உலகத் தமிழர்களைக் காப்பது யார்?

இலங்கையின் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் நிலையை நேரில் கண்டறிவதற்காகத் தமிழகத்திலிருந்து திமுகக் கூட்டணிக் கட்சியினரின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு கடந்த வருடம் இலங்கைக்குச் சென்றது. முள்வேலிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த அவர்களிடம் ‘பேசுவதற்காக’ இலங்கை ராணுவத்தால் யாழ் நூலக மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களிடம் பேசிவிட்டுத் திரும்பியபோது குழுவின் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, “உலகில் உள்ள எட்டுக் கோடித் தமிழருக்கும் கலைஞர்தான் தலைவர். நீங்கள் வேறு ஏதேனும் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாராம்.

‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என வீறாப்பாகத் தொடங்கி, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என முதுகு வளைந்து, மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி என மண்டியிட்டு, அரசு அதிகாரமே எமது உயிர் என வீழ்ந்து கிடக்கிற ஒரு கட்சியின் தலைவரை, ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவத்தின் கொடூரமான தாக்குதலால் நிலைகுலைந்து போன தமிழர்கள் தம்மைக் காப்பாற்றுமாறு கதறியபோது, காங்கிரஸ் கட்சியோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு தன் கபட நாடகங்களால் தமிழ் மக்களை வஞ்சித்த, உலகெங்குமுள்ள தமிழர்களால் துரோகி என வசைபாடப்படுகிற ஒரு கட்சியின் தலைவரை எட்டுக்கோடித் தமிழர்களுக்குமான ஒரே தலைவராக முன்னிறுத்துவதற்குக் கட்சியும் அரசும் நாள்தோறும் ‘விழா’ நடத்திக்கொண்டிருக்கிறது.

கோட்டைக் கொத்தலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரும் பல வகைகளில் சரிக்கட்டப்படுகிறார்கள். மன்னரும் மந்திரிப் பிரதானிகளும் கோலோச்ச நகரின் மையத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது புதிய தலைமைச் செயலகம். மன்னர் கோலோச்சும் இடத்தையும் பவனி வரும் இடத்தையும் தூய்மைப்படுத்த, இருக்க இடமற்று சாலையோரங்களிலும் கூவம் நதியின் கொசுக்கள் பிடுங்கும் கரைகளிலும் சாக்கடையோரங்களிலும் அடைக்கலம் தேடியிருந்த லட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்கள் தம் வாழிடங்களிலிருந்து கண்காணாத இடங்களுக்கு விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாசுபடுத்தப்பட்ட நீராதாரங்கள், நதி நீர்ப் பிரச்சினைகள், பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பு முதலான காரணங்களால் நலிந்து போயுள்ள விவசாயச் சமூகம் பிழைப்புக்காக நகரங்களை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கின்றது. நெசவு முதலான பாரம்பரியக் கைத்தொழில்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில். மன்னர் பாராட்டு விழாக்களில் திளைத்துக் கொண்டிருக்க இளவரசர்களும் இளவரசிகளும் திருவீதி உலாக்களில் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அரிசியையும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வழங்கிப் பெருமைதேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழை பாழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. பேராசிரியர்களுக்கும் அறிவுத் துறையினருக்கும்? வாழ்த்துப் பாக்கள் பாடவும் ஆரத்தி எடுக்கவும் அறிஞர்களுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டாமா? அதற்குத்தான் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

கோவை தமிழ்ச் செம்மொழித் தமிழ் மாநாடு பற்றி இடையறாது வெளியாகிக்கொண்டிருக்கும் அறிவிப்புகளை வரிசைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கே தமிழர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். மாநில அரசின் அதிகாரிகள், அமைச்சர்களில் பாதிப் பேருக்கு மாநாட்டை நடத்தி முடிக்கும்வரை ஊண் உறக்கம் இல்லை. (மீதிப் பேருக்குப் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மார்ச் 13ஆம் தேதிக்கு முன்பாகக் கட்டி முடித்து முதல்வர் கையில் ஒப்படைத்தாக வேண்டிய கட்டாயம்) மாநாடு முடிவுபெற்ற பின்னர் மன்னர் இருக்கையைக் காலிசெய்தால் “அன்னைக்கு மகுடம் சூட்டிட, காத்திருந்தார் தமிழ்மகன்; சூட்டியதும் மகுடம் துறந்தார்” எனத் தமிழ்ப் பேரறிஞர்களும் கவிஞர்களும் நாக்கில் வார்த்தைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். யாழ் மண்டபத்தில் பாலு சொன்ன வாசகங்களை ‘உண்மை’யாக்கும் முன்னெடுப்புக் காரியங்கள்தாம் இவை. ஒரு லட்சம் தமிழ் உயிர்களுக்குப் பதிலாய், ஒரு லட்சம் புகழ் மொழிகளா?


முதல்வருக்குப் புகழாரம் சூட்ட தமிழ்ப் பேரறிஞர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் அதே கோவை மாநகரில் பிப்ரவரி, 6, 7 நாட்களில் ப.கிருஷ்ணசாமியின் தலைமையிலான புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ‘உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’ நடைபெற்றதை ஆளும் திமுக அரசோ முதல்வர் கருணாநிதியோ வரவேற்பார்கள் என எதிர்பார்ப்பது பேதமை. கருணாநிதியின் உலகத் தமிழ் நாயகன் பட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிகழ்வு அது.

  • தமிழ்நாட்டில் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி ஆகிய அனைத்து நிலைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
  • மொழிவாரி மாநிலங்கள் உருவாகி 50 ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழகத்தின் அடிப்படை நீராதாரப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படவில்லை.
  • தமிழகத்தின் அங்கமாக விளங்கிய கச்சத்தீவு தமிழக மக்களின் விருப்பமின்றி இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதன் விளைவு, தமிழக மீனவர்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வீட்டுமனை இல்லை. எனினும் பன்னாட்டு நிறு வனங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் செயல் வேகவேகமாக நடந்து வருகிறது.
  • வேலை தேடி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழர்களும், மும்பை, பெங்களூர், தில்லி போன்ற பெரு நகரங்களிலும் வசிக்கும் தமிழர்களும் சுய அடையாளங்களோடு சுதந்திரமாக வாழ முடியாத பாதுகாப்பற்ற நிலை.
  • இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என வர்ணிக்கப்படும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பின்னர் முள்வேலி முகாம்களுக்குள் வதைபடும் மூன்று லட்சம் தமிழர்களின் நிராதரவான நிலை. பதினைந்து லட்சம் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் அகதிகளாகத் தவிக்கும் அவலம்

என்பன போன்ற பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் துண்டறிக்கை ஒன்றின் மூலம், தமிழர்களை மீட்டெடுக்கவும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணவும் வலியுறுத்தி கோவையில் 2010 சனவரியில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பெறும் என அறிவித்தது புதிய தமிழகம். எட்டுக் கோடித் தமிழர்களுக்கும் ஒரே தலைவராகக் கருணாநிதி முடிசூடிக்கொண்டு விட்ட பிறகு இப்படியொரு மாநாட்டை நடத்த யாராவது முனைந்தால் அதைத் தமிழினத் தலைவரின் தலைமையிலான தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளும் என்பது யூகிக்க முடியாததல்ல.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான இலச்சினை அக்டோபர் 29இல் வெளியிடப்பட்டது. 2009, அக்டோபர் 17இல் அறிவிப்பை வெளியிட்ட அமைப்பாளர் கிருஷ்ணசாமி செய்தியாளர் கூட்டத்தில் போர்க்குற்றங்களுக்காக “இராசபக்ஷேயை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவோம்” என அறிவித்தார்.

ஒன்பதாவது உலகத் தமிழர் மாநாட்டை சனவரி 21இல் நடத்துவதென செப்டம்பர் மத்தியில் கருணா நிதி அறிவித்தார். உலகத் தமிழ் மாநாடு பற்றிய அறிவிப்பு வந்ததும் எதிர்வினையாற்ற சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் 23.09.2009 இல் அறிவிப்புச் செய்து, 29.09.2009 அன்று கூடி தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். அதிகாரத்தின் முன் பணிந்தும் அங்கீகாரத்துக்கு வளைந்தும் போய்விட்ட தமிழ் மேதமைகள், கலை, இலக்கியவாதிகள், அரசியலாளர்களைப் போல் அல்லாமல் அந்த அமைப்பு தன் எதிர்ப்பைத் தெரிவிக்க உறுதி பூண்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் நொபுரு கராஷிமா ஆராய்ச்சி மாநாட்டுக்குரிய கால அவகாசம் இல்லையெனக் கூறி ஒப்புதல் அளிக்கவில்லையாதலால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பதிலாக, முதலாவது செம் மொழித் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி மறுபடியும் தன்னிச்சையாக அறிவித்தார். செம்மொழி மாநாட்டுக்குப் போட்டியாக, தன் துரோகங்களை அம்பலப்படுத்தும் விதமாக இப்படியொரு மாநாட்டை நடத்தத் துணிந்தவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா தமிழினத் தலைவர்?

மாநாட்டை நடத்தவிடாமல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும் திமுகவும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல் செயல்பட்டன.

மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கோவை மாநகர ஆணையரிடம் கொடுக்கப்பட்டது. சனவரி 15இல் காவல் துறை ஆணையர் அந்த மாநாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்தார். கருத்துரிமைக்கெதிரான அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர். மாநாட்டுத் தேதிக்கு 6 நாட்களே இருந்தநிலையில் ஆணையரின் தடையை ரத்து செய்த உயர் நீதி மன்றம் மறுபடியும் விண்ணப்பிக்குமாறு மாநாட்டு அமைப்பாளர்களுக்கு வழிகாட்டி யது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிப்ரவரி முதல் நாள் அதே மாநகர காவல் துறை ஆணையரிடம் மீண்டும் விண்ணப்பித்தது அமைப்பு. பிப்ரவரி நான்காம் தேதி மாநாடு நடைபெறுவதற்கு இரண்டே இரண்டு நாட்கள் எஞ்சியிருக்கையில் அனுமதி அளிக்கப்பட்டது.

இரண்டொரு நாட்களில் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டிய நெருக்கடிக்குட்படுத்தப்பட்டனர். அழைப்பிதழ் அச்சிடக்கூட அவகாசமில்லை. நிகழ்ச்சி நிரலைத் தட்டச்சு செய்துதான் செய்தியாளருக்கு வழங்கினார்கள். திட்டமிட்டிருந்தபடி அரங்கமேடையின் பின்புலத்தில் இலச்சிணையைப் பொருத்த முடியவில்லை. உரிய அவகாசமின்மை காரணமாகக் காகிதத்தில் வரைந்த கொடியைத் துணியில் ஒட்டி ஏற்றினார்கள்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நடத்தும் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பேரணிகள், மாநாடுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் நீதி மன்றத்துக்குச் சென்று தடைநீக்கி ஆணை பெறுவதும் தமிழகத்தில் வழமுறையாகிவிட்டது. மலிவான தந்திரங்கள் மூலம் விமர்சகர்களின் குரல்வளையை நசுக்கும், இரும்புக் கரங்கள் கொண்டு எதிர்ப்புகளை ஒடுக்கும் இத்தகைய தந்திரமான அரசியல் கலாச்சாரத்தின் சூத்திரதாரிகளாக இன்று அதிகாரத்திலிருக்கும் திமுக முன்பு இதே வகையான ஒடுக்குமுறைகளுக்குள்ளானது இப்போது பழைய வரலாறாகிவிட்டது.

“தடைசெய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றிப் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது குற்றமல்ல; அவ்வாறான இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதே குற்றம்” என்னும் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பின்னும், மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் படம் பொறித்த பனியன்கள், நாட்காட்டிகள், ஈழம் பற்றிய குறும்படங்கள் ஆகியனவற்றைப் பறிமுதல் செய்து மூவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தது காவல் துறை. மதுரையிலுள்ள கருத்துப்பட்டறை வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு, முல்லைப் பெரியாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மார்க்சின் பொருள் முதல் வாதம், ஏங்கெல்ஸின் குடும்பம் அரசு தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அ. மார்க்ஸ், ஷோபாசக்தி குழுவினரின் ஈழப் போராட்டத்துக்கு எதிரான பரப்புரைகளுக்கு எதிர் வினையாக வெளியிடப்பட்ட அவதூறுகளை முறியடிப் போம் என்ற தொகை நூல் போன்ற வற்றையுங்கூடப் பறிமுதல் செய்தது காவல் துறை. நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் தவறாமல் பிரபாகரனின் படங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றனவே அவற்றைப் பறிமுதல் செய்வீர்களா எனக் கேள்வி எழுப்பிய இளம் வழக்குரைஞர் கலையரசன் மீதும் பேரா.தமிழ்வாணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்ததிலிருந்து, முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு வரை தம் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், “எலும்புக் கூடுகள்மீதும், நடை பிணங்கள்மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசாரத்தை விநியோகித்தனர். அவற்றைப் பறிமுதல் செய்ததோடு ‘அரசுக்கு எதிராக அனுமதி பெறாமல் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாய் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்தத் தடைகளையெல்லாம் மீறி வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை நிலைநாட்டித் தமிழ் மக்களைப் பாதுகாத்திட உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்ற புதிய புரிதலுக்கு வந்திருந்தார்கள் மாநாட்டுக் குழுவினர். வயிற்றுப் பிள்ளையைக் காக்க, கர்ப்பிணித் தாயை ஊட்டம் கொடுத்துப் பேண வேண்டும். தாயைப் பேணாதபோது, எலும்பும் தோலுமான நோஞ்சான் பிள்ளைதான் பிறக்கும். தமிழர்களைச் சிதைத்துவிட்டுத் தமிழை வளர்ப்பது எப்படி என்ற ஆதாரமான கேள்விக்கு விடை தராமல் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தும் பெருமிதத்தில் இருக்கிறார் கருணாநிதி.

“தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவருடைய தயவுமின்றி, நமக்குள் இருக்கிற அனைத்து வேறுபாடுகளையும் துறந்து இணைந்து செயல்படுவோம்” என்னும் முழக்கத்துடன் மாநாட்டுத் தலைவர் கிருஷ்ணசாமி தொடக்க உரையாற்றினார். அவரது நிறைவுரையும் இக்கருத்தையே வலியுறுத்தியது. தமிழர்கள் பாதுகாக்கப்பட ‘சாதி மறுப்போம், மதம் மறுப்போம்; கட்சி மறுப்போம்’ என்று சொல்கிற சுயபரிசோதனை முயற்சியாக இந்தப் பிரகடனம் அமைந்தது.

உலகத் தமிழர் அனைவரின் பாதுகாப்பும் அதற்கான முழுப்பொறுப்பும் தன்மேல்தான் ஏற்றப்பட்டிருப்பதாக எண்ணுகிற கருணாநிதியின் புனைவுகள் இந்த மாநாட்டால் உடைபட்டிருக்கின்றன. அவ்வாறு கருதி தம் தலைவரைப் புகழ் உச்சியில் உப்பவைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் குழாத்தின் பெருமைகளும் சிதைந்திருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த மாநாட்டை இருட்டடிப்புச் செய்ய அனைத்து யுக்திகளையும் அரசோடு இணைந்து மேற் கொண்டது திமுக. அந்த யுக்திகளில் சில,

  • மாநாட்டுத் தேதிக்கு முந்தைய நாளான பிப்ரவரி 5ஆம் தேதி கோவையில் பள்ளி மாணவிகளை அணிவகுக்கச் செய்து செம்மொழி மாநாட்டு விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்தியது அரசுத் தரப்பு.
  • மாநாடு நடைபெற்ற அன்று கோவையிலிருந்து ஊட்டி வழியாக ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு ‘மோட்டார் வாகன’ பிரச்சார அணிவகுப்பைத் தொடங்கிவைத்தது.
  • மாநாடு நடைபெற்ற அதே நாட்களில் கோவையை அடுத்துள்ள திருப்பூரில் கனிமொழி, ஜெகத் கஸ்பார் இணைந்து வழங்கிய “நம்ம சங்கமம்”.
  • இரண்டாவது நாள் மாநாட்டின் போது கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுத்தை தொல். திருமாவளவனின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதன் மூலம் ஊடகங்கள் தம் பங்கைச் சிறப்பாக ஆற்றின. (அரசு விளம்பரங்கள் இல்லாமல் எப்படிப் பத்திரிகை நடத்துவதாம்?)

இவை ஒரு பக்கம் இருக்க மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அதன் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒத்த கருத்துடைய தமிழ்த் தேசிய சக்திகளை அழைக்கவில்லை. கிருஷ்ணசாமியிடம் தன்னை முன்னிறுத்தும் போக்கு வெளிப்பட்டதாகக் குற்றம்சாட்டி மற்றவர்கள் விலகி நின்றனர். எல்லாச் சக்திகளையும் இணைக்கும் ஐக்கிய முன்னணிச் செயல்திட்டம் பெயரளவுக்குக் கூடக் கைகூடவில்லை.

பழ.நெடுமாறன், கொளத்தூர் மணியரசன், காசி ஆனந்தன், சீமான் போன்றோர் அழைக்கப்படக் கூடாது என்னும் காவல் துறை ஆணையர் வாய்மொழியாக வழங்கிய நிபந்தனையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள். மலேசியப் பேராளர்கள் மட்டுமே (80பேர்) வருகை தந்திருந்தார்கள்; அறிவிக்கப்பட்டவாறு பிற நாடுகளிலிருந்து பேராளர்கள் எவரும் பங்கேற்கவில்லை. குறிப்பாக, ஈழத்திலிருந்து எவரும் வரவில்லை.

மூன்று நாட்கள் முன்புதான் அனுமதி கிடைத்ததென்றாலும், அழைப்பிதழ், பதாகைகள், விளம்பரம் போன்று முன்கூட்டிய பணிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடலும் பொறுப்பும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடல், பணி மேற்கொள்ளல், முடிவுகளைச் செயல்படுத்தல் என்பனவற்றைத் துணை சக்திகளை இணைத்துக்கொண்டு மேற்கொள்வதே தலைமைப் பண்பு. எழுத்துலக அறிவுஜீவிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டுமா? அவர்கள் எந்த எல்லைவரை வருவார்கள் என்ற விசயம் எல்லோரும் அறிந்ததுதான்.

சாதி, மதம், கட்சி போன்ற தன்னிலைகளைக் கடந்து தமிழராய் இணைவோம் எனத் தீர்மானித்திருந்தாலும், இந்தத் தன்னிலைகளை நோக்கி இழுத்துச்செல்கிற தேர்தல் தன்னிலையைக் கடக்காமல் உலகத் தமிழர் பாதுகாப்பு சாத்தியமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்ற ஈழ விடுதலை ஆதரவுக் கட்சிகள் எல்லாமும் எங்கெங்கு எப்படிப்போய் யார் யாருடன் அடைக்கலம் தேடினார்கள் என்பது முகத்திலடிப்பது போன்ற ஒரு வரலாற்றுச் சாட்சியம்.

செங்குருதி காயுமுன் செம்மொழி மாநாடா?

மூத்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அறிக்கை

ஈழத் தமிழ் மக்கள் இழந்துபோன விடுதலையை மீண்டும் பெறுவதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப்பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்துகொண்டன.

உலகின் மிகப் பெரிய மாந்தப் பேரவலம் என்றுதான் இதனைக் கூற வேண்டும். 80,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர் கொல்லப்பட்டு, இன்றும் 30,000 தமிழர்கள் முள்வேலிச் சிறைக்குள் முடக்கப்பட்டுச் சொல்லொணா அவலத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். உலகிலேயே இதுவரை எங்கும் எப்பொழுதும் நடந்திராத கொடுமைகளும் இழிவுகளும் அவர்கட்கு இழைக்கப்படுகின்றன. இட்லர் காலத்தில் யூதர்களும்கூட இவ்வளவு துன்பம் அடைந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, உடலாலும் உள்ளத்தாலும் இவ்வளவு கொடுமைகட்கும் இழிவுகட்கும் ஆளானதில்லை. மாந்த இனமே கொதித்தெழ வேண்டிய பேரவலம். ஆயினும் மிகக் கொடிய, இரக்கமற்ற, மாந்தநேயமற்ற கல் நெஞ்சங்களும் அரசியல் சூழ்ச்சிகளும், தன்னல வெறிகளும் இனப்பகைமையும் இதன் பின்னிருந்து வேலை செய்வதால் உலகமே வாய்மூடிக்கிடக்கின்றது. இந்த அவலத்தை நீக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

உரோம் நகரம் தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் யாழ்மீட்டிக் கொண்டிருந்தான் என்று வரலாறு கூறும். ஈழநெருப்பு இன்னும் அவியவில்லை. இங்கோர் ஆரவார மாநாடு கூட்டப்படவிருக்கின்றது. உலக முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இது தமிழ்நலம் கருதி மேற்கொள்ளப்படவில்லை. உள்நோக்கம் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைப் போரில் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இந்திய அரசு தன் தமிழின வெறுப்பாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும், சிங்களன் தொடங்கிய போரைத் தானே முன்னின்று நடத்தியதுதான். இவ்வாறு இந்திய அரசு ஈழத் தமிழரை ஒழிக்க முன்வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் தமிழக முதல்வர், இந்திய அரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால் வந்ததுதான். தமிழக முதல்வர் நினைத்திருந்தால் இந்திய அரசு ஈழப்போரில் சிங்களனுக்கு உதவாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழக முதல்வர் நடுவணரசில் தாம் பெறும் சொந்த நலன்களுக்காக ஈழத் தமிழினத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று உலகமே பேசுகின்றது. தமிழக முதல்வரின் இனவுணர்வற்ற, இரக்கமற்ற காட்டிக்கொடுப்பும் இரண்டகத் தன்மையும் இன்று பலராலும் பழித்துரைக்கப்படுகின்றன. போருக்குப் பின்பும் முள்வேலிக்குள் முடக்கப் பட்டுக்கிடக்கும் முப்பதாயிரம் தமிழரைக் காப்பாற்றுவதில்கூடத் தமிழக முதல்வர் அக்கறை காட்டவில்லை. இந்திய அரசோடு சேர்ந்து கொண்டு போலிக் குழுக்களை இலங்கைக்கு விடுத்துச் சிங்கள அரசின் கொடுஞ் செயல்களை மூடி மறைப்பதிலும் பூசி மெழுகுவதிலுமே முன்னின்றார். சிங்களனின் கையாளாகவே செயல்பட்டார். வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்க முடியாது.

இந்த நிலையில்தான் செம்மொழி மாநாடு அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் விடுதலையை அழித்ததில் தம் பெயர் கெட்டுப்போன நிலையில் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன்தான் இது அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முதலில் இவர் நடத்த விரும்பியது முன்பு மூன்றுமுறை தமிழகத்தில் நடந்தது போன்ற மற்றோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி (ஆரவார) மாநாட்டைத்தான். ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் அதற்கு ஒத்துழைப்பு நல்காமையால், அதை நடத்திப் படம் காட்ட முடியாத நிலையில், தம் அதிகாரத்துக்குட்பட்ட செம்மொழி மாநாட்டை இப்போது அறிவித்துள்ளார்.

‘உள்ளத்தின் அருள் உணர்வால், மக்கள் நேயத்தால் மேற்கொள்ளப்படும் செயல்களே உண்மைச் செயல்கள். பிறவெல்லாம் போலி’ என்கின்றார் திருவள்ளுவர். எண்ணத்தில் தெளிவில்லாதவன் எப்படி மெய்ப் பொருளைக் காண முடியாதோ அப்படியே உள்ளத்தில் அருள் உணர்வு இல்லாதவன் அறம் செய்ய முடியாது என்கின்றார்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால், தேரின்

அருளாதான் செய்யும் அறம் (கு.249)

என்பது திருக்குறள்.

தமிழக முதல்வரின் அருள் உள்ளம் எப்படிப்பட்டதென்பதை ஈழ மக்கள் விடுதலைப் போரில் அவர் ஆற்றிய அரும்பணி காட்டிக்கொடுத்துவிட்டதே. அந்த ‘அருள் உள்ளம்’ தான் செம்மொழி மாநாட்டையும் அறிவித்துள்ளது. இதிலிருந்தே மாநாடு எப்படி எப்படி நடக்கும். என்ன என்ன பேசப்படும் என்பதை நன்கு தெரிந்துகொள்ளலாம். பூச்சும் புனைவுகளும் வெளிப்பகட்டும் விளம்பரமும் அங்குக் களிநடம் புரியும் என்பதை மறுக்க முடியுமா? தமிழுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாகவும் இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டல்கட்கு உட்பட்டு உழல்கின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரைப் பல்லாண்டுக் காலமாய்ப் பிணித்துள்ள ஒரு பெருநோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை!

- சூரியதீபன்

நன்றி: www.thenseide.com (காலச்சுவடு, மார்ச் 2010)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை