புலமைத்துவத்தில் வேரூன்றியவர்
முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான மோகம் தமிழிலக்கியத்தின் பால் உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும் தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டர் வழக்கில் சொல்வதாயின், ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு ’மவுஸ்’ கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது.
எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள். முதுகலைத் தமிழில் எங்களுடன் ஒரு கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்காரர் (Basket Ball Player) பயின்றார். அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல; சௌராட்டிரம் அவருடைய தாய்மொழி. மதுரைநகரில் தெற்கு மாசி வீதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் வாழும் பட்டுநூல்காரர்கள் (பட்டுநூல் நெசவாளிகள்) என்றழைக்கப்படும் சௌராட்டிர இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் போல் வேறு பாடப்பிரிவில் இடம் கிடைக்காத - தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் எங்களுடன் முதுகலைத் தமிழ் பயின்றார்: ஒரு துறையில் பணியாளராக இருந்து கொண்டு, அதிலும் நடுவணரசுத் துறையில் பணியாற்றிக் கொண்டு - முறையான கல்லூரியில் (Regular College) பயில்வதெனில் சாத்தியமற்ற ஒன்று. மேலதிகாரிகளைத் தாங்கித் தடவி, முண்டியடித்து முதுகலைத் தமிழில் சேர அனுமதி பெற்றிருந்தார் என்பது அபூர்வமான செய்தி! அதிர்ச்சியான செய்தி!
ம.பெ.சீனிவாசனும் நானும் சுவரில் குறுக்காய் வளர்ந்த அரச மரக்கன்று அல்ல; முருசல் பாத்தியில் (முடுக்கலான பாத்தி) முளைத்த தோட்டப் பயிர்களும் அல்ல; தமிழ்ப் பற்று காரணமாய் முறையாகத் தேர்வானவர்கள். நான் புகுமுக வகுப்பில் (Pre university course) சிறப்பு தமிழ் (Advanced Tamil) எடுத்துப் பயின்றவன். தொடர்ச்சியில் அதே தியாகராசர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று முதுகலைத் தமிழில் சேர்ந்தேன். ம.பெ.சீனிவாசன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றவர். சிவகங்கைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த தமிழின் முன்னணிக் கவிஞர் மீ.ராசேந்திரன் அவர்களால் “அன்பிற்குரிய இளங்கவிஞர்” என்று பாராட்டப்பட்டவர்.
1962 - இல் மீ. இராசேந்திரன் ’சுவை’ என்றொரு கவிதை தொகுப்பு வெளிக் கொணர்ந்தார். தொகுப்பு அவருடைய கவிதைகள் அல்ல; மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ச் சிங்கம் என அழைக்கப்பட்ட சி.இலக்குவனார் தமிழ்த் துறைத் தலைவராக அமர்ந்திருக்க, அவ்வை சு. துரைசாமி, பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், முனைவர் மொ.துரை.அரங்கனார், முனைவர் மெ.சுந்தரம் போன்றோர் தமிழ் இருக்கைகளில் வீற்றிருக்க, மீ.மீராசேந்திரன், அப்துல் ரகுமான், தி.கு நடராசன், ஆல அச்சகம் பாலசுந்தரம் என தமிழ் முதுகலையில் பயின்றோர் படைப்பாளிகளாய் முனைப்பு பெற்ற காலகட்டம் அது.
சிவகங்கைக் கல்லூரிக் கவியரங்கில் கவிஞர் முடியரசன் தலைமை ஏற்க, நகை, அவலம், மருட்கை, அச்சம், இன்பம், வீரம் - என சுவைகள் பற்றிய தொகுப்பு நூல் மீ. இராசேந்திரன் தொகுத்து வெளியிட்டது.
ஆனால் ‘சேந்தி உடையநாதபுரம் ம.பெ. சீனிவாசன்’ தொகுத்து வெளியிட்ட நூல் ”இராசேந்திரன் கவிதைகள்” என்னும் முதல் தொகுப்பு. 1965-ல் முதல் பதிப்பு வெளியாகி பின்னர் பல பதிப்புகள் கண்டது. தோழமை நிலையம், தெப்பக்குள கீழ்க்கரை, சிவகங்கை என முகவரி கொண்டிருக்கும்.
ம.பெ சீனிவாசன் மீ.ராசேந்திரன் மாணவர் மட்டும் அல்ல: அணுக்க நண்பரும் ஆலோசகரும் ஆக பரிணமித்தவர். பாரதிதாசன், முடியரசன், பொன்னி வளவன் என தமிழ் எழுச்சியின் அடையாளங்கள் வரிசைப்படுத்தப்படுவதில் மீ. இராசேந்திரன் ஒரு மைல்கல். அந்த வழியில் நான் இராசேந்திரனை வாசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.
”சாகாத வானம் நாம் வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்”
போன்ற மீ.ராசேந்திரன் கவிதைகளை, பாவேந்தரின்
”பூட்டிய இரும்புக் கதவு திறக்கப்பட்டது,
சிறுத்தையே வெளியில் வா”
போல பலமுறை எழுத்தில், சொற்பெருக்காற்றுகையில் அதிகம் பயன்படுத்தினேன். அதே பொழுதில் ”ராசேந்திரன் கவிதைகளை”, தனித்தனி நட்சத்திரங்களாய் கண்டிருந்த என்னை முழுமையான நீலவானமாய் தரிசிக்கச் செய்தவர் எனது நண்பர், முதுகலைத் தோழர் ம.பெ.சீனிவாசன். “என் கவிதைகளை எழில் மிகத் திரட்டி உதவிய என் மாணவர் இளங்கவிஞர் ம.பெ.சீனிவாசன்“ என பாராட்டி நன்றி தெரிவித்திருப்பார் மீ.ராசேந்திரன்.
ம.பெ.சீ முதுகலைத் தமிழ் மாணவராய் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அறிமுகம் ஆகிறார். வகுப்புத் தோழனான எனக்கு அவர் தொகுத்த ராசேந்திரன் கவிதைகள் நூலினைக் கையளித்தார். அவர் வாசிக்க கையளித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.
எங்கள் இரு பேருக்கும் இயல்பாகவே படைப்பு மனம் உள்ளிருந்து பீறிட்டுக் கொண்டிருந்தது. படைப்புச் சிந்தனையை ஒருவர் பழம் இலக்கிய ஆய்வுகளிலும், மற்றொருவர் சிறுகதை, புதினம், உருவகம், கவிதை, கட்டுரை என (Creative writtings) என்று சொல்லப்படுகிற ஆக்கப் படைப்புகளிலும் மடைமாற்றல் நிகழ்ந்தது.
ஆனால் இரு பேரும் சிந்திக்கிற சமுதாயம் பற்றிய புள்ளி ஒன்றாகவே இருந்தது. அவரவர் எழுத்தின் வெளிப்பாட்டு வழியாக இதனை அறிவித்துக் கொண்டோம். அவர் முன்னைய இலக்கியப் பரப்பின் மூத்த படைப்பாக்கப் புலமைமையானார்; சற்று விலகி நான் சமகாலப் படைப்பிலக்கியத்தின் உருவெடுத்து எழுத்தாளனாகினேன்.
பொதுவாக ஆய்வாளர்களை திறனாய்வு செய்கிறவர்கள் அவர்களைப் படைப்பாளிகளாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது இயல்பில்லை; இதனையே போல் மொழியாக்கப் படைப்பாளிகளுக்கும் நேருகிறது. ஆனால் நேரம், சிந்தனை, உழைப்பு என அத்தனையின் ஒட்டுமொத்த திரட்சியாகத் தான் திறனாய்வும் மொழியாக்கமும் உருவாகின்றன. ஆகவே முன்னை இலக்கிய ஆய்வும் மொழியாக்கமும் படைப்பாக்கங்களுக்குச் சமமாய் பல்லக்கு ஏறி ஊராங்கி புறப்பட்டு (பட்டணப் பிரவேசம்) வரவேண்டியவை. ஒன்றே ஒன்று இவைகளின் வெளிப்பாட்டில் சமகாலம் தென்படுகிறதா, அல்லது பழங்கருத்துக்களுக்குச் சார்பான சமரசப் போக்கு தென்படுகிறதா என்பது தான்.
இவ்வகையில் நண்பர் ம.பெ.சீனிவாசன் தொகுத்துக் கையளித்த 'ராசேந்திரன் கவிதைகள்’ அவரின் சமகால உள்வாங்கலைக் கிரகிப்பாய் கொண்டிருந்தது.
2
எங்கள் கல்லூரிக்காலம், புதுக்கவிதைகள் ஒன்றிரண்டு பூக்கத் தொடங்கியிருந்த காலம். ஒரு பூக்காடாய்ப் பரந்து, பளபளப்பாகாத நாட்கள் அவை. பெரும்பாலான கவிஞர்கள் போல் தொடக்க நிலையில் மரபுக் கவிதைகளை எழுதினார் ம.பெ.சீ.
”ராசேந்திரன் கவிதைகள் - சிறு துளி பெருவெள்ளம்” என்ற உள்ளடக்கத் தலைப்புடன்
- அமுத துளிகள்
- தேன் துளிகள்
- கண்ணீர்த் துளிகள்
- பன்னீர்த் துளிகள்
- மழைத் துளிகள்
- குருதித் துளிகள்
வாசிப்பு நாக்குக்கு அனைத்துத் துளிகளிலும் ஒரே சுவைதான்.
ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பில் “வள்ளலார் வருவாரா” (பக்கம் 50) என்னும் கவிதை.
தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர்
நிதி படைத்த சீமான்கள்: என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்ட துண்டோ பொங்கல்?
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை;
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?
கவிதையின் இறுதி வரிகளை தனது திராவிட நாடு இதழில் அண்ணா எடுத்தாண்டு பாராட்டி எழுதியிருந்ததை ம.பெ.சீ என்னுடன் பகிர்ந்துள்ளார்.
ராசேந்திரன் எழுதிய மற்றொரு கவிதையை அண்ணா திராவிட நாடு இதழில் வெளியிட்டுள்ளார். ராசேந்திரன் கவிதைகளின் மதிப்புக் கூட்டலுக்கான மூலதனமாயிற்று இந்த அறிமுகம் எனலாம்.
இளங்கவி ம.பெ.சீ, ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பால் இலக்கிய உலகுக்கு அறியப்பட்டார். அவர் தன்னை ஒரு தமிழ்ப் புலமையாக நிலை நிறுத்திக் கொண்டாரே தவிர தனது வெளியீடு என ஒரு கவிதைத் தொகுப்பை ஏன் கொண்டு வரவில்லை? அவர் ஆய்வுலகில் அறியப்பட்ட அளவு படைப்பாக்க வெளியில் கால் பதிக்கவில்லை என்பது காரணமாய் இருக்கலாம்; எவ்வாறாயினும் யார் யாரையோ எழுத்துலகப் பிள்ளையாக வளர்த்தெடுத்த கவிஞர் மீரா எப்படி இவரை விலக்கிப் போனார் என்பது இன்று வரை விடை கிடைக்காத கேள்வியாக அலைகிறது.
3
அக்காலத்தில் முதுகலைத் தமிழ் பயில வருகிற மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கைவிரல் எண்ணிக்கை என்பதால் எவரையும் தேர்வில் தோல்வியுறச் செய்வதில்லை என்ற மரபு நிலவுகிறது. இதற்கு நாங்கள் ’தர்ம பாஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தோம். இந்த தர்ம பாஸில் என் போல் தேர்வாகி வந்த சிலருண்டு .
இறுதித் தேர்வுக்குச் செல்லும்பொழுது நான் அவ்வாறு அலட்சியம் கொண்டிருந்தமைக்கு இரு காரணங்கள் உண்டு.
1967 ஏப்ரலில் திமுக பெரும்பான்மையாய் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தது. முன்னரே திமுக வெற்றி பெற்று ஆட்சி ஏற்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால், திமுக சார்பான என் போன்றோர் முனைந்து பயின்று தேர்வு எழுதிட முன் வரவில்லை.
இரண்டாவது - அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த ஆட்சியில், அதிலும் மனிதநேயம் கொண்ட ஒருவரின் கீழ் அனைவருக்கும் வேலை கிடைக்கப் போகிறது; எல்லோருக்கும் எல்லாமான சமுதாயம் உருவாகிவிட்டது - என்னும் பொருந்தாத மாயையில் இருந்தோம். ம.பெ.சீ போன்றோர் புலமைத்துவ தேர்ச்சி மட்டுமே முக்கிய என உணர்ந்து முனைப்புக் கொண்டு தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தனர். புலமைத்துவம் மட்டுமே வாழ்வெனக் கருதியோர் தம்மைச் சுருக்கிக் கொள்ளவில்லை. கொப்பும் கிளையுமாய் பரந்து பெருமரமாய் ம.பெ.சீ திகழ்கிறாரெனில், புலமைத்துவமே அடிப்படை என்பதனை இன்றும் உணர்ந்து செயலாற்றுகிறார் என்பது காரணம்.
அந்தப் பெருமரத்தின் கிளகளெங்கும் பழந்தின்று விதைபோடும் பறவைகளின் கெச்சட்டம். அவருடைய எண்பதைக் கொண்டாடும் மாணவத் தோழமைப் பறவைகளின் முயற்சி வெல்லும், வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்.
- பா.செயப்பிரகாசம், 22 ஆகஸ்ட் 2022
கருத்துகள்
கருத்துரையிடுக