரு சிறு தொகுப்பாக வெளியிட்டது இலக்கிய வாதிகளை விட்டுக்கொடுக்காத அவரின் பண்புக்குச் சான்று.

சமீபத்தில் 2022ஆம் ஆண்டு வல்லிக்கண்ணன் - தி.க.சி எனக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டேன்.  எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கு அனுப்ப அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் முகவரியைக் கேட்டேன்.  'பொன்.குமார் நான் தற்போது தூத்துக்குடியில் இருக்கிறேன். முகவரி தருகிறேன். அனுப்பி வையுங்கள்' என்று முகவரியையும் தந்தார். தொகுப்பை அனுப்பி வைத்தேன். பெற்றுக் கொண்ட அடுத்த கணமே அலைபேசியில் அழைத்து பேசினார்.  வல்லிக்கண்ணன் - தி.க.சி கடிதங்களின் தொகுப்பைப் பார்த்தவுடன் தனக்கு அவர்கள் இருவரும் கடிதம் எழுதியதை நினைவுக் கூர்ந்தார். தொகுத்து கொண்டு வாருங்கள் என்றேன். முயற்சிக்கிறேன் என்றார். நான் அனுப்பிய கடிதங்கள்  தொகுப்பு குறித்தும் ஒரு கடிதம் எழுதுங்கள் என்றேன் வாழ்த்தைத் தெரிவித்து விட்டு எழுதுகிறேன் என்றார். இனி எழுத மாட்டார் என எண்ணும் போது இதயம் கனக்கிறது. அந்த ' தெக்கத்தி ஆத்மா' சாந்தி அடைய வேண்டும்.

- பொன். குமார் 




தோழர் ச. தமிழ்ச் செல்வன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து வீடு திரும்பிய பின் பேசினார். இதய நோயுடன் வாழ்ந்து வந்தாலும் இடையில் திடீரென்று கால் வழுக்கி விழுந்ததில் இடுப்பில் ஏற்பட்ட அடியிலிருந்து மீள முடியாமல் தான் பிறந்த கரிசல் மண்ணிலேயே விடை பெற்றுக் கொண்டார். தமிழ் விடுதலைக் குரல் பா.செ.வின் எழுத்து. அடியேன் வயசு 75ஐத் தொட்டு விட்டதால் வெளியூர்ப் பயணங்களுக்கு ஆயிரத்தெட்டு தடைகள். கலந்து கொள்ள முடியலயே என்ற குற்ற உணர்வு இரவு நேரங்களில் துன்புறுத்துகிறது. 

கரிசல் காட்டு  இலக்கிய படைப்பாளி, கே.எஸ்.ஆர் அவர்களின் அஞ்சலி! கரிசல் காட்டு மூத்த எழுத்தாளர் நண்பர் பா.ஜெயபிரகாசம் alias சூரிய தீபன் நம்மை விட்டு பிரிந்தார். தமிழக அரசின் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். கிரா மூலம் அறிமுகம். கதைசொல்லி ஆசிரியர் குழுவில் இருந்தார். கடந்த 35 ஆண்டுகளாக நட்பு. ஓய்வுக்கு பின் புதுவை மற்றும் அரும்பாக்கத்தில் வசித்தார். பா.செயப்பிரகாசம், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றியவர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த 10 மாணவரகளில் ஒருவர். கடந்த 1 வருடமாக விளாத்திக்குளத்தில் இருந்தார். இதயக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த பா.செயபிரகாசம், தற்போது மறைந்த செய்தி மனதை வாட்டுகிறது. ஆழ்ந்த இரங்கல்.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்




தோழர் பா.செயப்பிரகாசம் மறைந்தார்.கடந்த உயிர் எழுத்து இதழில் கூட பெங்களூரிலிருந்து வந்த தொடுவானம் இதழின் ஆசிரியர் வீ தேவராசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். கடைசியாக மேமாதம் தொழிலாளர் தினத்தன்று அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. நன்றாக இருப்பதாகவே சொன்னார்... சமீபத்தில் நேரில் அவரைச் சந்தித்த நண்பர்களும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இன்று இறந்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. வீரவணக்கம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்

- கலாப்பிரியா



அன்புக்கும் பாசத்துக்கும் உரிய இனிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது, அருகாமையில் உள்ள பூங்கா வரை நடந்து சென்று திரும்புகிறேன் என்று நம்பிக்கையுடன் பேசினார். இன்றைய செய்தியால் கலங்குகிறேன். எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

துளிர் விடும் இலக்கியத் திறனை எங்கு கண்டாலும்  அதற்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்துப் பூக்கவும் காய்க்கவும் கனி கொடுக்கவும் செய்து அகம் மகிழும் அரிய மனிதர் ... வேலை தேடி அல்லல் பட்ட பலருக்கு தன்னால் இயன்ற வகையில் வேலை பெற்றுத் தந்தது வாழ வைத்தவர் ... கலை இலக்கியம் அரசியல் செயல்பாடுகளில் பலருக்கும் முன்னத்தி ஏர் ...முகநூல் முழுதும் நிரம்பிக்கிடக்கும் அஞ்சலிகள் அவரது அருமையைப் பறைசாற்றும் ... அவரோடு மன ஓசையில் பயணித்த காலங்கள் நெஞ்சில் நிறைந்து கனக்கின்றன... கருத்துக்களில் மாறுபட்டாலும் மக்களுக்காக என்பதில் மாறு படாதவர் பா.செ. என்கிற சூரிய தீபன். படைப்புக்களாலும் பயனுற வாழ்ந்த வாழ்வாலும் எண்ணற்றோர் நினைவுகளில் நீடுவாழ்வார்.

அந்த ஜெருசலேம் தனது மகனை அழைத்துக்கொண்டு விட்டது. இனி காடுகளில் அவன் ரீங்காரம் கேட்காது எதிரொலிகள் மட்டுமே கேட்கும் உடைந்த இரவுகள் இனி அவன் ஒளியை மட்டுமே உமிழ்ந்துகொண்டிருக்கும் கிராமத்து இராத்திரிகள் இனி அவன் கதை கேட்டு அழும் தெற்கத்தி ஆதமாக்கள் இனி அவன் புகழ்பாடித் திரியும் கரிசல் நிலம் தனது பாடுகளையும் தனது மைந்தர்களின் பாடுகளையும் விரல் முனைகள் தேயத் தேய எழுதிச் சென்றவன் முளைத்து வரக் காத்திருக்கும் அவன் நினைவுகளைச் சுமந்து நிற்கும் உழைக்கும் வர்க்கம் தனது வியர்வையையும் இரத்தத்தையும் சுரண்டலுக்கு அடிமைப்பட்ட துயரத்தையும் எதிர்த்துப் போராட அவன் விடுத்த அறைகூவல்களைக் கொண்டு தனக்கு உரமேற்றிக்கொள்ளும்.அவனுடைய உதவிக் கரங்களால் வாழ்வைப் பற்றிக்கொண்டவர்கள் அவனுடைய மனித நேயத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் இலக்கியத்தில் சிகரத்தை அடைந்துவிட்டதாகப் பெருமைப் பட்டுக்கொள்பவர்கள் அவன் ஏணியாக இருந்ததை எண்ணி எண்ணிப் பார்ப்பார்கள் கொண்ட கொள்கைக்காக உறவுகளை அணைக்கவும் தொலைக்கவும் செய்த அவன் அன்பைப் புரிந்துகொள்வார்கள் அவன் தோளோடு தோள் நின்ற தோழர்கள் அவன் நினைவை மலையை விடக் கனக்கும் நெஞ்சுடன் சுமப்பார்கள்.

- நிழல்வண்ணன் இராதாகிருட்டிணன்



மொழிப் போரின் மூத்த தளபதி முற்போக்கு சக்திகளை உருவாக்கியவர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் (சூரியதீபன்) மறைவு எய்தினார் என்பது அதிரச்சியானது. மாணவர் பருவத்தில் மனஓசை இதழ்மூலம் நெருக்கமான தோழர். நான் தலைமை செயலகத்தில் பணியாற்றிய போது மக்கள் தொடர்பு அதிகாரியாக அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் நெருக்கம்  அவரது எழுத்துகள் இயங்க வைப்பது..மனித உரிமை செயல்பாடுகளில் தோழர் பி.வி.பக்தவச்சலம் அவர்களோடு பதட்டமான சூழ்நிலையில் துணிச்சலோடு செயல்பட்டவர். விழுப்புரம் நெம்பு கோல் தோழர்கள் இலக்கிய படைப்பாற்றல் இவருடைய பங்கு அக்கறை மிகுந்தது தோழரின்மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. செவ்வணக்கம் தோழர்.

விழுப்புரம் மருதம் சார்பில் மொழிப் போராட்டம் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் உரையாற்ற எழுத்தாளர் சூரியதீபன் அவர்களை வற்புறுத்தி அழைத்தேன். தோழர் தாம் விபத்தில் காயம் அடைந்துள்ளதாக பங்கேற்க இயலாத சூழலை வருத்தமும் தெரிவித்தார் அவருக்கு பதிலாக கவிஞர் இன்குலாப் அவர்கள் பங்கேற்று நிறைவு செய்தார்.

- இரவி கார்த்திகேயன்



எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் "காடு" சிறுகதைத் தொகுப்பு.

பொதுவாக எனது வாசிக்கும் ஆர்வம் வரலாற்று நூல்களிலும், கட்டுரைத் தொகுப்புகளிலும் இருக்கும் அளவிற்கு சிறுகதை தொகுப்புகளில் இருப்பதில்லை. 

(காரணம் கதைகளைப் படித்து முடித்ததும் அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளிவர முடிவதில்லை)

ஆனால், காடு சிறுகதை தொகுப்பின் முதல் கதையின்  முதல் வரியைப் எதேச்சையாக படித்த போது அவ்வரியே அக் கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது.

"கடவுள் எவ்வளவு உயரம் இருப்பார் தெரியுமா?" என்ற அந்த வரியே

அட என ஆச்சரியப்பட வைத்து கதை முழுவதையும் வாசிக்கச் செய்தது.

சமூகத்தில் நாம் பார்க்கக்கூடிய, காதால் கேட்கக்கூடிய ஒரு  சம்பவம்தான் கதையின் மையக்கரு. ஆனால் ஆசிரியர் அதை சொல்லிய விதம் அடடே போட வைக்கிறது.

கதையில் இருக்கும் ஒரு பாராவை அப்படியே தருகிறேன் பாருங்கள் எத்தனை ரசனையுடன் எழுதி இருக்கிறார் என்று.

"கரிசல் பூமியில் ஆண்களும் கர்ப்பம் கொள்வது உண்டு. கொத்தமல்லி காடு வெளேரென்று பூக்கிற போது ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் கொள்கிறான். மசக்கையின் ஆயாசமும், களைப்பும் அவன் முகத்தில் தெரிகிறது.

பருவ மாறுதல்களால் தீட்டுப்படாமல் காடு விளைந்து விட வேண்டும் என்று அவன் கவலைப்படுகிறான். விளையப்போகும் மல்லி செடி அரும்பு காயாகி கனம் அதிகரிக்கின்ற கணமெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணின் முக அழகு வந்து விடுகிறது. பிரசவ வேதனையுடன் ஒவ்வொரு நாளும் காட்டை நெருங்குகிறான்.

நட்சத்திர துகள்கள் மண்ணில் உதிர்ந்து விட்டது போல் காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது"

எதையும் நாம் சொல்லும் விதத்தில் தான் அதன் ரசனை அமைகிறது. 

காலத்தில் கரையாது ஐயா தங்களின் எழுத்து.

- கௌரேஇ கணேசன்



நான் சிறுவனாக இருந்தபோது தோழர் பா.செயப்பிரகாசத்தின் எழுத்துகளை வாசித்து மயங்கியுள்ளேன். கி.ரா, தனக்குப் பிடித்த எழுத்து இவருடையது எனச் சொல்லியுள்ளார். இவருடைய விடுதலைப் புலிகள் ஆதரவுடன் எனக்கு ஆதரவு இல்லை. ஆனால் என்னைப் புலிகளிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனச் சொல்லாத பெரியவர். இவரது அதிகமான நூல்கள் என்னிடம் உள்ளன. இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறையில் இருந்த இவரது வரிகளில் நடனமாடுவது கவித்துவமே. நல்ல தமிழின் காவலன் பா.செ. இவரைப் பாரிஸில் சந்தித்த தினங்கள் மிகவும் மகிழ்வான தினங்களே. இவருடன் எப்போதும் எனக்குப் போன் உறவுகள் இருந்தன. தோழனாகவும் நண்பனாகவும் இருந்த இவருக்கு எனது ஆழமான அஞ்சலிகள்.

(பா.செயப்பிரகாசம் நேற்று இறந்த செய்தி என்னைக் கவலைக் கிடங்கில் வீழ்த்தியது. எனது சிறு வயதில் அவரை வாசித்து அவரது தமிழில் மயங்கினேன். பின்பு அவர் இறந்து விட்டாரென நினைத்துப் பல ஆண்டுகளின் பின்புதான் அவர் உயிருடன் வாழ்கின்றார் எனும் செய்தி எனக்குக் கிடைத்தது. ஆம், இது ஓர் கதை. பின்பு அவருடன் கிடைத்த தொடர்பு மிகவும் இனியதே.  நான் தேசியவாதி அல்லன். ஆனால் அவர் இந்தியை எதிர்த்துச் சிறைகளில் வாழ்ந்தபின், இடதுசாரியாக இருந்து, பின்பு விடுதலைப் புலிகளை ஆதரித்தவர். ஆனால் ஒருபோதுமே இந்த இயக்கத்தை ஆதரிக்கவும் எனத் தொல்லை தராது இருந்த பண்பாளர். தமிழின் காவலர். கி.ரா வினால் வியக்கப்பட்ட தமிழ் இவருடையது.  நான் இவரைப் பாரிஸில் சந்தித்துள்ளேன். மிகவும் இனிய சந்திப்பு. அகதிகள் மீது அதிக அக்கறை தந்த எனது நண்பருக்காக ஓர் சிறிய கவிதை அஞ்சலி.)

பூதங்கள் வருகின்றன 

ஓடுங்கள் அலைகளே

எமது கடல்கள் 

எமது அகதி நிலங்கள் அல்ல 

ஓடுங்கள் அலைகளே.

எமது கடல்கள் 

எம்மைக் களவாகக் காக்கும் 

குடில்களே. 

நான் அலைகளை எண்ணவில்லை 

அவைகளைக் காதலித்தேன் 

நான் ஒருபோதும் 

கவிஞன் அல்லன் 

அலைகள் தந்த 

அனைத்துக் கவிதையையும் 

சுமந்தவன். 

எனது அகதித் தலைக்குள் 

நிறைய அலைகள் தூங்குகின்றன 

விழிக்கின்றன 

கத்துகின்றன 

ஏங்குகின்றன 

நானும் ஓர் பெரிய அலையாகி 

கொலைகளது 

அனைத்து நிலங்களும் அழிய வேண்டும்

அழியவே வேண்டும் எனக் கத்துகின்றேன்

அப்போதும் 

பூதங்கள் வருகின்றன 

எனது கடல் இங்கு வந்து 

இவைகளைத் துரத்துகின்றது 

நான் 

சாந்தமாகிப்போன 

எனது அலைகளை 

முத்தமிடுகின்றேன்.

- Raju Kauthaman



எழுத்தாளர் ,தோழர் பா.செயப்பிரகாசம்.அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி கவலையளிக்கிறது. நீண்டகால நண்பர் ஊடறுவின் 15 வது வருட நிகழ்வில் கூட பேச்சாளாராக  அவர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.. தோழரின் இழப்பு பேரிழப்பு அவருக்கு.எமது ஆழ்ந்த அஞ்சலி.

- Pathmanathan Ranjani



எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த வாரம் அழைத்திருந்தார். பல்வேறு செயல்பாடுகள், திட்டமிடல்கள் என உரையாடினோம். இந்த திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியாய் உள்ளது. 

டிஸ்கவரி வாசகர்கள் -  Discovery Fans  சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

- Vediyappan M Munusamy



தி.க.சியின் ‘தாமரை’ நாட்களில் கவித்துவம் ததும்பும் சிறுகதைகளை எழுதிய பாவனைகள் இல்லாத இடதுசாரித் தோழர் பா.செயப்பிரகாசம். ஐரோப்பாவுக்கு வந்திருந்தபோது ஒரு வாரமளவில் என்னோடு தங்கியிருந்தார். பழகுவதற்கு எளிமையானவர். இறுதிக் காலங்களில் முழுமையாகத் தமிழ்தேசியத்தில் ஆழ்ந்தவர். எல்லா வகையிலும் இன்குலாபின் தலைமுறையைச் சார்ந்தவர். காலை விடியும் நியமம் போல ஆரவாரமின்றி அவரது மரணம் நேர்ந்திருக்கிறது. தோழமைக்கு அஞ்சலி.

- Yamuna Rajendran



எழுத்தாளர், களச்செயற்பாட்டாளர், தமிழ்த்தேசியவாதி, ஈழ ஆதரவாளரான தோழர்.பா.செயப்பிரகாசம் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி பெரும் துயரத்தைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் படைப்புலகம், அரசியல் செயல்பாடு, போராட்ட களம் என மக்கள் சார்ந்து இயங்குபவர்களாக வெகுசிலரையே அடையாளம் கண்டுணர முடியும். அத்தகைய மானுட நேசர்களில் நம் காலத்தில் முகாமையான தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள். அவருடைய எழுத்துக்களை  கல்லூரி காலத்தில் வாசிக்க கிடைத்த போதிலும், தமிழீழப்படுகொலைப் போர் உச்சத்தில் இருந்த 2009 பிப்ரவரியில் நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஈழப்படுகொலையை கண்டித்து டில்லியில் நடத்தப்பட்ட பேரணிக்காக அங்கே சென்ற சமயத்தில் அவரை சந்தித்தேன். அப்பேரணியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவராக தோழர்.செயப்பிரகாசம் எனக்கு அறிமுகமானார். விருதுகளுக்காக ஏக்கம் கொண்டவரல்ல, மாறாக முற்போக்கு அரசியல் களத்தில் சாதி ஒழிப்பு அரசியலை, தமிழ்த்தேசிய அரசியலை கைக்கொண்டவர். கவிஞர், எழுத்தாளர் எனும் அவரது பன்முகம் தமிழ்ச் சூழலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக்கியது. பாசிச நெருக்கடிக்குள்ளாகும் இக்காலகட்டத்தில் தோழரது இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அவரது நூல்கள், எழுத்துக்கள், கவிதைகள் வழியாக நம்முடன் தொடர்ந்து பயணிப்பார். தோழருக்கு எங்கள் வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.

- Thirumurugan Gandhi



விளாத்திகுளத்தில் இருக்கிறார் என்று தெரியும். சந்திக்காமல் விட்டுவிட்டேன். துரத்தும் வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லை. எத்தனை அன்பாக அழைப்பீர்கள்.

தமிழ்தேசியக் கூட்டங்களில் உங்களோடு கலந்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை போனிலாவது உங்களிடம் பேசி இருக்கலாம். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று ஒரு கூட்டத்தில் ச.தமிழ்ச்செல்வன் உங்களைப் பேச அழைத்தார். 

கலாப்ரியாவுடன் இப்போதுதான் பேசினேன். அவரால் நம்பவே முடியவில்லை உங்கள் இழப்பை. அவர் உள்ளிட்ட உங்கள் எழுத்தாள நண்பர்களுடன் கொண்ட நட்பை புதுச்சேரிக் கூட்டத்தில் பேசியிருந்தீர்கள். சில இடங்களில் கண்ணீர் வந்தது எனக்கு. நினைவுகளை ஆழ்ந்து பகிர்ந்து கொண்டீர்கள்.  

அம்ருதாவில் கட்டுரை வரும் போதெல்லாம்  என்னிடம் கருத்து கேட்பீர்கள். தமிழ் தேசியக் கூட்டங்களில் உங்கள் பேச்சு தனித்துவமாக மிளிரும். அது இலக்கியக் கலையின் மீது நீங்கள் கொண்டிருந்த அன்பின் கனிவோடு சிறக்கும்.

தீபாவளி நினைவுகள் பெரும் கனாதி கனம் கொண்டவை. இரண்டு நாளில் ஒரு நூற்றாண்டின் வலியை நம்மிடம் கடத்தி விடுபவை. தீபாவளியைக் கடப்பது என்பது கரிந்த புகையூட்டத்தின் ஊடே கரைந்து மீள்வது. 

கூட்டத்தோடு இல்லையென்றால்  நமக்கு மரணத்தின் கோரமுகங்களை கண்முன் நிறுத்திவிடும். நீங்களும் அப்படி ஒரு நினைவாக அழுத்தம் கூட்டும் தீபாவளி இது .  

நினைவுகளின் சிதை மேட்டிலிருந்து எழுதப்படுவதுதானே புனைவுகள்.

கூருணர்வு. சற்றும் மிகை இல்லாத மொழி, நடை. எளிமையின் தரிசனங்கள் உங்கள் எழுத்துகள். அந்த கூர்க்காவின் இரவை, அவனைச் சுற்றும் (பேசும்) காற்றை,  நினைவுகளை , பெருநகர வெறுமைகளை , வறுமையை எத்தனை அசலாக அந்த சிறுகதையில் வடித்து இருந்தீர்கள். சட்டென்று அந்த கதை தலைப்பு ஞாபகத்துக்கு வரவில்லை.

தோழர் என்று முதல்முறையாக நான் வாய்நிறைய அழைத்தது உங்களைத்தான். செவ்வணக்கமும், வீரவணக்கமும் தோழர்.

தமிழக அரசு முழுமையான அரச மரியாதையை மேதகு.  எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு வழங்கவேண்டும். எழுத்து மட்டுமல்ல . இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி தமிழீழ, தமிழின உணர்வுக்காக களப் பணியில் அர்ப்பணித்துக் கொண்ட ஒருசில எழுத்தாளுமைகளில் ஒருவர்.

பா.செயப்பிரகாசம் இழப்பு இலக்கியம்,  தமிழ்தேசிய இடதுசாரி அரசியல் இரண்டிற்குமானது. இன்னும் எழுதுவேன் எங்கள் கரிசல் எழுத்துலக ஆசானே.

- ஆகாச மூர்த்தி



இன்று என் பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினரோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். மாலையில் தான் ஜனநேசன் Jananesan RVeeraragavan லண்டனில் இருந்து அழைத்து தோழர் பா.செயபிரகாசம் காலமானார் என்கிற துயரச்செய்தியை என்னிடம் தெரிவித்தார். 

என் மகிழ்ச்சி எல்லாம் கரைந்து போனது. கடந்த பத்து நாட்களுக்கு முன் தான் என்னிடம் பேசினார். அது அவர் என்னிடம் பேசும் கடைசி பேச்சு என்று இருவருமே அறிந்திருக்கவில்லை. 

இந்த அக்டோபர் மாத உயிர் எழுத்து இதழில் அவருடைய ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையும் மறைந்த  மொழிபெயர்பாளர் வீ.தேவராஜன் குறித்த ஓர் அஞ்சலிக் கட்டுரையும் வெளியாகியுள்ளன. அதன் லேஅவுட்  குறித்து அவர் தன் மகிழ்ச்சியை நேரில்  தெரிவித்தவர் அதை வாட்ஸ் அப்பிலும் கூறியிருந்தார். 

நான் உடனே தோழர் மதிக்கண்ணனை தொடர்பு கொண்டு மேலதிக விபரம் கேட்டு தெரிந்து கொண்டேன். 

என்பதுகளில் எங்கள் கல்லூரி காலத்தில் அவரை சூரியதீபன் என அறிந்திருந்தோம். மன ஓசையில் அவருடைய எழுத்துகளை படித்திருந்தோம். 

ஆனால், நேர் பரிச்சயம்  உயிர் எழுத்து காலத்தில் தான் ஏற்பட்டது. அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து உயிர் எழுத்தில் வெளியாகின. அவருடைய சில நூல்கள் உயிர் எழுத்து பதிப்பகத்தில் வெளியாகியுள்ளன. 

அவ்வப்போது என் தலையங்கங்கள் குறித்து என்னிடம் பாராட்டுவதோடு  அதன் முக்கியத்துவமும் குறித்தும்  பேசுவார். அவர் உயிர் எழுத்தின் மீது மிகவும் நல் அபிப்ராயம் வைத்திருந்தது மட்டும் அல்ல, என் மீதும் பேரன்பு வைத்திருந்தார். 

அவருடைய இழப்பு எனக்கு மட்டும் அல்ல, அவருடைய குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, இந்தச் சமுதாயத்திற்கே பேரிழப்பு. 

மரணம் முன் அனைவரும் மண்டியிட்டே ஆக வேண்டும் என்பது இயற்கையின் கொடிய விதியன்றி வேறு என்ன?

தோழருக்கு என் சார்பிலும் உயிர் எழுத்து சார்பிலும் செவ்வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்.

- Sudheer Sendhil



தோழர் பா.செயப்பிரகாசம் மறைந்தார் என்கிற செய்தி முன்னதாகவே வந்தடைந்தாலும், உடனடியாக எதிர்வினை ஆற்ற இயலவில்லை. பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் விமானமேறும்போது நண்பரின் தொலைபேசிக்கு  அந்தத் துயரச் செய்தி வந்தது. என்னுடைய செல்பேசியில் சிம் முடங்கியிருந்ததால் உடனடியாக அவர் மறைவு குறித்து என் இரங்கலை தெரிவிக்க இயலவில்லை.

தோழர் பா.செ பலருக்கு பலவிதமான களங்களில் அனுபவமாகி நிற்பவர். 

என்னைப் பொறுத்தவரை 2015 இல் நாங்கள் நடத்திய 1965 மொழிப்போராட்டத்தின் 50 ஆண்டு நினைவு நிகழ்வுகளில் எங்களின் கதாநாயகராக, அப்போராட்டத்தில் முகமாக அவர் தான் தலைமை தாங்கி நின்றார். அந்த ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவரே தலைமை ஏற்றிருந்தார். பெங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு அவரும் நண்பர் மணி மணிவண்ணனும் நமது கூட்டமைப்புச் சார்ந்து சென்றிருந்தார்கள். பெங்களூரில் மொழிப்போர் தீயை மூட்டினார்கள். 1965 இன் கதையை எடுத்துச்சொன்னார்கள்.

அப்போது பல தமிழ், ஆங்கில பத்திரிகைகள் மொழிப்போர் தியாதி ஒருவரை பேட்டியெடுக்கவேண்டும் என்று கூறினால், நான் பா.செ.வின் எண்ணை அளித்துவிடுவேன். துல்லியமாக அந்த வரலாற்றை அவர் பதிவுசெய்வார். மதுரையில் அவர் பிற தமிழ்த்தீரர்களோடு இணைந்து மாணவர் போராட்டத்தைத் தொடங்கிய அந்தக் காலகட்ட அனுபவங்கள் இன்றைய தலைமுறைக்கு வந்து சேர்ந்ததில் அவரது பங்கு முக்கியமானது. எங்களுக்கெல்லாம் வாழும் வரலாறாக அப்படி நின்றவர்.

அப்போதும் சரி பிறகும் சரி, மொழித் தியாகிகளுக்கு நன்றி செலுத்தவும் மொழிப்போர் நினைவுகளை மீட்டெடுக்கவும் அவர்தான் பெரிதும் உதவினார். 

அவர் முதலில் சூரிய தீபனாக இளம்வயதில் மன ஓசை இதழினுடாக அறிமுகமானார்.  முற்போக்கு இயக்கத்தின் முகமாக, ஈழ ஆதரவு ஆற்றலாக, மொழிப்போர் தீரராக சாதி ஒழிப்பு களப்போராளியாக இறுதிவரை வாழ்ந்து முடிந்திருக்கிறார் பா. செ.

மொழி உரிமை நிகர்மை இயக்கத்தின் சார்பாகவும் என் சார்பாகவும் அவருக்கு செவ்வணக்கம் செலுத்தி விடை அளிக்கிறோம்.

தோழர் பா.செ, நீங்கள் பங்கெடுத்த ஒவ்வோர் அரசியல் களத்திலும் நீங்கள் படைத்த ஒவ்வோர் எழுத்திலும் நீங்கள் நீடுழி வாழ்வீர்கள். சென்று வாருங்கள்.

- Aazhi Senthil Nathan



எண்பதுகளில் நான் தீவிர இடதுசாரி எழுத்தாளனாக இயங்கிய காலத்தில் மன ஓசை இதழின் ஆசிரியராக இருந்தார் பா.செயப்பிரகாசம். சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் கதைகளும்.எழுதி வந்தார். ' இரவுகள் உடையும் ' என்பது அவரது மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பு என்று நினைவு. எனது கவிதைகள் தொடர்ச்சியாக மன ஓசையில் வெளிவந்தன. நான் அப்போது புரட்சிகர கவிதைகளுடன் காதல் கவிதைகளும்.எழுதிக்கொண்டிருந்தேன். அதுதொடர்பாக.ஒரு விவாதம் எனக்கும் பா.செயப்பிரகாசத்திற்கும் இடையே மன ஓசையில் நடந்தது. புரட்சியைபோலவே காதலும் முக்கியம் என நான் வாதிட்டேன். அந்தக் காலங்கள் பின்னால் கண்முன்னால் மறைந்துபோயின. எனினும் பா.செயப்பிரகாசத்துடன் தொடர்பு எப்போதும் இருந்தது.

இரண்டுவாரங்கள் முன்பு பேசினார். ஒரு சிறிய விபத்தில் உடல் நலம் குன்றி சென்னையிலிருந்து  விளாத்திக்குளத்திற்கே இடம் பெயர்ந்துவிட்டதையும் தனக்கு உயிர்மை கிடைப்பதில்லை , அனுப்பி வைக்கவும் என்று கேட்டுக்கொண்டார்.முகவரி வாங்கிக்கொண்டேன்.

இப்போது அவரது முகவரி மட்டும்தான் இருக்கிறது. அவர் இல்லை.

அஞ்சலிகள்.

- Abdul Hameed Sheik Mohamed



#தோழர்_பா_செயப்பிரகாசம்_எ_சூரியதீபன்_இரங்கல்_கூட்ட_அறிவிப்பு

1965 மொழிப்போராட்ட ஈகி, 80களில் இரவுகள் உடையும், காடு எனச் சிறுகதைத் தொகுப்புகள், மனஓசை கலை , இலக்கிய இதழின் ஆசிரியர், கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதிய எழுத்தாளர், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லி வரை இயங்கியவர். தமபக 2009, 2016இல்  நடத்திய மக்கள் கலை விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நெருங்கிய நண்பர்...

 தோழர் பா. செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் அவர்கள் 23.10.2022 இன்று விளாத்திகுளத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தோழரது உடலை மருத்துவக் கல்விக்கு தானம் செய்திருப்பதால்,  பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பதாக உள்ளது.  

25.10.2022 செவ்வாய்க் கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்தில் வைத்து இரங்கல் கூட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

தோழர் சூரியதீபன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!

மீ.த.பாண்டியன், தலைவர்,

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

பேச: 94431 84051

- தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்


எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் என்னும் சூரிய தீபன் அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அவருக்குப் புகழ் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- Sukirtha Rani


ஜேபி - பா.செயப்பிரகாசம் - மறைந்ததாக, குமரகுருபரன் ராமகிருஷ்ணன் பதிவின் வழியாக அறிகிறேன்.

கலாப்ரியாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட இழப்பு. இதை அவனுடன் பகிர்ந்த போது, அவர், அவருடைய சொந்த ஊரான விளாத்திகுளத்தில் தான் சமீப காலமாக இருந்துவந்ததாகச் சொன்னான். தெரியாமல் போயிற்று. போய் எட்டிப் பார்த்திருப்பேன்.

இனிமேல் அதுவும் முடியாது.

- Vannadasan Sivasankaran S


பா.செயப்பிரகாசம் கதைகள். 

முதல் தொகுதி. பக்.410.

வாத்தியார் அந்தச் சின்னப் புத்தகத்தை எடுத்துப் படித்தான்

"அவர்கள் எடுத்துக் கொண்டது நம்முடையக் கூலியை அல்ல. நம்முடைய வாழ்க்கையை. நம்முடைய உழைப்பை அவர்கள் பறித்துக் கொள்கிறபோது, வாழ்க்கையையும் பறித்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பறித்துக் கொண்டவர்கள்தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய சமூக மரியாதையை நாம் உடைக்க வேண்டும். பணக்காரன் என்றால் உயர்ந்த வேடம் போடுகிற பொறுக்கி என்றும் மக்களுக்கு சொல்ல வேண்டும். மற்றவர்களை குற்றுயிரும் குலையுயிருமாய் கொல்லாமல் இவனுக்கு செல்வமில்லை. இந்தப் பணக்காரன் ஒரு அசிங்கப் பிறவி. மற்றவர்களை கொன்று சேர்க்கிற சுகங்களுக்குச் சொந்தக்காரன் இவன்.

" இவர்கள் குணக் கேடுள்ள மனுசர்கள், தனிச் சொத்துடைமை, குணக்கேடுகளை விகாரப்பட்ட மனசுகளை உருவாக்குகிறது. இந்தச் சமூகம் முழுவதையும் குணக்கேடுள்ளதாக ஆக்கி நம்மீதும் அது பரவி இருக்கிறது. ஆக சுத்தமான மனுசர்கள் தனிச் சொத்துடைமை இல்லாத அமைப்பில்தான் இருப்பார்கள். ஏனென்றால் அன்று எல்லோரும் உழைப்பவர்களாக இருப்பார்கள். "

இன்று இதை வாசித்ததிலிருந்து யோசனை பெரும் உசுப்பலாக உள்ளது.


ஒரு கனவின் மீதி நூலரங்கு இதே நாளில்  நடந்ததாய் முகநூல் நினைவூட்டுகிறது..

இரு நாளுக்கு முன்னர்தான் சூரிய தீபம் அணைந்தது.

ஒரு ஜெருசலம் ஒல்லிபிச்சானும்,தாலியில் பூச்சூடிய மைதிலியும் நினைவை அறுக்கிறார்கள்..

Kinley தயவில் பொள்ளாச்சி மகாலிங்கம் அருள்நெறிச்  செல்வரானதையும் எம்ஜியார் எட்டாவது வள்ளலானதையும் நதிக்கரை மயானத்தில் சாம்பலாக்கினீர்..

அன்பின் பா.செவுக்கு ஈர வணக்கம்.

- அ.கனி வண்ணன்


25 ஆண்டுகால தோழமை JP இன்றில்லை; காலமாகிவிட்டார்.

சென்னை பாரதி இல்லத்தில் கவிதைத்திருவிழா நடத்திட அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இருக்கும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் கவிஞர் ஜெயதேவனைப் பார்க்க 1997 சென்றிருந்தேன்.அவர் எதிரில் உட்கார்ந்திருந்தவரைக் காட்டி இவரைத் தெரியுமா? எனக் கேட்டார் ஜெயதேவன் .தெரியாது என்றேன்.இவர்தான் எங்கள்துறையின் இணை இயக்குநர் பா.ஜெயப்பிரகாசம்; உங்கள் ஆள்தான் என்றார். அன்றிலிருந்து தொடங்கிய தோழமை இந்த அக்டோபர் 4 வரை தொடர்ந்தது.

உங்கள் தோழமை  உங்கள் படைப்புகள் என்றும் எம்முடன் இருக்கும் JP. வீரவணக்கம் தோழர் ❤️

ஓர் இடதுசாரி சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்டோர் விரிவான பலதரப்பட்ட மனிதர்கள் ஆளுமைகளொடு தொடர்பு வைத்திருப்பது அவசியம்.

ஒரே நேரத்தில் அரசாங்க எந்திரத்தின் ஒர் அங்கமாக இருப்பதும் அதை மீறுவதும் எவ்வாறு? 

நேரடியான களப்போராட்டத்தில் ஈடுபடுகிற படைப்பாளி தன் புனைமொழிகளை எங்கிருந்து பெறுவது அதற்காக செய்ய வேண்டியை என்ன போன்றவைகளில் அன்பின் தோழமை JP யாவருக்குமான முன்மாதிரி. எவ்வளவோ JP பற்றி நினைக்கலாம்! பேசலாம்.

உங்களுக்கும் JP பற்றிய எண்ணங்கள் புரிதல்கள் இருக்கும்தானே? நாளை நவம்பர் 9 மாலை 5 மணி, சென்னை எழும்பூர் இக்சா அரங்கம் வருக.

- R T Muthu 



நான் அமைப்பில் உள்ளே இளம் ஊழியராக நுழைகிற நேரத்தில் அவர் சூரியதீபன் வெளியேறி இருந்தார். 

அவருடைய குடும்பம் அமைப்புக்காக செய்த பங்களிப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும்

இடைப்பட்ட காலத்தில் அவர் குறித்து அமைப்பில் மாறுபட்ட கருத்துகள் உருவான போதும் அவரின் பங்களிப்பு அசைக்க முடியாதது.

மன ஓசை மூலம் சூரியதீபன் செய்த பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும்.

- Silambu Chelvan



பா.செயப்பிரகாசம் அண்ணாச்சியின் மறைவுச் செய்தி. பத்து நாட்களுக்கு முன்பு விளாத்திகுளம் போய் பார்க்க வேண்டியது தவறிப்போனது. எங்கள் வெம்பூர் கிராமத்திற்கு உயர்நிலைப் பள்ளி வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர். மல்லேசுவரம் அக்கா வீட்டுக்கு போனபோது லட்சுமிபுரம் போனேன். அண்ணாச்சி இல்லை என்று தெரிந்துதான் போனேன். ஓ ஜெருசலேம் அல்லவா அது? காடல்குடிக்கு அப்புறம் இருக்கும் கரிசல்காட்டுக்குள் நுழைவது அவ்வளவு எளிதில்லை. கவுல்பட்டி வரையிலும் ருல்ஃபோவின் பூமி. பனிக்குப் பதிலாக வெயிலும் கானல் நீரும் மாயவெளியை  கொண்டுவந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் கோர்ட் வளாகத்தில் சந்தித்துக் கொண்டோம். அவரது பிரிய அம்மாவின் இறப்பு சான்றிதழுக்காக 12ஆவது வாய்தாவுக்கு வந்திருந்தார். அவருடைய ஜெருசலேம் கதை இறப்பு சான்றிதழ் ஆகாதா என்று சுருங்கிப்போனேன். கடைசிக் காலம். பின் காலம் தாண்டி, மரணம் சகல மனிதர்களின் வாசலிலும் உட்கார்ந்திருக்கிறது. நான் வள்ளுவனின் பேரன் என்பதால் 'இன்றில்லை என்னும் பெருமை உடைத்து' என்று கூறி உட்கார்ந்துவிட வேண்டும். 

ஜெ.பி. அண்ணாச்சிக்கு எனது அன்பின் அஞ்சலிகள் 💖

- Samayavel Karuppasamy



தீவிர இடதுசாரி இதழாக பத்தாண்டுகள் வெளிவந்த மன ஓசை இதழின் ஆசிரியராக பல இளம்படைபாளிகளை அந்த இதழின் வழி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவரும் கோட்பாட்டு நிலையிலான முற்போக்கான தமிழ்த்தேசியத்தை நோக்கி செயல்பட்டவருமான பா.செயப்பிரகாசம் தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளார்...அவரை வெறும் கரிசல் நில எழுத்தாளராக மட்டுமில்லாமல் சமூக இயக்கத்தின் செயல்பாட்டாளராகவும் தொழிற்பட்டார்.....இந்தி மொழி வல்லாதிக்க திணிப்புக்கு எதிராக மாணவர் போரட்டக்குழு தலைவராக களம் கண்டவர். தமிழகத்தின் பல்வேறு போராட்டக்களங்களில் முன்னணியில் நின்றவர்

புகழ்வணக்கம்......தோழர் செயப்பிரகாசம்.

- கா.தமிழரசன்



அமரர் பா.  செயப்பிரகாசம் அவர்களுக்கு கலைக்குரிசில் கலாமன்ற சர்வதேச ஒன்றியத்தின் 

மரியாதை வணக்கமும், கண்ணீர் அஞ்சலியும்

===============

காந்தக் கரிசல்மண்ணின் பசுமைப் படைப்பாளியான சூரிய புத்திரரே!

படைப்பும், களப்பணியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடும் என கொள்கை மூர்க்கத்தோடு தன்னை வரித்துக்கொண்டு நடமாடிய நெருப்பு  எழுதுகோலின் போராளியே!  

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, நோர்வே என எமது மன்றத்துடன்  இணைந்து ஈழக் கூத்துக்கலையை பெரியவர்கள், இளையவர், மாணவர் என தமிழ் நாடு, பாண்டிச்சேரி பல்களைக் கழக அரங்குகளிலும், கற்றோர் சபைகளிலும் தடம் பதிக்க வழிகாட்டியாய், தோழனாய் தோள் கொடுத்த தோழனே! உன் பிரிவின் சேதி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தோம் தோழா. 

தங்கள் இறுதிப் பயண வழியில் 

கலைக்குரிசில் கலாமன்ற சர்வதேச ஒன்றியம் மலர்களைத் தூவி, இறுதி வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றது.

- Jeyarajah Saverimuttu



அலுவலகம் மூலமாகவும், தந்தையின் நண்பராகவும் அறிமுகமான அன்புடையார் ஐயா பா.செ. தந்தையின் மரணத்தின் போது பாண்டிச்சேரியிலிருந்து ஐயாவும், கவிதாசரணும் பாண்டிச்சேரியிலிருந்து கடைசி நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மயானத்திலேயே ஒரு சிறு உரையாற்றினார்கள். தந்தையின் கடைசிகால நண்பர். தந்தையின் மரணம் பற்றி தீராநதியில் கட்டுரை எழுதியிருந்தார். பிறகு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் தேர்வில் பங்காற்றினார்.

எனது சிறுகதைத் தொகுப்பை படிக்க கொடுத்திருந்தேன். கி.ரா பற்றிய கட்டுரை ஒன்றை என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார். கடைசியாக ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் இருக்கும் தொலைபேசியில் பேசிய போது உடல்நிலை பற்றி தெரிவித்தார்.

தொலைபேசியில் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக சொன்னார். சுருக்கமாக முடித்துக் கொண்டு விரைவில் நானும், மணவை வழக்கறிஞர் தமிழ்மணியும் நேரில் வருவதாக தெரிவித்தேன். வாருங்கள் என்றார்.

கொடுத்த வாக்குகளை காப்பாற்ற காலம்/காலன் அனுமதிப்பதே இல்லை. மரணத்தின் மீது எரிச்சல் தான் வருகிறது. எல்லா கோப்புகளையும் இப்படி அவசரமாக, அநியாயமாக எதிர்பாரா நேரத்தில் முடித்து வைக்கத்தான் வேண்டுமா? மூன்று மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சொன்னார், ‘வாழ்க்கை ரொம்ப சின்னது’ என்று.

ஒரு முறை விளாத்திக்குளம் சென்று அன்னாரை பார்த்துவிட்டு வரமுடியாமல் போகும் அளவிற்கு வாழ்க்கை ரொம்ப சின்னதாகிவிட்டது.

ஐயா, தங்களுக்கு விடை கொடுக்க என் தந்தையில்லை. இந்த சிறியவனின் ஆழ்ந்த இரங்கல்கள்.

- Seeralan Jeyanthan


1988களில் புரட்சிகர இளைஞர் முன்னணி தொடர்பில் இருந்த போது அதன் கலாச்சார இலக்கிய இதழான 'மன ஒசை'யின் வழி எனக்கு அறிமுகமானவர்.

என் முதல் கவிதை மன ஓசையில் வெளிவந்திருக்கிறது.

அவரின் தீவிர புரட்சிகர படைப்பு மற்றும் எழுத்தாற்றலால் வியப்பையும் வாசிப்பு ஈர்ப்பையும் எற்படுத்தியவர்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு பாண்டிச்சேரியில் இரண்டொரு நிகழ்வுகளுக்கு சென்றிருந்த போது பி என் எஸ் பாண்டியன் வழி - நேர் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெற்றவன் நான்.

மக்கள் பாவலர் இன்குலாப்'ன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்து.. சென்னையில் நடத்தி,  'இன்குலாபின் அனைத்து படைப்புகள்' தொகுப்பையும் வெளிக்கொண்டு வந்தவர். 

ஒருமுறை பாண்டிச்சேரியில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது.. 'நாங்களெல்லாம் தூர இருந்து பார்த்து வியந்த ஆளுமை நீங்கள். ஒருமுறை திருப்பூருக்கு பதியம் இலக்கிய நிகழ்வுக்கு வரவேண்டும்' என்றும் கேட்டுக்கொள்ள... 

'சொல்லுங்கள். வருகிறேன்..' என்றார்.

இடையில் கொரொனாவில் அத்திட்டம் தள்ளியே போனது.

அவரின் ஆளுமை என்பது அவரது படைப்பில் மட்டுமல்ல.. உடல் உறுதியிலும், கொண்ட கொள்கையிலும் தான். திடகாத்திரமான மனதுக்கும் உடம்புக்கும் கொள்கைக்கும் சொந்தக்காரரான சூரியதீபன்

மறைவுற்றார் என்கிற செய்தி 

வருத்ததையே தருகிறது.

புரட்சிகரமான / எளிய மக்களுக்கான எழுத்துக்களை கதை, கவிதை, மொழி பெயர்ப்பு, இன்னும்பிற படைப்புகளின் வழி விதைத்துப் போயிருக்கிறார்.

விருட்சமாகும்.

வீரவணக்கம் தோழர்.

- Bharathi Vasan




எனது இனிய தோழர், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் இறுதி நிகழ்வு விளாத்திகுளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரோடு எத்தனையோ சந்திப்புகளை நிகழ்த்திய என்னால், இன்று உயிரற்ற உடலை,சந்திக்க இயலவில்லை. மனம் மிகவும் வேதனை அடைகிறது. இறுதி நிகழ்வுக்கு செல்ல முயற்சித்தும் என்னால் முடியவில்லை.

தாமரையின் ஆசிரியர் பொறுப்பில் தோழர் தி.க.சி அவர்கள் இருந்தபோது,

அவருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்தவர் சூரிய தீபன் என்கின்ற தோழர் ஜெய்பிரகாஷ் அவர்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய அரசியலோடு அவர் மாறுபட்டிருந்த போதிலும், தாமரையின் இலக்கியப் பணிகளில் பங்கேற்று இருந்தார். அதன் பின்னர் மனஓசை என்ற புகழ்பெற்ற தீவிர இடதுசாரி இலக்கிய இதழின் மூலம் சமூக உணர்வு கொண்ட மிகச்சிறந்த எழுத்தாளர்களை  உருவாக்கினார். ஈழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் மிகவும் தீவிரம் கொண்டு பல கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்.  செயல்பட்டவர்.

புரட்சிகர பயணத்தில் என்றுமே மறக்க முடியாத தோழர்கள் ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம்.

- CMahendran Mahendran



தோழர் பா.செயப்பிரகாசம் மறைந்தார்.

கடந்த உயிர் எழுத்து இதழில் கூட பெங்களூரிலிருந்து வந்த தொடுவானம் இதழின் ஆசிரியர் வீ தேவராசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். கடைசியாக மேமாதம் தொழிலாளர் தினத்தன்று அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. நன்றாக இருப்பதாகவே சொன்னார்... சமீபத்தில் நேரில் அவரைச் சந்தித்த நண்பர்களும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இன்று இறந்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. வீரவணக்கம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.


பா.செயப்பிரகாசம்.
ஒரு பெருங்கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து அதன் முடிவுக்கு வருவது போல தோழரின் உடலில் சிறிது சிறிதாகப் பயின்று மானுடப் படைப்பின் மகத்துவம் அறிவார்கள் மருத்துவ மாணவர்கள். அவர் காற்றில் கரைந்து போகலாம்
ஆனால் அவரது
நெல் வயலில் ரோஜாச் செடி முளைத்தாலும் விவசாயிக்கு அது களைதான் - போன்ற வரிகள் மறையவே மறையாது
இன்று தோழரின் உடல் தூத்துக்குடி மருத்துவமனைக்கு தானம்

- Tk Kalapria


சூரிய தீபன் என்கிற பா செயப்பிரகாசம் மறைவு நெஞ்சத்தை வருத்துகிறது.. 

====================

ஏறத்தாழ நாற்பதாண்டுகளாய் அறிந்த பழக்கம் நெஞ்சத்தில் வரிசையாக நினைவுக்கு வருகிறது.. 

சென்னை - சிந்தாதிரிப்பேட்டை - குடிநீர் வடிகால் வாரியத்தில் அவர் பணிசெய்து கொண்டிருந்த போதிருந்து சந்தித்து வந்திருக்கிறேன்.. 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா அவர்கள் 1981- இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தொடங்கிய போதும், புலவர் கலியபெருமாள், அறிஞர் எசு வி இராசதுரை உள்ளிட்ட ஆளுமையர் தொடர்புடன் ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டமைப்பு தொடங்கிய போதும், பொ வெ பக்தவத்சலம் அவர்களுடன்  மக்கள் கலாச்சாரக் கழகத்தில் இணைந்து செயலாற்றி வந்த ஐயா சூரியதீபன் அவர்களோடு பழகத் தொடங்கினோம்.. 

மன ஓசை - இதழ் வழி அவரின்  படைப்பாற்றலை உணர்ந்தோம்..  

த ஒ வி இ சார்பில் ஈரோட்டில் தமிழக மக்கள் கலை விழா நடத்தியபோது அவர் வந்து கலந்து கொண்டதோடு எண்ணற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தினார்.. 

நான் சிறை சென்று மீண்டபோதும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்..

பாவலர் இன்குலாப் உள்ளிட்ட கால இணைவில் 1965 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற போராளி அவர்.. 

தமிழீழ ஆதரவுக்கு முன்நின்றவர்.. 

எப்போதும் இனிமையான பேச்சு.. 

உரிமைக்குக் குரல் கொடுக்கும் எழுச்சிப் பேச்சிலும் இனிமை மாறாத பண்பைப் பிறரிடம் காண இயலாது.. 

ஆழ்ந்த அறிவும், செயலும் இருப்பினும் அடக்கமாய் வெளிப்படும் நிறைஞர்.. 

மனத்தால் அமைந்திட இயலாத வருத்தத்தோடு அத்தகு தமிழிய ஆளுமைக்கு விடை சொல்வோம்.. 

வீரவணக்கம் செலுத்துவோம்!..

- பொழிலன் தமிழ்நாடு



சென்னையில் 2003 - 2004 களில் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு எல் எல் ஏ பில்டிங்கில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்கள் உரையாற்றிய நிகழ்வு, முரண் களரி அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வா வேறு நிகழ்வா நினைவில்லை.  சிறந்த உரை. 

பதினைந்து நிமிடங்கள் நானும் உரையாற்ற வேண்டி இருந்தது. கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

அன்று தான் முதலில் சந்திக்கிறோம். நிகழ்வு முடிந்ததும் தொடர்ந்து வாசிங்க தொடர்ந்து எழுதுங்க என்றார். 

நினைவுகள் குழறுகின்றன.

அய்யா வலிகளிலிருந்து விடுதலை.

எங்களுக்கான நேரத்தில் தங்களைப் பின் தொடர்கிறோம்...

- Madhumitha Raja


35ஆண்டு காலம் உறவு கொண்டிருந்த தோழர். என்ன செய்யலாம் இதற்காக? அணு உலை அறிவோம் என்ற எனது இரு நூல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த அன்பிற்குரிய தோழர் பா. செயப்பிரகாசத்தின் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது.

- Praba Karan



என் வாழ்வில் மிக நெருக்கடியான கட்டங்களில் துணை நின்ற ஆளுமை சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் எழுதி பா.செயப்பிரகாஷம் காலமானார். 

தொழிலில் நிர்வாகக் குளறுபடிகளால் வெறும் 300 ரூபாயுடன் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தேன். தாங்கிக் கொள்ளத் தோழர்கள் இருந்தார்கள். ஆனால் காலுன்றுவதற்கான சாத்தியங்களை உருவாக்கத் துணை நின்றவர் பா.செயப்பிரகாஷம். 

அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. மிகச் செட்டான சொற்களில் கதைச் சூழலைக் கவித்துவமாகக் கொண்டு வந்து நிறுத்துவார்.

90 களின் துவக்க ஆண்டுகளில் இன்னொரு ஜெருசலேம், இரவுகள் உடையும் என்ற அவரது இரு தொகுப்புகளையும் பாரதி கிருஷ்ணகுமாரின் பாண்டியன் கிராம வங்கி சாத்தூர் அலுலகத்தில் திணறத் திணறத் திகட்டத் திகட்ட வாசித்தேன். 

அது வாசிப்பு அனுபவமல்ல. காலங்களையும் தூரங்களையும் வாழ்ந்து கடந்தது போல இருந்தது. மெஜுரா கோட்ஸ் தொழிலாளர்களின் போராட்டக் களத்தை காவியக் களமாக மாற்றும் வல்லமை அவரது பேனாவிற்கு உண்டு. 

விளாத்திகுளத்தின் எளிய மக்களை காவிய நாயகர்களாக மாற்றும் மந்திர சக்தி படைத்தவர்.

தேரிக்காட்டு தங்கம்மாள்புரம் எஸ்.எஸ். போத்தையா என்ற பள்ளி ஆசிரியரை அவரது கிராமத்து பண்பாட்டு வாழ்வியல் சேமிப்புகளை உரிய வகையில் கொண்டு சேர்த்ததன் வாயிலாக முக்கியமான ஆளுமையாக நிறுவினார். 

தெற்கத்தி நிலவியலையும், மக்களையும் அவர்தம் உயரிய மாண்புகளையும் இலக்கியமாக நிறுவதில் கி.ராவின் இணைப்பயணியாக இருந்தார். 

அரசின் உயர் பொறுப்பில் இருந்த போதும் அதிகார பீடத்திற்கு அஞ்சாமல்  சாதுர்யமாக நெருக்கடி மிகுந்த காலங்களிலும் மன ஓசை மார்க்சிய லெனிய இலக்கிய இதழுக்கு ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு முக்கியமான ஆதரவு சக்தியாக விளங்கினார். 

குடும்ப உறுப்பினர்கள் கடல் கடந்து வசித்த நிலையில் பாண்டியில் அண்ணன் வீட்டில் சில காலமும், சென்னையில் சிலகாலமும், இறுதியாக சுமார் மூன்றாண்டுகளாக விளாத்திகுளத்திலும் வசித்து வந்தார். 

தொடர்ந்து உடல் உபாதைகளுடனே இருந்த போதிலும் அமைப்பு வேற்றுமை பாராது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அதிகாரத்திற்கு எதிரான இயக்கங்கள் அனைத்திலும் தவறாது பங்கெடுத்துக் கொண்டார்.

காளிமுத்து, இளவேனில், கவிஞர் அபி, இன்குலாப் போன்றோரின் கல்லூரித் தோழர். (இன்குலாப் குடும்பத்தினரோடு உற்ற தோழமை கொண்டிருந்தார்) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துவங்கிய அவரது சமூக இயக்கப்பணி எழுத்துப் பணியாகவும், களச் செயல்பாடாகவும் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது. 

மிருதங்க அதிர்வைப் போலத் துல்லியமாக ஒலிக்கும் பா.செயப்பிரகாஷம் அவர்களது குரலை இனி நாம் கேட்க இயலாது. 

பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளீர்கள் தோழர். கனத்த மனதோடு விடை தருகிறோம்.

- Poppu Purushothaman



80 களில் பா.செயப்பிரகாசத்தின் ஒரு ஜெருசலம் தொகுதிதான் முதலில் வாசிக்கக் கிடைத்தது . (பாரதிதாசன் வாடகை நூலகம்) .அத் தலைப்புக் கதையும் மற்ற கதைகளும் என்னை உள்ளிழுத்து மயக்கங் கொள்ள வைத்தன. கச்சிதமான கவித்துவ நடை. அதற்கு முன் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், பாலகுமாரன் என வாசித்திருந்தாலும் பா.செ வின் கதைகள் எளிய மக்களின் பாடுகள், கையறு நிலை, மண்ணோடு அம்மக்களின் பிணைப்பு என அசலான எழுத்து கொஞ்சமும் பிரச்சாரமின்றி புது மொழியில் கவித்துவ செறிவோடு இருந்தன.

உடனே காடு,கிராமத்து ராத்திரிகள் தொகுப்புகளையும் தேடி வாசித்தேன்.

கைவிடப்பட்டவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின் வலியும் வாதைகளும் என்னைப் போன்றவர்களை எழுத்தில் காண்பது போல் புதிதாய் இருந்தது.

96 வாக்கில் அம்மாவோடு கோவை சென்ற போது ஒரு புத்தகக் கடையில் இம் மூன்று தொகுதிகளையும் ஒன்றாய் அகரம் வெளியிட்டதை அந்நெருக்கடியிலும் வாங்கி வந்து பொக்கிஷமாய் வைத்திருக்தேன். வழக்கம் போல் இரவல் சென்றது திரும்பவில்லை. எத்தனையோ நூல்கள் அப்படித் திரும்பாத போதும் அவரை இழந்த இப்போது வாசிக்க வழியின்றி இது மட்டும் வடுவாய் நின்று போனது.

20 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு தொடர்வண்டி நிலையம் சென்று அழைந்து வந்து முழு நாள் இலக்கிய நிகழ்வில் உடனிருந்தது எங்கள் பெருமிதங்களில் ஒன்று .

எழுத்தாளன் தனது படைப்புகளைத் தாண்டியும் மக்கள் பிரச்சனைகளில் களத்தில் நிற்பது அரிது. அது இன்குலாப்பும் பாசெ வும் செய்து காட்டிய ஒன்று.

- Nagu Anbazhagan



ஐயா மறைந்தார்.

அண்ணனின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து, 18.10.2002 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மானுடத்தின் தமிழ்க் கூடல்” மாநாட்டுக்கு வந்திருந்தார் எழுத்தாளர் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ஐயா பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்கள்.  

தமிழ்க்குடிக்கு பேரிழப்பு!

ஆழ்ந்த இரங்கல்

- திருமுருகவேந்தன்



இதே நாளில் தஞ்சையில் பா.செ. தஞ்சை இலக்கிய வட்ட நிகழ்வில் அவருடைய பேச்சை கேட்க வந்த தோழர்களும். நீங்க நினைவாகிப் போய்விட்டார் தோழர். முக நூல் எடுத்து காண்பிக்கிறது. 2015 ல் கூட்டம் நடைப் பெற்றது. 

சென்று வாருங்கள் பா.செ

- துவாரகா சாமிநாதன்



பா.ஜெயப்பிரகாசம் சென்னையில் இருந்த போது இலக்கியக் கூட்டங்களில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு இருந்தது. இன்குலாப் விடியல் வேணுகோபால் ஆகியோரின் வீடுகளுக்கு போகிற சந்தர்ப்பங்களில் அவர்களோடும் இவரை சூரிய தீபனாகவும் பார்க்க முடிந்திருக்கிறது!

மன ஓசையில் இவரது படைப்புகளை வாசித்தும் இவரின் தெக்கத்தி கதைகளை படித்தும் பேசியும் தோழமையை வளர்த்துக் கொண்டோம். அடுத்தடுத்த இயக்கங்களை முன்னெடுப்பதில் சளைக்காத ஆர்வம் கொண்வராக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பார்.

பின்நாட்களில் படைப்பாளர்கள் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது ;அடக்குமுறைகள் ஏவப்படுகிறது என்பதையெல்லாம் கண்டித்திட எதிர்த்து செயல்பட தமிழ் படைப்பாளர்கள் கூட்டமைப்பை கட்டமைத்திட வேண்டிய முயற்சியில் எழுத்தாளர் சுகுமாரன்  கவிஅன்பன் உள்ளிட்ட எங்களையெல்லாம் பங்கேற்க அழைத்து ஒருங்கிணைப்பாளர்களாக அரவணைத்துக் கொண்டு செயல்பட்டார்!

சென்னையிலும் புதுவையிலுமாக நடத்தப்பட்ட கூட்டமைப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறோம். புதுவையை விட்டு விளாத்திகுளம் போனபிறகு தொடர்புகள் இல்லாமல் போனது! தொடர்ந்து நோய்வாய்பட்ருந்தார்; 

"அவர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே அவரை சிறப்பித்து பாதுகாத்திட வேண்டும்" என செப்டம்பர் மாதம் எட்டயபுரத்தில்  கலைஇலக்கிய பெருமன்றம் முன்னெடுத்த பாரதி விழாவில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி எம்.பி யிடம் கோரிக்கை வைத்து பேசியதை கேட்க நேர்ந்தபோதுதான் அவருடைய சீர்கெட்ட உடல்நிலை பற்றி அறிய நேர்ந்து வருத்தப்பட வேண்டியதாயிற்று!

இதோ இன்று பேரிடியாய்  வந்திட்ட அவரது மறைவுச் செய்தியை கேட்டு ஜீரணிக்க முடியாத நெஞ்சக் குமுறலை உணர்ந்திட முடிகிறது.

போய் வா எம் தோழனே! நாளைய விடியல் நமக்கானதாக இருக்கட்டும் என்ற உனது நல்வார்த்தைகளை ஏற்று தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விடை தருகிறோம் எம் தோழனே!!

- Sankara Subbu Isaikkummani



மானுடம் இதழ் குறித்து மணிக்கணக்கில் பேசிய கனிவான குரலுக்குச் சொந்தக்காரர்.

மானுடம் இதழை முதன்முதலில் பார்த்தபோது அவருள் ஓர் இன்ப அதிர்ச்சி உண்டாகியிருக்கக்கூடும்.

"இப்படி ஓர் கனமான இதழ் இத்தனைநாள்  என்னுடைய கண்ணில் படாமல் போய்விட்டதே" என்று பிரமிப்படைந்ததோடு,  இதழில் தன்னுடைய படைப்பும் இருக்க வேண்டும் என்று சொல்லி, உடனடியாக கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பினார்.

மானுடத்தின் இரண்டு இதழ்களில் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இலக்கியத் தளத்தில் இன்னும் பல பங்களிப்பைச் செய்யவேண்டிய நிலையில் அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

எழுத்தாளரும் மக்கள் போராளியுமான தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

- 'மானுடம்' தங்க.செங்கதிர்



மக்களுக்காக பணி செய்யக் கூடிய ஒவ்வொரு ஆளுமைகளையும் தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது. நல்ல மனிதர்களை எல்லாம் இழந்து வெற்றிடமாகும் போது அநீதிகளையும் , பாசிசத்தையும் எதிர்த்து போரிட யார் வருவார்கள்?? விரல் விட்டு எண்ணக்கூடிய மனிதர்களே மக்களின் பிரச்சினைக்காகவும் போராடவும் , எழுதவும் செய்கிறார்கள். அதில் ஒருவர் தான் அய்யா செயப்பிரகாசம் அவர்கள். தமிழர்களின் உரிமைக்காக போராடிய குரல் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டது. இனி நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறமோ என அச்சம் தோன்றுகிறது. சிறந்த எழுத்தாளர், இந்தி எதிர்ப்பு போராளி ஐயா சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைந்த செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

அய்யாவுக்கு எமது வீரவணக்கம்✊

- Arul Doss Borntowin



பா. செயப்பிரகாசம்  என்ற சூரியப் பிரகாசம் என்ற சமூகப் போராளியை நாம்  இழந்துவிட்டோம்.

மகத்தான மக்கள் நேயர். மாந்தநேயப் படைப்பாளி.

  தமிழ்ச் சமூகத்தின் மனச்சான்று.

இடைவிடாது  இயங்கிய  கலைஞன்.

 உண்மையின் உக்கிர முகம். எனவே சூரியதீபன்.

சந்தை வணிகமாகும் சாரமற்ற மனிதப் போலிகளைத் தோலுரித்தவர்.

 சமகாலப் படைப்புலகிற்கு வெளிச்சம் தந்தவர்.

 சமூக விஞ்ஞானி. 

 மக்களின் மொழிக் கதைசொல்லி.

தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என ஏராளமாக எழுதியுள்ளார்.

’மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியர்.

இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறை சென்றவர்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர்.

ஈழவிடுதலைக்கான சிங்கநாதம்.

ஆழிரங்கல்.

- Philip Sudhakar



மக்கள் பாவலர் இன்குலாப் அவர்கள் மீது அளவு கடந்த நேசம் கொண்டவர்.  

அய்யா இன்குலாப்பின் அன்பிற்குரியவன் நான் என்பதால் என் மீதும் மிகுந்த அன்புக் காட்டியவர்.

ஆழ்ந்த இரங்கல் #சூரியதீபன் அய்யா.

- இசாக் Ishaq



நண்பர் பா.ஜெயப்பிரகாசம் மறைந்தார். பி.வி.பகதவச்சலத்தின் மச்சினர். சூரியதீபன் என்ற பெயரில் சிறு கதை எழுத்தாளர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. ராஜாஜி பவனில் இணை இயக்குனராக, " செய்தி- விளம்பரத்துறை" க்கு பணியாற்றியவர். கிளிநொச்சி சென்று தேசியத.தலைவரை சந்திதவர்களில் ஒருவர். அவருக்கு இதய பூர்வமான அஞ்சலி.        

  பி.கு:- இன்று விளாத்திகுளத்தில் மீரடைப்பினால் பா.ஜெ மரணம் சம்பவித்தது. மகன் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு, செவ்வாய்கிழமை பா.ஜெ. உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

- Tss Mani



பெரும் மரியாதைக்கும் பேரன்பிற்கும் உரிய 

தோழர். பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்களின் மறைவு செய்தி பெரும் வலியை தருகிறது.

வீரவணக்கம் தோழர்.

- Divya Bharathi



என்றும் 

நின்றொளிரும் மறக்கஇயலா JP. 

கிளர்ந்தெழும் எண்ணங்கள். 

சூரியதீபன். 

தோழர்

பா.செயப்பிரகாசம்

இயற்கை எய்தினார் எனும் செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பது. உரிய நண்பர்களுடன் 

ஆழ்ந்த இரங்கலினை பகிர்ந்து வணங்குகிறோம் ✊️🙏

-  தளம் இதழ் ✍️



எழுத்தாளர் ஐயா பா.செயப்பிரகாசம் (கவிஞர் சூரியதீபன்) அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அப்பாவின் எழுத்துலக நண்பர். கொள்கைரீதியாகவும் நண்பர். அப்பா அடிக்கடி இவங்களோட உரையாடியது பற்றி பகிர்ந்திருக்காங்க. அப்பாவின் மறைவுச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஐயாவோடு முதன்முறை பேசினேன். வருத்தத்தைத் தெரிவித்ததோடு, தன்னால் நேரில் வந்து கலந்துகொள்ள உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றார்கள். பரவாயில்லை ஐயா, உங்களுக்கு தகவலாகத்தான் சொன்னேன் என்றேன். அதன்பின் நான்கைந்து முறை என்னோடு செல்பேசியில் பேசியிருக்கிறார்கள். இம்மாதம் வரை வாட்சப்பில் என்னோடு தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்தாங்க. அப்பாவின் மறைவு குறித்து வெளியான பத்திரிகை செய்திகளை என்னோடு பகிர்ந்துவந்தார்கள். இவர்களின் மறைவுச்செய்தி அதிர்ச்சியாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் ஐயா.


- D S Gauthaman



தமிழறிஞர், இடதுசாரி செயல்பாட்டாளர், நூல்களை கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கி வந்த தாளாளர், தோழர் சூரியதீபன் என்கிற எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஐயா மாரடைப்பு காரணமாக மறைந்தார்.

ஆழ்ந்த வருத்தங்கள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகிலுள்ள
விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது இல்லத்தில் நாளை (24/10/2022) மதியம் அவரது இறுதி மரியாதை நிகழ்வு.

அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், அடிப்படை உரிமைகளுக்கான தொழிலாளர்கள் போராட்டம் பரவியது. இதை குசேலர், வி.பி.சிந்தன், ஏ.எம்.கோதண்டராமன், மேயர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அது இவரையும் கவிஞர் இன்குலாப்பையும் ஈர்த்தது.  மேயர் கிருஷ்ணமூர்த்தி, ஒருநாள் இரவு அறிஞர் அண்ணா வீட்டுக்கு வந்து தொழிலாளர்கள் படும் துயரங்களை எல்லாம் அவரிடம் விவரித்தார்.   ”தொழிலாளர்கள் படும் துயரங்களைக் கேட்டபோது என்னால் இரவெல்லாம்   தூங்கவே முடியவில்லை  ”என்று மறுநாள் அண்ணா நெகிழ்ந்துபோய் எழுதினார். இந்த நிலையில் கீழவெண்மணிப் படுகொலை அரங்கேறியது. அதனால்  இவருக்கும்  இன்குலாப்புக்கும் அரசியல் பார்வை மாறியது. இவர்கள் செயல்பாடுகள் மார்க்சிய அரசியலை நோக்கி நகர்ந்தது.

- Anjali Ponnamma Art Critic


நினைவானார் சூரியதீபன்
••••••••••••••••••••••••••••••••••••••••
முற்போக்காளர் நெஞ்சங்களில்
எழுத்தாலும் செயல்களாலும் 
என்றும் வாழ்வார்
       பா.செயப்பிரகாசம் 
       ( சூரியதீபன் ) அவர்கள் !
       இலக்கும் இயக்கமுமாக 
       வாழ்ந்தவர் அவர் ! 
       'மனஓசை" இதழின்
        முதுகெலும்பாய் 
        இயங்கியவர்.
ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகிறோம்.

- சூலூர் பாவேந்தர் பேரவை



தோழர் பா. செயப்பிரகாசம் மறைந்தார். 
23-10-2022.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
முற்போக்குச் சிந்தனையாளர். தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வந்தவர். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார்.
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும்.

- முனைவர் நா.இளங்கோ


எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் (சூரிய தீபன்) இன்று மாலை நம்மை விட்டு பிரிந்தார். தமிழ் எழுத்துலகில், கரிசல் எழுத்தாளர்களில் பெரும் ஆளுமை. இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்தார்.  நமக்கு பேரிழப்பு பா.செயப்பிரகாசம்.

- Divinson Reegan 

ஆழ்ந்த இரங்கல். எங்கோ எப்போதோ 'ஒரு ஜெருசலேம்' என்ற சிறுகதையை படித்த பிறகு, அந்த சிறுகதையின் ஆசிரியர் யார் என்று தேடிப் பார்த்து, அவர் பெயரை மனப்பாடம் செய்து கொண்டேன். என்றாவது ஒருநாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற அவா அப்போதே ஏற்பட்டு விட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சீராளன் ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கிய 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில், அவர் தலைமை தாங்குவதாய் தகவல் அறிந்தேன்.

ஜெயந்தனின் சிறுகதைகளை படித்து முறுக்கேறிப் போயிருந்த எனக்கு, அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியும், செயப்பிரகாசம் அவர்களை சந்திக்க வேண்டியும் நானும் ஜீவிதன் மற்றும் கார்னிகனுடன் பாரதி கனகராஜ் மூலமாக சென்னை வந்தோம்.

அந்த நிகழ்வு ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்தது. முன்வரிசையில் அமர்ந்து ஐயாவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு ஓரிரு முறை சந்தித்து இருந்தாலும், திடீரென அவர் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.

- GV Chandra Sekaran


தோழர் . பா. ஜெயப்பிரகாசம் இன்று இயற்கை எய்தினார்.
-----------------------------
தமிழ் ஈழ விடுதலையின் உணர்வாளர்.

சகல அடக்குமுறைகளுக்கும், அநீதங்களுக்குமெதிராக தமது எழுத்துக்களால் ஓங்கிக் குரல்கொடுத்தவர்.

எழுத்தாளர், திறனாய்வாளர், கலை ஆர்வலர், ஈழத்துக் கூத்துக்கலையில் மிகுந்த ஆர்வமும், தாகமும் கொண்டவர்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் கலை, இலக்கியப் பணிகளில் தம்மாலான பங்களிப்புக்களை ஆத்மார்த்தமான ஈடுபாட்டோடு வழங்கி வந்த பண்பாளர் தமிழீழ நேசர்.

"உடல்" அரங்கியல் இதழோடு மிகுந்த நெருக்கமாக இணைந்து ஆலோசனைகளையும், ஆதரவையும் தந்து ஊக்கம் தந்தவர்.
தமிழகம் சென்ற போதெல்லாம் என் மீது மிகுந்த அன்பைச் செலுத்தி பாசத்தால் கட்டிப்போட்டவர்.

இன்று அவர் இம்மண்ணுலகை விட்டுப்பிரிந்தாலும் இவர் எழுதிக் குரல் எழுப்பிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுகள், தோழமையான உறவின் இனிய பண்புகளனூடாக இவர் எப்போதும் எம்மனங்களோடு வாழ்ந்துகொண்டேயிருப்பார். சென்னை வரும்போது வீட்டிற்கு அவசியம் வாருங்கள் என அழைத்து ஒருவாரம் கூட ஆகவில்லையே ! அதற்குள்ளாகவா..?

மிகுந்த துயரோடு
கரம்கூப்பி வணங்கி விடை தந்தோம்.
போய்வாருங்கள் தோழர்.

இனியாவது ஓயாது எழுதிக்கொண்டிருந்த உங்கள் கரங்களுக்கு ஓய்வுதந்து, இறை இல்லத்தில்  இளைப்பாறுங்கள்....

- Ariyanayagam Manuelpillai

என்னுடைய பொம்மாச்சியை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் பார்த்துவிட்டு தானாகவே என்னிடம் அறிமுக படுத்திக்கொண்டு அவருடைய தொடர்பு எண்னையும் தந்து தொடர்பு கொள்ளுமாறு சொல்லி தந்தார். பின் ஒரு நாள் அவரை அலைபேசியில் அழைத்த போது என்னுடைய பொம்மாச்சி நாடகத்தை சிலாகித்து பேசினார். அவர்தான் இந்த நாடகத்தை பற்றிய செய்திகளை எழுதுங்கள் டிஸ்கவரி வேடியப்பன் அவர்களிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள் என்றும் பேசினார். கொஞ்ச நேரமே பேசினாலும் அந்த நிமிடங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

- Velayudham Subramanian

பா. செயப்பிரகாசத்தின் படைப்புலகம் என்ற பெயரில் சு. வேணுகோபால் கட்டுரை எழுதித் தர, நான் அதற்க்கு ஒரு ஓவியமும் தீட்டி தாய்வீடு இதழுக்கு அனுப்பி வைத்த அடுத்தநாள் வருகிறது பா. செ யின் மரணச் செய்தி!



- Jeeva Nathan

பா.ஜெயப்பிரகாசம் என்கிற சூரியதீபன் மறைந்தார்; அவரது சிறுகதை தொகுப்புகளான: ஒரு ஜெருசலேம்; இரவுகள் உடையும் தொகுப்பு போன்றவைகளை பொதியவெற்பன் அறிமுகப்படுத்தினார். சென்னை வந்த பிறகு எப்போதும் சந்திக்கக் கூடிய தோழர்களில் அவரும் ஒருவர். நாங்கள் வேறு அணியில் இருந்தாலும் 'மனஓசை' இதழுக்கு கட்டுரைகள் சேகரித்து தந்திருக்கிறேன். அவர் தலைமை செயலகத்தில் இருந்த நாட்களில், நானும் பிரபஞ்சனும் மாலை வேளைகளில் சந்திப்போம். தோழர் இன்குலாப்பை ஆவணப்படுத்திய போது, 'இந்தி திணிப்பை எதிர்த்த போரில் ஈடுபட்ட நிகழ்வை உணர்ச்சியுடன் விவரிப்பார். 30 ஆண்டு காலம் பழகிய ஒரு இலக்கியவாதியை எப்படி மறப்பது?

- Thiru Arasu

என் கல்லூரி நாட்களில் இருந்து அறிவேன்.
'மன ஓசை ' இவரின் பங்களிப்பு....

செய்தித் துறையின் உயர் அதிகாரியாக இவரைச் சந்தித்து இருக்கிறேன்.
இவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து நற்றிணை பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன்.

***
மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு. 

அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும், பேசும் மொழியும் அது வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடு கிறது! இதெல்லாம் பா. செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம். 

அறியாத வாழ்வை ஆவணங்களில் ஆராய்ந்து ஆயிரம் பக்கங்களில் படைப்பாக்குவது வேறு, அறிந்த வாழ்வை, அனுபவத்தின் வழியாக ஆராய்ந்தறிந்து உணர்த்துவது என்பது வேறு, ‘காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடியது. இப்படியான ஒருபார்வை வாழ்வையும், வாழும் சூழலையும் இணைத்து அதனை அர்த்தப்படுத்திவிடுகிறது.

ஒரு நூற்றாண்டின் மனிதர்களும், அவர்களின் வாழ்வும் நிலப்பரப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதுவும் பா. செயப்பிரகாசம் அவர்களின் மொழியின் வழியாக தெக்கத்தி ஆத்மாக்களின் உயிர் மொழியை உணரமுடிகிறது.

- பாரதிபாலன்

இரங்கற்பாக்களை 
யார் எழுதி முடிப்பார்
வெகு அவசரம் 
விரைவில் எழுதி 
முடிக்கச்சொல்ல வேண்டும் 
போதும்
வரிகள் இல்லை 
தமிழ் தீர்ந்துவிட்டது
இனி 
பறவைகள் சிறகிழக்கட்டும்
சரீரம் சாகா வரம் பெறட்டும்
நாம் துயில் மட்டும் கொள்வோம்
அவர் கனா கானட்டும்!

- ஜீவா பொன்னுச்சாமி


நேற்று மறைந்த, சமரசமற்ற தமிழினப் போராளி..
எழுத்தாளர்  பா. செயப்பிரகாசம் @ சூரியதீபன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்..
அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
24.10.2022

- SA Mahesh

மனது ஏற்க மறுக்கிறது. ஆனால் மரணத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.
- Rengaiah Murugan

எவ்வளவு இனியவர் எளிமையானவர் ஆற்றலானவர்
மொழிப்போர் வீரர்
எழுத்தாளர்
கவிஞர்
தமிழ்த்தேசியர்
ஈழம் சென்று தேசிய தலைவரை சந்தித்து உரையாடியவர்
ஓசூரில் 
இவரை வைத்து நடத்திய இலக்கிய மாலை பசுமையாக இருக்கிறது.
எதிலும் நேர்த்தி வேண்டும் என மெனக்கிடுபவர்.
தோழர்வையம்பட்டி முத்துச்சாமி அவர்களின் தமிழ்ப்பணியை பாராட்டி ஓசூரில் நடத்திய இலக்கிய விழாவில் தலைப்புக்காக மட்டுமே ஆறு முறை என்னுடன் அது குறித்து உரையாடினார்.
நிகழ்ச்சிக்காக விடுதியில் அறை போட வேண்டாம். வீட்டிலேயே தங்கி கொள்கிறேன் என்று சொல்லி குடும்ப உறவை போல் இருந்தார்.
ஒரு நாள் முழுவதும் அவருடன், அவர் அனுபவங்களுடன்,
மெல்லிய அதிர்வை கொண்ட அவர் குரலுடன்
செலவிட்ட அந்நாள் மறக்க முடியாத நாட்களில் ஒன்று.
ஒரு பொற்கால தலைமுறையின் அடர்த்தியை
காலம், கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வருகிறது.
கரைந்தாலும் 
எழுத்தும் செயலும் பாடும்
கல்வெட்டாய் நிலை பெற்று 
திசை தடுமாறும் காலத்தில்,
திசை காட்டியாய் இருக்கும்.
புகழ் வணக்கம் ஐயா
- செம்பரிதி

பெண் வெறுப்பு உணர்வற்ற வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர், 
பா.செயப்பிரகாசம். எம் போராட்டங்களுக்கு நீதி சேர்க்க தானாய், முதல் நபராய் எம்முடன்  வந்து சேர்ந்து கொண்டு தன் வாழ்விற்கும் எழுத்திற்கும் அருமையும் துணிவும் சேர்த்துக் கொண்டவர். 
பூமியில் உமக்கு உம் பயணம் அழகாய் இருந்தது என்று நம்புகிறேன்.
வீர வணக்கம்!
- Kutti Revathi

பா.செ.வோடு பழகுவேன்னு எதிர் பார்க்க்கல
இவர் தான் சூரியதீபன் என்பதே முதல் அறிமுகம்.. மதுரை அருளானந்தர் கல்லூரில இன்குலாப் பற்றிய கருத்தரங்கத்துக்கு பா.செ வந்திருந்தார். நான் முத்து மோகன் தலைமையில் ஒரு கட்டுரை படித்தேன். கட்டுரை பத்தி என்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு.
கருத்தரங்கத்திற்கு வந்திருந்த பா.செ.
மதுரை, பெரியார் பேருந்து நிலையத்துக்கு பக்கத்துல உணவு விடுதியில தங்கி இருந்தாரு. அங்கு சென்று இரவு 10. மணி வர உரையாடினேன்.
சுளுந்தீ புதினம் அப்ப வெளிவரல
தோழர் முத்துநாகு, முத்தையா அய்யா, பா.செ எல்லாரும் பா.செ.கிட்ட உரையாடிக்கிட்டு இருந்தாங்க..
புதுவை மொழிகள் பண்பாட்டு நிறுவன பேராசிரியர் பிலவேந்திரன் உங்களை பற்றி அடிக்கடி சொல்லுவாரு மணிக்கோ என்று மகிழ்வார்..
மனஓசையில வந்த தொடர் ஒன்றை நினைவூட்டி கேட்டேன். படி எடுத்து ஆய்வுக்கு உதவியா அனுப்பினார்.
இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் பாரதிதாசனுடைய நாடகத்தை புதுச்சேரியில் நடத்தினார்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால். அப்ப ஜெயப்பிரகாசத்தை அங்கு சந்தித்தேன் அவரோடு அமர்ந்து நாடகம் பார்த்தேன். அங்கே இருக்கறவங்க கிட்ட என்ன அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார்..
அவர்க்கு மட்டுமே உரிய ஒரு வித #பேச்சுநடை
மேடை, கைபேசி, நண்பர்களுடனான உரையாடல் எல்லாவற்றிலும்..
பா.செ.யோடு பழகும் குறுநாட்கள் பெருமைமிகு...
தோழருக்கு என் செவ்வணக்கம்.
- பாரதிதாசன் இயல்

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஐயா சூரிய தீபன் அவர்களுக்கு சென்னையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராளி, தமிழில் முனைவர் பட்டம் பெற்ற திறனாளி, அரசு அதிகாரி, கலை இலக்கியவாதி , பல்வேறு புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர், மனித உரிமை போராளி, அனைத்துக்கும் மேலாக தோழர், என் தந்தை புலவரை பெரிதும் மதித்தவர். என்னோடு முகநூல் தொடர்பில் கடைசி வரை நட்போடு இருந்தவர்.
மனித உரிமை வழக்கறிஞர் பக்தவச்சலம் , அஜித்தா அவர்களது உறவினர். 
இவரது நிவேந்தல் நிகழ்வில் பல்வேறு இடதுசாரி தோழர்கள்,தமிழ் தேசிய ஆளுமைகள், இலக்கியவாதிகள், மனித உரிமையாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
தோழர் பாலன், தோழர் கணேசன், தோழர் தமிழரசன், தோழர் தியாகு போன்ற 70களில் மாணவர்களாய் இருந்து சமூகப் புரட்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரிசையில் ஒருவராய் இருந்தவர் தமிழ் மகிழன். அவரையுமும் அங்கு சந்திக்க முடிந்தது.
தீண்ட நெடிய உருவம் கம்பீரமான தோற்றம் இடதுசாரி தமிழ் தேசிய எழுத்தாளர் போராட்டவாதி ஐயா ராஜேந்திர சோழன் அவர்களையும் சந்திக்க முடிந்தது.
அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. துணையில்லாமல் அவரால் வெளியில் வர முடியாது. ஆனாலும சக எழுத்தாளர் தோழரது நினைவேந்தலுக்கு புகழஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
என் மீது பேரன்பு கொண்டவர் தமிழ் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்ட பொழுது எனக்கு பல்வேறு வழிகளிலும் உற்ற துணையாக ஆலோசகராக விளங்கியவர்
சமத்துவத்தின் மீது சக மனிதன் மீது நேசம் கொண்டவர்கள் இறக்கும் வரை செயலாற்றுவார்கள். தோழர் ஜெயபிரகாசம் அவர்களுக்கு எனது புகழஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
- Chola Nambiyar Kaliyaparumal

எனது 30 ஆண்டுகால நண்பர்; தமிழ், தமிழர் என கொள்கை பிடிப்போடு செயல்பட்ட மாமனிதர்! அவரது பணி தமிழர்களால் என்றென்றும் நினைவு கூறப்படும்!
- Elumalaiponnusami

எனக்கு மிக நெருக்கமான தோழர். அவரோடு முப்பது வருட காலம் நெருங்கிய தோழமை உறவு. புகழ் அஞ்சலி.
- Murugesan

.     ======================
.          பா.செயப்பிரகாசம்
.     ======================
"ரெட்டி வீட்டுப் பெண்கள், ஒரு கணம் பள்ள வீட்டுச் சாமியை கையெடுத்துக் கும்பிட்டார்கள். கும்பிட்டபின் ஒரு பள்ள வீட்டுச் சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கைகளைக் கீழே போட்டார்கள்"
மரணம் கதைகள் வாசிப்பதில்லை. வாசித்திருந்தால் கைகளைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பிப் போயிருக்கும்.
எழுத்தறியாத மரணத்திடம் சினங்கொள்ள முடியாது.
ஆழ்ந்த இரங்கல்.
===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
23-10-2022


முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் 23.10.202 அன்று இயற்கை எய்தினார். அவரது இறப்பிற்கு விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

பா.செயப்பிரகாசம் கரிசல் எழுத்தாளர் இந்தி எதிர்ப்பு போராளி,திராவிட ஆய்வாளர், தமிழீழ ஆதரவாளர்,பெண்ணிய செயற்பாட்டாளர்,பகுத்தறிவாளர், என பன்முக தன்மை கொண்ட படைப்பாளி. இவர் நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகள் இரண்டு நாவல்கள் மணல், பள்ளிக்கூடம் எழுதியுள்ளார். இவரின் கதையின் கதைமாந்தர்கள் விளிம்புநிலை, கடைநிலை மக்களாவர். வானம் பார்த்த மானாவரி பகுதியான விளாத்திகுளம் அருகிலுள்ள இராமசந்திரபுரம் கிராமத்தில் பிறந்த இவர் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை இயக்குராக பணியாற்றியபோதும் சூரியதீபன் எனும் புனைப்பெயரில் அநீதிக்கு எதிராக கதை கவிதை கட்டுரைகளில் குரல் எழுப்பியவர்.மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்திய மனஓசை எனும் புரட்சிகர இதழின் ஆசிரியராக 10 ஆண்டுகளாக இருந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக விளாத்திகுளம், வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர்.கலைஇரவு,வேம்பு வாசகர் வட்டம் வேம்பு மாணாக்கர் இயக்கம் போன்ற செயல்பாடுகள் நடந்தேறிட ஒரு கிரியாயுக்கியாக இருந்தவர். வேம்பு நிறுவனம் 24.09.2022 அன்று நடத்திய குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற கதைசொல்லி நிகழ்வில் கலந்துகொண்டு கதைசொல்லி வேலூர் திரு.நீதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கடைசியாக அவர் கலந்துகொண்ட நிகழ்வு கதைசொல்லி நிகழ்வாகதான் இருக்கும்.அவரது இழப்பு பேரிழப்பாகும்.வேம்பு மக்கள் சக்தி இயக்கம் செம்மாந்த வீரவணக்கம் செலுத்துகிறது.




- Vembu Don Bosco (வேம்பு மக்கள் சக்தி இயக்கம்)


1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் தலைவராக இருந்தவரும்,கரிசல் வாழ்வியல் சார்ந்த இலக்கியப் படைப்பாளியும்,மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவரும்,இடதுசாரி இயக்கங்களுக்கு பெரும் உத்வேகமாக இருந்தவரும்,நாட்டுப்புறக்கலைகள் மற்றும் நாடக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான பா.செயப்பிரகாசத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.அவரது மறைவுக்கு அஞ்சலிகள்.
- Veli Rangarajan

போய் வாருங்கள் தோழர்
- Bavachelladurai Bava

கரிசல் காட்டில் மற்றொரு தவிர்க்க முடியாத பெயர் 'சூரியதீபன்' #செவ்வணக்கம் தோழர்.
- Rajesh Devdoss

தோழரின் புகழுக்கு என்றும் அழிவில்லை. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- புரட்சிக் குயில்

உங்களின் படைப்பு இங்கு உள்ள வாசகனின் வாசிப்பில் உங்களின் உயிர் அவனின் ஆன்மாவுடன் கலக்கட்டும் உங்களின் பூதவுடலுக்கு என் கண்ணீர் காணிக்கை.
- Kesavan S

*** தமிழின் முற்போக்கு இலக்கிய மூத்த ஆளுமை.. சூரியதீபன்(எ) பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவு உள்ளத்தை உலுக்கும் துயர நிகழ்வு.!***
*** எமது உள்ளார்ந்த இரங்கலும்.. இறுதி வணக்கமும்.! ***
- Sengathir Venmani

சிந்தனைகளை பிறர் மனதில் விதைத்து செல்பவருக்கு ஏது மரணம்..
அந்த சிந்தனைகள். மனிதனின் மனங்களில் கூடுவிட்டு கூடுபாய்ந்து..
உயிர் பெறும்.
- ராஜசோழன்

தெற்கத்தி மண்ணின் மைந்தர்... ☘️
சமூக பொருப்பாளர்... 🌿
மூத்த எழுத்தாளர்... 🌳
எங்கள் ஆசான்... 🫀
தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 
உடல் நலக் குறைவால் இன்று மாலை 5-மணி அளவில் தன்னுடைய சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்...... 🌳
அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. மிகச் செட்டான சொற்களில் கதைச் சூழலைக் கவித்துவமாகக் கொண்டு வந்து நிறுத்துவார்.
90 களின் துவக்க ஆண்டுகளில் இன்னொரு ஜெருசலேம், இரவுகள் உடையும் என்ற அவரது இரு தொகுப்புகளையும் பாரதி கிருஷ்ணகுமாரின் பாண்டியன் கிராம வங்கி சாத்தூர் அலுலகத்தில் திணறத் திணறத் திகட்டத் திகட்ட வாசித்தேன். 
அது வாசிப்பு அனுபவமல்ல. காலங்களையும் தூரங்களையும் வாழ்ந்து கடந்தது போல இருந்தது. மெஜுரா கோட்ஸ் தொழிலாளர்களின் போராட்டக் களத்தை காவியக் களமாக மாற்றும் வல்லமை அவரது பேனாவிற்கு உண்டு. 
விளாத்திகுளத்தின் எளிய மக்களை காவிய நாயகர்களாக மாற்றும் மந்திர சக்தி படைத்தவர்.
தேரிக்காட்டு தங்கம்மாள்புரம் எஸ்.எஸ். போத்தையா என்ற பள்ளி ஆசிரியரை அவரது கிராமத்து பண்பாட்டு வாழ்வியல் சேமிப்புகளை உரிய வகையில் கொண்டு சேர்த்ததன் வாயிலாக முக்கியமான ஆளுமையாக நிறுவினார். 
தெற்கத்தி நிலவியலையும், மக்களையும் அவர்தம் உயரிய மாண்புகளையும் இலக்கியமாக நிறுவதில் கி.ராவின் இணைப்பயணியாக இருந்தார். 
அரசின் உயர் பொறுப்பில் இருந்த போதும் அதிகார பீடத்திற்கு அஞ்சாமல்  சாதுர்யமாக நெருக்கடி மிகுந்த காலங்களிலும் மன ஓசை மார்க்சிய லெனிய இலக்கிய இதழுக்கு ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு முக்கியமான ஆதரவு சக்தியாக விளங்கினார். 
குடும்ப உறுப்பினர்கள் கடல் கடந்து வசித்த நிலையில் பாண்டியில் அண்ணன் வீட்டில் சில காலமும், சென்னையில் சிலகாலமும், இறுதியாக சுமார் மூன்றாண்டுகளாக விளாத்திகுளத்திலும் வசித்து வந்தார். 
தொடர்ந்து உடல் உபாதைகளுடனே இருந்த போதிலும் அமைப்பு வேற்றுமை பாராது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அதிகாரத்திற்கு எதிரான இயக்கங்கள் அனைத்திலும் தவறாது பங்கெடுத்துக் கொண்டார்.
காளிமுத்து, இளவேனில், கவிஞர் அபி, இன்குலாப் போன்றோரின் கல்லூரித் தோழர். (இன்குலாப் குடும்பத்தினரோடு உற்ற தோழமை கொண்டிருந்தார்) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துவங்கிய அவரது சமூக இயக்கப்பணி எழுத்துப் பணியாகவும், களச் செயல்பாடாகவும் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது. 
மிருதங்க அதிர்வைப் போலத் துல்லியமாக ஒலிக்கும் பா.செயப்பிரகாஷம் அவர்களது குரலை இனி நாம் கேட்க இயலாது. 
பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளீர்கள் தோழர். கனத்த மனதோடு விடை தருகிறோம்.
- இயற்கை கோமாளி

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரிய தீபன்) (80) மறைவு.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர்.
"மன ஓசை" இதழில் அவருடைய எழுத்துகள் விரும்பிப் படிக்கத் தக்கது.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர்.
வேலூர் புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
குப்பன் சா

அண்ணன் அறிவுமதி நடத்திய மண் இதழில் எழுத்தாளர்களிடம் அவரவர் அம்மாக்கள் குறித்து கட்டுரை வாங்கி வெளியிட்டார்‌..
அதில் தோழர். பா.செயப்பிரகாசம் எழுதியிருந்த கட்டுரை மிகவும் உருக்கமானது.. 
தன் அம்மா இறந்து கிடப்பது தெரியாமல் சோறுண்ணும் குழந்தையாய் அவர் நினைவுகளைப் பகிர்ந்திருப்பார்
மக்களுக்கான இலக்கியவாதியாக மட்டுமில்லாமல், இயக்கவாதியாகவும் அவரது பணிகள் போற்றத்தக்கவை
தோழருக்கு செவ்வஞ்சலி.
- Kavitha Bharathy


எழுத்தாளர் தோழர். பா. செயப்பிரகாசம் காலமானார் என செய்தி வந்திருக்கிறது. 
அதிர்ச்சியாக இருக்கிறது. இக்கட்டானதொரு காலகட்டத்தில் உடன் நின்ற தோழரின் நினைவு வாட்டுகிறது. 
ஆழ்ந்த இரங்கல்!
- Kavin Malar

கீழிருந்து எழும் மண்ணின் குரல்களை இனம் கண்டு ஆதரவுப் படுத்திய மகத்தான எழுத்தாளர் (சூரியதீபன்) பா.செயப்பிரகாசம் ஐயா.
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குனராக இருந்தபோது அத்துறை இயக்குனர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுடன் இணைந்து 'தமிழரசு' இலக்கிய சிறப்பு மலரை கொண்டு வந்தது பெரும் போற்றுதலுக்குரியது.
எனது உயிர்த்தண்ணீர் நூல் வருவதற்கு தொகை கொடுத்து உதவியது மறக்க முடியாதது.
போலவே அவரின் மண்மிளிரும் 'பா.செயப்பிரகாசம் கதைகள்' தொகுப்பும் நான் கதைகள் எழுதுவதற்கு உத்வேகமாக இருந்தது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
பிற்கால நேர்பேச்சில் தாம் நாவல்கள் ஏதும் எழுதாமல் விட்டதை பெரும் குறையாக சொன்னார். 
அண்மைக்காலமாய் எனது இலக்கிய நிலைப்பாடுகளில் அவருக்கு உடன்பாடில்லையென்பதை அவர்தம் தோழர்களுடனான பேச்சினூடாக தெரிந்துகொண்டேன்.
இருந்தபோதும் என் எழுத்தை தொடங்கி வைத்தவர்களில் அவரும் ஒருவர்.
என்னைப்போல் பல இலக்கியர்களை அவர் உருவாக்கியிருக்கக் கூடும்.
அவர் பேர்சொல்லக்கூடும்.
கரிசல் எழுத்தாளருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
குறிப்பு: அன்னாரது பூதவுடல் அவரது விருப்பப்படி இன்று (25.10.22) தூத்துக்குடி மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது.
- Kanmani Gunasekaran





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி