தமிழ் முற்போக்குச் சிந்தனைக் களத்தின் படைப்பாளர் மறைவு மாபெரும் இழப்பு! - மீ.த.பாண்டியன்

நினைவஞ்சலி: மீ.த.பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

கரிசல் எழுத்தாளர் தோழர் சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் மறைந்தார்!

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப்போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி மொழி இந்தி எனும் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க.வின் அன்றைய தலைவர் அண்ணா சனவரி 26 குடியரசுதினத்தை போராட்ட நாளாக அறிவித்தார். சனவரி 25 அன்றே மதுரையில் மாணவர்களின் எழுச்சிமிக்க பேரணி திலகர் திடல் நோக்கி காவல்துறைத் தடைகளைத் தாண்டி நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள தியாகராசர் கலைக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த மறைந்த சாகுல் அமீது பின்னர் மக்கள் கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் பின்னர் சூரியதீபன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, நா.காமராசன், சேடபட்டி முத்தையா உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் போராட்டப் பேரணி நடைபெற்றது. சனவரி 26 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் போராடிய சிவகங்கை இராசேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். இந்தப் போராட்டத்தில் மாணவர் தலைவர் பா.செயப்பிரகாசம் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தார்.  இப்போராட்டத்தின் விளைவாக திமுக ஆட்சி அமைத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு, அனைத்திந்திய அரசியலுக்கு தமிழ்நாட்டில் முடிவுரை எழுதியது. தங்களது படிப்புக்குப் பின் காளிமுத்து, சேடபட்டி முத்தையா உள்ளிட்டோர் திமுகவின் முக்கியப் புள்ளிகளாக, பின்னர் அதிமுகவில் அமைச்சர்களாக மாறிப்போயினர். தோழர் இன்குலாப் சென்னையில் கல்லூரிப் பேராசிரியராக, சிபிஐ (எம்) எழுத்தாளர் சங்கச் செயல்பாடு பின்னர் மா-லெ இயக்கச் செயல்பாட்டில் இயங்கி ‘புதிய மனிதன்’ எனும் பண்பாட்டிதழின் ஆசிரியராகச் செயல்பட்டுப் பின்னர் விலகி இடதுசாரித் தமிழ்த்தேசியராக படைப்பாளியாக இயங்கி மறைந்தார். தோழர் பா.செயப்பிரகாசம் தமிழ்நாடு அரசின் செய்தி & தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினாலும், மா-லெ இயக்கச் சார்பு ‘மனஓசை’ இதழ் ஆசிரியர் குழுவில் முதன்மையாக இயங்கினார்.

1970-களின் இறுதியில் காடு, இரவுகள் உடையும் எனும் சிறுகதைத் தொகுப்புகளை படைத்தளித்தார். பா.செ.வின் சிறுகதைகள் ஒரு ஜெருசீலம், காடு, இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, ரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா, கள்ளழகர் என தொகுப்புகளாக உள்ளன. பள்ளிக்கூடம், மணல் உள்ளிட்ட நாவல்களைப் படைத்துள்ளார். தெக்கத்தி ஆத்மாக்கள், கிராமங்களின் குரல், வனத்தின் குரல், உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் மக்கள் கவிஞர் இன்குலாப், கரிசல் எழுத்தாளர் பா.செ., தொல்.திருமாவளவன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் ஈழம் சென்று வந்தனர். ஈழம் சென்ற பயண அனுபவத்தை “ஈழக் கதவுகள்” எனும் தலைப்பிலும், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்வைத்து “முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்” எனும் நூலையும், “ஈழம் வன்மமும், அவதூறுகளும்” எனும் நூலையும் எழுதினார். 2009 தொடக்கம் முதல், இறுதி யுத்த காலங்களில் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவுப் படைப்பாளிகள், கலைக்குழுக்கள், செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். 2009 சனவரி 25 மதுரையில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் நடத்திய “மக்கள் கலை விழா” வில் கலந்து கொண்டு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் போர் குறித்த செய்திகளை தொகுத்தளித்தார். தனது இறுதிக் காலம்வரை வாசிப்பும், படைப்பும் என வாழ்ந்து மறைந்தார். கரிசல் எழுத்தின் முன்னோடியான கி.ரா,வுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். கி.ரா என்னும் மானுடம், கி.ராவும் புனை கதைகளும், கி.ரா 95 முடிவிலாப் பயணம் உள்ளிட்ட நூல்களைத் தந்துள்ளார். சோசலிசக் கவிதைகள், எதிர்க்காற்று, நதியோடு பேசுவேன் என பா.செ எழுத்து சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளார்.

கி.ரா.வுக்குப் பிறகு கரிசல் எழுத்தாளர் என அழைக்கப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் மின்னுகிறார். மண்ணின் பாடகர் முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைந்ததையொட்டி பல்வேறு படைப்பாளிகளின் நினைவலைகளைத் தொகுத்து பதிவைக் கொண்டு வந்தார். 2016 தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் நடத்திய மொழிப்போர் ஈகியர் நினைவு ‘மக்கள் கலை விழா’ முனைவர் கே.ஏ.குணசேகரன் நினைவு மேடையில் பங்கெடுத்து சிறப்பான கருத்துகளை முன்வைத்தார்.

மா-லெ இயக்கத்தின் மற்றொரு பிரிவில் படைப்பாளியாக இயங்கிய மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுடன் நெருக்கமான உறவைத் தக்க வைத்திருந்தார். தான் இயங்கிய மா-லெ அமைப்பிலிருந்து விலகிய பின் கவிஞர் இன்குலாப் போலவே இடதுசாரித் தமிழ்த்தேசியராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். மக்கள் கவிஞர் இன்குலாப் உயிருடன் இயங்கியபோது எப்படித் தோழமை காத்தாரோ அதே போல் மரணம் நிகழ்ந்த போதும், அதைத் தொடர்ந்தும் இன்குலாப் குடும்பத்திற்குத் துணை நின்றார். இன்குலாப் அறக்கட்டளை எனக் குடும்பத்தினர், மற்றும் நெருக்கமானவர்களை இணைத்துக் கொண்டு சென்னையில் இன்குலாப் நினைவு நாளில் நிகழ்வுகளை முன்னெடுத்தார். இன்குலாப் படைப்புகளைப் பிரித்துத் தொகுத்துக் கொண்டு வருவதில் முன் நின்றார். மதுரையில் த.ம.ப.க சார்பில் ஏற்பாடு செய்த மக்கள் கவிஞர் இன்குலாப் நினைவு நாள் நிகழ்வுகளில் தொடர்ந்து பா.செ. கலந்து கொண்டார். கடந்த நினைவு நாளையொட்டி சென்னையில் த.ம.ப.க., இன்குலாப் அறக்கட்டளை, இளந்தமிழகம் இணைந்து நடத்திய நிகழ்வில் காலில் முறிவு காரணமாகக் கலந்து கொள்ள இயலவில்லை. தோழர் பா.செ. விளாத்திகுளம் சென்ற பிறகு தொலைபேசித் தொடர்பு மட்டுமே பலருடன் தக்க வைத்துள்ளார்.

தோழர் பா.செ உடல் தூத்துக்குடி மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் விளாத்திகுளம் இரங்கல் கூட்டத்தில் பலதரப்பட்ட ஆற்றல்கள் கலந்து கொண்டனர். தமுஎகச தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், செயலாளர் தோழர் காமராஜ், எழுத்தாளர் தோழர் இராகுலதாசன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், சிபிஐ (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத் தோழர் அ.சிம்சன், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் கோச்சடை, கதவு ஆசிரியர் தோழர் மதி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் தோழர் பா.செ உடலும், இலக்கியத் தளத்தில் அவருடைய படைப்புகளும், நினைவுகளும் உயிர்ப்போடு இருக்கும்…..

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

போராட்டக் களங்களின் சகபயணி

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்