தாலியில் பூச்சூடியவர்கள் கதை - வாசகர் மதிப்புரை


"தாலியில் பூச்சூடியவர்கள்" பா.செயப்பிரகாசம் அவர்களின் கதை. திரு எஸ்.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு சிறுகதைகள் தொகுப்பிலுள்ள ஒரு கதை.

தீண்டாமை என்ற விஷப் பாம்புக்கு ஏராளமான கொடும்பற்கள். அதில் ஒன்றை படம் பிடிக்கிறது கதை. தீண்டாமையின் பெயரில் கடைப்பிடிக்கப்படும் பத்தாம் பசலித் தனம், சுயநலம், நரித்தனம் என ஒவ்வொன்றையும் தோல் உரிக்கிறது இக்கதை.

பேச்சுவழக்கில் சாதிய பெயர்களை குறிப்பிட்டு கதை சொல்லும் பாங்கில் நிதர்சனம் நெஞ்சில் அறைகிறது. சாதி அமைப்புகளின் அடக்குமுறைகளின் கிராமிய மனிதர்களின் வாழ்க்கைமுறை எளிய மக்களின் துயரம் என போகிற போக்கில் அனைத்தையும் சொல்லிவிடுகிறது. தைலி என்ற பள்ளர் இனத்தை சேர்ந்த பெண் புதிதாக திருமணமாகி ஒரு ஊருக்கு வருகிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சாதிய கொடுமைகளையும் தீண்டாமையின் இரட்டை வேடத்தையும் கூறி, எளியவர்களே என்றும் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள் என்ற முடிவுடன் கதை நம் நினைவுகளில் தொடர்கிறது.

இக்கதை என்னுள் ஏற்படுத்திய கேள்விகள்:
 1. தீண்டாமை இன்று முழுவதும் ஒழிந்து விட்டதா?
 2. உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் தீண்டாமையின் எச்சத்தை களைய நாம் தயாரா?
 3. இன்றைய நவீன தீண்டாமை சுயநலத்தின் வெளிப்பாடு மட்டும்தானே?
 4. ஆஸ்தியும் அந்தஸ்தும் கொண்ட பொம்மக்காக்களும் துயரத்தில் அழுவது ஏன்?
 5. தைலிகளின் துயரங்கள் தீர்ந்து விட்டதா?
 6. ஆணும் பெண்ணும் செய்யும் பாவத்தில் தண்டனை மட்டும் பெண்ணுக்கே தொடரப் போவது இன்னும் எத்தனை காலம்?
 7. இக்கொடுமைகளின் விலையை நாம் அறிகிறோமா...
 8. பெண்ணுடல் அவளுக்கு சாபமா?
இக்கதைகள் சொல்லும் நிஜங்கள்:
 1.  அப்பாவி தைலிகளுக்கு வடரெட்டி போன்றவர்களால் ஏற்படும் ஆபத்தை விட ராஜாமணி போன்ற நரிகளால் ஏற்படும் ஆபத்து அதிகம். 
 2. தீண்டாமை என்பது அன்றும் இன்றும் சுயலாபத்துக்கான வெளிப்பூச்சு மட்டுமே.
 3. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நேரத்தில் இன்னொருவர் தனக்கு அடிமையாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
 4. எண்ணற்ற தைலிகளின் வேட்கையும் விருப்பும் ஆசையும் தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம்.
 5. பெண்ணுடல் ருசிக்க என்றும் எதுவும் யாருக்கும் தடையாக இல்லை.
தலையில் பூச்சூடும் பெண்களோ, தாலியில் பூச்சூடும் பெண்களோ, பெண்ணென்றும் பெண் உடல் மட்டுமே - ஆணின் பார்வையில்!

- கவிதா சுரேஸ்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்