அவரும் நானும் - க.பஞ்சாங்கம்


கரிசல் காட்டு எழுத்தாளர், சமூகப் போராளி, தோழர் பா.செயப்பிரகாசம் 81ஆவது வயதில் கால வெள்ளத்தில் கரைந்துவிட்டார். மனித வாழ்வில் எதிர்கொள்ள நேரும் எந்த ஒன்றையும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்றே சிந்தித்தல், பேசுதல், எழுதுதல், செயல்படுதல் என்கிற மகத்தான இடதுசாரி மனநிலையில் பார்த்தவர் அவர்.

அவரோடு நெருக்கமாகப் பழகக் கிடைத்த காலம், என் தனிப்பட்ட வாழ்வில் அடர்த்தியாகத் துக்கத்தை அடைகாத்துக் கிடந்த 1977 வாக்கில்தான் அமைந்தது. 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிப் பாளையங்கோட்டையில் சிறை வாழ்வைக் கண்டவர் என்ற முறையில், திமுக ஆட்சிக்கு வந்த 1967-க்குப் பிறகு தமிழ் முதுகலை முடித்திருந்த அவருக்கு மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற புதிய அரசு வேலை கிடைத்தது. இடதுசாரிக் குடும்பத்தைத் தேடிப் பெண் பார்த்துத் திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், 1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், அவருடைய அரசு வேலை போயிற்று.

விளாத்திகுளம் அருகில் உள்ள ராமச்சந்திரபுரம் என்கிற கரிசல் காட்டுப் பூமியில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், வேலை ஏதுமின்றிப் பிள்ளைக் குட்டிகளோடு வாழும் துன்பம் சூழ்ந்த காலத்தில்தான் அவர் புதுச்சேரி வந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றிய தன் அண்ணன் குடும்பத்தின் தயவில் நெருக்கடியான காலத்தைக் கடந்துகொண்டிருந்தார்.

அவரின் இந்த வருகை, ஒரு நகைமுரணாக என் துக்கத்தைத் தணிப்பதற்கான மருந்தாக அமைந்தது. அந்த காலத்தில் இடதுசாரித் தத்துவங்கள், உலக அரசியல், நக்சல்பாரி இயக்கம் குறித்து கடலைப் பார்த்தவாறு அவரோடு உரையாடி அறிந்துகொண்டவை எனக்குள் பெரிதும் உரமாகச் சேர்ந்தன. மீண்டும் தமிழ்நாடு தலைமை செயலகத்தில், செய்தி விளம்பரத் துறையில் அவருக்கு வேலை கிடைத்து சென்னைக்குச் சென்ற பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. 1981ல் தொடங்கி 1991 வரை மக்கள் கலாச்சார கழகம் நடத்திய 'மனஓசை' இதழில் சூரியதீபன் என்கிற புனைபெயரில் ஆசிரியராகச் செயல்பட்டார். ஏறத்தாழ 20 ஆயிரம் படிகள் அச்சடிக்கும் அளவிற்கு இதழை வளர்த்தெடுத்தார். இப்படி இதழ்ப் பணியும் கட்சி வேலையும் தன்னிடமிருந்த படைப்பாற்றலின் வீரியத்தை மழுங்கடித்துவிட்டன என்று ஒரு நேர்காணலில் அவரே பின்னர் ஒப்புக்கொண்டார். எனக்கு 'மனஓசை'  மூலமாகவே அவருடனான உறவு வலுப்பட்டது.

பேராசிரியர், தோழர் கேசவன் வீட்டில் மூன்றாம் அணி அரசியல் குறித்து இரவு முழுக்க நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்று வரக்கூடிய அளவிற்கு எனக்குள் ஆர்வத்தை வளர்த்தெடுத்தவராக பா.செயப்பிரகாசம் விளங்கினார். 

என் வாழ்விலும் இலக்கியத்திலும் வழிகாட்டியாக இருந்தவர் அவர். இன்று அவர் இல்லை. ஆனால், அவர் காண விரும்பிய பொதுவுடமைச் சமூகக் கனவு, மானுடச் சமூகம் இருக்கும்வரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.

- இந்து தமிழ் திசை, 30 அக்டோபர் 2022)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை