விடியல் சிவா - மீண்டும் எழுந்த விடியல்

30.07.2012.திங்கட்கிழமையுடன் அவரது பயணம் நிறைவு பெற்றது. போராளிகளும் மேதைகளும் எதிர்காலம் பற்றிய தமது நகர்வுகளில் தெளிவான முடிவாற்றுதலோடு இயங்குகிறார்கள். இறப்புக்குப் பின் தன்னுடல் மருத்துவ ஆய்வுப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது அவரது முடிவாற்றுதலாக இருந்தது.


மரணமடைந்த உடல் எரியூட்டப்பட்டு, மறுநாள் காலையில் 'தீ ஆற்றுதல்' என்றொரு சடங்கு நடைபெறும். 57 ஆண்டுகளின் பதின்ம வயதிலிருந்து இந்த மண்ணில் எரிந்த அந்தக் கனல், தனக்குத்தானே 'தீ ஆற்றிக்கொள்ளல்' என்ற உன்னதத்தையும் நிறைவேற்றியிருந்து. அவருடைய இல்லத்தில் (அது அவருடைய இல்லம் அல்ல. தோழர் தண்டபாணியின் மகள் இல்லம்) இயங்கிக் கொண்டிருந்தது விடியல் பதிப்பகம். உடல்நிலை மோசமானதால் ஏற்கனவே கோவை சித்தாபுதூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் தனது சுவாசிப்பை நிறுத்தியவுடன் நேரே அங்கிருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் இயங்கிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கு.ராமகிருஷ்ணனின் 'பெரியார் படிப்பகத்தில்' நேசிப்பாளர்கள் இரங்கல் செலுத்திட உடல் வைக்கப்பட்டது. இரவு 8.00 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு ஒப்பளிக்கப்பட்டது.

சேலத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவா. சேலம் திராவிடர் கழகத்தில் இயங்கிகொண்டிருந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான சின்னாண்டார் தொடர்பில் திராவிடர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார். திராவிடர் கழகத் தொண்டராக இயங்கியது அவர் பள்ளிப்பருவம்.

1967-ல் 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற நக்சல்பாரி உழவர் எழுச்சி வெடித்த நேரம். இந்தியாவின் வடகிழக்கில் எழுந்து, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பற்றிப் படர்ந்த தீ, தமிழ்நாட்டுக்குள்ளும் படர்ந்த போது, ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளான ஊடகங்கள் மூலம் 'தீ கம்யூனிஸ்டுகள்' என்ற ஊடக மொழியாக கீழேவரை இறங்கியிருந்தது. இத்தகைய எழுபதுகளின் பிற்பகுதியில் சிவா என்ற இளைஞர் புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களிடையில், குறிப்பாக தலித் மக்கள் மத்தியில் தங்கி அவர்களுடனே வாழ்ந்து பணியாற்றினார். புரட்சிகரக் கருத்தியல், எளிமையாய்ச் சென்றடையும் வகையில், யதார்த்த சம்பவங்களுடன் விளக்கி, சிறு சிறு வெளியீடுகளாய்க் கொண்டு வருகிறார். பிற்காலத்தில் மேற்கொண்ட, பதிப்பக வெளியீட்டுப் பணிகளுக்கான 'மூலக்கரு' இம்முயற்சியில் வெளிப்பட்டது.

2

நாற்பதாண்டுக்கால புரட்சிகர மா. லெ. இயக்கங்களது பணியை தமிழகத்தை முன்னிறுத்தி எடைநிறுத்திப் பார்த்தால், அமைப்பின் ஜீவாதாரமான சிந்தனையாளர்கள் குழு – இடைநின்று விலகிய இழப்புத்தான் மிகப் பெரியது. புரட்சிகர இயக்கங்கள் விதவிதமான அடக்குமுறையை அரச பயங்கரவாதத்திடமிருந்து எதிர்கொண்டது. அவைகளை எதிர்கொண்டு சமாளித்து மேலெழ முயலுகையில், கூட்டுக்குள்ளேயே சிந்தனை ஒவ்வாமை தோன்றி, சிக்கல் உருவானது. பிரதான முரண்பாடு யுத்த தந்திரம், போர்த்தந்திரம், நடைமுறை உத்திகள் என மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்திக் கொண்டு, வேறு வேறான திசைகளில் பிரிந்தார்கள். அணியிலிருப்போரின் சிந்திப்புத் திறன், செயல்திறன், கிரகிப்பு என்ற உளவியல் அம்சங்களை கவனத்தில் கொள்ளாது, இவர்களின் விவாதம் இரவுக் கணக்கில் நீளும். நெடிய விவாதங்கள், ஆலோசிப்புகளில் இவர்கள் கரைந்து கொண்டிருந்த காலத்தில் கண்முன்னரேயே, சமுதாயப் பிரச்சனைகளை அந்தந்த மக்கள் நடத்திக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள். எழுந்து எதிர்கொள்ள வேண்டிய புதிய புதிய பிரச்சனைகளை விவாதிக்கும் குழுவாக மட்டுமே இருக்க முடிந்ததே தவிர, மக்களை அணிசேர்க்கும் செயலூக்கம் கொண்டு உருக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் இடதுசாரிகள் 'செத்தாலும் நாடாளுமன்றத்திலேயே சாவது' என்ற முட்டுச் சந்துக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள்.

மக்கள் யுத்தக்குழு அமைப்பில் சிவா புரட்சிகரப் பயணத்தை தொடங்கிய வேளையில் தமிழகத்தில் அதையும் உள்ளடக்கி நான்கு மார்க்சிய லெனினியக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சில முளைவிடத் தயாராக இருந்தன. தமக்குள்ளேயே வீரியத்துடன் முட்டிமோதி ஓட்டை உடைத்துக்கொண்டு வர அதற்கான கரு, அமைப்பின் இயல்பிலேயே காத்திருந்தது.

புரட்சிகர மா.லெ. குழுக்களை வழிநடத்தி இயக்குபவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார்கள். அங்கங்கே களப்பணியாற்றி, வட்டாரத்தில் தொடர்புடையவர்களாக இயங்கினர். யார் தொடர்பில் இருக்கிறார்களோ, யார் வீட்டை இருப்பிடமாய்க் கொண்டு இயங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தோழர்களைத் தெரிந்தது. கொள்கை முரண்பாடுகளோ, அமைப்புடனான பிற முரண்பாடுகளோ, எதுவாயினும் குறிப்பிட்ட தோழர் மூலம் தெரியவருவதே அவர்களுக்குச் செய்தி மட்டுமல்ல, அதுவே உண்மை. களப் பணியாற்றுகையில் அறிமுகமாகும் நபர்களுடனான நெருக்கம், குடும்பத்துடனான நெருக்கம் என ஒரு தொடர்பு வட்டம் உருவாகியிருந்தது. அமைப்பிலிருந்து முரண்பட்டுப் பிரிகையில், அவரவர் தொடர்பிலுள்ள வட்டத்தை தமக்கேயானதாய் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டது. ரகசியம் பேணுதல், தலைமறைவு வாழ்வு, தலைமறைவுக் குழுக்களாக இயங்குதலால் வெளிப்படைத் தன்மையின்மை போன்றவை இதற்குச் சாதகமாய் அமைகின்றன. எதன் காரணமாக இருந்தாலும், இதனால் விசுக்கென்று உடனே ஒரு தனிக்குழுவாக இயங்க இயலும்.

குடும்பம், சாதி மத, கல்வி, பண்பாடு, அரசியல் கட்சிகள், அரசு என நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகளில் அதிகார மேலாண்மையைக் காண முடியும். தேர்தல் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக அதிகார மேலாண்மை கொண்டு இயங்குகின்றன. சனநாயக முறை, உள்கட்சி சனநாயகம் போன்றவையெல்லாம், இந்தக் கட்சிகளில் ஒப்புக்குப் பேசப்படுவையே. மேலிருந்து கீழ்வரை இக்கட்சிகளில் ஆணையிடுதல், நியமித்தல் மட்டுமே உண்டு. தேர்வு செய்யப்படுவது என்பதும் யாரை நினைக்கிறதோ தலைமை அவரை நியமிக்கின்ற இன்னொரு கண்துடைப்பாகவே இருக்கிறது.

இடதுசாரி இயக்கங்களிலும் புரட்சிகர அமைப்புக்களிலும் சனநாயக மத்தியத்துவம் நடைமுறையாக இருக்கிறது பெரும்பான்மை சனநாயகம் என்ற அடிப்படையிலே இந்த மத்தியத்துவம் உருவாகிறது. சனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் இங்கும் ஒற்றை முடிபு, அதன்வழிச் செயல்பாடுகள் என்பதான ஒற்றை அதிகாரம் வெளிப்படுகிறது. பெரும்பான்மை சனநாயகத்திற்குள்ளேயே, அதிகாரம் பிறக்கும் கரு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

சனநாயக வழிமுறையை இது போன்ற நிறுவனங்களிலிருந்து, அமைப்புக்களிலிருந்து தொடங்குவது அல்ல. பின்னர் எங்கிருந்து தொடங்குவது? மக்களிலிருந்து தொடங்குவது. உண்மையில் மக்களுக்கான கல்வியாக மட்டுமே இல்லாமல், அவர்களின் சனநாயகம் நடைமுறையாகவும் ஆக்கப்பட வேண்டும். அது ஒரு செயல்முறைப் பயிற்சி. மக்களை இயக்குற அமைப்புகளாக இல்லாமல், மக்கள் இயக்குகிற அமைப்புக்களாக மாற்றம் பெறுகிறபோது, சனநாயகத்தின் மேல் நோக்கிய பரிமாணத்தைத் தரிசிக்க முடியும். சனநாயகம் என்பது மேலிருந்து கீழிறங்குவதல்ல. மேலிருந்து கீழிறங்குவது அதிகாரம்;, நடைமுறையில் கீழிருந்து மேலேறுவதே சனநாயகம்.

சமதளத்தில் தவழ்ந்துவரும் நதி, 'சடா'ரென ஒரு பள்ளத்தை நோக்கிப் பாய்வது அருவி. ஆனால் சனநாயக வெள்ளம், கீழிருந்து. மேல்நோக்கிப் பாயும் அருவி. ஒரு சமுதாயம் எங்கிருந்து இயக்கப்பட வேண்டுமோ, அங்கிருந்து இயக்கப்படுகிறது என்று பொருள்.


ஒரு அமைப்பு, தன்னை முழுமையாய் மக்களுக்கானதாய் ஆக்கிக்கொள்ள முடியுமென்றால், இவ்வகையிலேயே சாத்தியம். அமைப்பு, அல்லது இயக்கம் மக்களைக் கண்காணிப்பது என்பதற்கு மாற்றாய், மக்கள் அமைப்புக்களைக் கண்காணிக்கும் ஒரு பொறிமுறையே சனநாயகம்.

இந்தப் பொறிமுறையைக் கையாளாமல் போவதினாலேயே, புரட்சிகர அமைப்புக்களும், விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தேக்கத்தை அல்ல, பின்னடைவை உரித்தாக்கிக் கொண்டன.

எடுத்துக்காட்டாய் பகுதி அல்லது வட்டாரப் பிரச்சனைகளைக் கையாளும் முறை. தமிழகம் முழுமைக்கும் பொதுவானதாய் விலைவாசி உயர்வு, பெட்ரோல்விலை உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாடு என இருக்கமுடியும். முல்லைப் பெரியாறு நீர்த்தகராறு, கூடங்குளம் அணுஉலை, மீனவர் தாக்கப்படுதல், சாதித்தாக்குதல்கள், மணல் கொள்ளை என்பன போன்றவை பகுதிப் பிரச்சனைகளே. இப்பிரச்சனைகளை விசையைத் தட்டிவிட்டிவிட்டாற்போல் முன்னெடுக்க வலிமை கொண்ட பகுதி அமைப்புகளும், பகுதித்தலைமைகளும் அவசியம். ஆனால் புரட்சிகர அமைப்புக்கள் மேற்கொண்ட நடைமுறை வினோதமானது. பகுதிப் பிரச்சனைகள் பற்றி அங்கிருந்து வரும் செய்திகள், பகுதி அமைப்பினரின் அறிக்கை இவைகளை ஆராய்ந்து தலைமைக் குழு முடிவெடுக்கும். விவாதித்து, கீழேயுள்ள அணியினருக்கு வழிகாட்டுதல் தரும்;. இந்த வழிகாட்டுதல் வருவதற்கு முன்பே, அந்தப் பிரச்சனை ஏதோ ஒருவகையில் கொதிநிலை கீழிறங்கி நீர்த்துப் போயிருக்கும். இவ்வகையாக பகுதித்தலைமைகள் உருவாக விடாமல் செய்வதில், தலைமை பெரிய பங்காற்றுகிறது. ஆங்காங்கே பகுதித்தலைமை உருவானால், ஆற்றல் கொண்ட அப்போராளிகளை இணைத்து பொதுப் பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியும்.

குறிப்பிடவேண்டிய மற்றொரு விடயம் வெகுமக்கள் தொடர்பிலான பொதுப் பிரச்சனையையோ, பகுதிப் பிரச்சனையையோ, எடுத்துச் செய்கிற அளவு திராணி கொண்டவையாய் தமிழக மா.லெ. குழுக்கள் உருவெடுக்கவில்லை.

இத்தகைய நிலைமைகளினுடாக, அவர் சார்ந்த அமைப்பு மட்டுமல்ல, புரட்சிகர அமைப்புகளின் போதாமையை உணர்ந்தவேளையில் சிவாவின் விலகல் ஆரம்பித்தது.

புரட்சிகர அமைப்புக்களின் போதாமையை அமைப்பு இயக்கு முறைகளில் மட்டுமேயல்ல, ஏழு முனைகளில் அதற்கான பரிசீலனை இன்மையைக் கண்டார்.

  1. இன்றைய உலகமயமாக்கலில் வெகுமக்கள் மத்தியில் உண்டாகியுள்ள மாறிய நிலைமைகள்; புதிய பொருளாதாரம், நுகர்வுக் கலாச்சாரம் போன்றவைகளால் உருக்குலைக்கப்பட்ட நிலைமைகள் பற்றிய சிந்தனைகள் போதுமானவையல்ல.
  2. பாட்டாளி வர்க்கம் பற்றிய புதிய வரையறைகளின் அவசியம், உலகமயமாக்கல் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் நிலையும், நிலைப்பாடுகளும் மாறியிருக்கின்றன. தனிக்குணாம்சத்துடன் திரண்டிருந்த தொழிலாளி வர்க்கம் நடுத்தர வர்க்கத்தின் மேநிலைச் சிந்தனை கொண்டதாக மாறியுள்ளது. கூலித் தொழிலாளர்களும் ஒருங்கிணைக்கப்படாத உதிரிகளாக இருக்கிறார்கள்.
  3. சாதிகள் வர்க்கங்களாக நிலவுகின்ற சமூகத்தில், சாதிய ஒழிப்பை முதன்மைப்படுத்திய செயல்பாடுகள் இன்மை. சாதிய வாழ்வுமுறை, சாதிய நிலைப்பாடுகள், சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய புரிதலும் செயலும் மிகக்குறைவாகவே இன்றுவரை இருக்கிறது.
  4. சரிபாதியான பெண்களை விடுதலை செய்வது என்ற பெண்ணியப் பார்வை கருத்து எல்லையிலேயே இருப்பது. செயல்முறைக்கு எடுத்துச் செல்லாமலும், எடுத்துச் செல்லும் போராட்டப் பாதைகளில் கவனமின்மையும்.
  5. மூலதன வேட்டையின் வேகத்தில் சிதைக்கப்படும் சுற்றுச் சூழல் பற்றிய பார்வையின்மை.
  6. வேளாண்மை மீதான உலகமயத்தாக்கம். தொடர்ச்சியில் விவசாயிகளின் தற்கொலை. வேளாண்மை நசிவு.
  7. தேசிய இனப்பிரச்சனை

ஒடுக்கப்படும் தேசிய இனமக்களின் விடுதலை என ஒன்று இருக்கிறது என்ற ஓர்மை இல்லாமல் ஏறத்தாழ புரட்சிகர அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் 'தேசியம் ஒரு கற்பிதம்' – என்ற சொல்லாடலை மாற்றுக் கருத்தாளர்கள் பிரயோகித்துக் கொண்டுள்ளனர். 'தேசியம் ஒரு கற்பிதம் என்ற கருத்தை ஒடுக்கும் இனத்திடமும், ஒடுக்கும் ஆளும்வர்க்கக் குழுக்களிடமும் இவைகளின் பிரதிநிதிகளான ஆட்சியார்களிடமும், போய் வைக்க வேண்டியது தானே. ஒடுக்கப்படும் தேசிய இனமக்களிடம் போய் பரப்புரை செய்வதில் என்ன அர்த்தம்' என்ற கேள்வி தோழர் சிவாவிடம் இருந்தது. கோவை புளியங்குளத்தில் நடைபெற்ற 'ஈழ ஆதரவாளர் விடுதலைக் கோரிக்கை' மாநாட்டிலும், கோவை சிதம்பரம் பூங்காவில் நடத்திய 'ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும்' மற்ற தோழர்களுக்கு இணையாய், அவர் தீராநதியாய்ப் பெருக்கெடுத்தார்.

பல்வேறு பிரச்சனைகளில் மக்களின் புரிதல்களுக்கும் மா.லெ. இயக்கங்களின் பார்வைக்கும் இடைவெளி இருப்பதை சிவா அனுபவபூர்வமாக அறிந்தார். இவையனைத்தும் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள். பதில்கள் இல்லாத கருத்தியல் இடைவெளியை நிரப்புவதற்கான நூல்களை விடியல் பதிப்பகம் வெளிக்கொணர்வதை குறிக்கோளாகக் கொண்டது.

சுனித்குமார் கோஷ் எழுதிய 'இந்தியாவும் பிரிட்டீஷ் அரசும்'

ஹொராஸ் பி.டேவிஸின் 'தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள்'

ஆலிவர் கிராமசியின் நூல்கள், தளபதி மார்கோஸின் படைப்புக்கள், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய 'இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைகள்'

'உலகமயமாக்கல் – அடிமைத்தளையில் இந்தியா' போன்ற பல நூல்கள் இந்தத் தேவையை நிறைவேற்ற வந்தவையாகும்.

சமுதாயப் பிரச்சனைகளை பொருளாதாரச் சிக்கல் என்னும் ஒற்றை முனையாக மட்டுமே பார்க்கும் பார்வை நம் மத்தியில் உள்ளது. இன்றைய புதிய உலகின் பிரச்சனைகள் பல தன்மையனவாய், பல முனைகளில் பல ரூபங்களில் மையம் கொள்கிறவை. இந்த மையம், மாறிக் கொண்டே முன் செல்வது. ஒவ்வொன்றுக்கும் உற்பத்தி உறவுகள், பொருளாதார முடிச்சுக்களில் காரணங்களை மிக்க விருப்பத்துடன் விவாதித்து விளக்குபவர்கள், 'நொண்டிக் கோழிக்கு உரல் கிடையே சொர்க்கம்' என்கிற வகையினராகவே தெரிந்தார்கள். வாழ்வும் சமுதாயமும் பற்றிய முழுமையான புரிதலிலிருந்து புரட்சிகர உணர்வுக்கு வருகிற பார்வையை விசாலமும் வளர்ச்சியும் கொண்டதாக ஆக்கும் அறிவுத்தளச் செயற்பாட்டில் சிவா தன்னை இருத்திக் கொண்டார்.

உண்மையில் விடியல் பதிப்பகம் ஒரு இயக்கத்தின் பணிகளைச் செய்தது. இயக்கத்துக்கும் மேலாகவே அதன் வீச்சு இருந்தது என்று குறிப்பிட முடியும்.

3

பதிப்பகம் சனநாயக உரையாடலைச் செய்தது. பதிப்பக வெளியீடுகள் வழியாகவும், தனது சொந்த உரையாடல் மூலமாகவும் சனநாயகத் தொடர்பாடலை செழுமைப்படுத்தினார். நான் அறிந்தவரை, சிவா எவருடனும், குறிப்பாக வேறு எல்லையில் நின்ற எவருடனும் பகைமை பாராட்டியவர் இல்லை. மிகக் கடுமையாக வாதிடக்கூடிய, இன்னும் சொன்னால் மற்றவர் கருத்துக்குக் கதவடைத்து, 'நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று நிற்பவர்களிடம் கூட 'அவர் அப்படித்தான்' என்ற புரிதலோடு அவர்களைப் பற்றி விளங்கிக் கொள்வார். அந்தத் தருணங்களில், அவருக்குள்ளிருக்கும் புன்னகை அவருடைய இதழ்களில் தவழ்ந்திருக்கும்.

அவருக்குப் பல கனவுகள். யாவும் இலட்சியக் கனவுகள்! மிகப் பெரிய கனவு, உலகத் தரத்திலான ஒரு ஆய்வு நூலகம். இரு லட்சம் அரிய நூல்களை இதற்காக உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், பிரான்சிலுள்ள தமிழ் அறிஞருமான குரோ வழங்க உறுதியளித்திருந்தார். நண்பர்கள் பலரும் தமது நூல் சேகரிப்புகளை வழங்க இருந்தனர். சேகரித்துக் கொண்டிருந்தார். இது ஒரு பொது நூலகம் அல்ல. ஆனால் மக்களைப் பற்றிய நூலகம். நாடு, மொழி, பண்பாடு என உலகெங்கும் வாழும், மக்களைப் பற்றி, மக்களின் வாழ்க்கை பற்றி, அவர்களின் விடிவை முன்னெடுக்கும் கருத்தியல் என அனைத்தையும் அறிந்து கொள்ள அவசியமான சகல நூல்களும் கொண்டதாக மனதில் வடிவமைத்திருந்தார். மூன்று மாதங்கள் முன்பு அவரைச் சந்தித்து உரையாடிய வேளையில், இந்தக் கனவு மொழியையே அவர் உதிர்த்தார் 'இது என் இலட்சியக் கனவு தோழர். என் கடைசிப் பணி இது. அதுவரை இந்த நோய் என்னுடன் ஒத்துழைத்தால் நல்லது' என்றார்.

பார்ப்போம் – என்று அவர் முடித்த சொல்லில் ஏலாமையும், தவிதாயப் படுதலும் தூக்கலாய் வெளிப்பட்டது.

அவர் செய்து முடிக்க மூன்று கடமைகள் இருந்தன.

ஒன்று, தோற்றம் முதல் இன்றைய மா.லெ. இயக்கங்கள் வரையிலான தமிழக பொதுவுடமைக் கட்சியின் வரலாறு. எந்தச் சார்புமில்லாமல் சரியான செய்திகளுடன் வெளிக்கொண்டு வருவது.

இரண்டு, சாதி இயல்பு, இருப்பு, செயல்படுதன்மை, தலித் விடுதலை. அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாய் சாதியம் பற்றிய ஆய்வுநூல் எழுதுவது.

மூன்று, மண் தன் உயிரை வேக வேகமாய் இழந்து வருவது. மண்ணுக்குச் சொந்தமான, வஞ்சிக்கப்பட்ட உழவர் பெருமக்கள் அதனினும் வேகவேகமாய் மண்ணிலிருந்து புலம்பெயர்தல் – உயிரழிந்து வரும் வேiளாண்மை பற்றிய ஒரு நூல்.

'இந்த மூன்று வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, நிறைவோடு ஊர்போய்ச் சேர்ந்து விடுவேன்' என்று அடிக்கடி சொல்லியதாக நினைவு கூர்ந்தார், அவரது நெருக்கமான தோழரும் அறக்கட்டளை உறுப்பினருமான ராசாராம். பதிப்புப் பணிகளை தான் போட்டுத் தந்த தடத்திலும், அதற்கு மேலும் எடுத்துச் செல்வதற்காக, நோய் ஆட்கொண்டிருந்த போதே 'அறக்கட்டளை' ஒன்றை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பணியாற்றிய நீலாம்புர் பகுதியில் சாதியம் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி குறிப்புகள் போட்டுவைத்ததோடு நின்றுபோனது.

4

புரட்சிக்குப் பிந்திய ருசிய சமுதாயத்தில் உச்சத்தில் இருந்த ஸ்டாலினிய சர்வாதிகாரத்தை எதிர்கொண்ட பல சிந்தனையாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் சிறையில் தள்ளப்பட்டனர். வாழ்வு முழுதுக்குமான இருப்பிடமாகியது தனிமைச் சிறை. சிலர் இல்லாமல் ஆக்கப்பட்டனர். ஸ்டாலினிய சர்வாதிகாரத்தை எதிர்கொள்ளமுடியாமல் கவிஞர் மாயகோவஸ்கி தற்கொலை செய்துகொண்டார். வேறு மாற்று வழிகள் எதுவும் அவருக்கு இருந்திருக்கவில்லை.

'மாயகோவஸ்கி ஏன் தற்கொலை செய்துகொண்டார்' என்ற கவிதையை மளையாளத்தின் சிறந்த கவிஞரான சச்சிதானந்தன் பதிவு செய்திருக்கிறார். அக்கவிதையின் இறுதிப் பகுதிகள் பின்வருமாறு:

பிறகு மௌனமாக நடந்தான்

சூரியனுடன் தேநீர் அருந்தி

முடிந்த அளவு உரக்கப் பாடிக் கொண்டிருந்த

அந்த எழுத்தறைக்கு

இருண்டு கொண்டிருக்கும் சமவெளிகளின் மேல்

திரைச் சீலைகளை இறக்கிவிட்டான்

எதிரிகளுக்காகத் தயாராக வைத்திருந்த துப்பாக்கியை

தனது தலையை நோக்கி உயர்த்தினான்

அதுதான் இப்போது தனது எதிரி என்பதுபோல.

ரஷ்யக் கவிதைக்கு உருக்கு நாளங்கள் கொடுத்த

அந்தப் பேரன்பு வெடித்துச் சிதறியது

இருபத்திரண்டு ஆண்டுகளின் நம்பிக்கையை அணிந்திருந்த

கட்சியுறுப்பினர் அட்டை ரத்தத்தில் ஊறியது

லெனின் கவிதையும் ஊறியது

முழுமையாக்கப்படாத கைப் பிரதிகளினூடே

கவிஞனின் அடங்காத ரத்தம் பெருகிப் பாய்ந்து நடந்தது.

(மொழியாக்கம் – கவிஞர் சுகுமாரன்)

புரட்சிகர இயக்கங்களின் போதாமை, திசைவிலகல்களால் ஒதுக்கம் கொண்டபோதும் தீவிர செயற்பாட்டாளராக இருந்த சிவா, சமுதாய மாறுதலுக்கான பல்வேறு வெளிகளில் (Space) பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன என்பதை உணர்ந்திருந்தார். முக்கியமான பணியாக வெளியீட்டுப் பணியை தேர்வு செய்து மீண்டும் புத்தெழுச்சியோடு தன்னை தகவமைத்துக் கொண்டார்.

திருமணம், குழந்தைகள், குடும்பம் என அவருக்கு இல்லை. தீவிரமாய் இயக்கப் பணியாற்றிய காலத்திலும், வாழ்வின் நடுப்பகுதியிலிருந்து அறிவுத்தளச் செயற்பாடாய் பதிப்பகப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்ட காலத்திலும் இக்கடமைகளை பகிர்ந்து கொள்ள இன்னும் இரு தோள்கள் தேவையென அவர் கருதிப் பார்க்கவில்லை. ஒருவேளை அதுவே சுமக்கவேண்டிய பிரதான சுமையாகி திசை திருப்பிவிடக் கூடும் என அவர் நினைத்திருந்திருக்கலாம்.

இவை இவை கடமைகள், கனவுகள் என தன்முன்னால் வரிசைப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் - சமூக அசைவுகளை அறிவியல் பார்வையுடன் அலசுகிறவர்கள், மாறுதல் விரும்பிகள், 'அறக்கட்டளை' உறுப்பினர்கள் அனைவரும், இனி அவைகளை பொறுப்பெடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.

- பா. செயப்பிரகாசம்
ஆகஸ்ட் 2012

நன்றி: பொங்குதமிழ்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்