பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

கரிசல்‌ கதைகளின்‌ உலகில்‌ தனித்துவம்‌ பெற்றவர்‌ பா.செயப்பிரகாசம்‌. இதுவரை கதை உலகின்‌ காலடி படாத கிராமத்தின்‌ ஒடுக்கப்பட்ட மக்களையும்‌ அவர்களின்‌ வாழ்க்கைப்‌ பாடுகளையும்‌ விவரிக்கக்கூடியது இவரது எழுத்து. முப்பத்தைந்து வருடங்‌களுக்கும்‌ மேலாக சிறுகதைகள்‌, கட்டுரைகள்‌ எழுதிவரும்‌ தீவிர இலக்கியவாதியான செயப்பிரகாசம்‌ “விழிகள்‌”, “சதங்கை”, “மனஓசை" போன்ற இதழ்களில்‌ தொடர்ந்து எழுதி வந்தவர்‌. சமூக விடுதலையை நோக்கியதாக எழுத்து அமைய வேண்டும்‌ என்ற உரத்த சிந்தனை கொண்ட பா.செயப்பிரகாசத்தின்‌ மொத்தச்‌ சிறுகதைகள்‌ 'பா.செயப்பிரகாசம்‌ கதைகள்‌' என்ற தலைப்பில்‌ வெளியாகி உள்ளன. இவரது 'ஒரு கிராமத்து ராத்திரிகள்‌' என்ற தொகுப்பு, தமிழ்ச்‌ சிறுகதையுலகில்‌ குறிப்பிடத்தக்க ஒன்று.

“கரிசலின்‌ இருள்கள்‌” என்கிற பா.செயப்பிரகாசம்‌ கதையும்‌ திருமணத்தின்‌ வலியைப்‌ பற்றியது. ஆனால்‌, இங்கு திருமணத்தால்‌ பிரச்னை ஏற்படுவதில்லை. மாறாக, கிராமத்தில்‌ உள்ள ஒடுக்கப்பட்ட மனிதன்‌ ஒருவன்‌ தனது திருமண நாளில்கூட சந்தோஷமாக இருப்பதற்கு உயர்ந்த சாதி மனிதர்களால்‌ அனுமதிக்கப்படுவது இல்லை என்கிற உண்மையைச்‌ சொல்கிறது இக்கதை.

பா.செயப்பிரகாசம்‌ தமிழின்‌ முக்கிய எழுத்தாளர்‌. சமூக அவலங்களுக்கு எதிராக கூர்மையான பார்வைகளை முன்‌ வைப்பவை இவரது கதைகள்‌. கரிசல்காட்டு எழுத்தாளர்களில்‌ ஒருவராக இருந்தபோதும்‌, இவர்‌ கதைகளின்‌ உலகம்‌ அடித்தட்டு மக்களைச்‌ சார்ந்தது. குறிப்பாக சாதியத்தின்‌ கொடுமையால்‌ புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்‌ வாழ்வை முன்வைக்கிறது.

“கரிசலின்‌ இருள்கள்‌' கதை... ஒரு கிராமத்துக்குத்‌ திருமணமாகி புதுப்பெண்ணும்‌ மாப்பிள்ளையும்‌ வருவதில்‌ துவங்குகிறது. கரிசல் காட்டில்‌ அலை அலையாய்‌ வீசும்‌ வேனலில்‌ அவர்கள்‌ நடந்து வருகிறார்கள்‌. மணமக்களுக்குத்‌ துணைக்கு வருவதற்குக்‌ கூட ஆள்‌ இல்லை. அதே ஊரில்‌ இன்னொரு பக்கம்‌ பெரிய வீடு எனப்படும்‌ உயர்ந்த சாதி வீட்டுத்‌ திருமணம்‌ ஒன்றும்‌ நடந்து, அந்த மணமக்களுக்கு ஊரே திரண்டு வரவேற்பு கொடுத்துக்‌ கொண்டாடிக்‌ கொண்டு இருக்கிறது.

குங்குமம்‌ கரைந்தோடும்‌ நெற்றியும்‌. எண்ணெய்ப்‌ பசையற்ற தலையுமாக வேர்வை வழிய வரும்‌ மணமக்களை ஊர்க்காரர்கள்‌ மடக்கி, இளவட்ட வெத்திலை வேண்டும்‌ என்று கேட்கிறார்கள்‌. புதிதாகத்‌ திருமணமாகி வருகிறவர்கள்‌ செய்யும்‌ மரியாதை அது. குப்பை வண்டி அடிக்கும்‌ மார்த்தாண்டம்‌ என்ற அந்த புதுமாப்பிள்ளை தன்னிடம்‌ பணமில்லை என்பதால்‌ மறுக்கிறான்‌. அதை நம்ப முடியாமல்‌ மற்றவர்கள்‌ கேலி செய்யவே. வேறு வழியில்லாமல்‌ தன்‌ கையில்‌ இருந்த காசைத்‌ தந்துவிடுகிறான்‌.

திருமணமாகி வந்த இரவில்‌ ஊர்‌ முதலாளி வீட்டில்‌ நடந்த திருமணத்துக்கு ஒயிலாட்டம்‌ ஆடுவதற்காக அவன்‌ அழைக்கப்‌படுகிறான்‌. புது மனைவி பேச்சி போகக்கூடாது என்று தடுக்கிறாள்‌. ஆனால்‌, ஊர்க்‌ கட்டுப்பாட்டுக்குப்‌ பயந்து அவன்‌ போய்விடுகிறான்‌. தங்களுக்கும்‌ அன்றுதான்‌ திருமணமாகி முதல்‌ இரவு என்பதை பேச்சி நினைத்துக்‌ கொண்டு, இருளில்‌ வேதனையோடு உட்கார்ந்தபடி இருக்கிறாள்‌... தொலைவில்‌ ஒயிலாட்டம்‌ நடந்து கொண்டு இருக்கிறது என்பதோடு முடிகிறது கதை.

ஒரு பட்டம்‌ எந்தத்‌ திசையில்‌ திரும்பப்‌ போகிறது. எவ்வளவு உயரம்‌ பறக்கப்‌ போகிறது. எப்போது அறுபடப்‌ போகிறது என்று யாருக்குமே தெரியாது. ஆனாலும்‌. பட்டத்தின்‌ கயிறு நம்மிடம்தான்‌ இருக்கிறது. அதை நாம்தான்‌ இயக்குகிறோம்‌.

ஒரே ஆகாயத்தில்தான்‌ எல்லா பட்டங்களும்‌ பறக்கின்றன. ஆனால்‌, ஒவ்வொரு பட்டமும்‌ ஒரு உயரமும்‌, ஒரு பறத்தலும்‌ கொண்டு இருக்கிறது. இப்படித்தான்‌ இருக்கிறது நம்‌ திருமணக்‌ கனவுகளும்‌!

- நன்றி: கதாவிலாசம், எஸ்.ராமகிருஷ்ணன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!