நம்‌ மருத்துவர்‌ ஜீவா

நிபுணத்துவம்‌ அவரவர்‌ துறை சார்ந்தது என்று சிலர்‌ கருதுகிறார்கள்‌. ஓரளவு உண்மை இந்த அளவீடு . துறைசார்‌ தேடல்‌, ஆய்வு, பணியாற்றுகை போன்றன நிபுணத்துவம்‌ என்ற போதும்‌, சமூகம்‌ சார்ந்து மக்களுக்குப்‌ பணியாற்றும்‌ உமையோடு தொடர்புடையது நிபுணத்துவம்‌. முனிவர்கள்‌, யோகிகள்‌ தவவலிமையைப்‌ பெருக்கிக்‌ கொண்டு போவதுபோல்‌, சமூகத்துக்குப்‌ பயன்படாத நிபுணத்துவம்‌ பயனில்லா ஒன்றாகிவிடும்‌.

நம்‌ ஜீவானந்தம்‌ ஒரு மருத்துவர்‌. மருத்துவம்‌ இன்றைக்குப்‌ பணம்‌ கொட்டும்‌ தொழில்‌. அறிஞர்‌ பெர்னார்ட்ஷா குறிப்பிடுவார்‌, "ஒருவர்‌ எத்தனை உயிர்களைக்‌ கொல்கிறாரோ, அத்தனைக்குப்‌ பெரிய மருத்துவர்‌. எத்தனை பொய்கள்‌ உரைக்கிறாரோ அவ்வளவுக்கு அவர்‌ நல்ல வழக்கறிஞர்‌". மருத்துவம்‌, வழக்குரைத்தல்‌ போன்றவை மக்கள்‌ நலனுக்காக இல்லாமல்‌, பணம்‌ கொட்டும்‌ வணிகமாக மாற்றப்பட்டதால்‌ உதித்த கருத்து இது.

உடல் நோய்‌ பார்த்தல்‌ போலவே, மனித சமூகத்துக்கும்‌ நோய்‌ உண்டு, மனித சமூக நோய்க்கு மருத்துவம்‌ காண வேண்டுமெனக்‌ கருதும்‌ சமுதாய மருத்துவர்‌ நம்‌ மருத்துவர்‌. சாமானியர்களின்‌ வாழ்வுப்‌ பயன்பாட்டுக்கு மருத்துவத்தைக்‌ கையாளவேண்டுமெனும்‌ அடிப்படையில்‌, அதன்பொருட்டு நிரந்தரமான வழிமுறைகளைக்‌ காணுபவர்‌.

ஒரு எடுத்துக்காட்டு, எழுத்தாளர்‌ கி.ரா.வின்‌ துணைவியார்‌ கணவதி அம்மாவுக்கு ஒருநாள்‌ திடீரென மூச்சுத்‌ திணறல்‌. மூச்சுத்‌ திணறல்‌ தனக்கு வந்தது போல்‌ திணறிப்‌ போனார்‌ கி.ரா. கி.ரா சொன்னார்‌: “திடீரென அம்மாவால்‌ மூச்சு விட முடியாமல்‌ ஆயிற்று. பதறிப்போய்‌ மருத்துவர்‌ ஜீவானந்தத்தைத்‌ தொடர்பு கொண்டேன்‌. உடனே மருத்துவமனைக்குக்‌ கொண்டுபோய்ச்‌ சேர்த்துவிடுங்கள்‌. அவசர சிகிச்சைப்‌ பிரிவில்‌ அவர்களால்‌ தாம்‌ மூச்சுத்திணறலைச்‌ சரிப்படுத்த முடியும்‌'' என்றார்‌. மகன்கள்‌ திவாகரும்‌ பிரபியும்‌ உடன்வர, அரசுப்‌ பொது மருத்துவமனையில்‌ இதயநோய்ப்‌ பிரிவில்‌ உடனே போய்ச்‌ சேர்த்தோம்‌.

மாரடைப்புக்கு முன்‌ வருகிற மூச்சுத்‌ திணறல்‌; அது கணவதி அம்மாவைச்‌ சோதனை செய்து பார்த்துவிட்டுத்‌ திரும்பிப்‌ போயிருக்கிறது. வளர்ச்சி பெற்று, புதிய தொழில்‌ நுட்பங்களுடன்‌ உச்சத்திலிருக்கும்‌ மருத்துவமுறையா? மூச்சுத்திணறலா? யார்‌ முதலில்‌ வெற்றி பெறுவது என்பதில்‌ நடந்த உயிர்ப்‌ பந்தயம்‌ அது. பந்தயத்தில்‌ அம்மா வென்றிருந்தார்‌.

ஈரோட்டிலிருந்து நம்‌ மருத்துவர்‌ ஜீவானந்தம்‌ நேரில்‌ பார்த்துப்போக வந்திருந்தார்‌.

“அம்மாவைப்‌ போல்‌ காப்பாற்றியிருக்க வேண்டிய பல உயிர்கள்‌, பிராணவாயு உருளைகள்‌ (oxygen cylinder) இல்லாததின்‌ காரணத்தால்‌, நம்மை விட்டுப்‌ போயிருக்கின்றன என்றார்‌.

“ஒரு பிராணவாயு உருளை, ஒவ்வொரு ஊரிலும்‌ அவசியமாய்‌ இருக்க வேண்டியது , பல ஊர்களில்‌ இல்லை. சிறுநகரங்களில்‌ வைத்தாவது பேணலாம்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ பொதுவான ஊராட்சி மன்ற அலுவலகத்திலாவது வைக்கலாம்‌. Animator & Mini Primary Health Centre என்ற மருத்துவ ஊழியர்கள்‌ ஒவ்வொரு ஊராட்சிப்‌ பகுதிக்கும்‌ மருத்துவ நலம்‌ காக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்‌. ஒரு பிராணவாயு உருளை சிறிசு 2000 ரூபாய்‌ முதல்‌ 2500-க்குள்‌ கிடைக்கும்‌. ஒவ்வொரு ஊரிலும்‌, ஏன்‌ ஒவ்வொரு வீட்டிலும்‌ வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்‌. அந்த டியூபை வாயில்‌ வைத்துப்‌ பொருத்திக்‌ கொண்டால்‌, பக்கத்து, சிறு, பெரு நகரங்களின்‌ மருத்துவமனைக்குப்‌ போய்ச்‌ சேர்ந்துவிடமுடியும்‌'' என்றார்‌ ஜீவானந்தம்‌.

மாரடைப்பு எந்த வயதில்‌, எந்த நேரத்தில்‌, எந்தப்‌ பருவத்தில்‌ வந்து தாக்கும்‌ என்று எவரும்‌ சொல்லிட முடியாது; பட பட-வென வந்து சடாரென முடித்துவைக்கும்‌; இன்னதுதான்‌ என்று இனங்காணுதற்கு முன்னம்‌, முற்றுகையிட்டு, படையெடுப்பு நடத்தி வெற்றிமுகம்‌ கண்டுவிடும்‌ இந்தப்‌ 'பொல்லாத பய' நோய்‌!

சூழலியல்‌ மட்டுமல்ல, தன்னைச்சுற்றி நடக்கிற அனைத்து அசைவுகளையும்‌ சமூக நோக்கமாய்‌ உணர்ந்தவராய்‌, மாற்றுதற்கான முன்னெடுப்புகளைப்‌ பரிந்துரைக்கும்‌ ஒரு நல்ல ஆத்மா இவர்‌. யு.ஆர்‌.அனந்தமூர்த்தியின்‌, 'இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா' என்னும்‌ நூல்‌ இவரது மொழியாக்கத்தில்‌ வெளிவந்துள்ளது. சிவ்‌.விஸ்வநாதன்‌ என்ற இதழியலாளர்‌, கட்டுரையாளர்‌ இந்நூலின்‌ அணிந்துரையில்‌ ஒரு கருத்தை முன்வைக்கிறார்‌;

“கொள்கை அறிக்கைகள்‌, பிரகடனங்களின்‌ காலம்‌ முடிவடைந்துவிட்டது. மாற்றாக வல்லுநர்களின்‌ புள்ளிவிவரங்கள்‌, தகவல்கள்‌, அறிவிப்புகள்‌ வந்துவிட்டன என்கின்றனர்‌. இவ்வாறு உருட்டிவிடப்படும்‌ கருத்தை முன்வைத்து ஒரு தருக்கத்தை முன்னெடுக்கிறார்‌.

கொள்கை அறிக்கைகளின்‌ காலம்‌ முடிந்து போனதெனில்‌, பொருள்‌ என்ன? இலட்சியங்கள்‌, குறிக்கோள்கள்‌ வெளிப்பாடுகளுடனான வாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டது என அர்த்தம்‌: ஊர்‌ தெரிகிறது: பாதை தெரிகிறது: ஊரெல்லையை அடைந்துவிட்டோம்‌: இனி ஊரும்‌ வேண்டா, பாதையும்‌ தேவைப்படா: எல்லையும்‌ இனி இல்லை: இலட்சியம்‌, குறிக்கோளுக்கான அவசியங்களின்‌ காலம்‌ அற்றுப்போயிற்று என்று முதலாளியம்‌ தீட்டிக்‌ கொடுத்துப்‌ பரப்புரை செய்து வருகிற கருத்தை முன் வைக்கிறார்கள்‌. நம்‌ அறிவுக்‌ குழாமும்‌, அறிந்தோ அறியாதோ பொட்டிட்டுப்‌ பூவிட்டு அலங்கரித்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌. அப்படியான ஒன்று நடக்காமலேயே, இல்லாத மாயத்தை உண்டாக்கித்‌ திசை மாற்றுதல்‌ முதலாளியத்தின்‌ அசுரக்‌ குழந்தையான உலகமயத்துக்குத்‌ தேவைப்படுகிறது.

புவி இருக்கிறது: புவி மீது மக்களினம்‌ இருக்கிறது: மக்களின்‌ வாழ்வியல்‌ இருக்கிறது: வாழ்வியலை நேர் வழியில்‌ அடைய இயங்கும்‌ மக்களும்‌, சுழிப்பு வழியில்‌, சுருக்கு வழியில்‌, குறுக்கு வழியில்‌ அடைந்திட எண்ணும்‌ சுயநலக்கூட்டங்களும்‌ இரு எதிரெதிர்‌ துருவங்களாக இருக்கும்வரை, கொள்கைகள்‌, பிரகடனங்கள்‌ இயங்கியபடியே இருக்கும்‌. இதில்‌ ஐயமேதுமில்லை.

கொள்கை அறிக்கைகளுக்கு சில இலக்கணங்கள்‌ உண்டு என்கிறார்‌ மருத்துவர்‌ வெ.ஜீவானந்தம்‌. "சிறந்த அறிக்கை என்பது உரையுடன்‌, உரைநடையும்‌ இணைந்து அரசியல்‌ எழுச்சியூட்ட வேண்டும்‌: சிறந்த அறிக்கைப்‌ பேச்சு மற்றும்‌ எழுத்து மரபை நிறைவு செய்வதாக அமையவேண்டும்‌. உரக்கப்படிக்கும்‌ அறிக்கை போல, அதில்‌ குரலின் வளம்‌ கொண்டாடப்‌ படவேண்டும்‌. அது மேற்கோள்‌ காட்டத்தக்கதாக, சிறந்த நடையாற்றல்‌ கொண்டதாக அமையவேண்டும்‌'' என்று சொல்கிறார்‌.

கொள்கை அறிக்கை அல்லது முழக்கமானது மொழியின்‌ அத்தனை சாத்தியங்களையும்‌, அறிவுச்சேகரிப்பின்‌ அத்தனை முதுசத்தையும்‌ உள்ளடக்கி வெளிப்பட்டிருக்க வேண்டும்‌. கிரேக்கத்‌ தத்துவ ஞானியான சாக்ரடீஸ்‌ “உன்னையே நீ எண்ணிப்‌ பார்‌” என்று இளைய காளைக் கூட்டத்தினை நோக்கி ஆற்றிய உரை ஒரு ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னான ஒரு பிரகடனம்‌ அல்லவா?

"உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்‌,

இழப்பதற்கு என்ன உண்டு?

இரு கைவிலங்குகள்‌ தவிர”

மார்க்ஸ்‌-ஏங்கெல்சின்‌ கம்யூனிஸ்ட்‌ அறிக்கை, சிறந்த சான்றல்லவா?

அந்தத்‌ தடத்தில்‌ ஒரு புதிய பிரகடனம்‌ பெரியாரின்‌ “பெண்‌ ஏன்‌ அடிமையானாள்‌?''. ''ஜாதி ஒழிய வேண்டும்‌, ஏன்‌?'' மற்றும்‌ சுயமரியாதைப்‌ பரப்புரைப்‌ பொழிவுகள்‌ போன்ற பிரகடனங்கள்‌.

இன்றைய சமுதாயம்‌ கருத்தில்‌ ஏற்கத்தக்கவை அனந்தமூர்த்தியின்‌ கருத்துக்கள்‌; ஜீவானந்தம்‌ வழிமொழிகிறார்‌;

“இந்துத்துவா சாவர்க்கர்‌ இடுவது கட்டளை : காந்தியின்‌ இந்திய சுயராஜ்யம்‌ நெருக்கமான பகிர்வு, உரையாடல்‌ : இந்துத்வா பழமையின்‌ புகழ்ப் போதையில்‌ ஆடுகிறது. வியாசரின்‌ பாரதம்‌ அனைத்தும்‌ வஞ்சகம்‌, வசை, ஏமாற்று, பாலியல்‌ வன்முறை, மூர்க்கத்தனம்‌, பகை, அடிமைத்தனம்‌ நிறைந்தனவாக உள்ளது; சாவர்க்கார்‌ இவைகளுக்கு வாசனைத்‌ திரவியம்‌ பூசி மணக்கச்‌ செய்கிறார்‌” (இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா? பக்கம்‌ 9, 10)

இத்தனை மோசமான மனித இயல்களுக்கு மாற்றாக எழுந்தது புதுமைப்பித்தனின்‌ “சாப விமோட்சனம்‌”. பின்னர்‌ வந்த மாற்றுக்குரல்‌ மராட்டிய எழுத்தாளர்‌ வி.ஸ.காண்டேகரின்‌ 'யயாதி'”. தொடர்ந்து கேள்விக்‌ கணைகளின்‌ அம்புறாக்கூடாக எழுகிறது இந்தியில்‌ நந்திகிஷோர்‌ ஆச்சார்யாவின்‌ “மகாபாரதத்தில்‌ பெண்ணியம்‌” என்னும்‌ இரு நாடகங்கள்‌! இவை எதிர்க்கேள்வியில்‌ முளைவிடுகிற மாற்று, முன்னகர்வு!

மாற்றைக்‌ காணுகிற தாகமும்‌ முன்னகர்வு வேகமும்‌ கொண்டிருப்பதினால்‌, அனந்தமூர்த்தியின்‌ நூலைத்‌ தமிழில்‌ தந்திருக்கிறார்‌ நம்‌ மருத்துவர்‌.

"இந்தியாவின்‌ முன்‌ இரண்டு வழிகள்‌ உள்ளன. ஒன்று உலகப்‌ பார்வைகொண்டு அனைவரையும்‌ அணைப்பது. மற்றது பன்முகத்‌ தன்மைகளை மறுத்து, பல மொழிகள்‌, பல இனங்கள்‌, பல பண்பாடுகள்‌ ஆகியவற்றை ஒழித்து ஒன்றுபடுத்துவது... சாவர்க்கரின்‌ எழுத்து வெறியூட்டுவது;காந்தியின்‌ விவாதம்‌ சுயதரிசனமாக, சுய ஆய்வாக அமைவது.வன்முறையால்‌ அதிகாரத்தைப்‌ பிடுங்குவது சாவர்க்கரின்‌ யுத்தி; காந்தி உன்னை நீயே விடுவிப்பது உண்மை விடுதலை என்கிறார்‌. சமூகம்‌ காட்டுமிராண்டித்‌ தனத்துக்குத்‌ திரும்பாமல்‌ தடுப்பது காந்தீயம்‌. சாவர்க்கர்‌ மதச்‌ சமூகத்தை உருவாக்கும்‌ பகுத்தறிவுவாதி. காந்தி எந்த மதமும்‌ முழுமை பெற்றதல்ல எனக்‌ கருதுபவர்‌. எனவே, ஒவ்வொரு மதத்தையும்‌ அதன்‌ உண்மைக்காக ஏற்று மதிக்க வேண்டுமென்கிறார்‌. சாவர்க்கரின்‌ நாடு ஒரு இனத்துக்குரியது, காந்தியின்‌ நாடு தெளிந்த வானம்‌ போல்‌ பரந்தது. புனிதமானது.”

இவ்வாறெல்லாம்‌ எழுதியதால்‌, யு.ஆர்‌.அனந்தமூர்த்தியைப்‌ “பாகிஸ்தானுக்குப்‌ போ'' என்று கூக்குரலிட்டனர்‌ இந்துத்துவவாதிகள்‌. “வெள்ளையனே வெளியேறு'' என்ற நல்முழக்கத்துக்குப்‌ பிறகு, ஒரு நூற்றாண்டின்‌ பின்‌ கேட்ட கேடுகெட்ட முழக்கம்‌ இதுதான்‌.

யு.ஆர்‌.அனந்தமூர்த்தியின்‌ கொள்கையில்‌ உடன்பாடும்‌, இன்றைய மோசமான அரசியல்‌ பருவ நிலை பற்றித்‌ தெளிவான கணிப்புமிருப்பதால்‌, “இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா?” என்னும்‌ நூலைத்‌ தமிழில்‌ தந்திருக்கிறார்‌ நம்‌ மருத்துவர்‌ ஜீவா.

- பா. செயப்பிரகாசம் (அக்டோபர்‌ 2021)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்