யுகசந்திக் கதைகளின் நூற்றாண்டு

எவரொரு இலக்கியக்காரராக இருந்தாலும், முதலில் கவிதையில் தொடங்குவார்: அல்லது கதையில் தொடங்குவார். இவ்விரு புள்ளிகளிலும் தொடக்கம் கொள்ளாத இலக்கியாவாதியைக் காணுவது ரொம்பவும் அபூர்வம்.  இது யதார்த்தம், இயல்பு.

புறத்தில் இயங்கும் சமூகம் கலைஞனது அகத்தில் தாக்கம்செய்து – அவனது அனுபவங்களைப் பாதித்து, பின்னர் தன் சுயானுபவங்களுடன் கூடிப் படைப்பு வெளிப்படுகிறது. ஒன்று எவ்வாறு நிகழ்கிறதோ, அல்லது நிகழ்ந்ததோ அவ்வாறவ்வாறே வெளிப்படுவது கலையல்ல; கலையின் ரசாயனம் நிகழ்த்தப்பட வேண்டும்.

’விளக்கு மாற்றாலே அடி’ – இது ஒரு சொல்லாடல்: 

“ஒன்னைய அடிக்காத விளக்குமாறு வீட்டில இருக்கலாமா?” 

என்கிறாள் ஆத்திரம் கொண்ட ஒரு தாய் தன் பெண்ணை நோக்கி. 

முன்னது வசவு. பின்னது கலை.

ஒரு சொல்லை எந்த இடத்தில், எந்தச் சூழலில் வினையாற்ற வைத்தல் என்பது தேர்ந்த கலைஞன் நடத்தும் களைக்கூத்து. அது ஒரு கண்கட்டி வித்தை. இந்தக் கலைச் சாதுரியம் கலைஞன் கைவசப் படவேண்டும். இவ்வகையில் ஒவ்வொரு எழுதுகோலுக்கும் ஒரு சிந்தனைப் பார்வை தொழிற்படுகிறது. இப்பார்வையில் ஒருவர் வாழும் முறை, வாழ் நிலை, வளர்ப்பு, அவர் உருவாதல், குடும்பம், குடும்பம் தாண்டிய வெளி, உறவுகள் எனப் பல புள்ளிகள் வினையாற்றுகின்றன.

தமிழின் முதல் சிறுகதை எது? சிலர் பாரதியின் ‘பஞ்சவர்ணக் கோட்டை’ –  என்பர்;  இல்லை, வ.வே.சு.அய்யர் வடித்த “குளத்தங்கரை அரசமரம்” என்பார் சிலர். இல்லை இல்லை, தரங்கம்பாடி அருட்திரு சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய "சரிகைத்தலைப் பாகை"  தான் முதல் சிறுகதை என அடித்துச் சொல்வார் “வாத்தியார் நாவல்” ஆர்.எஸ்.ஜேக்கப். 

ஆய்வின் பொருட்டு வ.வே.சு.அய்யரின் “குளத்தங்கரை அரசமரம்” என்பதையே  முதல் கதை என ஏற்றுக்கொள்வோம். குளத்தங்கரை அரசமரம், தன்னைச் சுற்றி – ஊர்ச் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை எடுத்துச் சொல்கிறது. அபலைக் கதாநாயகி குளத்தில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்வதை – தான் காணச் சகிக்கவொண்ணா உயிரழிப்பை விவரித்து முடிக்கிறது.

வ.வே.சு.அய்யர் பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘சக்கரவர்த்தினி’ என்ற இதழ் நடத்தினார். அந்த இதழில் இக்கதை வெளிவந்தது. அவ்வாறெனில் இக்கதை வெளிப்பாட்டில் பெண் விடுதலையை உணர்த்துமொரு கூர்த்த அரசியல் ஊடாடுகிறதா, இல்லையா? தமிழில் தோற்றமெடுத்த முதல் கதையே, என்ன பார்வை, எங்குப் பயணம் என ஒரு சேதியை முன்னுணர்த்துவதாக இல்லையா?

1918–ல் எழுதிய “மறுமலர்ச்சி” என்னும் கட்டுரையில் வ.வே.சு. அய்யர் குறிப்பிடுகிறார். “சாதிய சலனங்கள் எல்லாவற்றுக்கும் இலக்கியம் அளவுகோல். நம் பாஷையிலும் கற்றோர் எழுதிப் பொதுசன அறிவை உயர்த்தி, அதற்குப் பேருணர்ச்சி உண்டாக்க வேண்டும்.….. கதைகள் ரஸம் பொருந்தியவையாயிருப்பதோடு, பெருநோக்கம் கொண்டவையாயிருத்தல் வேண்டும்”

‘பொது சன அறிவை உயர்த்தி அதனைப் பேருணர்ச்சி கொள்ளச் செய்தல்– பெரு நோக்கம் கொண்டதாயிருத்தல்’ – என்பன போன்ற வாசகங்கள்  முற்போக்குக்கான தெளிவான ஆரம்ப காலச் சட்டகம் எனக் கொள்ளலாம்.  இலக்கியத்தின் சமுதாயப் பயனை உணர்தலும், உணர்த்தலுமே முற்போக்கு என்பதின் அர்த்தமாகிறதல்லவா?

ஒரு இலக்கியப் படைப்பை எவ்வாறு மதிப்பிடுவது? படைப்பு உருவாக்கமும் அதன் மதிப்பீடும் காலம், வரலாறு, சமுதாய நிலை, சூழல் சார்ந்ததெனினும், அவ் ஆக்கம் எந்தக்கருத்து மூலத்திலிருந்து - எப்பார்வையிலிருந்து உருவாக்கம் கொள்கிறது என்ற கேள்வி முதன்மையானது. ஒரு பொருள் தரமாக இருக்கிறதா இல்லையா என்ற நிர்ணயத்தை எதிலிருந்து பெறுகிறோம்? அப்பொருள் எதிலிருந்து உண்டாக்கப்பட்டது, அதன் பயன்பாடு, எவ்வளவு காலம் நிலைக்கும் போன்ற வினையாற்றலிலிருந்து தரம் நிச்சயிக்கப்பெறும்; இலக்கியப் படைப்புத்திறன் எனப்படுபவையும் நோக்கு, வினையாற்றல், பயன்களிலிருந்து தீா்மானிக்கப்பட வேண்டும். ’கலை, இலக்கியம் என்பன  சிந்தனை, உணா்வுகளிலான நுண்மையான வெளிப்பாடுகள்; இதில் பயன், வினையாற்றல் என்ற பருப்பொருட்களுக்கு இடமில்லை’ என பயன்பாட்டுப் புள்ளியைப் பின்தள்ளி, ரசனை அனுபவம் ஒன்றை மாத்திரமே முன்னிறுத்தி - அதுவே கலைப் படைப்பின் உயரிய நோக்கம் என முன் வைத்த காலம் மலையேறிவிட்டது . 

“யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; எதை எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன் வைக்கும் சவால்” என சக எழுத்தாளாரான ஜெயஸ்ரீ குறிப்பிடுவது  ஒரு இலக்கியப் படைப்புக்கான அளவுகோல். எதை எழுதுதல் என்பதுதான் ஒரு எழுதுகோல் தொழிற்படுதலின் பயன். 

1930–களில் தமிழக மக்களிடையில் நாட்டு விடுதலைக்கான அரசியல் விழிப்புணர்ச்சி பரவிற்று. 1930 – ல் மணிக்கொடி இதழ் தொடங்கப் பெற்றது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என அறியப்பட்ட வ.ரா, கு.பா.ரா, ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்பிரமணியன், மௌனி, பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் போன்றோர் விடுதலைப் போராட்ட காலத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும், விடுதலைப் போராட்ட உணர்வுகளை அதிகம் கையாளவில்லை. மணிக்கொடி வரிசையில் பின்னர் இணைந்தவர்களான சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, ந.சிதம்பர சுப்பிரமணியத்தின் ‘கண்ணில் தெரியுது வானம்’ விடுதலையுணர்வை வெளிப்படுத்தி எழுதப்பட்ட கலையம்சம் கொண்ட படைப்புக்களாகும். 

மணிக்கொடியினர் அக்காலகட்ட விழிப்புணர்வின் பிரதிநிதிகளாயிருந்த போதிலும், படைப்புக்கள் என வந்த போது, இலக்கியச் சோதனை முயற்சிகளையே முன்னிறுத்தினர். மணிக்கொடியை முழுமையாக இலக்கியப் பரிசோதனைக்காகவே தொடங்கினர் என்றே அறிமுகப்படுத்தியுள்ளனர். “இவர்கள் சாதி ஒழிப்பையும் சமூகப் புணருத்தாரணத்தையும் தூண்டும் வகையில், இலக்கியம் ஆக்கினரேயன்றி, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டினையோ, அடிப்படையமைப்பில் நிலவிய முரண்பாட்டையோ தொடவில்லை. புதுமைப்பித்தன் அக்காலத்து நிலவிய அந்த முரண்பாட்டு நிலையை எடுத்துக் காட்டினார்” என்கிறார் கா.சிவத்தம்பி (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் : பக்கம் – 34)

”பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என கேள்வியில் தொடங்குகிறது புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதை. ”ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அதுதான் மேஜர் ரஸ்தா. அங்கு கைகோர்த்த நான்குபேர் வரிசை தாராளமாகப் போகலாம் எதிரே வண்டிகள் வராவிட்டால். இதற்குக் கிளையாக உள்வளைவுகள் உண்டு - முயல் வளைகள் போல.” 

இங்குதான் கணவனைக் காப்பதற்கு மருந்து வாங்குவதற்காக அம்மாளு தன் உடலை மூலதனமாக்குகிறாள்.

“என்னமோ, கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா பொன்னகரம்!” என்று முடிக்கிறார் புதுமைப்பித்தன்.

ஒரு கேள்வியில் தொடங்கி, ஒரு பதிலில் முடிகிறது கதை. கேள்வி சமுதாயத்துக்குள் இயங்கும் மனசுகளை கேட்பதாகத் தொடங்குகிறது. அந்த மனசுகளின் மூஞ்சியில் ‘சப்’பென்று ஒரு அறை கொடுப்பதான பதிலில் முடிகிறது.

நம்பிக்கை வறட்சியோடும், (அப்படித்தான் அவரது காலத்தில் நிலவிற்று) பழமைப் புண்ணைக் கிண்டிக் கிளறி மனித மனத்தின் கேவலமான நடமாட்டத்தை எள்ளி நகையாடியதாகவும் புதுமைப்பித்தன் கதைகள் அமைந்தன. அவரே எள்ளலாய்க் குறிப்பிட்டதுபோல – சமூக நோய்க்கான மருந்து மாத்திரையல்ல அவர் செய்து வைக்கும் கதைகள்.

“நான் எப்படித் தரிசிக்கிறேனோ, அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள்”– என செயகாந்தன் ஓரிடத்தில் குறிப்பிடுவார். இந்தத் தரிசிப்பு தான் பார்வை. ஒவ்வொரு எழுதுகோலும் தனித்துவமான போக்கில் வெளிப்படுத்தும் இதுவே அழகியல்.

யதார்த்தம், இயல்பு, புனைவு மூன்றும் இணைவான ஒரு சுடர் அவரது ”யுகசந்தி” - க் கதை : 

“ஜெயகாந்தனின் கதைகளில் மையப்பாத்திரங்களாய் வரும் எந்தவொரு பாத்திரமும் தான் நினைத்ததை தைரியமாகச் செய்யக்கூடிய, சொல்லக்கூடிய பாத்திரங்கள் என்பதை ஜெயகாந்தனின் வாசகர்கள் அறிவார்கள். அதுவரை நடைமுறையில் இல்லாத ஒருவழக்கத்தின் மையத்தில் நிற்கும் பாத்திரமாக இருந்தாலும் , அந்தப் பாத்திரம் தீர்மானகரமாக ஒரு முடிவெடுத்து  நடைமுறைப்படுத்துவதை தனது கதையில் காண்பிப்பவர்” என பேரா.அ.ராமசாமி குறிப்பிடுவார். முன்னுதாரணம் யுகசந்தி கௌரிப்பாட்டி; தான் அனுபவித்த விதவைத் துயரைத் தன் பேத்தியும் அனுபவிக்கக் கூடாது என நினைத்து அவள் எடுக்கும் முடிவுதான் அவளை யுக சந்தியாகக் காட்டுகிறது.  கடந்த காலத்தின் இருளுள்ளும் நீங்கள் இச்சுடரை எடுத்துச் செல்கீறீர்கள். நிகழ்கால ஒளிக்கும் இச்சுடரை ஏந்திச் செல்லலாம்; புலப்படாத மங்கியதோர் எதிர்காலத்துள்ளும் வழிப்பயணமாய் இக்கருத்துச் சுடர் வரும்.

முற்போக்கு இலக்கியம் அடையாளப்படுத்துவது இத்தகைய யுக சந்திகளைத்தான். 

நாற்பதுகளில் ’பொம்’ மென்று உப்பி, சட்டென வற்றிப் போயிற்று விடுதலைத் தாகம். விடுதலையின் வீச்சு மக்கள் பெற்ற சமுதாயப் பயன்களால் அளவிடப்பட்டபோது விடுதலை அர்த்தமில்லாது போயிற்று. கூகி வா தியாங்கோ என்ற கென்ய எழுத்தாளர் குறிப்பிட்டார் ”சுதந்திரம் என்பது பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதல்ல; எளியவனின் சட்டைப் பையில் சில்லறை குலுங்கினால் அதுவே சுதந்திரம்”. எளிய சாதாரண மக்களின் வாழ்வினால் அது உணரப்படவில்லை. யதார்த்தம் வேறொன்றாக இருந்தது. 1950, 60. இவையான ஆண்டுகள் யதார்த்தவாதத்தின் பயணிப்புக் காலம். நாடெங்கும் இடது சாரி அலை முன்னேறி மார்க்சிய சமுதாய அறிவியல், சமதர்ம சித்தாந்தம்  என இடதுசாரிப் பார்வை நிலைநிறுத்திக் கொண்ட ஆண்டுகள். எந்த இடத்தில் தோண்டினாலும், ஊற்றுக்கு முகம் கொடுக்கும் ஆறு போல் இடது சாரி ஊற்று பெருக்கெடுத்தது.சாந்தி, சரஸ்வதி இதழ்கள் யதார்த்தவாத முற்போக்கு வாசல்களைத் திறந்து வைத்தன. புதுமைப்பித்தன் வழிவந்த எழுத்தாளர் என அறிமுகப்பட்டிருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரை ஆசிரியராய்க் கொண்டு வெளியான ’சாந்தி’ இதழில் - புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சுந்தரராமசாமி முதற்பரிசு பெற்றார். யதார்த்தவாத எழுத்தாளராய் சுந்தரராமசாமி பேனா எடுத்தார். அதேகாலத்தில் விந்தன், டி.செல்வராஜ் போன்ற யதார்த்த வாத எழுத்தாளர்கள் அறிமுகமாகிறார்கள். 

“சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் அமைப்பும் அழகும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியைப் பூரணமாகப் பிரதிபலிக்கின்றன. அவரது கதைத் தொகுதிகளைக் கொண்டு தமிழ்ச்சிறுகதை – உத்தியிலும் பொருள்மரபிலும் எத்துனை வளர்ந்துள்ளது என்பதைக் காணலாம்”–  என பேரா.கா.சிவத்தம்பி கூறுவதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

சமுதாய நோக்கோடு – அடித்தட்டு மக்கள் பற்றி ஆழ்ந்த, ஈடுபாடு கொண்டு எழுதியவர் கு.அழசிரிசாமி. கு. அழகிரிசாமி போன்றோரின் கதைகள் சமூக மாற்றம் என்ற ‘முத்திரை’ (பிராண்ட்) பொறித்துக் கொள்ளவில்லையே தவிர, பெரும்பாலன முற்போக்குத் திசைப் பயணங்களின் படகுகளை அசைத்த துடுப்புகள். அவரது பெரிதும் பேசப்படும் ’ராஜா வந்தார்’ ஆகியன – வாழ்வைக் கிழித்து உப்புவச்சிப் பார்க்கிற, காந்தலெடுக்கும் குணவாகுக் கதைகள் தாம். 

தொ.மு.சி.ரகுநாதன், டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்பாரதி போன்றோரது கதைளில் கட்சி சார்பு வெளிப்படையாகவே தெரிந்தது. ‘அரசியல் வேறு; கட்சி அரசியல் வேறு' என முந்தைய கட்சி சார்பு கதை மரபினை நிராகரித்து யதார்த்த வாதம் நோக்கித் திருப்பியவர் ஜெயகாந்தன். ஆனால் அவர் தவறான தத்துவங்களின் பிடியில் சிக்கி, அவற்றை தன் எழுத்துக்களில் வக்காலத்து வாங்கி விவாதிப்பவராக மாறினார்.

கி.ராஜாராயணனின் எழுத்துப் பாதை, பெரும்பத்திரிகைகள் நிலைநிறுத்திய அறிவின் அதிகாரத்தை எதிர்த்த சிற்றிதழ்களில் தொடங்குகிறது. அவருடைய ’கதவு’ சிறுகதையை ஆனந்தவிகடன் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார். பரிசுக்குரியதாகத் தேர்வாகவில்லை. முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகூடப் பெறவில்லை. பரிசு பெறும் தகுதியற்ற தேர்வாகாத கதைகள் வாசகருக்குப் பரிமாறப்படுமே - அந்தப் பத்தில் கூட இல்லை. பின்னர் அக்கதை தாமரை இலக்கிய இதழில் வெளியாயிற்று. விகடனால் ஒதுக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத ’கதவு’ சிறுகதைதான் பின்னர் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் உச்சத்தில் இடம்பிடித்த கதையாயிற்று.

விகடன் அக்கதையைத் தேர்வு செய்யாததற்குக் காரணம் ஒன்றே தான். அது காலத்துக்கு முந்திய கதை. அந்தக்காலத்தின் வணிக இதழ்களின் தர மதிப்பீடுகளுக்குள் அடங்காத கதை. ஒவ்வொரு கட்டம்கட்டமாய் கதையுலகம் முன்னகர்த்தப்படுகிறது அல்லவா, அந்த அளவுகோல்களுக்குள் அடங்காமல் முன்னரே எழுத்துக்கு வந்துவிட்டது அக்கதை. 

அதே விகடன் ”கரிசல்காட்டுக் கடுதாசிகள்” ஜூனியர் விகடனில் வெளியாக  கி.ரா.விடம் ஓராண்டுக்காலம்  அலையாய் அலைந்து வாங்கினார்கள் என்பது தனிக்கதை.

தாமரை, சாந்தி, சரஸ்வதி, இதழ்களுக்குப் பிறகு, அவருடைய எழுத்துகள் பல சிற்றிதழ்களில் வோ் பதித்துப் பூத்து மணக்க ஆரம்பித்தன. பருத்திக்காட்டின் மஞ்சள் நிறப் பூக்கள், மேகாற்று ஈரப்பதத் தடவலில் அமோகமாய் பலன் பிடிக்கும் என்பார்கள். கி.ரா என்ற பருத்திக்காட்டில், மேகாற்றுப் படர  வெள்ளாமை நல்ல சீருக்கு விளைந்தது. 

கதவு, கரண்ட், மாயமான் போல அதிகார இயந்திரத்தை எதிர்க்கும் கதைகள் இயல்புவாதப் படைப்புக்களாகின. இயல்புவாதம் என்பதின் அா்த்தம் பொருளாதார நலிவு, போதாமை, வறுமையின் கொடுமை  என சிக்கல்களை விவரிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தோடு பொருந்திப் போகாத ஒவ்வாமையின் குரல்களைப் பதிவு செய்தலுமாகும். அரவாணிகளுக்கு இன்றைக்கு சமூக மதிப்பு அரைகுறையாகவாவது வந்துசேர்ந்துள்ளது.  அவா்களில் சிலா் கலைஞா்களாக, படைப்பாளிகளாக உருப்பெற்றிருக்கிறார்கள். இந்தச் சமூக மதிப்பு ஒருதுளியும் கிட்டாத அக்காலத்தில் அவா்களின் அவலத்தை எடுத்துரைத்த ’கோமதி’கதை உருக்கொள்கிறது. ஒரு ஊமையனின் நிறைவேறாப் பாலியல் அவாவை வெளிப்படுத்திய ’ஜீவன்’ போன்ற  கதைகளின் கலகக் குரலுக்கான சுதந்திர வெளியை சிற்றிதழ்கள் ஏற்படுத்திக் கொடுத்தன. கி.ரா எழுதிய ’கிடை’ - குறுநாவல், ’நெருப்பு’ போன்ற கதைகள் ’தலித்’ பிரச்சினைச் சூட்டின் வெப்பத்தை அளவிட்ட வெப்பமாணிகள். 

அனுபவம் என்பது பிறரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடியது; தனிமனித அனுபவங்களாக சுருக்கிவைத்துக் கொள்ளக் கூடாது: அனுபவங்களை மற்றொருவருக்குப் பகிர்தல் என்ற புள்ளிதான் செய்திகள் பரிமாறல், வாழ்வியலைப் பகிர்தலுக்கான களம். இலக்கியப் படைப்புக்களின் நதிமூலம் அது.  

60–களுக்கு முந்தியும், சற்றுப் பிந்தியும் வெளிப்பட்ட படைப்புகள் சோதனை முயற்சி என்ற பெயரில் தனிமனித அனுபவங்களாகச் சுருங்கிப் போயிருந்தன. பிறருக்குச் சொல்லப்பட வேண்டிய பொருண்மை வீரியம் அதற்குள்ளிருக்க வேண்டுமென்ற பெரு நோக்கமில்லாமல் வெளிப்பட்டன. மௌனி போன்றோரது கதைகள் இப்பேர்ப்பட்டவை: பிறருக்குப் பகிர்தல், வழங்குதல் என்பதான பொருண்மைகள்  மிக அபூர்வம். மௌனி கதைகளில் தன் அகப் பயணத்தை விச்ராந்தியாய் முணங்கி அவர் வேறொரு ஆளாய் நிற்பார்.   நம்முடைய மனிதராய் நமக்குள் இறங்குவதில்லை. 

அதே 60, 70–களில் தான், ஒருவரது தன் அனுபவம் பிறருடன் பகிர்ந்து, பிறராலும் உள்வாங்கப்பட வேண்டியது என்ற யதார்த்தவாதம் மேலோங்கியது.  தானே தனது காலத்தின் மனிதன் என்ற உணர்த்தியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற பார்வையை யதார்த்தவாதம் முழுசாய்ச் சுமந்து வந்தது. எல்லாத் திசைகளிலும் பரவிப் பரவி காற்றுக்கு ஆடும் சிறு தாவரம் போல் - முற்போக்குச் செடியை முழுசாய் உலுக்கியது யதார்த்த வாதம்.

1959–ல் யதார்த்தவாதத்தை உள்வாங்கி இடதுசாரி இதழ் ‘தாமரை’ மலர்கிறது; 1970–ல் செம்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியக் கொள்கை இதழாகப் பூக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தும், இவை சாராமல் தனியாகவும் யதார்த்தவாத எழுத்துக்கள் உருவாகின. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரபஞ்சன், ஜெயந்தன், இராசேந்திர சோழன், பூமணி, சு.சமுத்திரம், பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன், வீர.வேலுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, பாவண்ணன், திலீப்குமார் போன்ற பலர்  யதார்த்தவாதத்தின் பிள்ளைகள். அடுத்த தலைமுறை வரிசையில் நாஞ்சில் நாடன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், தோப்பில் மீரான், வேலா.ராமமூர்த்தி, ஜெயமோகன், மீரான்மைதீன், களந்தை பீர்முகமது, தேனி.சீருடையான், சிறிதர கணேசன், சாகித்யன், லட்சுமணப் பெருமாள், உதயசங்கர், கதைப்பித்தன், சோ.தர்மன் போன்றோரின் பயணம் நிகழ்கிறது.

எழுபதுகளில் வசந்தத்தின் இடிமுழக்கம் மேற்கு வங்கம் சிலிகுரியில் கேட்டது. இந்திய மொழிகளில் பெரும்பாலான கலை, இலக்கிய வெளிப்பாடுகள் புரட்சிகர உணர்வுகளுடன் அதன் தாக்கத்தில் வெளியாகின. உரைநடை, கவிதை, உருவகம் என எழுத்து வகையினதாக, நாடகம், கூத்து, இசை என நிகழ்த்து கலையினதாக அனத்தும்  எழுச்சியின் அக்னிக் குஞ்சுகள் என வெளிப்பட்டன. 70–களின் யதார்த்த வாதம் ஒரு சுற்று முடிந்து, 80 – களில் இந்த புரட்சிகர யதார்த்தம் முன்னுக்கு வருகிறது.  இதுவரை – கற்றறிந்த வட்டத்திற்குள் அடக்கமாய் இருந்த கலை, இலக்கியச் செயற்பாடுகள் - இப்போது வெகுமக்கள் பரப்புக்குக் கொண்டு செல்லுதல் என்னும்  தளமாற்றம்   நிகழ்ந்தது. செத்தாலும் நாடாளுமன்றத்திலேயே சாவது என்ற முடிவெடுத்து இயங்கும் இடதுசாரிகளின் அரசியல் பயணத்தினை மறுதலித்த புரட்சிகர அரசியல் இங்கு முதன்மை வினையாற்றிற்று. மனிதன், புதிய மனிதன், செந்தாரகை, வேள்வி, இனி, மனஓசை, புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களின் தோற்றத்தின் வழி படைப்புகளும் அமைந்தன. லட்சியவாதமும் கற்பனாவாதமும் இணைந்ததாக – ஆவேச மூட்டுவதாக, பரவசநிலைக்குக் கொண்டு செல்வதாக, மிகையுனர்ச்சி கொண்டதாக இவை ஆகின. இந்த மிகைப்படுத்தல் யதார்த்தத்தின் உக்கிரத்தைக் குறைத்து முழக்கமாக்கிற்று.

“போராடுவதும் போராட வைப்பதுமே என் குறிக்கோள். அதற்கு என்னுடைய கவிதைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறேன். இந்தச் சமூக அமைப்பில் போராடாமல் இருப்பதென்பது சில கொடுமைகளுக்கு நாமும் மௌன சாட்சியாகத் துணைபோவது போலாகிவிடும்.” 

– என்ற சங்கற்பம் கவிஞர் இன்குலாபுடையதாக மட்டுமல்லாமல், பலரின் எழுத்தாகவும் ஆகியிருந்தது. இன்குலாபின் “பாலையில் ஒரு சுனை” சிறுகதைகள் தொகுப்பு, பா.செயப்பிரகாசத்தின் “இரவுகள் உடையும்", "மூன்றாவது முகம்” சிறுகதைத் தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. வேறுவேறு சிற்றிதழ்களில் அவ்வப் போது வெளிவந்த வேறு சிலரது சிறுகதைகளும் முக்கியத்துவம் கொண்டவையாகும்.




2

கால  ஓட்டம் கருத்தியலில மட்டுமல்ல. கலையியலிலும் வினையாற்றுகிறது.  மாறுதலை நோக்கிச் செல்லும் காலம் அரூபமாகவோ, ரூபமாகவோ, ஒரு கலைஞனுக்குள் வினையாற்றி கருத்துமாற்றத்தை, வளர்ச்சியைக் கையளிக்கிறது. முற்போக்கோ பிற்போக்கோ அல்ல: ஈழத்துப் படைப்பாளி எஸ்.பொன்னுதுரை குறிப்பிடுதல் போல நற்போக்கு இது. காலத்தின் போக்கைச் சித்தரிக்கும் எந்தப் படைப்பும் பருவெட்டாய்ப் பார்க்கையில் நற்போக்குத் தான். 

’கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்' என்றொரு முதுமாழி உண்டு; காலத்தால் பழுத்த மொழி. உதவாத புருசனை கையில் கல் கிடைத்தாலும் எடுத்து வீச வேண்டும்: புல் (விளக்குமாறு) கிடைத்தாலும் எடுத்து அடிக்க வேண்டும் என்று இதற்குப் புது விளக்கம் வந்திருக்கிறது. ஆனால் குடும்ப அமைப்பைக் காக்க வேண்டும் என்றெண்ணம் உயிர்வாழும் போது, அத்தகைய பெண்களுக்கு ஒரு எல்லைக்கு மேல் கலகம் செய்ய இயலுவதில்லை - என்பதை ஜெயந்தனின் ”அவள்” கதை வெளிப்படுத்துகிறது. யதார்த்த இலக்கியக் காலகட்டத்தில் அதிகமாகப் பேசபட்டவர், வணிக இதழ்களிலும்அதிகமான படைப்புகளைத் தந்தவர் ஜெயந்தன். 

வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; கருத்து அல்லது முடிபு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கேற்ப கதை, கவிதை வடித்தல் என்ற பார்வை 60, 70 – களில் உருவாகிவிட்டது; இப்பார்வையில் முதலில் பலியாவது முதலில் கலையம்சம். இந்தப் மாயைக்கு ஆளாகிய எழுத்தாளர்கள் பலர் 2000 – த்தில் இதைத் தாண்டி வந்து விட்டார்கள். இதன் சிறந்த எடுத்துக்காட்டும்  முன்னோடியும்  கந்தர்வன் ஆவார். கதைகள் குரல்தருகின்றன.  உள்ளடக்க ரீதியிலும், வடிவ ரீதியிலும் காலத்திற்குக் காலம் மாறுதல் பெற்று வருகின்றன. மாறுதல் பெற்றால் மாத்திரம் அது படைப்பாக நிலைக்க இயலும்; புதிய புதிய எல்லைகள் தொடப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதை வெற்றிகரமாய்ச் சாத்தியப் படுத்தியவர் கந்தர்வன்.அது போல் அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன்.

ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் ஒவ்வொரு புதிய அலை வீசுகிறது. 80 –களில் பெண்ணியம், 90 – களில் தலித்தியம், புத்தாயிரத்தில் விளிம்பு நிலைப் படைப்புக்கள் எனப் படிநிலை மேலே மேலே ஏறிக் கொண்டிருந்ததைக் காணுகிறோம். முற்போக்கு என்பதை காலம் காலமாய் சமுதாயத்தின் ஒவ்வொரு அலகுகளிலும் நிகழும் வளர்ச்சி என்று கொள்ள முடியும். முன்னகர்வை உள்ளடக்கிய ஒரு பொதுச் சொல்லாக அது காணத்தகும். 

ஒரு குடும்பம்; குடும்பத்தில் குறைந்தது ஐந்து பேர். ஒரு நாள் ஒரு வேளைக்கு ஒரு ஆளுக்கு நான்கு தோசை வீதம், ஐந்து பேருக்கு ஒரு நாளைக்கு 20. ஒரு மாதத்துக்கு 30 நாள் கணக்குக்கு 600 தோசைகள். ஆண்டுக்கு 7200 தோசைகள். ஒரு பெண் தன் 10 – வயதில் தோசை வார்க்கத் தொடங்குகிறாள். வாழ்நாளில் ஒரு பெண் எத்தனை தோசைகள் சுட்டாள்? இரண்டு லட்சத்து 92 ஆயிரம் தோசைகள். 

குடும்ப நிறுவனம் ஒரு பெண்ணை உனக்குரிய இடம் இது என்று சிறுவயது முதல் பயிற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. பத்து வயதில் தொடங்கி,     நாளைக்கு இருபது மேனிக்கு இரண்டு லட்சத்து தொண்ணாறாயிரம் தோசைகள், தவிர இட்லிகள், வடைகள், அப்பளங்கள், பொரியல்கள், குழம்புகள், சோறு ஆக்குவதோடும் குடும்பத்தினருக்கும் வருகிறவர்களுக்கும் பணிவிடை செய்வதோடும் பெண்ணின் வாழ்க்கை முடிந்து போகிறது. 

“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதைத் தொகுப்பில் எழுத்தாளர் அம்பை தோசை சுடும் கணக்குப் தருகிறார். குடும்பம் வீட்டிற்குள் இருக்கிறது. வீட்டின் மூலையில் சமையலறை இருக்கிறது. சமையலறைக்குள் பெண்ணிருக்கிறாள். குக்கர், கிரைண்டர், மிக்சி – என நவீன சமையற் கருவிகள் நிரம்பியிருக்கும் யுகத்திலும், பெண் சமயற்கட்டுக்கு வெளியில் இல்லை. பணியிடங்களில், அலுவலகத்தில் தொழிற்சாலைகளில் எங்கு உலவினாலும் அவள் முடிவது வீட்டின் மூலையிலுள்ள சமையலறை. 

இந்தப் பெண்னுடைய அவல வாழ்வை ஒரு நாட்டுப்புறப் பெண் தன் மொழியில் வெளிப்படுத்தினாள்

“மண்டை மயிரிறுதி மாவிடிச் சவளே 

மயானம் போறவரை தோசை சுட்டவளே”

என்கிறாள். மண்டையில் மயிருதிரும் காலம் வரை –  கை நகங்கள் மொட்டையாகும் வரை – காலில் வெள்ளெழும்பு தெரியும் வரை உழைத்துக் கொட்டினாள். மயானம் சென்றடையும் வரை சமைத்துக் கொட்டிக் கொண்டிருந்தாள். இது ஒரு பெண்ணின் கதையல்ல: கோடி கோடிப்  பெண்கள் கொள்ளும் துன்பியல். ஆணாதிக்க சமுகத்தின் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டில் நில்லென்று சொல்லி நிறுத்தி விடப்பட்ட கோடிகோடிப் பெண்களின் துயரம். கொஞ்சமும் ஈனமானமில்லாமல் ஈராயிரம் ஆண்டுத் துன்பியல் நாடகத்தை இச்சமூகம் கடந்து வந்துள்ளது. 

மூலைச் சமையலறையை காற்றோட்டமுள்ளதாக்கக் குரல் எழுப்பும் மீனா  சிந்திக்கத் தொடங்குகிறாள். குடும்பப்  பணிகளிலிருந்து விடுபட்டால் பெண்கள் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர்க் கெட்டிலின் மூக்குநுனி ஆவியைப் கண்டிருக்கலாம்; புதுப்புதுக் கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்; கைலாஸ் பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்; பறந்திருக்கலாம்; போர்கள் சிறைகள் தூக்குமரங்கள் ரசாயன யுத்தங்கள் இல்லாத உலகை உண்டாக்கியிருக்கலாம். அதற்கு யோனியும் முலைகளும், கருப்பையும் கழன்று சமையல் மணம் தூரப் போய், நகையின் மினுமினுப்பு மறைந்து, பால் தன்மை அற்று, அதில் சிக்காது, குறுகாது அதனின்று விடுபட்டு எழவேண்டும். அதினின்றுதான் அதிகாரம் உருவாகும் எனச் சிந்திக்கும் மனுசியாக வீட்டின் மூலையில் ஒரு புதிய வார்ப்பாக மீனா. பெண் விடுதலைபெறுகிற நாளில்தான் உண்மையான சமுதாய மாற்றம் உண்டாகும். உண்மையான சமுகப் புரட்சியை நாடிச் சிந்திக்கும் படைப்புக்களாக  அம்பையின் கதைகள் முன்னிற்கின்றன.

பெண்ணின் பாடுகளைப் பதிவு செய்தவர்கள் என தமிழிலக்கியச் சிறுகதை உலகில் ஒரு நீண்ட வரிசை உள்ளது. புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், பொன்னீலன், பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், ச.தமிழ்ச் செல்வன், போன்ற எழுத்தாளர்கள் தவிர, பெண்ணெழுத்தாளர்களின் தனிப்படை இருக்கிறது.

அம்மணி அம்மாள், வை.மு.கோதை நாயகி, வசமதி ராமசாமி, அனுத்தமா, ஆர்.எஸ் ராஜலட்சுமி, கு.ப.சேது அம்மாள், வி.பாலம்மாள் போன்ற முதற்கட்ட எழுத்தாளர்களின் படைப்புக்கள் - பெண்மையின் தாக்கம் கொண்டவை. எதை எழுதின இவர்களின் எழுதுகோல் என்ற கேள்வியைக் கடந்து, பெண் எழுதத் தொடங்குதலே ஒரு கலகம் தான் என்னும் நோக்கில் மதிப்பிடப்பட வேண்டும்.

எதிர்ப்புக்குரல் என்ற இரண்டாம்  நிலையில் பெண்ணியம் சார்ந்து ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, இந்துமதி, ஜோதிர்லதா கிரிஜா, திலகவதி, வாஸந்தி போன்றோரது எழுத்துக்கள் வருகின்றன.

அம்பை, உஷாசுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, வெண்ணிலா, காவேரி, கிருத்திகா, சுமதி ரூபன், தமயந்தி, காஞ்சனா தாமோதரன், அமரந்தா, சு.தமிழ்ச்செல்வி, சந்திரா, தேன்மொழி போன்றவர்கள் தெளிவான பெண் நிலைப்படைப்பாளர்கள். தலித்தியப் பெண் சொல்லாடலை வெளிப்படுத்திடும் தனி அடையாளம் கொண்டவர்களாக பாமா, சிவகாமி எழுத்துக்கள் பேசுகின்றன.

தலித்துகளின் கீழான நிலையிலிருந்து அவர்களைப் பாய்ச்சலுக்குத் தயார் செய்கிற படைப்புகள் 90 – களில் உருவாகின. பூமணி, அபிமானி, இமயம், விழி.பா.இதயவேந்தன், பாப்லோ அறிவுக் குயில், உஞ்சை ராசன், சோ.தர்மன், பாமா, ப.சிவகாமி, ஸ்ரீதரகணேசன், அழகிய பெரியவன் எனப் படைப்பாளிகள்  வந்தனர். இவர்களில் பூமணி, சோ.தர்மன், இமயம் – தம்மை தலித்தியப் படைப்பாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. ஆயினும் அந்த எழுத்துக்கள் தலித் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாத சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. அந்த வாழ்க்கை அதனுள்ளிருந்து பெற்ற சுயானுபவங்கள் இவ்வாறு தான் - இந்த வாய்க்கால் வழியாக புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் என்றிவாறு தான் இலக்கியத்துக்குள் வளம் சேர்க்கும். தலித் வாழ்க்கைக்குள் இல்லாது போயினும், அந்த வாழ்வியலைத் துல்லியமாய் வெளிப்படுத்தும் கண்ணோட்டத்தில் சில எழுத்தாளர்கள் தெறிப்பாய் ஒன்றிரண்டு கதைகளைத் தந்துள்ளனர்.

தலித்தியச் சிறுகதைகள் தமிழ்ச் சூழலில் தொண்ணூறுகளில் மையம் கொள்கின்றன. அதைக் கொடுக்குப்பிடித்தவாறு இரண்டாயிரத்தில் , திரு நங்கையர், பழங்குடியினர்,பாலியல் தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், மனப்பிறழ்வாளர்கள், நாடோடிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பிச்சைக்காரர் என விளிம்புநிலைக் கதைச் சித்தரிப்புகள் தொடர்ந்தன. சமூக, அரசியல், பொருளாதார, குடும்பத் தளங்களில் சமஅதிகாரம் பெற இயலாத - சக மானுடர்களாக மறுக்கப்பட்டவர்கள் இவர்கள்.

இலக்கிய இயல் ஒவ்வொரு பத்தாண்டுகளின் கட்டத்திலும்  தனிதனியாய் வளர்நிலை பெற்று வந்துள்ளதெனினும் ஒன்றுக்கொன்று ஊடாடிப் பிணைசல் கொண்டு இயங்குவதைக் காண முடியும். வகைமைப்படுத்தப்பட்ட  இவ்வெழுத்துக்களில் உயிர்ப்பு தொடருவதைத் தரிசிக்கலாம்; ஒன்றைப் புறக்கணித்து மற்றொன்று அல்ல; ஒன்றைத் தொட்டு மற்றொன்று, ஒன்றின் ஊடாக மற்றொன்று என்று இதைக் காணமுடியும். எடுத்துக்காட்டுக்களாய் - பெண்ணியக் கருத்தியலின் அடுத்த படிநிலையாய் தலித்தியப் பெண்ணியம், தலித்தியத்தின் வளர்நிலையாய் விளிம்புநிலைக் கருத்தியல் என ஒரு குருத்திலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று என அடிப்பெருத்த ’கம்மந் தூர்’ போல இலக்கியக் குருதுக்கள் வெடித்துக் கொண்டுவருகின்றன. இந்த எல்லாக் காலகட்டத்தினூடாகவும் - எல்லா வகைமையினூடாகவும் ஐம்மென்று உட்கார்ந்து வருவது யதார்த்தம் தான்; யதார்த்தத்தின் வாசல்வழியாக வற்றாத காற்றுப் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது முற்போக்கு.

இயல்புநெறி, யதார்த்தவாதம், புனைவியல், அமைப்பியல், இருத்தலியல், என்பன போன்ற இலக்கிய வகைமைகளும் இவை போன்றன யாவும் இலக்கியத்தினை, இலக்கியத்தின் சிந்தனைப்பாட்டை முன்னகர்த்துமாயின் அதனை முற்போக்கு என்ற பொது வரையறைக்குள் கொண்டு வரலாம். 

காலச்சுவடு இதழில் முத்துவேல் எழுதி வெளிப்பட்ட ’வெள்ளங்கொண்ட அகரம்’  சமகாலத்தின் பல பக்கங்களையும் சித்தரித்துக் காட்டிய ஒரு சிறுகதை. இது போலவே பல வளரும் எழுத்தாளர்கள், வளர்ந்து முன்னிற்கும் எழுத்தாளகளையும் கடந்து செல்கிறார்கள். சிறுகதைகளில் வேறு எம்மொழிகளினும் கூடுதலாய் தமிழில் சாதனை படைத்த நூற்றாண்டு இது  என மெய்மறந்து சொல்லலாம்.

- பா.செயப்பிரகாசம், 23 மார்ச் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்