எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் - நூல் மதிப்புரை


கோடை வெயிலில் காய்ந்து சருகாய்ப் பறக்கும் கரிசல் மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, அம்மண்ணின் மக்கள் மொழியில் படைத்தளித்த கி.ரா.வின் தனிமனித மாண்புகளை, 'எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்’ என்ற தமது நூலின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் முன் வைத்துள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

மொத்தம் 9 கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூலை நூல்வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கி.ரா.வின் மக்கள் மொழிநடையை விமர்சித்த தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு பதில் சொல்லும் வகையில், மொழியில் ஜனநாயகம் வேண்டும் என்பதை கி.ரா ’திருக்குறளை சீர் பிரிச்சி எழுதிப்போட்டா பத்துப்பேர் புரிஞ்சிப்பாங்க’ என தனக்கே உரிய பானியில் சொன்னதையும் 'மொழியின் மீதான பண்டிதத்தன்மை என்பது மொழியை வளர்க்காது, மொழியில் ஏற்படும் மாற்றம் என்பது, ஆரோக்கியமான உடல் தன் ரத்தத்தை தானே சுத்திகரித்துக்கொள்ளுவது போல. அப்போது பழையன கழியும் புதியன புகும்,’ என்று அவர் சொன்னதையும் அதனடிப்படையில் தமது படைப்புகள் படைத்த கி.ரா.வின் மக்கள் மொழி மீதான தீராக் காதலை, ஆசிரியர் பேசுகிறார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'கி.ரா 95’ நிகழ்வில் உளவுத்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்தை ஆதங்கத்தோடு ஆசிரியர் குறிப்பிடுவதை படிக்கும்போது ஆளும் வரக்கத்தின் மீதான நமது கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. படைப்பாளிகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் அரசுகள் எவ்வாறு வழங்க வேண்டும் என்பதற்கு செக் குடியரசு, அந்நாட்டு விமான நிலையத்தின் முகப்பில் 'இசைக்கலைஞர் மொசார்ட், எழுத்தாளர் காப்கா ஆகியோர் பிறந்த மண் உங்களை வரவேற்கிறது’ என்ற பதாகை தொங்கவிட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். 

கி.ரா அவர்கள் தம் வாழ்வையும் எழுத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை தம் எழுத்தின்படியே வாழ்ந்து வருகிறார் என்பதை, பிள்ளைகளின் ஆசைகளுக்கு சாதி, மதம் மற்றும் பெற்றோர் தடையாக இருக்கக்கடாது என்ற கி.ரா தமது பேத்தியின் திருமண நிகழ்வின் மூலம் அதை நடத்தியும் காட்டியுள்ளதை படிக்கும்போது உள்ளபடியே மனம் பூரிக்கிறது. ஒரு படைப்பாளியின் வளர்ச்சியில் அவருடைய இணையரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கி.ரா.வின் துணைவியார் கணவதி அம்மையார் குறித்து பேராசிரியர் திரு.பஞ்சாங்கம் அவர்கள் 'கி.ரா ஒரு நான்கு கால் மனிதர், தனக்குச் சொந்தமான இரண்டு காலகளோடு கணவதியின் இரண்டு கால்களையும் சேர்த்துத்தான் அவரால் நடக்க முடியும்’ என்று குறிப்பிட்டதை எடுத்துக் கூறி கி.ராவின் வாழ்விலும் படைப்புப் பணியிலும் சக படைப்பளிகளை உபசரிப்பதிலும் கணவதி அம்மையாரின் பங்களிப்பு மற்றும் பண்புகளை அழகாக விவரிக்கிறார் நூலாசிரியர். 

கி.ரா அவர்களை தலித் விரோதி என்று முத்திரை குத்த முயற்சித்த சதியின் அங்கமான அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து விவரிக்கும் இந்நூல் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் கி.ராவின் படைப்புகளான ‘கிடை’ நாவல் மற்றும் 'நெருப்பு’ சிறுகதை போன்ற படைப்புகள் சமூக எதார்த்தமான தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் வெப்பத்தை அளக்கும் வெப்பமானிகளாக இருந்ததையும் இந்நூல் சுட்டியுள்ளது.

எந்த மக்களின் மண்ணிலிருந்து மொழி வடிவங்களை பாரதி எடுத்தானோ அதே மண்ணிலிருந்து உரைநடையை அள்ளி வீசிய கி.ராவை கரிசல் எழுத்தாளர் என்ற பஞ்சாரத்திற்குள் அடைத்துவிடக்கூடாது என்று குறிப்பிடும் ஆசிரியர் கி.ரா.வின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படாததால் அவருக்கான உலக அங்கீகாரம் கிடைக்காமல் போனது என்பதையும் தக்க ஆதரங்களுடன் முன்வைக்கிறார். படைப்பும் வாழ்வும் வெவ்வேறன்று என வாழ்ந்து காட்டிய கி.ரா.வின் வாழ்வைப் பேசும் இந்நூல் தமிழ் சமூகம் படிக்க வேண்டிய அவசியமான நூலாகும்.

- வழக்கறிஞர் பெ.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர், த.மு.எ.க.ச (13 ஜூலை 2021)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்