சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி

கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதிராக இந்தியா கை தூக்கியிருப்பது இது முதன்முறையல்ல. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைப் பலி வாங்கிய 1983 ஜூலை கலவரத்தின் மீது ஐ.நா மனித உரிமை மன்றத்தில் விவாதம் வந்தபோது உறுப்பினர் நாடுகள் பலரும் கண்டித்துப் பேசினார்கள். ஆனால் அப்போதைய இந்தியப் பிரதிநிதி சையத் மசூது ஐ.நா அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என அந்த இனப்படுகொலையை ஆதரித்துப் பேசினார். தேசிய இனப் பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்தியா நடந்துகொள்ளும் விதம் பற்றிய புரிதல் உள்ள எவருக்கும் இந்தியாவின் இந்தப் போக்கு வியப்பூட்டக்கூடியதல்ல.


ருசியா, சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது, அவற்றை சோசலிச நாடுகளாக நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகளுக்கு முன் இப்படியொரு நிலை உருவாகியிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதாவது இருந்திருக்கும். சோவியத் புரட்சிக்குப்பின், ருசியப் பெருந்தேசிய இனத்தின் ஆதிக்கம், சோவியத் ஒன்றியத்துக்குட்பட்ட பிற தேசிய இனங்கள்மீது கவிவதை லெனின் கண்டார். ஸ்டாலினிடம் வெளிப்பட்ட பெருந்தேசிய இன ஆதிக்கம் என்ற ஒருபக்கவாத நோயை லெனின் கடுமையான விமர்சனத்துக்குட்படுத்தினார். விமர்சனப் பார்வை என்பது வரலாற்றைக் கட்டமைப்பதற்கான அடிப்படைகளில் ஒன்று. வரலாற்றில் நாம் வகிக்க வேண்டிய பாத்திரத்தை இது உறுதி செய்யும். அனுபவங்களையும் நடைமுறைகளையும் தொடர்ந்து மறுபரிசீலனைக்குள்ளாக்குவதன் மூலம் நம் புரிதலை விரிவுபடுத்திக்கொள்ள இத்தகைய விமர்சனப் பார்வை அவசியம்.

மாவோ இருக்கிற காலத்திலேயே திபேத் - சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. திபேத்தின் தனி தேசிய இன அடையாளத்தை அழித்து மாவோவின் இசைவோடு திபேத் அபகரிக்கப்பட்டது. சீனாவுடன் கொண்ட பகைமை காரணமாக திபேத்தின் தலாய்லாமாவுக்குப் புகலிடம் அளித்து நாடுகடந்த அரசாங்கத்தை (Exile Govt.) இந்தியா அங்கீகரித்தது. சீனா வல்லரசாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. இலங்கையில் தனது கோரக் கால்களை அழுந்தப் பதித்துள்ளது சீனா. இதுவரை ஒரு பில்லியன் (Billion) டாலர் முதலீடு, பல மில்லியன் டாலர்கள் நிதி உதவி. சீன தொழில் துறைக்குத் தற்போது பல மடங்கு எரிசக்தி தேவை. எரிசக்தியை எடுத்துச் செல்ல பாதுகாப்பான பாதையை உறுதிப்படுத்த வேண்டும். தென்னாசியாவின் பாதுகாப்பான பாதையாக இலங்கை இருக்கிறது. தென்னாசியாவில் தானொரு மூலதன வல்லரசாக, அமெரிக்காவுக்குப் போட்டியாக உருவெடுக்க விரும்பும் சீனாவுக்கு இலங்கை மீதான ஆதிக்கம் முக்கியமானதாக மாறியுள்ளது. அமெரிக்காவுக்கு ஒரு டிகோ - கார்சியா போல். சீனாவுக்கு இலங்கை.

“நேபாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன் அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்” எனச் சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங்யூ (22.4.2009) சொன்னது சீன ஆதரவு கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியல்ல. திருகோணமலை அம்பாந் தொட்டை துறைமுகத் திட்டத்தைச் சீனா கைவசப்படுத்தியிருப்பது, தமிழர்களுக்கெதிரான போரில் சீனாவின் இராணுவ உதவி போன்றவற்றை இதனோடு இணைத்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.

அதன் காரணமாகவே ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சியைச் சீனா தன் வீட்டோ அதிகாரத்தால் இருமுறை முறியடித்தது. எதிர்வரும் ஆண்டு ஷாங்காயில் நடைபெறப்போகும் எக்ஸ்போ - 2010 தொழில் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, சீனா ராஜபக்சேயை அழைத்துள்ளது. பதிலுக்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள சீனப் பொதுவுடைமைக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்.

ஒரு நாட்டின் அரசு தன் சொந்த மக்களின் மீது மேற்கொள்ளும் அத்துமீறல்களைக் குறித்துக் கேள்வி எழுப்புவது அந்நாட்டின உள் விவகாரங்களில் தலையிடுவது என்பதை ஒப்புக்கொள்வது ஒருவகையில் அத்தகைய அத்துமீறல்களுக்கான அங்கீகாரம்தான். தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கை இனவாத அரசுக்கு, அதன் இன ஒடுக்குமுறைக்குத் துணை நிற்பதாகச் சரிந்து போயிருக்கிறது சீன ‘சோஷலிசம்’. “மனித உரிமை விவகாரங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவளிக்கும். இலங்கை அரசு தற்போது மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சீனா உறுதுணையாக இருக்கும்” என்று சொல்லும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாங் - ஜெசியின் கூற்று, சீனா அனைத்து ஜனநாயக நெறிகளையும் துடைத்தெறிந்துவிட்ட ஒரு ஏகாதிபத்தியம் என்பதை வெளிப்படுத்தும்.

ருசியா, சீனா, வியட்னாம் போன்ற நாடுகளை இன்று வழிநடத்துவது மார்க்சியமோ சோசலிஷமோ அல்ல, உலகமயம் என்னும் கருத்தாக்கம்தான். உலகமயம் என்னும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பின் பங்காளிகளாவது ஒன்றே இந்நாடுகளின் இன்றைய இலட்சியம். சமூக ஏகாதிபத்தியம் என அழைக்கப்பட்ட ருசியா இப்போது முழுமையான ஏகாதிபத்தியமாக உருவெடுத்திருக்கிறது. ருசியா தோற்றுப்போன புள்ளியில் சீனா தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தென்னாசியாவின் தலைமை வல்லரசாக உருவெடுக்க முயன்று வருகிறது. உலகப் பேரரசு என்னும் இடத்தைக் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போட்டிக் களத்தில் நாளை நிற்கப் போகிறது சீனா.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 20 ஆண்டுகளாய்ப் போரிட்டு விரட்டியடித்த வியட்னாம் இன்று அதே அமெரிக்காவோடு கை குலுக்கிக் கொண்டிருக்கிறது. மார்க்சியமின்றி உயிர்வாழ முடியாது என முழங்கிய நாடுகள் இன்று உலகமயத்தோடு அனைத்துப் புரளாமல் நீடித்திருக்க முடியாது என்னும் முடிவுக்கு வந்துவிட்டன. தத்தமது தேசிய பொருளாதார வளர்ச்சி என்னும் திட்டத்தை இந்நாடுகள் முன்னிறுத்துகின்றன. அது சொந்த மக்களை மட்டுமல்ல பன்னாட்டு மக்களையும் சுரண்டுகிற தேசிய ஆளும் வர்க்கங்களின் செயல்பாடுகளுக்கு வித்திடுகிறது. தேசிய முதலாளி பன்னாட்டு முதலாளியாகிறான். மக்களின் பெயரால் அவனுக்கான தேசியம் கட்டமைக்கப்படுகிறது. இதற்குப் பொதுவுடைமை நாடுகள் விதிவிலக்கல்ல.

அமெரிக்க ஏகாதிபத்தியப் பின்புலத்தில் இயங்கிய ‘சாடிஸ்டா’ பயங்கரவாத ஆட்சிக்கெதிராகக் கொரில்லாப் போரில் வெற்றிபெற்ற கியூபா, சாந்தினிஸ்டா இயக்கத்தின் மூலம் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த நிகாரகுவா, 2001இல் நிலத்தடி நீர் உரிமை காக்க மக்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்துப் பன்னாட்டுச் சுரண்டலுக்கு முடிவு கட்டிய பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் தம் வரலாற்றை மறந்துவிட்டன. அப்படி மறக்காமலிருந்திருந்தால் குறைந்தபட்சம் வன்னிக் களப்பிரதேசத்தில் கந்தல் கந்தலாக்கப்பட்ட மனித உரிமைகள் பற்றியாவது ஐ.நா.மன்றத்தில் இவர்கள் பேசியிருக்க வேண்டும்.

அனைத்துப் பயங்கரவாதங்களுக்கும் மூலம் அரச பயங்கரவாதம். அது இனவெறிப் பயங்கரவாதமாய் வடிவெடுக்கிறபோது பெருந் தேசிய இனம் என்ற ஒருபகுதி மக்களைத் திரட்டி இன்னொரு பகுதியினரை எளிதாக அழித்தொழிக்கிறது. இன்றைய சூழலில் இலங்கை அரசின் இனவெறிப் பயங்கரவாதம் எவரைப் பயங்கரவாதிகளாகச் சுட்டுகிறதோ அவர்கள் கையாளும் தொழில்நுட்ப பயங்கரவாதச் செயல்களைக் காட்டிலும் கூடுதலாய், உச்சமாய் பயங்கரவாத உத்திகளை இனவெறி அரச பயங்கரவாதம் கையாண்டது. இன்னும் தெளிவுபடுத்தினால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுவோர் கையாள முடியாத புதிய உத்திகளையெல்லாம் அரச பயங்கரவாதம் முன்கையெடுக்கிறது. அது பற்றித் தொடர் ஆய்வு செய்யும், செயல்படுத்தும் தனி அமைப்புகளை உருவாக்கி வளர்த்துக்கொள்கிறது.

அரச பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதமாக இணைப்புப் பெற்றுவிட்ட இக்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுகிற நிலைமை 50 ஆண்டுகளுக்கு முன்னிருந்தது போல் இன்றில்லை. கியூபா போராடிய காலத்து நிலை இப்போது இல்லை. உலக அரச பயங்கரவாதத்தையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு விடுதலைப் போரை வீழ்த்திவிட முடியும் என்னும் நிலையில¢ ‘சோஷலிச’ கியூபாவும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளும் யார் பக்கம் நிற்க முற்பட்டிருக்க வேண்டும்? ஆனால் தெள்ளத் தெளிவாக அவர்கள் உலக அரச பயங்கரவாதத்தோடு கைகோத்தார்கள்.

ஆயுதப் போராட்டக் காலகட்டத்தை நாம் கடந்தாகிவிட்டது என்று கியூபா போன்ற நாடுகள் கருதுகின்றன. இங்கு ‘நாம்’ என்று அவர்கள் சுட்டுவது உலக முழுமையுமான நாம்! ஆயுதப் போராட்டத்தை அவர்கள் கடந்துவிட்டார்கள் என்பதால் உலக அளவில் அது காலாவதியாகிவிட்டதாக அர்த்தமில்லை. அரச பயங்கரவாதமற்ற ஒரு உலகு இன்னும் உருவாகவில்லை. தேசிய இனப் போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள் இன்னும் ஆயுதகளத்தில்தாம் நிகழ்கின்றன. கியூபாவில் வசிக்கும் மார்க்சியரான ரெட்னூர் “கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது” என்று விமர்சித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் சோசலிசக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள - சனநாயக சோசலிசக் கண்ணோட்டம் என்னும் அமைப்பின் உறுப்பினர் க்ரீஸ் -ஸ்லீ, “கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள என்னும் கியூபா இந்நாடுகளின் அரசின் தன்மையைக் கணக்கில் கொள்வதில்லை. ஆனால் இந்நாடுகள் தமது மக்களை ஒடுக்குவதைக்கூடக் கியூபா விமர்சிக்காமல் இருப்பது தான் இதன் மறுபக்கம்” என்று விளாசியிருக்கிறார்.

சீனாவோ ருசியாவோ அல்லது கியூபாவோ நிகாரகுவாவோ - அவரவர் தேசிய நலன்களோடு கட்டம் கட்டி நின்றுவிட்டார்கள். அரசுகளோடு அரசு உறவு - நாடுகளோடு நாடு உறவு என்ற இந்த அடிப்படையில் சர்வ தேசியத்தை ஒதுக்கிவிட்டார்கள். சர்வ தேசியம் என்பது பிற நாடுகளில் மக்களோடு கொள்ளும் உறவு என்பதற்குப் பதிலாய் இரு அரசுகளிடையே கொள்ளும் உறவாகச் சுருக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே ஏகாதிபத்தியங்களோடு கொள்ளும் ராஜதந்திர உறவையும் சர்வ தேசியம் என்னும் இலக்கணத்துக்குள் நுழைக்க முயல்கிறார்கள்.

உலகெங்கும் நடைபெற்ற தேச விடுதலைப் போராட்டங்களுக்கு உதவுகிற புதிய பாதையைக் கியூபாவின் ஃபிடல்கேஸ்ட்ரோ தேர்வு செய்தார். சர்வ தேசப் புரட்சியை முன்னெடுக்கிற ஒரு முன்னணிப் போராளியாக சேகுவாரா இருந்தார்.

இன்று இது போன்ற சர்வதேசக் கடமைகளைப் புறக்கணித்து இலங்கை போன்ற பயங்கரவாத அரசுகளின் தன்மையைக் கணக்கில் கொள்ளாது அந்நாட்டுக்கு ஐ.நா.வில் கரம் கொடுத்தது கியூபா. சோஸலிச அல்லது கம்யூனிஸ நாடு என்று பட்டயங்களைச் சுமந்துகொண்ட நாடுகளும் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த இலத்தீன் அமெரிக்க நாடுகளும் சர்வதேசக் கடமை ஆற்றுவதிலிருந்து சரிந்துள்ளன.

இலங்கையின் அப்பட்டமான மனிதப் படுகொலைகளை ஆதரித்த சீனா, ருசியா நாடுகளுக்கும் கியூபா, நிகாரகுவா, பொலிவியா, வெனிசுலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இனி பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தட்டிக் கேட்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒன்று சேர்ந்தவர்கள், இப்போது ஏகாதிபத்தியமும் உள்ளடங்கிய உலக அரச பயங்கரவாதப் புள்ளியில் கூடிவிட்டார்கள்.

- சூரியதீபன்

நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட் 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்