எழுத்தாகவும் நினைவாகவும் மாறிவிட்ட பா.செயப்பிரகாசம் - தமுஎகச அஞ்சலி

கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் இடதுசாரி இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்தவருமான எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தன்னுடைய 81ஆவது வயதில் 23-10-2022 அன்று விளாத்திகுளத்தில் காலமானார். 1941இல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் என்கிற கிராமத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம், 1965இல் கல்லூரி மாணவராக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாதம் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தார். கல்லூரி விரிவுரையாளராகவும், பின்னர் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் அதிகாரியாகவும் 1999 வரை பணியாற்றினார்.  தமிழின் மகத்தான படைப்பாளியான ஜி.நாகராஜனிடம் மாணவராகப் பாடம் கேட்ட ஜே.பி., அவர் மூலமாக ’சரஸ்வதி’ இதழின் அறிமுகம் பெற்றார். இளவயதிலேயே மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, நக்சல்பாரி இயக்கப்பார்வையை உள்வாங்கியவர். அவ்வியக்கத்தின் இலக்கிய இதழான ’மனஓசை’யின் ஆசிரியராக பத்தாண்டுகாலம் இயங்கியவர். மக்கள் கலாச்சாரக் கழகம் என்கிற அமைப்பின் முன்னோடியாகச் செயல்பட்டவர்.காலத்தின் கைகளில் சிக்கிய மானுடவாழ்வும் மானிடரும் இந்தக்கொடும் சூழலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாகிவிடுவதைச் சித்தரிக்கும் பா.செயப்பிரகாசத்தின் கதைகளின் ஊடாக வெளிப்படுவது அவரது மார்க்சியக் கண்ணோட்டம்.பிற்காலத்தில் அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுதாளர் கலைஞர்கள் சங்கத்துடனும் செம்மலருடனும் இணக்கமான உறவைப் பேணினார். செம்மலரில் தொடர்ந்து கதைகள் எழுதினார். கரிசல்காட்டு நதியான வைப்பாற்றில் மணற்கொள்ளை நடப்பதைப் பற்றி “மணல்” என்கிற நாவலை அவர் கடைசியாக எழுதினார். இறக்கும் காலம் வரை எழுதிக்கொண்டேதான் இருந்தார். சென்னையிலும் பின்னர் புதுச்சேரியிலும் வாழ்ந்த பா.செயப்பிரகாசம் தன் கடைசி நாட்களில் கரிசல் மண்ணில் கழிக்க விரும்பி விளாத்திகுளத்தில் வாழ்ந்து வந்தார். அங்கேயே காலமும் ஆகிவிட்டார். ஒரு நவீன மனிதராக, சடங்குகளின்றி தன் உடலை மருத்துவமனைக்குத் தானமாக வழங்கிவிட்டார். எழுத்தாகவும் நினைவாகவும் மாறிவிட்ட அன்னாருக்கு தமுஎகச தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.

தோழமையுடன்

மதுக்கூர் இராமலிங்கம் மாநிலத்தலைவர்                        

ஆதவன் தீட்சண்யா பொதுச்செயலாளர்

24.10.2022

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்