காலத்தின் குரல் தி.க.சி
தொகுப்பு: வே.முத்துக்குமார்
முதற்பதிப்பு: மார்ச் 2012
அச்சிட்டோர்: சிவசக்தி ஆர்ட்ஸ், சிவகாசி
வெளியீடு: ஆவாரம்பூ, மேலப் பாட்ட நயினார் புரம், கல்லிடைக்குறிச்சி - 627416
விலை: ரூ.50
'காலங்களினூடாக எழும் குரல்' - தோழர், அறிஞர் தி.க.சி அவர்களுக்கு 2001-ல் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்ட வேளையில் - பூச்சொரியும் வகையில் கணையாழி இதழில் வெளியான எனது கட்டுரையின் தலைப்பு இது. எழுத்தாளர் ஜெயமோகன், காலச்சுவடு இதழ் போன்றோர், அந்த விருதுக்குரிய தகுதியாளர் அல்ல இவர் என்ற சினத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மனக்குறை என்பதினும், வருத்தம் என்பதினும், ஆதங்கம் என்பதைவிட, கோபம் என்ற சொல்லால் அந்த வெளிப்பாட்டை அளவிடுவதே பொருத்தமாக அமையும்.
"தி.க.சி. - சிறந்த மனிதாபிமானி, சிறந்த இதழாசிரியர், தோட்டக்காரரர், இலக்கியக் களப்பணியாளர்" - காலச்சுவடு இதழ் கேலி, கிண்டல், எகத்தாளமாய் எழுதிய வாசகம் இது. (2001 மே, ஜூன் - காலச்சுவடு பக் 58). விமர்சகனுக்கும் படைப்பாளி என்ற இடத்தை வழங்க மறுக்கிற - இலக்கிய உலகில் நிலவி வருகிற ஒரு பொதுப் பார்வையின் விசுவரூப வார்த்தைகள் இவை.
ஒவ்வொரு படைப்புக் கலைஞனும், வாசகனாகத் தொடங்குகிறான். தேர்ந்த வாசகன் நிலையிலேயே அவன் நெடுநாட்கள் பயணிக்க முடியாது. வாசிப்பு அளவிலான சிந்திப்புகள் அவனை ஒரு படைப்பாளியாக மேல்நிலை கொள்ளச் செய்கின்றன. கவிஞன், சிறுகதைக்காரன், நெடுங்கதையாளன், ஆய்வாளன்: இவர்கள் அனைவரும் ஒரு காலத்தின் தேர்ந்த வாசகனாய் இருந்தவர்களே.
கவிஞனாக, சிறுகதையாளராக, மொழியாக்கக்காரராய், கட்டுரையாளராய் பல படிக்கட்டுகள் வழிமேலேறி, உச்சியில் தி.க.சி கால்வைத்த இடம் விமர்சகன். இந்தப் பயணத்தில் காலங்களை வசப்படுத்திய சிலரின் நினைவுகளை அசைபோடும் தொகுப்பு இது. இவர்களில் புதுமைப்பித்தன் என்னும் படைப்பாளியைத் தவிர, மற்றவர் அனைவரும் விமர்சகர்கள். இவர்களில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தவிர, மற்றவர்கள் அனைவரும் மரணமடைந்திருந்தார்கள் அப்போது. எனவே, இத்தொகுப்பு நீத்தார் நினைவுகள் - என்ற வகைமைக்குள் வரும்.
நமது தமிழ் மரபு, ஏன் உலக மரபும் அவ்வாறேதான் இருக்கிறது எனக் கருதலாம். இறந்து போனவர்கள் பற்றி, குற்றம், குறை பேசுதல் ஆகாது என்ற மனச்செழுப்பம் கொண்ட மரபு வழி.
தி.க.சி செயல்பட்டுள்ளார் என அறிய முடிகிறது. இக்கட்டுரைகளில் விதந்தோதப்படுகிற சிலர் தி.க.சி.யின் கடுமையான விமர்சனங்களுக்கு முன்னர் ஆளானவர்கள் என்ற குறிப்பையும் இணைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், "வினையாற்றும் இடத்துக்கு வாசிப்பாளர்களை எடுத்துச் செல்லாது, சுகமான வாசிப்பு சுவாரசியத்தில் தள்ளியவர் கல்கி" என்ற தி.க.சி. யிலிருந்து,
"என்னைப் பொறுத்தவரையில் நமக்குக் கல்கியும் வேண்டும், புதுமைப் பித்தனும் வேண்டும். ஏனெனில் இருவரும் மகாகவி பாரதியின் பெருமைக்குரிய வழித் தோன்றல்கள்" என்கிற தி.க.சி.யைதான் இந்தத் தமிழ்மரபைப் புரிந்து கொள்ளும் போது மட்டுமே வந்தடைய முடியும்.
"இலக்கியத் துறையில் கல்கியின் ஆசிரியர் ரசிகமணி டி.கே.சி. அரசியல் துறையில் கல்கியின் ஆசான் ராசாசி. இருவரையும் மனதில் நிலைநிறுத்தி தொண்டாற்றியவர் என்று மீ.ப.சோமு கூறுகிறார். இவ்விருவரின் பலமும் பலவீனங்களும் கல்கியின் எழுத்துக்களில் நன்கு பிரதிபலித்தன" என்கிற போது விமர்சனப் பார்வையை தனக்குள் இறுக்கிப் பிடித்துள்ளார் தி.க.சி என்று தெளிவாகிறது.
எந்நிலையிலும் தி.க.சி பாரதியின் தடம் பின்பற்றுபவர். பாரதி கிழித்த அறக் கோட்பாடு என்னும் கோட்டை தாண்டி எட்டுவைக்க லவலேசமும் கருதாதவர். எனவே விமர்சகர்களைப் பற்றிய பார்வையிலும் பாரதிவழிக்காரர்கள் எனப் பகிர்ந்தபடி நடப்பார்.
"படைப்பாளி, பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் என்னும் முறையில், தமிழ் எழுத்துலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வீறுடன் இயங்கிய இலக்கிய சக்தி, செல்லப்பா. மார்க்சீய அழகியல்வாதிகளாகிய நாங்கள், அவருடன் ஒன்றுபடுதல், தோழமையுடன் விமரிசித்தல் என்னும் அணுகுமுறையைக் கடைப்பிடித்தோம். ஏனெனில் செல்லப்பாவும் நாங்களும் அரசியலில் வேறுபட்டாலும், இலக்கியத்தில் மகாகவி பாரதி பாதையை மேம்படுத்துவதில் ஒன்றுபட்ட தோழர்கள்" - என்று எங்கு சுற்றினாலும், பாரதி போட்ட இந்தப் பாதையில் வந்து நிற்பது தி.க.சி.யின் சிந்தனை இயல்பு.
"தனது 86 ஆண்டுக்கால வாழ்க்கைப் பாதையில் முன்பாதியைத் தேசத்திற்காகவும், பின்பாதியை இலக்கியத்திற்காகவும் அர்ப்பணித்த தியாகி சி.சு.செல்லப்பா. இத்தகைய தியாக உள்ளம் படைத்த கலை, இலக்கியவாதிகள், சாதனையாளர்கள் இன்று நம்மிடையே எத்தனை பேர் உள்ளனர். விரல்விட்டு எண்ணிவிடலாம்" என்று இன்றைய இலக்கிய உலகின் செயலற்ற தன்மையை எண்ணிப் பார்க்கிற தி.க.சி.யின் வரிப்புக்கு, கல்கி கூறிய வாசகத்திலிருந்தே வந்து சேர இயலும். கல்கியின் இக்கூற்றுக்கு கல்கியும் ஒரு பாத்திரதாரர் ஆனார் என்பதுதான். முந்தைய, இன்றைய இலக்கிய யதார்த்தம்.
அறிவுத்திறத்தால், பாட்டுத்திறத்தால் நின்ற கே.சி.எஸ்.அருணாசலத்தின் மரணத்தை அச்சு ஊடகங்கள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. அந்த மக்கள் கவியின் மறைவு பற்றிப் பேசாத, செய்தி போடாத இதழ்கள், "திரைப்பட இயக்குநர் விட்டலாச்சார்யா 80 வயதில் காலமானார்" என்ற பரபரப்புச் சேதியை வெளியிட்டன. விட்டலாச்சார்யாவின் அற்புத சாதனைகளைப் பட்டியலிட்டிலிருந்தன. எல்லாத் துறைகளும் திரைத்துறையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டனவே என்பதை இது புலப்படுத்தியது. ஊடகங்களும் திரைப்படக் கழிவு தின்றே பிழைப்பு நடத்துகின்றன என்பதற்கு இதனினும் வேறு சான்று இருக்கமுடியுமா?
ஊடகங்கள் எவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, இயக்கப்படுகின்றனவோ, அவர்களின் கருத்துப்பாட்டில் தான் இயக்கப்படுகின்றன.
இது பற்றிய கல்கியின் கணிப்பு இது:
"முதலாளித்துவம் என்பது எப்போதும் எங்கேயும் எந்தத் தொழிலிலும் தீமை பயப்பதுதான். ஆனால் பத்திரிகைத் தொழிலில் அது பன்மடங்கு தீமை பயப்பதாகும். ஏனெனில் மற்ற எந்தத் தொழிலையும் விடப் பத்திரிகைத் தொழில், பொதுமக்கள் உள்ளத்தில் அதிக மதிப்பைப் பெற்றிருக்கிறது. பத்திரிகையில் வரும் எந்த ஒரு விசயமும் ஒன்றுக்கு நூறுமடங்கு அதிக சக்தி உள்ளதாய்ப் போய்விடுகிறது. எந்த சக்தியையும் நல்லதற்கும் பிரயோகிக்கலாம், தீமைக்கும் உபயோகிக்கலாம் அல்லவா? பத்திரிக்கையின் சக்தியானது, எழுத்தாளனின் கையிலிருந்து முதலாளியின் கைக்குப் போகும் போது, அதன் துஷ்பிரயோகத்துக்கு வசதியும் அதிகமாகிவிடுகிறது.
முதலாளிகள் முதலில் எழுத்தாளர்களின் எழுத்து வன்மையினாலும், உயர்ந்த இலட்சியங்களினாலும், பத்திரிகைகளின் சக்தியை வளர்த்துக் கொள்கிறார்கள். பிறகு எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய இலட்சியங்களுக்கும் டிக்கட் கொடுத்து விடுகிறார்கள். தங்களது சொந்த நலன்களையும், சுயகாரியங்களையும் சாதித்துக் கொள்வதற்காகவே பத்திரிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்".
இத்தனை அப்பட்டமாய் கல்கி வெளிப்படுத்தியது போலவே, ஊடகங்களின் செயல்கள் இருக்கையில், துணை போகிறவர்களாக இலக்கிய கர்த்தாக்களும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்".
அறிவுஜீவிகள் என்னும் நடுத்தர வர்க்கம் தனக்கென வரித்துக் கொண்ட 'வாழ்க்கை அறம்' ஒன்றுண்டு. அது, தனக்கெனத் தனித்த சுதந்திரத்தை கொண்டிருப்பதாக தோற்றம் கொடுக்கிறபோதே, கட்டுப்பாடுள்ள சுதந்திரமாக இருப்பதோடு ஒத்துப்போகிற வாழ்க்கை அறமே ...
***
காலத்தின் குரல் என்ற இந்த நூல்வழி குறிப்பிட்ட கால சமுதாய வரலாற்றைப் பற்றி மட்டுமல்ல, அவர்களின் செயல்முறைகளையும் அறியும் சாத்தியத்தையும் தருகிறது. அவைகளில் சில;
* வெ. சாமிநாத சர்மாவின் 'ஜோதி என்ற பத்திரிகை ரங்கூன் (இன்றைய மியான்மர்) நகரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெளிநாட்டிலிருந்து இடையறாது ஆதரிக்கும் அந்த ஏட்டின் தனித்தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.
* 1940 - ஆம் ஆண்டுகளின் போது வை.கோவிந்தன் அவர்களின் 'சக்தி மாத இதழ்', ஏ.கே. செட்டியாரின் 'குமரி மலர்', 'சக்தி பிரசுராலயம்', 'பிரபஞ்சசோதி பிரசுராலயம்’ ஆகியவை வெளியிட்ட நூல்கள் மூலமாகவும் சாமிநாத சர்மாவின் மாபெரும் சிந்தனைக் கருவூலங்களை பயின்றேன்; பயன்பெற்றேன்.
* நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் தினமணி ஆசிரியர் குழுவினர் ஊதிய உயர்வு கோரினர். தினமணி முதலாளி ராம்நாத் கோயங்கா பிடிவாதமாக எதிர்த்தார். அதனால் 1943-ல் தினமணியிலிருந்து ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் தலைமையில் புதுமைப்பித்தன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் ஒரு பகுதியினர் ராஜினாமா செய்தனர்.
மூத்தோர் சொல் கேள் - என்பது நிலவும் ஒரு மொழி. வெறுமனே பணிவு கொண்டு, அடக்கமுடையவராய், போதனைப்படி நட என்பது அல்ல அதன் பொருள். மூத்தோர் சொற்கள் முந்திய வரலாற்றில் பயணிக்கும் வாய்ப்பை உண்டாக்கித்தருகிறது. மூத்தோர் சொல் வழியே போய், அவர் காட்டும் நூல்களை வரலாறுகளைக் கற்பதும், இத்தேடல்கள் மூலம் நம்மை உருவாக்கிக் கொள்வதும் ஒரு தொடர் ஓட்டமாகும். ஒரு ஓட்டமல்ல - ஒரு ஓட்டத்திலிருந்து மற்றொரு ஓட்டம் - ஒரு தகவலிலிருந்து மற்றொரு தகவல் - ஒன்றிலிருந்து மற்றொரு தேடல் - என வாசிப்பவரை உயர்த்திக் கொண்டே போகிறது, தி.க.சி.யின் இந்தக் காலத்தின் குரல்.
03.03.2012
பா.செயப்பிரகாசம்
புதுச்சேரி - 605 008

கருத்துகள் / Comments