பா.செயப்பிரகாசம் தலைமை தாங்கிய மதுரை கருத்தரங்கம் குறித்த மடல்


23 செப்டம்பர் 2019

வணக்கம் ஐயா,

கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற கூடலரங்க நிகழ்வில் தங்களை சந்தித்ததும், தங்களின் உரையை கேட்டதும் மிகவும் நிறைவாக இருந்தது. தங்களை இந்நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைத்து, நிகழ்வை திட்டமிட்ட தம்பி இளமுகிலுக்கு அன்பும் நன்றியும். 

ஒரு வாசகனாக, கி.ரா, பூமணி, ச.தமிழ்ச்செல்வன், பொன்னீலன் வரிசையில் அவர்களோடிணைந்து இந்த தமிழ் சமூகத்துக்கு, எளிய மக்களின் வாழ்க்கையையும் அதன் வழியாக யாவருக்குமானது இவ்வுலகம் எனும் கருத்தியலையும் தொடர்ந்து தவத்தைப் போல தங்களின் படைப்புகளின் வழியாக படைத்துவரும் தங்களை அந்நிகழ்வில் கண்டது மகிழ்ச்சியை தந்தது. 

தங்களின் தலைமையுரை, நீர் குறித்த அக்கறையும், சமகால சமூகத்தின் பார்வையுமென மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதிலும், ஏதோ பெயருக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமல், மிகத் தீவிரமாக, விரிவான தயாரிப்புகளுடனும், நிறைய தரவுகள், பத்திரிகை மேற்கோள்களுடனும் அற்புதமாக தங்களின் உரையை தயாரிக்க தாங்கள் மேற்கொண்ட மெனக்கெடல் எனக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் படிப்பினை எனலாம். நீரையும் பெண்கள் மேம்பாட்டையும் இணைத்து பேசுவது சற்று கடினம் தான். தாங்கள் மிக நேர்த்தியாக பல்வேறு நிகழ்வுகள், தங்களின் படைப்புகள், தரவுகள் என ஓர் பூமாலை போல தொடுத்து பகிர்ந்ததை கண்டு மகிழ்ந்தேன். புதிய செய்திகளையும் நான் அறிந்துகொள்ள முடிந்தது.

நான் 40களின் ஆரம்பத்தில் உள்ளேன். எனக்கு முந்தைய தங்கள் தலைமுறையையும் எனக்குப் பின்னே இருக்கும் இன்றைய இளைஞர்களையும் ஒரு சேர பார்க்கும் போது, தங்களைப் போன்றவர்களின் ஈடுபாடு, சமூக அக்கறை போன்றவை இன்றைய இளைஞர்களிடையே காணமுடிவதில்லை. இது க்ளிஷேவான விமர்சனம் தான் என்றாலும், இன்றைய இளைஞர்கள் அனைத்திலும் உடனடி தீர்வை, முடிவை எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் தங்களின் உரையையும் தாண்டி, அதற்காக தாங்கள் மேற்கொண்ட பிரயத்தனங்களை அன்று அந்த உரையின் போது பார்வையாளர்களால் உணரமுடிந்தது. அது ஒரு சிறு கீறாகவாவது இளைஞர்களின் மனதில் தைத்திருக்கும் என நம்புகிறேன்.

அன்றைக்கு கருத்துகளை பகிர்ந்த நிறைய இளைஞர்கள் நீரின் முக்கியத்துவத்தை, இன்றைய சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை கட்டுரைகளாக, வரைபடங்களாக, ஓவியங்களாக என அவரவர் அளவில் அவர்களின் சிறந்தததை கொடுத்திருந்தனர். நிறைய கருத்துகளில் இன்டெர்நெட்டின் தாக்கம் இருந்தது. சுயமான கருத்தோ, அனுபவம் சார்ந்தோ அவர்களின் பகிர்தல் அமையவில்லை என நான் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்காக அவர்களின் மீது குறையொன்றுமில்லை. இப்படி இளைய சமூகத்தை தகவல்கள் சார்ந்து செயல்பட கற்றுக் கொடுத்திருக்கிறோமே தவிர, சுய-புரிதலை உருவாக்கும் வகையில் நமது கற்றல் அமையவில்லை எனவும் அவர்களின் மூத்தத் தலைமுறை மீதும் கல்வி முறை மீதும் வருத்தம் கொள்கிறேன். தாங்கள் கூட ஒரு சகோதரியின் பகிர்வை சார்ந்து பேசும் போது, குறைகூறுவதை விட, நம்பிக்கையின்மையை பரப்புவதை விட, நேர்மறையாக நம்பிக்கையுடன் கருத்தை முன்வையுங்கள் என்ற ஆலோசனை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.

இன்னொறு வகையில் யோசித்தபோது, இன்றைக்கு நமது தமிழ் சமூகம் சந்திக்கும் நீரியல் பிரச்சனைகளுக்கு நமது மூத்தோர்களும், நம்மை ஆண்ட அரசின் கொள்கை முடிவுகளும் தானே காரணம். நீர் வளத்தை நாமும் நமக்கு முந்தைய தலைமுறையும் கூடுமானவரை அழித்துவிட்டு, இனி நீங்க காப்பாற்றுங்கள் என இன்றைய புதிய, இளைய தலைமுறையை கேட்பது ஒரு வகையில் அறப்பிறழ்வு என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

இந்த நிகழ்வின் இறுதியில் சிறந்த கட்டுரைக்கும், சிறந்த ஓவியத்துக்கும் பரிசு கொடுப்பதாக தம்பி இளமுகில் திட்டமிட்டிருந்தார். ஆனால், நான் பல சமூக, கல்வி, பொருளாதார பின்னணியில் வந்திருக்கும் மாணவர்களை ஒரே தராசில் வைத்து அளவிட்டு ஒரு பரிசளிப்பது என்பது சரியாக இருக்காது என கூறியதும், தம்பி இளமுகில் அதனை ஏற்றுக்கொண்டு, சிறந்த பரிசினை ஒருவருக்கு அளிப்பதற்கு பதிலாக, பங்கேற்ற அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பதாக அந்த மேடையில் அறிவித்தார். ஆனால் பங்கேற்பாளர்களில் சிலர் அதனை ஏற்கவில்லை. நிச்சயம் சிறந்த படைப்புக்கான பரிசை அளித்தே தீரவேண்டும் என வலியுருத்தினர். அவர்களின் கருத்துக்கேற்ப இளமுகில், நடுநிலையுடன் பரிசுக்குறிய படைப்புகளை மேடையில் அறிவித்தார். வேடிக்கை என்னவென்றால், பரிசு தந்தாகவேண்டும் என வலியுருத்தியவர்களின் படைப்பு பரிசு பெறவில்லை. அவர்கள் மனவருத்தம் அடைந்தனர். சற்று கோபமும் பட்டனர். இளமுகில், மேடையில், சாதாரண பரிசையே பங்கு போட்டுக்கொள்ள மனமில்லாமல், இப்படி வேறு ஒருவருக்கு கிடைத்த பரிசை கண்டு வருத்தமடையும் நீங்கள் எப்படி நீரை பங்கு போட்டு சமூகத்தில் அமைதியுடன் வாழப்போகிறீர்கள் என சற்று கடுமையுடன் கேட்டார். நீர் வளத்தை மேம்படுத்துவது பெரிய பணியே இல்லை. ஆனால் அந்த நீர் வளத்தை பெருந்தன்மையுடன் பங்கு போட்டு அனைவரும் இணக்கமாக வாழும் மன வளத்தை உருவாக்குவது தான் இன்றைய தேவை என நான் புரிந்துகொண்டேன்.

ஒட்டுமொத்தமாக தங்களின் பங்கேற்பு, உரை மற்றும் நிகழ்வின் நடவடிக்கைகள் எனக்கு நல்ல அனுபவத்தை அளித்தன.

தங்களுக்கு வணக்கங்கள்.

அன்பும் மகிழ்வும்,

ஜானகிராமன்.நா

Chief Executive, Panchayat Development Foundation | 

Director, DHAN People Academy,

DHAN Foundation,

Madurai 625 016, Tamil Nadu, INDIA.


***********************************************************************************

24 செப்டம்பர் 2019

அன்பு நண்பர் சானகிராமன் அவர்களுக்கு,

தங்களைப் போல் ஒரு சக பயணி கிடைத்ததில் பெருமகிழ்வு கொள்கிறேன்: அதில் நியாயம் உண்டுதானே! அன்றைய உரையின்போது எதிரிலுள்ள முகங்கள் தரும் எதிர்வினையைப் பொறுத்து உரையின் வீரியம் வெளிப்படும். அன்று தங்கள் முகத்தினையே பெரும்பாலும் பார்த்தவாறு நான் நிகழ்த்தினேன் என்பதை தாங்கள் அவதானித்திருப்பீர்கள். எதிர்வினையை உடனுக்குடன் வெளிப்படுத்தும் ஒரு முகம் என் முன்னிருந்தது எனக் கண்டேன்.

இரவு உணவு சாப்பிட்டுக்  கொண்டிருந்த போது, விசாரித்த வேளை தான் தங்களைப் பற்றி முழுமையாக எழுமுகில் விளக்கினார். தம்பி எழுமுகில் என்று உரித்தோடு அழைக்கிறீர்கள்.

“எனக்கு முந்தைய தங்கள் தலைமுறையையும் எனக்குப் பின்னே இருக்கும் இன்றைய இளைஞர்களையும் ஒரு சேரப் பார்க்கும் போது, தங்களைப் போன்றவர்களின் ஈடுபாடு, சமூக அக்கறை போன்றவை இன்றைய இளைஞர்களிடையே காணமுடிவதில்லை" என்ற தங்கள் ஆதங்கம் புரிந்துகொள்ளக் கூடியது. வாழ்க்கையை மிக எளிதாய்க் கடக்கக் கூடியதாக இன்றைய இளைதலைமுறை கருதுகிறது. அதன் உந்திச் சுழியோடும் உதிரக்கொடியோடும் ரணம், நிணம் பிசைந்து கிடக்கும் ஒன்றாக அவர்களுக்கு உணர முடிவதில்லை. இந்த வார்த்தைகள், சொல்லாடல்கள் கூட அதிகப்படியான ஒன்றாக அவர்களுக்குப் படலாம். 

அன்றைய உரையில் ஆன்மீக வித்தைக்காரர், அறிவியல் வித்தைக்காரர் என்ற எனது பிரயோகங்களைக் கண்டிருப்பீர்கள். அறீவியல் வித்தைக்காரர் என நான் குறிப்பிட்டது அப்துல் கலாமை. ஓரளவு சமூகத் தொண்டுணர்வோடு முன்வருகிற இளைய தலைமுறைக்கும் அப்துல் கலாம் தான் முன்மாதிரி. எத்தகைய ஏமாற்றுப் பிம்பங்களின் பின்னோடுகிறோம் என்ற உண்மையை உணர்வதில்லை. காரணம் ஊடகங்கள் மூலம் இவர்கள் தங்கள் கருத்தோட்டத்தினை உருவாக்கிக் கொள்கிறார்கள். தாங்கள் சரியாகக் கணித்தீர்கள்

”நிறைய கருத்துகளில் இன்டெர்நெட்டின் தாக்கம் இருந்தது. சுயமான கருத்தோ, அனுபவம் சார்ந்தோ அவர்களின் பகிர்தல் அமையவில்லை என நான் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்காக அவர்களின் மீது குறையொன்றுமில்லை. இப்படி இளைய சமூகத்தை தகவல்கள் சார்ந்து செயல்பட கற்றுக் கொடுத்திருக்கிறோமே” என்ற சுயவிமர்சன் உணர்வு எத்தனை பேருக்கு வரும்? ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “முந்தைய தவறுகளிலிருந்து  கற்றுக்கொள்ளாதவன், மீண்டு அதே தவறுகளைச் செய்ய விதிக்கப்படுகிறான்” 

”இன்னொரு வகையில் யோசித்தபோது, இன்றைக்கு நமது தமிழ் சமூகம் சந்திக்கும் நீரியல் பிரச்சனைகளுக்கு நமது மூத்தோர்களும், நம்மை ஆண்ட அரசின் கொள்கை முடிவுகளும் தானே காரணம். நீர் வளத்தை நாமும் நமக்கு முந்தைய தலைமுறையும் கூடுமானவரை அழித்துவிட்டு, இனி நீங்க காப்பாற்றுங்கள் என இன்றைய புதிய, இளைய தலைமுறையை கேட்பது ஒரு வகையில் அறப்பிறழ்வு என்றும் நினைக்கத் தோன்றுகிறது" என்கிற தங்களின் சிந்திப்பு முற்றிலும் சரி.

இளமுகில், மேடையில், சாதாரண பரிசையே பங்கு போட்டுக்கொள்ள மனமில்லாமல், இப்படி வேறு ஒருவருக்கு கிடைத்த பரிசை கண்டு வருத்தமடையும் நீங்கள் எப்படி நீரை பங்கு போட்டு சமூகத்தில் அமைதியுடன் வாழப்போகிறீர்கள் என சற்று கடுமையுடன் கேட்டார் எனக் குறிப்பிடுகிறீர்கள். தனக்கென நிகழுகிறபோது, ஒவ்வொருவரும் எப்படி வேறொரு ஆளாய் மாறிப் போகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. 

இந்த வார ஆனந்த விகடனில் (25 -09- 2019) பராசக்தி என்னும் எனது கதை வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாத்திரம் பற்றி வருகிற குறிப்பு அனைவருக்கும் பொருந்தும் ”நேற்றைய நினைவலைகளில் ஒரு துளியும் அவளிடம் மிஞ்சியிருக்கக் கூடாதெனப் பெற்றோர் நினைத்தது நிறைவேறியிருந்தது. முந்தினநாள் காட்சிகளைக் கண்ணுற்ற போது, இருந்த நிலா வேறு. அப்போதைக்கு அவள் அவளாக இல்லை. வெளியில் நடப்பவைகளை இரண்டாவது நபர், மூன்றாவது நபராய் பார்ப்பதும், தன் சொந்த வாழ்வு என வருகிறபோது வேறொரு உயிரியாக வலம் வருவதும் என்பதற்கு அந்தப் பதின்மவயது சாட்சியாகிப்போன, அந்தச் சரணடைவு பெற்றவர்களுக்கு மெத்த சந்தோசத்தை வாரித்தந்திருந்தது.”

விகடனில் வந்துள்ள கதையை வாசித்துப் பாருங்கள். இந்த சமூகக் கலாச்சாரம் எத்தனை நாற்றம் தருகிறது என்பதௌ அச்சொட்டாகப் போயிருக்கும். வியாழன் புதிய விகடன் வந்து விடும். முடிந்தால் இன்று வாங்கிப் பாருங்கள்.

நமக்கிடையே உரையாடுதற்கான வெளி நிறைய இருக்கிறது எனக் கருதுகிறேன். தொடர்ந்து உரையாடுவோம். நாம் உரையாடும் ஒரு தளமாக சமூக அக்கறையுடன் வருகிற இதழ் ”காக்கைச் சிறகினிலே” அதன் செப்டம்பர் மாத இதழினை தம்பி எழுமுகிலிடம் கையளித்தேன். வாய்ப்பிருப்பின் வாசியுங்கள்.

நட்புடன்

பா.செயப்பிரகாசம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை