லீனா மணிமேகலையும் ஈழத் தமிழர் தோழமைக் குரலும்

இலங்கை இனவெறி அரசின் ஈழத்தமிழர் மீதான யுத்தம் உச்சத்தில் நடத்தப் பட்டுக் கொண்டிருந்த வேளை- தடுத்து நிறுத்தும் முயற்சியாக தமிழகத்தின் பல திசைகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. எப்போதும் போல் இப்போதும் மவுனம் காத்தல் தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகம் என உணர்ந்த கலை இலக்கியவாதிகள் “ ஈழத்தமிழர் தோழமைக் குரல்” என்ற அமைப்பை உருவாக்கினோம். டெல்லி ஆட்சியாளர்களின் இரும்புக் காதுகளை திறக்கச் செய்யவும், மூடிய இதயத்தைத் தட்டவும் முயற்சிகளை மேற்கொள்ள ஈழத்தமிழர் தோழமைக் குரல் சார்பில் நாடாளுமன்றத்தின் முன் பேரணி, ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவெடுத்தோம். ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. லீனா மணிமேகலை, பா.செயப்பிரகாசம்-ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவதென தீர்மானிக்கப் பட்டது. கலை இலக்கியவாதிகள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர், பெண்ணுரிமைப் போராளிகள், ஊடகவியலாளர், தகவல் தொழில்நுட்பத் துறையினர்- என அனைவரையும் இணைத்து, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவெடுக்கப் பட்டது.

 “இந்திய அரசே!

  1. ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் போருக்குத் துணை செய்யாதே.
  2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு.
  3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு.
  4. கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு; தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கொடு.

          இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து தில்லி நாடாளுமன்றத்தின் முன் ஈழத்தமிழர் தோழமைக் குரல் சார்பில் 8. 2. 2009 அன்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திடவும் அதன் பொருட்டு நிதிதிரட்டிடவும் தீர்மானித்தோம். தோழர் தியாகு தமிழுணர்வாளரான ஒரு திரைப்படக் கலைஞரிடம் பேசியதால், அவரை நானும் லீனாவும் சந்தித்தோம். அவர் ரூபாய் 25 ஆயிரம் என்னிடம் தந்தார். அதை லீனாவிடமே அவரது அலுவலகம் வந்ததும் கொடுத்துவிட்டேன். அத்துடன் எனது சொந்தப் பொறுப்பில் ரூபாய் 45 ஆயிரம் தந்தேன். ஏனெனில் தொடர்வண்டிப் பயணத்திற்கான முன்பதிவுகளை அவர் செய்வதாயிருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நான்கு கோரிக்கைகளில் ஒன்றான ”விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கு” என்ற முழக்கத்தை நீக்க வேண்டுமென லீனா மணிமேகலையும் இன்னும் சிலரும் முன்வைத்தனர். அரசுப் பணியாளர் சிலர் பயணத்தில் இணைந்துள்ளதால் அவர்களது பணிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கூறினார்கள். உண்மையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்னும் அச்சமும், அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற பதட்டமும் நிலவியது தான் காரணம். சற்றேறக் குறைய முப்பதுபேர் கூடி எடுக்கப் பட்ட சனநாயக முடிவு. அனைவரையும் மீண்டும் கூட்டி அவர்களின் கருத்தறிவது மட்டுமே சனநாயக செயல்முறையாக அமையும் என நாங்கள் குறிப்பிட்டோம்.

“அனைவரையும் உடனே கூட்டுதற்கான சாத்தியப்பாடு இல்லை; அதற்குப் போதுமான கால அவகாசமும் இல்லை” என லீனா தரப்பில் விளக்கம் அளித்தார்கள். ஒருங்கிணைப்பாளர்களையாவது மீண்டும் கூட்டி விவாதிப்பதுதான் சரியென நான் வலியுறுத்தினேன். அதையும் லீனா தரப்பினர் மறுதலித்தார்கள். இந்த விவாதிப்பெல்லாமும் இருநாட்களாய் தொலைபேசியில் நடந்தது. மறுநாள் லீனா மணிமேகலையின் அலுவலகத்திற்குச் சென்று “விடுதலைப் புலிகளின் இயக்கம் மீதான தடயை நீக்கு என்று அனைவரும் இணைந்து எடுத்த கோரிக்கையை வைக்கத் தயங்குகிற நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை; இந்த நடவடிக்கையிலிருந்து விலகிக் கொள்கிறோம். ” எனத் தெரிவித்துவிட்டு, நான் கைமாற்றாகக் கொடுத்த ரூ. 45 ஆயிரத்தை பெற்றுக் கொண்டேன். திரைப் படக் கலைஞர் அளித்திருந்த ரூ. 25 ஆயிரத்தைக் கேட்டபோது, மற்றவர்களிடம் கலந்து பேசிய பின்னர் அதுபற்றிச் சொல்ல முடியும் என வாதிட்டார். இதற்கு மேல் இதை வலியுறுத்துவது சரியாக இராது என்று பண்பாடு கருதி வெளியேறினேன்.

இந்தக் கோரிக்கையில் உடன்பாடுள்ளோர் தனியாக டெல்லி செல்ல எண்ணியுள்ளோம் என்பது ஊகிக்கக் கூடியதே. நான் வெளியேறிய சில மணி நேரத்திலேயே குயுக்தியாக, எந்த நாளில் டெல்லி செல்வதென முடிவெடுத்திருந்தோமோ அதே நாளில் அவர்தரப்பினருக்கு முன்பதிவு செய்துவிட்டார். அது தெரிந்து நாங்கள் வேறொரு நாளில், 17-2-2009 அன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவெடுத்து, தோழர் தியாகுவும் நானும் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் சென்று 15-2-2009-ஞாயிற்றுக் கிழமை டெல்லி புறப்பட முன்பதிவு செய்து வந்தோம். முன்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய தோழர்கள் எற்கனவே எங்களை அறிந்திருந்ததால் எங்களை கட்டித் தழுவவில்லையே தவிர, எங்களை அமரச் செய்து விட்டு எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்து முடித்தார்கள். 150 பேர் கொண்ட அணி டெல்லி சென்றது. இரு நாட்கள் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் செய்து திரும்பினோம்.

இந்த இடத்தில் கவிஞர் தாமரையின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டும். டெல்லி பயணத்திற்கு வேண்டிய அனைத்து (குறிப்பாக நிதி) உதவிகளையும் செய்தவர் தாமரை. அனைவரிடமும் பேசி நிதி ஏற்பாடுகள் செய்து தந்ததோடு  அனைவரும் கிளம்பும்வரை ரயில் நிலையத்தில் இருந்து வழி அனுப்பியது வரை   பின்னணியில் இருந்து உழைப்பு நல்கினார். நாங்கள் டெல்லியிலிருந்து திரும்பி வந்த பிறகு கணக்குப் பார்த்து அனைத்து விவரங்களையும்  தாமரையும் நானும் இருவருமாக அமர்ந்து முடித்தோம்.  ஒவ்வொரு பைசா வரவும் செலவும் எழுதி வைத்து நேர்மையாக நடந்து கொண்டோம்.  பொது வேலை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக  தாமரையைச் சுட்டிக் காட்டலாம்.     லீனா மணிமேகலை செய்த  குழப்படிக் காரியங்களால் எழுந்த நிதி நெருக்கடியில், பற்றாக்குறைத் தொகையை தாமரை  சொந்தப் பங்களிப்பாகச் செய்தார்.  இப்போது கூட அந்தக் கணக்கு வழக்குகள், அவரிடத்திலும் என்னிடமும் பத்திரமாக இருக்கின்றன.

ஆனால் டெல்லி சென்ற லீனாமணிமேகலை குழுவினர் “விடுதலைப் புலிகள் வெல்க! பிரபாகரன் வாழ்க!“ என்றெல்லாம் முழக்கமிட்டதாக பின்னர் தெரிய வந்தது. லீனா மணிமேகலையே இவ்வாறு முழக்கமிட்டதாக அவரது குழுவினரே உறுதிபடத் தெரிவித்தார்கள். இவ்வாறு முழக்கமிட்டபோது கவிஞர் கரிகாலன் எதிர்த்துக் கேள்வியெழுப்பியுள்ளார். எந்தக் கோரிக்கையை நீக்குவதின் அடிப்படையில் இங்கு வந்துள்ளோமோ, அதே முழக்கத்தை எழுப்புவது எவ்வகையில் சரி என்பது அவரது விமர்சனம். தனக்கு உடன்பாடில்லாததால் மறுநாளே டெல்லியிலிருந்து ஊர் திரும்பி விட்டார். அவர் அரசுப் பள்ளிஆசிரியர். அரசுப் பணியிலிருப்பவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியதாயிருந்த மூன்று நான்கு பேர் தான். அவர்கள் தான் காரணமென்றால், அவர்களில்லாமல் கூட நடத்தியிருக்க முடியும். அதெல்லாம் காரணமில்லை.

டெல்லியில் விடுதலைப் புலிகள் வாழ்க என்று முழக்கமிட்ட லீனா மணிமேகலை, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த யுத்தம் முடிவுற்ற பின் சென்னை ’அய்கப் ’அரங்கில் ஈழக் கவிதைகள் குறித்த விமர்சன அரங்கு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டினார். ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவானவர்களை” விடுதலைப் புலி முகவர்கள் “ என முத்திரை குத்திப் பழக்கப்பட்ட பேராசிரியர் பெருமகன் அ. மார்க்ஸ், அங்கும் அதே பாணியில் வெளிப்படுத்தினார். ஷோபா சக்தி, சுகன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தோல்வியைக் கொண்டாட இங்கு வந்திருந்தார்கள்; சுகன் இலங்கையின் தேசிய கீதத்தை இசைத்தார். அய்கப் அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது.

டெல்லி சென்றுவந்த காட்சிகளை மாலதி மைத்ரியின் முயற்சியால் ஒரு வீடியோ கிராபர் பதிவு செய்து தந்ததை, தந்திரோபயமாக தனது செங்கடல் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். முன்கூட்டி திட்டமிட்டு படம்பிடித்து பயன்படுத்தப் பட்டுள்ளது என அவரது உள்நோக்கத்தை மாலதி மைத்ரி கேள்விக்குள்ளாக்கியபோது, அதை யூ- டியூபிலிருந்து எடுத்ததாக லீனா பதிலிறுத்திருக்கிறார். டெல்லிக்கு வந்த நாங்களெல்லாம் ஆட்டுமந்தைகளா என மாலதி மைத்ரி வினவினால், நீங்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும் என்கிறார். இது பற்றி ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பில் லீனா மணிமேகலையோடு இணைந்து செயல்பட்ட மாலதி மைத்ரி பகிர்ந்துள்ள தகவல்கள் கவனிப்புக்குரியவை;

“டெல்லியில் பிப்ரவரி 2009-இல் ஈழத்தில் தமிழினப் படுகொலைகளை நிறுத்தக்கோரி படைப்பாளிகள் இணைந்து நடத்திய போராட்டத்தை உங்கள் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு லாபமடைந்தீர்கள். டெல்லியில் வந்திருந்த அனைவரும் போராட்ட முனைப்பிலும் திட்டமிடலிலும் இருக்க நீங்கள் பெரும்பாலான நேரங்களில் நெட்டும் கையுமா இருந்தீர்கள். தோழர் பொன். சந்திரனை இரவோடிரவாக ஆங்கிலத்தில் அறிக்கை தயாரிக்கச் சொல்லி வறுத்தெடுத்தீர்கள். இந்த அறிக்கையெல்லாம் யாருக்கு எங்கே அனுப்பி வைக்கப்பட்டது என்று வந்திருந்த யாருக்கும் தெரியாது. ஜெரால்டும் நரனும் போராட்டத்தைப் புகைப்படம் எடுத்துத் தந்தார்கள். ஊடகங்களுக்குத் தர இந்தப் புகைப்படங்கள் போதுமானது. உங்கள் வியாபாரத்துக்கு வீடியோ படங்கள் தேவைப்பட்டது. வலைப்பக்கத்துக்கு போராட்ட வீடியோ காட்சிகள் தேவை என்று நச்சரிக்க, டெல்லி தொலைக்காட்சி நிருபர்கள் உதவியால் ஒரு வீடியோ எடுப்பவரை நியமித்து வீடியோ காட்சிகளை வாங்கி அனுப்பினேன். செங்கடல் பார்த்த பிறகுதான் தெரிந்தது, படைப்பாளிகளை உங்கள் வியாபாரத்திற்கு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஷோபாசக்தி ஒருமுறை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வருவதாகச் சொன்னார், புதுவை இளவேனிலும் இதே செய்தியைச் சொன்னார். இது தொடர்பாக இணையத்திலும் செய்திகள் வந்தன. இதுபற்றி நான் உங்களிடம் கேட்கவில்லை. உங்கள் வியாபாரத்திற்காக நீங்கள் வாங்கிய கடன் பிரச்சினையாக இருக்குமென்று விட்டுவிட்டேன். ஈழத்தமிழர் தோழமைக் குரல் நடத்திய போராட்டத்திற்கான செலவுக்கு மேல் அதிக நிதி திரட்டியதாக உங்கள் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. என்னிடம் இது பற்றி நீங்கள் வருத்தமுடன் தொலைபேசியில் சொன்னபொழுது, நான் உங்களிடம் ஈழத்தமிழர் தோழமைக்குரல் வலைப்பக்கத்தில் போராட்டத்தின் வரவு செலவு கணக்கை சுகிர்தராணியிடமிருந்து வாங்கி வெளியிடுங்கள், பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். நீங்கள் இதுவரை வெளியிடவில்லை”

இப்போது இது தொடர்பில் “வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றொரு அறிக்கையையும் தற்போது வெளியிட்டிருக்கிறார்.

தன்னை ஒரு மார்க்ஸீயவாதி எனக் கருதிக் கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை; ( அப்படியில்லை என்று அவர் மறுக்கலாம்). ஆனால் ஒரு சமூக கலைஞனுக்கு இருக்க வேண்டிய கடப்பாடும் செயல்முறைகளும் கொண்டவராக அவர் எனக்குத் தென்படவில்லை. அண்மையில் சனவரி 3, 4- ஆகிய இரு நாட்களில் சென்னைப் பல்கலைக் கழக தமிழிலக்கியத்துறையும் ‘பெண்கள் சந்திப்பு’ என்ற அமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் பற்றிய அரங்கில் அவர் நடந்துகொண்டவிதம் இதற்கு ஒரு சான்றாகும்.

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்

          தமிழீழப் பெண்கள்”

 - வழக்கறிஞர் பாண்டிமா தேவி இயக்கிய இந்த ஆவணப்படம் யுத்தம் தின்ற பெண்களைப் பற்றிப் பேசுகிறது. யுத்தம் நடந்த கணங்களிலும், யுத்தம் உச்சத்துக்குப் போன நாட்களிலும் களத்தில் பெண்கள் சந்தித்தவை மட்டுமே அல்ல; யுத்த ஓய்வுக்குப் பின்னான காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை ஆவணப்படம் விவரிக்கிறது. லீனா மணிமேகலையின் “வெள்ளை வேன்கள்” படமும் இதையே பேசுகிறது. முந்திய ஆவணப் படம் சொல்லாத எதையும் லீனாவின் ஆவணப் படம் எடுத்து வைத்து விடவில்லை என நான் கருதுகிறேன்.

 “எரியும் நெருப்பாய் தமிழீழப் பெண்கள்” என்ற தலைப்பு கோபத்தை மூட்டிய போதும், உணர்த்துதல் முதன்மையாய் நிறுத்தப்படுதலால், மெல்லிசாய் இழையோடும் சோக விவரணையும் பின்னணியில் ஒலிக்கும் குரலுமாய் தொடங்குகிறது.

“மடிந்து போன கணவர்கள்,

தொலைந்து போன மழலைகள்,

பிரிந்து போன உறவுகள்,

ஏங்கித் தவிக்கும் இளங் கைம் பெண்கள்

லட்சம் தொட்டது”

என சோகக்கவிதை கிளப்புகின்றன வரிகள். பாதிக்கப் பட்ட பெண்களின் வாக்குமூலம் ஆவணமாக்கப் பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பெண்ணின் முகமும் காட்டப்படவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசின் தோழமை மையம் சார்பில் பேராசிரியர் சரசுவதி மேற்பார்வையில், வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கிய இப்படம், பாதிக்கப்பட்ட பெண்களின் முகங்களைக் காட்டாது, குரலை வெளிப்படுத்தி ஊடக அறத்தை நிலைநாட்டியுள்ளது. அந்தப் பெண்களின் பெயர்களும் வசிப்பிடமும் கூட குறிப்பிடப் படவில்லை. ஆனால் லீனா மணிமேகலை இயக்கிய படத்தில் இந்த ஊடக அறம் ஏன் தொலைந்தது? நோக்கம் என்ன? இவருடைய ஆவணப் படத்துக்கு முகம் காட்டிய பெண்கள் இன்று இராணுவத்தினரின், புலனாய்வுப் பிரிவினரின் நெருக்குதலுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். இதைத்தான்  “ஊடறு வலைத்தளம்” கேள்விக்குள்ளாக்கியிருந்தது. தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ள மனமற்ற இவர் தமிழிலக்கியத் துறை அரங்கில் இரு நாள் நிகழ்வுகளிலும் வன்முறையைப் பயன்படுத்தினார். இந்த லட்சணத்தில் மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தனது ஆவணப் படத்தை திரையிட பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.

எந்த ஒரு செயலானலும் தன்னை முன்னிறுத்துவதே குறிக்கோளாகக் கொள்வார் அல்லது தன்னை முன்னிறுத்துவதற்காக ஒவ்வொரு காரியத்தையும் செய்வார்; அறம் பேணுதல் என்னும் கொள்கைக்கு சிறிதும் இடமில்லை என்பதை ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் இவரது நடவடிக்கைகளும், பின் தொடரும் செயல்பாடுகளும் உணர்த்துகின்றன.

- பா.செயப்பிரகாசம்

நன்றி: கீற்று  - 24 ஜனவரி 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி