பண்டைக்கால இந்தியா - அணிந்துரை

 


இந்திய சரித்திரத்தை எழுத வலது கால்‌ வைத்தவர்கள்‌ வேதங்கள்‌, ஸ்மிருதிகள்‌, உபநிஷதங்கள்‌, இதிகாச புராணங்களில்‌ மூழ்கினார்கள்‌. மூழ்கி, முக்குளித்து மேலெழுந்த அவர்களின் கைகளில்‌ சிப்பிகளும்‌, சங்குக்‌ கூடுகளும்‌, புல்‌ பூண்டினங்கள்‌ மட்டுமே வந்தன. வரலாற்று வரிசையாக இந்திய சமுதாயம்‌ உருவாகி வளர்ந்ததை மறுத்தார்கள்‌. பகுத்தறிவுப்‌ பூர்வமான வரலாற்றுப்‌ பொருள்‌ முதல்‌ வாதத்தை, மறுப்பதென்பது அவர்களுக்கு நோக்கமாகி விட்டது. நோக்கத்தை நோக்கி இட்டுக்கட்டி, ஒட்டுச்சுவர்‌ வைத்து, அண்டக்‌ கொடுக்க முயன்றார்கள்‌.

இந்தப்‌ பாதையில்‌ இந்திய சமுதாய வரலாற்றைப்‌ பயின்ற அவர்கள்‌ சென்று சேர வேண்டிய இடம்‌ பற்றி தெளிவாக இருந்தார்கள்‌. “நாம்‌ நமக்குச்‌ சொந்தமான ஒரு புதிய பொருளைப்‌ படைத்துக்‌ கொள்வோம்‌. அது காந்தீய சோசலிசம்‌". அவர்சளின்‌ எல்லை இதுவாக இருந்தது.

இந்திய உடைமை வர்க்கமும்‌, அதன்‌ அறிவாளிக்‌ கூட்டத்தினரும்‌ பிரித்தானிய கொடுங்கோலங்களுக்கு எதிராக வைத்த ஒவ்வொரு அடிவைப்பும்‌, இந்தத்‌ திசையில்‌ தான்‌ எழுந்தது. தனது நலன்களை முன்னிறுத்தியே, அதே நேரத்தில்‌ சகல மக்களுக்கும்‌ விமோசனம்‌ தருவதாகப்‌ பிரச்சாரம்‌ செய்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பில்‌ பழம்‌ பெருமை, புராதன பாரம்பரியம்‌ இவர்களுக்கொரு ஏணிப்படிகளாகின.
"பாரத நாடு பழம்பெரு நாடு -
நீரதன்‌ புதல்வர்‌ இந்நினைவகற்றாதீர்‌"
என்று பேசித்தான்‌ எழுப்பினார்கள்‌.
"யாகத்திலே தவ வேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம்‌
அருளினிலே யுயர்‌ நாடு"
என்று பாடியதெல்லாம்‌, இதல்லாமல்‌ வேறென்ன?
“வந்தனை கூறி மனதிலிருத்தியென்‌
வாயுறவாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம்‌, வந்தே மாதரம்‌
என்று வணங்கேனோ?”
என்று கொண்டு கூட்டிச் சேர்ப்பதற்கு அல்லாமல், இதெல்லாம் வேறில்லை.

வங்க நாவலாசிரியர் பக்கிம்சந்திரர் 'ஆனந்த மடம்' வந்தடைந்தார். திலகர், விநாயக பூசையைக் கையில் எடுத்தார். திலகரும், காந்தியும் விடுதலைப் போரை நிகழ்த்த பழைய ஆயுதங்களை ஏந்தினாலும் காந்தி ஒரு புது 'மோஸ்தரில்' அம்பு விட்டார்.

இன்றைய இந்தியாவை அல்லோகல்லோலப்படுத்திக்‌ கொண்டிருக்கும் 'இந்துத்வா' கோட்பாடுகளுக்கு இது தொடக்கம்.

"வரலாற்றுக் கருத்தோட்டத்தில் பண்டைக்கால ஆவணங்களை எட்டி பார்க்கும் சிறு முயற்சிகளைக் கூட இந்து வைதிகமும், இந்திய உடமை வர்க்கமும் தடுத்து விட்டன" என்கிறார் டாங்கே. அதை பின்வருமாறு விவரிக்கிறார்.

"ஏனெனில் அவை சமுதாய உண்மைகள், அறம், ஒழுக்கம் ஆகியவை குறித்து, அவர்கள் இன்று கொண்டிருக்கும் கருத்துகளுக்கு விரோதமாக இருந்தன .... அப்படிப்பட்ட விசயங்கள் ஒரு காலத்தில் இருந்தன என்ற அவமானத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.... இந்துக்கள் மத்தியில் குடும்பமும் திருமண உறவுகளும் வளர்ந்ததைக் குறித்து ஒரு மாபெரும் நூலை புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராஜ்வதே எழுதத்‌ தொடங்கியபோதே, மராட்டியத்திலுள்ள இந்துப்‌ பத்திரிகைகளும்‌ இந்து வைதீகமும் அவருக்கு எதிராகவும், பதிப்பாளருக்கு எதிராகவும் அபாயச் சங்கு அலறின. அந்த நூல் முற்றுப்பெறவே இல்லை. முற்றுப்பெறாமலே ஓராண்டில் நூலாசிரியர் மரணமடைந்தார்" (பக் - 31)

அவர்‌ மார்க்சியவாதியல்ல; அவர்‌ பொருள்‌ முதல்‌வாதியுமல்ல. தெய்வ பக்தியில்லாதவருமல்ல; அவரே ஒரு வைதீக இந்து. ஆனால் வரலாற்று உண்மைகளும்‌ அதன்‌ மீதான கருத்துக்களும் ஏனைய எல்லாவற்றையும்‌ விட உயர்ந்தவை என்று அவர்‌ கருதினார்‌.

இது போன்ற ஆய்வுகளின் அடிவேரிலேயே கோடாரி வீசியதுதான்‌, இந்திய வரலாறாக இருக்கிறது.

வைதீகக் கருத்துகளுக்கு எதிராக அறிவியல்‌ கருத்துகளை வைத்த புவியியல் ஆராய்ச்சியாளரான கலிலியோவுக்கு வரலாற்றில் என்ன நேர்ந்ததோ, அதுதான் ஒரு வகையில் ராஜ்வதேவுக்கும், ஐயஸ்வாஸ் என்ற இன்னொரு வரலாற்று அறிஞருக்கும்‌ நேர்ந்தது. ஐயஸ்வாஸ் எழுதிவைத்த 'பண்டைக்கால இந்திய கண அமைப்புகள், அக்காலத்து நிலவிய குடியரசுகள்' பற்றிய குறிப்புகள் திருடப்பெற்று அந்நூல் வெளிவராமலே தடை செய்யப்பட்டது.

அதே வேதங்கள்‌, ஸ்மிருதிகள்‌, உபநிஷத்துகள்‌, இதிகாச புராணங்களில்‌ தான், வரலாற்று அறிவியல்‌ கண்ணோட்டத்தோடு மார்க்சிய ஆய்வாளர்‌களும்‌, கிளறினார்கள்‌. எதை, எதை இல்லை என்று வைதீகர்சள்‌ சொன்னார்களோ, அதையெல்லாம்‌ உண்டு, உண்டு என்று அவைகளிலிருந்தே நிரூபித்திருக்கிறார்‌ தோழர்‌ டாங்கே. ஐரோப்பியச்‌ சூத்திரங்கள்‌ என்று வரலாற்று இயல்‌ பார்வையை வைதீகர்கள் போல்‌ ஒதுக்கியிருந்தால் உலக வரலாற்று நீரோட்டத்துக்‌குள்ளேயே நாம்‌ வராமல்‌ ஒதுக்கப்பட்டிருப்போம்‌. இந்த ஆபத்து, எஸ்‌.ஏ.டாங்கே, சிறையில்‌ அடைக்கப்பட்ட காரணத்தால்‌ நல்ல வேளையாக தவிர்க்கப்பட்டது.

போராளிகளுக்கு ஓய்வு கிடைக்கிற இடம்‌ சிறைக்கூடம்‌; சமுதாயத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ போராட்டத்தில்‌ இருப்பவர்களுக்கு, அவர்களுடைய உழைப்பும்‌ நேரமும்‌ அவர்கள்‌ கைவசம்‌ இருப்பதில்லை. அதற்கான சூழலை சிறைக்கூடமே அளிக்கிறது. கல்வியை - சிந்தனையை ஒருமுகப்‌படுத்தி சிந்திக்கிற பாசறையாக ஆகிவிடுகிறது. சிறைப்பட்டிருந்த காலத்தில்‌, சிறைக்குள்ளிருந்து குறிப்புகள்‌ தயாரித்து, இந்திய சமுதாய வரலாற்றை எழுதி, டாங்கே தோழராக மட்டுமல்ல, வரலாற்று அசிரியராகவும்‌ மெருகூட்டியிருக்‌கிறார்‌. எந்தத்‌ திசையில்‌ வரலாற்றை எடுத்துச்‌ செல்ல வேண்டுமென அவர்‌ எக்காலமும்‌ பாடுபட்டாரோ, அதே திசையில்‌ வரலாற்றை எழுதிச்‌ செல்ல சிறைக்காலமும்‌ பயன்பட்டிருக்கிறது.

வரலாற்றுப்‌ பொருள்‌ முதல்‌வாத துணை கொண்டு, இந்திய சமுதாயம்‌ வளர்ந்து வந்த வரலாற்றை துலக்கப்படுத்த முனைந்த முயற்சியே இந்த நூல்‌. இது காலப்‌ பெட்டகம்‌; இந்திய அளும்‌ வர்க்கங்கள்‌ எங்கெங்கோ காலப்‌ பெட்டகங்களைப்‌ புதைக்கிற வேளையில்‌ அந்த ஆளும்‌ வர்க்கங்களின்‌ வரலாறும்‌ இந்தக்‌ காலப்‌ பெட்டகத்திற்குள்ளே கிடக்கிறது.

கடக்க முடியாத ஒரு கடல்‌ தெரிந்தது; மூவாயிரம்‌, நான்காயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்ட இருண்ட கடல்‌; வரலாற்று விஞ்ஞானம்‌ பாய்ச்சப்பட்டதும்‌, இருட்டுக்‌ கடல்‌ பிளந்து தெளிவாக வழிவிடுகிறது. கடலடியில்‌ கிடக்கும்‌ புல்‌ பூண்டுகள்‌, உயிரினங்கள்‌ இதுவரை கண்மறைப்பாக இருந்தனவெல்லாம்‌, திட்‌டவட்டமான காட்சியாகின்றன.

“பண்டைக்கால இந்தியா” நூலில்‌ எடுத்து விளக்கப்படுகிறவை வரலாற்று நிகழ்வுகள்‌. முந்தைய வரலாற்றில்‌ வெளிச்சத்தைப்‌ பாய்ச்சும்‌ முறையை சமகால வரலாற்றின்‌ மீதும்‌ வீச முடியும்‌. நாடக மேடையின்‌ மீது மட்டுமல்ல. அந்த ஒளி விளக்குகளை மேடைக்கு முன்னால்‌ இருக்கிற பார்வையாளர்கள்‌ மீதும்‌ வீசி முகங்களைக்‌ காட்ட முடிவது போல சமகாலச்‌ சூழல்கள்‌ மீதும்‌ ஒளிவெள்ளம்‌ தருகிற வரலாற்று இயல்‌ ஆய்வு இந்நூல்.

- பா. செயப்பிரகாசம்‌, 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்