கூட்டறிக்கை - கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிக

26 ஆகஸ்ட் 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பகுதியிலுள்ள சக்தி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் மேனிலை வகுப்பில் பயின்று வந்த சிறீமதி எனும் மாணவி சூலை 13 - ஆம் நாளன்று ஐயத்திற்கு இடமான முறையில் மர்ம மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், பொதுமக்களும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.


தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காததால், தமிழ்நாட்டிற்கு வெளியே இந்திய அளவில் இவ்விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாணவியின் தாயாரின் அவலக்குரலுக்கு ஆதரவாக, தன்னெழுச்சியான பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகும்கூட, காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 

அதனால் சூலை 17-ஆம் நாள் ஒன்றுகூடிய பெருமளவிலான போராட்டத்தில் ஒரு கும்பல் புகுந்து பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி ஆதாரங்களை அழித்துள்ளது. இதன் விளைவாகக் கொலைக்குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வன்முறை என்ற பெயரில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் விசாரணை அமைப்பு (சிபி-சிஐடி) இப்பொழுது இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறியப் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறந்த மாணவியின் மரணத்தின் மர்மம் விலக வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே போராடுபவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், இவ்வழக்கு தொடர்பாகக் காவல்துறையிடமிருந்து வரும் செய்திகள், மாணவியின் மரணம் தொடர்பாக எதுவுமின்றி, பள்ளி மீதான தாக்குதல் தொடர்பாக மட்டும் இருப்பதென்பது காவல்துறையின் நடவடிக்கை பள்ளி நிர்வாகத்திற்குச் சார்பாகவே அமைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அப்பள்ளியின் உரிமையாளர் இந்துத்துவ அமைப்பைப் பின்புலமாகக் கொண்டவர். மேலும் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகள், அப்பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. எனவே இச்சிக்கலில் அரசியல் அழுத்தம் இருக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது.

மேலும் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்கள், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என உளவுத்துறை தெரிவித்ததாகச் செய்தி வெளிவந்தது. ஆனால், கனியமூர் பகுதியில் அப்படிப்பட்ட சாதிப்பாகுபாடு எதுவும் இல்லை என்பதைக் களநிலவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. எனவே பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்காகவே இப்படிப்பட்ட திசைதிருப்பும் செய்திகள் பரப்பப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட செய்தியைத் தாங்கள் வெளியிடவில்லை என உளவுத்துறை மறுத்துள்ளது. அப்படி என்றால், இச்செய்தியை வெளியிட்டவர் யார், அவரது உள்நோக்கம் என்ன என்பது குறித்து மிக விரிவாக விசாரிக்க வேண்டிய கடமை தமிழகக் காவல்துறைக்கு உள்ளது.

இந்துத்துவப் பின்னணி கொண்ட பள்ளியின் நிர்வாகிகளைக் காக்கவும், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கினைத் திசை திருப்பவும், சாதிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும் இச்செய்தியைப் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதே போல், இறந்துபோன மாணவியை இழிவுபடுத்தும் வகையிலும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. பள்ளி குறித்துத் தவறான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்கும் காவல்துறை, மாணவி குறித்துத் தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவில்லை. இது போன்ற அறமற்ற செய்திகளை வெளியிடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முனைய வேண்டும்.

தமிழகத்தையே உலுக்கிய மாணவியின் மர்ம மரணம் குறித்து நடுநிலையோடும், வெளிப்படைத் தன்மையோடும், எவ்விதப் பக்கச்சார்புமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே வேளை, முதல் உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் இயற்கைக்கு மாறாகச் சில காயங்கள் மாணவியின் உடலில் உள்ளது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகைகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரப்பட வேண்டும். இல்லாவிடின் விசாரணையின் நடுநிலைத்தன்மை குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலாது.

சூலை 17 அன்று பள்ளி மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி உண்மைகளைக் கண்டறிந்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த தாக்குதலில் ஒரு சிறிதும் தொடர்பு இல்லாத இளைஞர்கள், அப்பாவிகள், பொதுமக்கள் எனப் பலரையும் வகைதொகை இன்றிக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல! அது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தவிரவும், இந்த நடவடிக்கையில் சாதிச் சங்கக் குண்டர்கள் பயன்படுத்தப்பட்டதைத் தடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

முதல் 4 நாள்கள் போராடியவர்களைத் தாண்டி, வெளியிலிருந்து வந்த ஒரு பெருங்கூட்டமே பள்ளியைத் தாக்குவதிலிலும், சான்றுகளை அழிப்பதிலும், சொத்துக்களை நாசப்படுத்தியதிலும் பங்கேற்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்காணிப்புக் காமிரா மூலம் கண்டறிந்து, உரிய ஆதாரங்களுடன் அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதுதான் அரசின் மீதான அவப்பெயரை நீக்குவதாக அமையும்.

அதைத் தவிர்த்துக் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்திக் கைது செய்வது சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரான செயலாகும். இது அப்பகுதியின் சமூகச் சூழலைச் சீர்குலைக்கும். அரசுக்கு எதிரான கோபத்தை விதைக்கும்.

ஒரு வகையில், காவல்துறையின் அலட்சியமும், பக்கச்சார்பு நிலையுமே இப்பிரச்சனைக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பில் தீவிரப் பங்காற்றிய பள்ளி நிர்வாகத்தினர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் கோரியே பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் மக்கள் திரள் போராட்டங்களைச் சனநாயக முறையில் நிகழ்த்தினர். அப்போராட்டத்தின் நியாயத்தைக் காவல்துறை திட்டமிட்டுத் தவிர்த்ததாலேயே மக்கள் அவநம்பிக்கை அடைந்தனர். எனவே
பள்ளி நிர்வாகிகள் மீதும், சந்தேகிக்கப்படும் நடவடிக்கைகளில் தொடர்புடைய நபர்கள் மீதும் தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். 

இந்துத்துவச் சார்புப் பள்ளிகள் தொடர்ந்து நெருக்குடிக்குள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளியின் மீது தமது சினத்தைக் காட்டிய வெகுமக்கள் மீதான வேட்டையை மட்டும் தீவிரப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது காவல்துறை. மேலும் இந்நிகழ்வு குறித்த விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருவது, மக்கள் மனதில் மென்மேலும் ஐயத்தை உண்டாக்குகிறது.

தமிழகமே கண்காணித்து வரும் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கிறிஸ்டினா சாமி
அகில இந்தியத் தலைவர், சுயாட்சி இந்தியா. 

கொளத்தூர் மணி 
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கு.இராமகிருஷ்ணன்
பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழகம்.

தியாகு 
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

பொழிலன் 
ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி.

கார்முகில்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு மார்க்சிய - இலெனினியக் கட்சி.

த.செயராமன் 
நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம். 

சுப. உதயகுமாரன் 
தலைமைப் பணியாளர், பச்சைத் தமிழகம் கட்சி. 

ப.பா. மோகன் 
மூத்த வழக்கறிஞர்.

தி. துரைசித்தார்த்தன் 
பொதுச் செயலாளர், மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி.

நிலவழகன் 
தலைவர், மக்கள் தமிழகம் கட்சி. 

கே. பாலகிருஷ்ணன் 
தமிழ் மாநிலத் தலைவர், சுயாட்சி இயக்கம்.

செந்தமிழ்வாணன் 
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம். 

ப.பா. ரமணி 
மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

ஆசீர்வாதம் 
ஒருங்கிணைப்பு குழு, மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு.

கண. குறிஞ்சி 
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை.

கி.வே.பொன்னையன் 
தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்,

விடியல் பதிப்பகம் 
கோவை.

பா.செயப்பிரகாசம் 
எழுத்தாளர். 

பொதியவெற்பன் 
ஆய்வாளர்.

இராமசாமி துரைப்பாண்டி 
எழுத்தாளர்.

தமிழ் இராஜேந்திரன் 
நிறுவனர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மன்றம்.

நிலவன் 
தலைவர், நீரோடை அமைப்பு. 

வழ.பாவேந்தன் 
தலைமைக் குழு, தமிழ்த்தேச நடுவம். 

தமிழ்ச்செல்வன் 
தலைவர், தமிழர் கழகம் (கட்சி)

செள. சுந்தரமூர்த்தி
பொதுச்செயலாளர், தமிழக விடுதலைக் கழகம்,

தெய்வமணி 
பொதுச்செயலாளர், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்.

செல்வமணியன் 
பொதுச் செயலாளர், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி.

சுப்பு மகேசு
பொதுச் செயலாளர், தமிழர் உரிமை இயக்கம்.

தங்க. குமரவேல் 
பொதுச்செயலாளர், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்.

ஒப்புரவாளன் 
இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்