அண்மையில் படித்த நூல் மணல் (நாவல்) - கந்தா ராமய்யன்


ஆசிரியர்: பா.செயப்பிரகாசம்

வெளியீடு: நூல் வனம், சென்னை

விலை      : உரூபாய் - 210

கரிசல் காட்டின் முன்னத்திப் படைப்பாளிகளில் ஒருவராகிய பா.செயப்பிரகாசம் படைப்பு வெளியில் அரிய பணியொன்றைச் செய்து முடித்திருக்கிறார். 

பிரச்சாரத்தை நோக்கமாகக் கொள்ளும் ஓர் எழுத்துப் பனுவல் படைப்பாகக் கலையியல் அழகு பெற முடியுமா? குழப்பம் மிக்க பழைய கேள்வியே இது. இக்கேள்வி எப்போதும் 

பா. செயப்பிரகாசம் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திவந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை எழுத்தென்பது எவ்வடிவில் எச்சொல்முறையில் இருந்தாலும் அது உயிரியமும் மாந்தவியமும் பற்றி நிற்பதே! அதுவே இலக்கியம். 

பா.செ. களப்போராளி. சமுதாய மாற்றத்திற்கான கருவியாக இலக்கியத்தைக் கருதுபவர்; படைப்பவர். அவருடைய இரண்டாவது நாவல் 'மணல்'. தூத்துக்குடியின், கோவில்பட்டி, அதைத் தொடர்ந்த விவசாயக் கிராமங்கள் பலவற்றை வளப்படுத்தி ஓடிவரும் 'வைப்பாறு' காலகாலமாய்ச் சேமித்து வைத்துள்ள பெரும் மணல் படுகை, மனிதர்களின் சுயநல வேட்கை, இயற்கைப் பொருளொன்று வணிகப் பண்டமாவதன் அடியாக, அப்பொருள் பெற்றுநிற்கும் அதீத மதிப்பு, அந்த அதீத மதிப்பின் மீது வந்து அமரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைப் பொன்னைப்போல் பாதுகாத்துத் தரும் அரசியந்திரம், இவற்றையொட்டிய உதிரிச் சுரண்டல் சக்திகள் போன்றவற்றால் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது? அதன் நேரடி, மறைமுகத் தாக்கங்கள் என்னென்ன? இவற்றைத் துயரமும் கையறு நிலையுமாகப் பதிவுசெய்யும் நாவல், மாபெரும் இந்த இயற்கை அழிமாண்டத்திற்கு எதிராக, வைப்பாற்று வளத்தால் பயன்பெற்ற விவசாயக் குடிகளும் பனையேறிகளும் எவ்வாறு போராடினார்கள்; விளைவுகளை உருவாக்கினார்கள் என்பதை, ஒருவகை மிடுக்கான தொனியில் வாசகர் முன் விரிக்கிறது. மக்கள் திரள் ஓர் எதிர்ப்புக் குழுவாகத் திரண்டு முன்னெடுத்த அத்தனை பாடுகளும் நாவலில் காட்சியாகின்றன. அதிகாரச் சக்திகளின் வியூகங்களும் குயுக்திகளும்  கொலைநாச வேலைகளும் சொல்லப்படுகின்றன.

இந்த அழிவு வரலாறும் புரட்சிகர மக்கள் சக்தியின் எதிரீடும் நாவலாகக் கலையாக்கம் பெறுவது எப்படி? இதுதான் அரியவொரு செயலாக, பா.செ. என்கிற மூத்த படைப்பாளியிடம் வடிவு பெறுகிறது.

வைப்பாறு வளப்படுத்தும் ஊர்களில் வாழும் மக்களின் மொழி, வழக்காறுகள், வாய்மொழிக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சூழலியல் என அனைத்தும் நாவலில் பிடித்துவைக்கப் படுகின்றன். புரட்சிகர மக்கள் வரலாறு ஒன்றிற்கு இவை அனைத்தும் கலையியல் ஒழுங்கைத் தருகின்றன.

நாவல் முழுக்க மணற்கொள்ளை அழிமாண்டமும் அதற்கெதிரான மக்கள் இயக்கமுமே ஆட்கொண்டிருப்பதால் தனித்த சில பாத்திரங்களை முன்னிறுத்திய புனைவாக்கம் என்பது அரிய செயலே ஆகும். நாவலில் அப்படி  மீச்சிறு புனைகதையொன்று நாவல் முழுக்கப் பிணிக்கும் கண்ணியாகப் பின்னப்பட்டுள்ளது. அம்மன்கோவில்பட்டி, விருசம்பட்டி எனும் இரு கூறாக நாவல் சொல்லப்படுகிறது. இங்கு, ஜமீன்தார்களின் கதையைக் கேட்டு நாவல் ஒன்று எழுதும் நோக்கத்தில் அப்பகுதிக்கு வரும் செண்பகம், பால்வண்ணன் எனும் இருவரும், ஜமீன் வரலாற்றுக்குப் பதிலாக, அம்மன்கோவில்பட்டி துரைக்கண்ணு எனும் பெரியவர் மூலமாக வைப்பாற்று மணல் கொள்ளையைப் பற்றி அறிந்து அது தொடர்பான அனைத்தையும் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

துரைக்கண்ணு பெரியவருக்கு வைப்பாற்று மணலை முன்வைத்து  வரலாற்று முனை ஒன்றைத் தரமுடிகிறது என்றால், அந்த வரலாற்றோடு தொடர்புடைய தன் குடும்ப வரலாறு ஒன்றும் அவருக்கு இருக்கும்தானே? துரைக்கண்ணுவின் பேரன் மாறன் மணற்கொள்ளைக்கு எதிரான போராளி. அவனைத் திருமணம் செய்ய இருந்தவள் சின்னம்மிணி. போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் அவன் கொல்லப்படுகிறான்.

மணற்கொள்ளைக்குத் துணைபோகும் தந்தையை விடுத்து அதற்கு எதிராகக் களமாடும் வேல்ராசை மணக்க விரும்பும் செல்லத்தாய், மணல் வாரிய ஆற்றுப்பள்ளத்தில் மழைநீரில் தவறி விழுந்து மாள்கிறாள். இங்கொரு காதல் கொலைப்படுகிறது.

வரலாற்று வெளியில் கொம்பன் பகடையை மணக்க விரும்பிய வள்ளி ஆதிக்கச் சாதித்திமிர் கொண்ட தன் அண்ணன்களால் கொலையுண்டு குலதெய்வமாகிறாள். கொம்பன் பகடை, வெட்டுப்பட்டு வீழ்ந்த ஓடை, கொம்பன் ஓடையாகப் பெயர் பெற்று மக்கள் மனங்களில் நிலைக்கிறான்.

இப்படி வரலாறுதோறும் மனிதருக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் இயற்கைக்கும் உள்ள கொள்வினை, கொடுப்பினைகளின் சமச்சீரின்மை காதலர்களைக் கொன்றவண்ணமே உள்ளது. மனிதர்கள் இயற்கையைக் கொன்றவண்ணம் உள்ளனர். எதிர்மனிதர்கள் அவற்றைக் காத்தவண்ணம் உள்ளனர். வரலாறு காதலர்களைக் கொல்கிறது. படைப்பாளிகள் இயற்கையின் பக்கம் நின்று அழித்தெழுத முடியாத காதலை எழுதிடக் கனாக் காண்கின்றனர். இப்படியே தொடர்கிறது போராட்டம்.

இப்படி ஒரு கதைச்சரடு நாவல் முழுக்கப் பின்னிக்கிடப்பதில் பா.செ. வின் படைப்பாற்றல்  நுட்பமான தன் கலைச்செதுக்குப் பணியை வாசகரிடம் நிறுத்தி, பதிலை எதிர்பார்க்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்