சனவரி 25 - போராடிப் போராடி பூக்காமல் காய்க்காமல் போன நாள்!

பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல், பண்பாட்டுச் சபையான “யுனெஸ்கோ“ தாய்மொழி நாளாக பிப்ரவரி 21-ஐ, 1999-ல் அறிவித்தது. 2000 - ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுதலை பெற்ற பாகிஸ்தான் 1948 –முதல் உருது மொழியை தேசிய மொழியாக அறிவித்தது. மேற்கு பாகிஸ்தான் மக்கள்மொழி உருது; அதிகார பீடம் அங்கே. கிழக்கு பாகிஸ்தானின் மொழி வங்காளம்; வங்க தேச மக்கள் உருது ஆட்சிமொழியை எதிர்த்துப் போராடி வந்தனர். ஆதிக்க மொழி எதிர்ப்பில் மாணவர்கள் முன்னின்றனர்.1952-ல் போராட்டம் உச்சம் அடைந்து ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டனர். ‘ஒரு மொழி என்றால் இரு நாடு; இருமொழி என்றால் ஒரு நாடு’ - என்பது அவர்கள் போராட்ட முழக்கமாக வளர்ந்தது. தொடர்ச்சியில் ”பங்களாதேஷ்“ தனிநாடாகியது.

விடுதலைக்குப் பின்னரும் வங்கதேச மக்கள் ஓயவில்லை.ஐந்து மாணவர்களைப் பலியாக்கிய பிப்ரவரி 21-ஐ, உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்க வேண்டுமெனப் போராடினர். வங்க தேசக் குடிமகன் முதல் வங்கதேச அரசு வரை ஐ.நா மன்றத்தின் கதவுகளைத் தட்டினர். 1999-ல் ஐ.நா.வின். யுனெஸ்கோ உலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது.

1965, சனவரி 25
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வெடித்த நாள். மக்கள் முதல் மாணவர் ஈறாக ஐநூறு பேர் பலியாக்கப்பட்டனர்.இரத்தத்தில் தோய்ந்தன 48 நாட்கள். இருமாதங்களின் பின் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, மாணவர்கள் கல்விநிலையத்தில் நுழைந்ததும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செய்து உறுதி ஏற்றுவிட்டு வகுப்பறைக்குள் கால்வைத்தனர்.


இத்தனை வீரஞ் செறிந்த போராட்டதுக்குப் பின்னும், சனவரி 25–ஐ உலக நாடுகள் கவனத்துக்கு எவரும் எடுத்துச் செல்லவில்லை: இந்தியப் பிரதிநிதிகள் ஐ.நா.வில் எடுத்துப் பேசவில்லை. அவர்கள் வட இந்தியர்கள். இந்தி மொழி ஆதிக்கத்துக்கு ஒற்றைக்காலில் நிற்பவர்கள். எவர் கையில் இந்திய ஆட்சி இருக்கிறதோ அவர்கள் தம் மொழிக்காகத்தான் நிற்பார்கள் என்பது நிரூபணமாயிற்று.

போகட்டும், சொரனையுடன் ஐ.நாவுக்கு எடுத்துச் சென்று போராட ஒரு தமிழ்த் தலைமையும் முன்வரவில்லை. ஐந்து உயிர்களைப் பலி கொடுத்த பிப்ரவரி 21 – தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்ததன் பலனாய், ”உலகத் தாய்மொழி நாளாக” யுனெஸ்கோவால் 1999–ல் அறிவிக்கபட்டது; ஐநூறு உயிர்களை எடுத்துக்கொண்ட 1965, சனவரி 25 – வெறுமனே அலங்கரித்த பதுமையாய் வைத்துக் கொண்டோம்: நாம் கைவிட்டோம்: அவர்கள் தம் வரலாற்றுப் பெருமிதமாய்க் கையிலெடுத்து மொழிப்போர் நாளைத் தமதாக்கிக் கொண்டனர்.

வரலாற்றை நினைவு கூறலும் வரலாற்றில் வாழ்தலும் தமிழருக்கு முக்கியமானதில்லை. சுயநலனுக்கு வாழ்தலும் மெத்தனமாய் காலம் கழிப்பதும் தமிழனுக்கு உயிர்மூச்சு! ஒற்றை மதம், ஒற்றைத் தேசம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அதிகார ஆட்சிநடத்தும் பாசிச அரசு சனவரி 25-ஐ ஏளனமாய்ப் பார்க்கிறது.மூன்று வேளாண்மைச் சட்டங்கள் குறித்து விவசாயிகள் கருத்தறியும் கடிதம் விவசாய சங்கங்களுக்கு இந்தியில் அனுப்பப்பட்டிருபதுதான் இன்றைய ஆட்சியாளர்கள் நிலை. கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ’திருதிருவென’ விழித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா பல்வேறு இனங்களின் ’கூட்டு மன ஆட்சியின் ‘ கீழ் ஒருபோதும் இருந்ததில்லை; ஒற்றை ஆரியப் பண்பாட்டு மன ஆட்சியாகத் தொடருகிறது.

மதப் பாசிசம் என்னும் சீரழிவுச் சிந்தாந்தத்தின் கீழ்நின்றுதான் நாம் இந்த சனவரி 25 நெஞ்சில் ஏந்தவேண்டியிருக்கிறது.

மொழிப்போர் ஈகியருக்கு வீர வணக்கம். !

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை