தருமபுரி அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை



28 நவம்பர் 2012

To: நிர்மலா கொற்றவை

தோழர், முந்திய அஞ்சல் கண்டிருப்பீர்கள். நான் வெளிநாட்டில் இருப்பதால், 30-ஆம் நாள் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் எனது இச்சிறு அறிக்கையை வாசிக்க முடிந்தால் நல்லது. சிறு அளவிலேயே எழுதியுள்ளேன்.

குற்றவாளிக் கூண்டில் ஐ.நா - என்ற குரல் உலகெங்கும் எழுந்துள்ளது. கொலைக்கு நீதி வழங்க வேண்டியவர்களே, கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது மறுக்க இயலாத குற்றச் சாட்டு. அது போலவே சாதீய ஒடுக்கு முறைக்கு எதிராய் நின்றதாய், இப்போதும் நிற்பதாய் பாவனை செய்தவர்கள், இன்று பகிரங்கமாய் குற்றவாளிகளாக நிறுத்தப் படுகிறார்கள்.
புரட்சியாளர் பாலன் வீரத் திருஉரு நிற்கிற அதே நாயக்கன் கொட்டகையில் நடந்த சூரையாடல் எல்லாம் ஒரு நாடகம் என்கிறார் பா.ம.க ராமதாஸ். அதிகரித்துக் காட்டுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களே அவர்கள் குடிசையைக் கொளுத்திக் கொண்டார்கள் என்கிறார்.

"கடந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் வன்னிய குலப் பெண்கள் இருபதுபேர் தாழ்த்தபட்ட சாதியினரால் காதல் நாடகத்துக்கு இரையாகி விரட்டப்பட்டிருப்பதாக," காடுவெட்டி குரு கோபாவேசப்படுகிறார்.
மாமல்லபுரத்தில் பா.ம.க நடத்திய வன்னியர் இளைஞர் மாநாட்டில் "வன்னிய குலப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்ட வேண்டும்; யாரவது நம்ம சாதிப் பெண்களுக்கு, வேற சாதியில் திருமணம் செய்து வைத்தால் தொலைத்துப் போடுவேன்"

மாமல்லபுரத்தில் பா.ம.க நடத்திய வன்னியர் இளைஞர் மாநாட்டில், ராமதாசை வைத்துக் கொண்டே காடு வெட்டிக் குரு பேசியது இது.
கடந்த அக்டோபர் 14-ல் கோவையில் நடைபெற்ற கொங்கு வெள்ளாளர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் "கலப்புத் திருமணச் சட்டத்தை தடைசெய்ய வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மட்டுமல்ல, கூடியிருந்தோரை தீர்மானத்தை வாசித்து உறுதி ஏற்கச் செய்ததாகக் கேள்வி.

"நகரத்தார் சமுகத்துக்குரிய அடையாளங்கள் என சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடல் போன்றவை அவை. இந்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமானால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை, நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும்."

தமிழ்ப் புலமைத்துவம் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்கிற அரசியல்வாதி பழ.கருப்பையா இப்படி வெளிப்படையாகவே வருகிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை என்று வருகிறபோது எந்த அரசியல்வாதியும் விற்பன்னர்களும் ஒன்றாகவே முகம் காட்டிக் கொள்வார்கள். தனக்குள் மறைத்து வைத்திருக்கும் உண்மையான முகத்தை தானே கிழித்துக் காட்டிக் கொள்வார்கள். இதயத்துக்குள் இருக்கும் சாதி உணர்வை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக தலித் மகளை அப்புறப்படுத்துவதில் தமக்குள்ளே ஒன்றாய் இணைகிறார்கள்.

நாம் ஒவ்வொருவருமே நமக்குள்ளிருக்கும் சாதியுணர்வை தொட்டுப் பார்த்து, அகற்றி விட்டோமா என அடிக்கடி சுய சோதனை செய்து கொள்வது நல்லது. தாழ்த்தப்பட்டவர்களை விடுதலை செய்யாத சமூகத்திற்கு விடுதலை இல்லை. இந்த நேரத்திலாவது, இப்போதாவது படைப்பாளிகள் குரல் எழுப்புகிறார்களா என்று தேடுகிறேன். எந்த அடையாளமும் இல்லை. எது பிரச்சினையோ அதைப் பேச இவர்கள் தயாராக இல்லை என்றால் இவர்களுக்கும் மானுடன் என்ற தகுதி நிச்சயமாக இல்லை.

பா.செயப்பிரகாசம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்