கொழும்பு பாரதி விழாவை - உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டைப் புறக்கணிப்பீர்

29.5.2012

தமிழறிஞர்களுக்கு படைப்பாளிகள் வேண்டுகோள்

ஜூன் 1ம் தேதி முதல் நான்காம் நாள் முடிய இலங்கையின் தலைநகர் கொழும்பில் பாரதியார் விழாவும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடும் நடத்துவதாக கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன. இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது, இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜபட்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் இலங்கையின் கொலைவெறிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்த நிலையில், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்" என்கிற முழக்கத்துடன் கொலைகார ராஜபட்சேக்களின் தலைநகரில் இந்திய அதிகாரிகளை வைத்துக்கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறெந்த விளைவையும் ஏற்படுத்தாது.  பாரதி அன்பர்கள் இதை உணரவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேமதுரத் தமிழோசையைப் பரப்பப் புறப்படுவது பொருத்தமற்றது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாரதி வெறும் கவிஞனில்லை. வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலைப் போராளி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் - என்று தமிழினத்துக்குத் துணிச்சலைப் போதித்தவன். கொடுங்கோலரசுக்கு ஒருபோதும் அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்று குவித்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழும்பைக் காப்பாற்ற, அந்த மகாகவியின் பெயர் பயன்படுத்தப் படுவதை எந்தப் படைப்பாளியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொழும்பில் போய் விழா நடத்தி, அங்கே நடந்த இனப்படுகொலை குறித்து அச்சம் தவிர்த்து ஆண்மையோடு ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் சூழலும்  இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, இந்த விழாவைக் கைவிட பாரதி அன்பர்கள் முன்வரவேண்டும். எப்படியாவது இந்த விழாவை நடத்த இலங்கை அரசு முயன்றால், விழாவை அடியோடு புறக்கணிக்கவேண்டும். அதன்மூலம், கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த்தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதை பாரதி அன்பர்கள் நிரூபிக்கவேண்டும்.கொல்லப் பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகமிழையோம் என உறுதி பூணுகிறோம்.   

கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட படைப்பாளிகள்: 

தி.க.சிவசங்கரன், ம.லெ.தங்கப்பா, தமிழவன், புலவர் புலமைப்பித்தன், இயக்குநர் ஆர்.சி.சக்தி, காசி ஆனந்தன், தமிழருவி மணியன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, அழகிய பெரியவன், தாமரை, பா.செயப்பிரகாசம், ஞானி, ஓவியர் வீரசந்தானம், டிராட்ஸ்கி மருது, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், கல்பனா சேக்கிழார்,  கவிஞர் மணிகண்டன், கண.குறிஞ்சி, மாலதிமைத்ரி, இரா.தெ.முத்து, யாழினி முனுசாமி, பிரேம் (புதுடெல்லி), சுப்ரபாரதிமணியன், குரு.ராதா கிருட்டிணன், யோ.திருவள்ளுவன், சண்முகவேல், டாக்டர் தமிழ்நகை, ஆல்பர்ட் (அமெரிக்கா), விஸ்காசின் (அமெரிக்கா), டி.அருள் எழிலன், சந்திரா, தி.பரமேஷ்வரி, கீற்று நந்தன் உள்ளிட்ட 50 படைப்பாளிகள்/உணர்வாளர்கள்

****

கொழும்பு விழாவில் கலந்து கொள்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:

இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர் ஜஸ்டிஸ் மோகன், வழக்கறிஞர் இரா.காந்தி, எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மேஜர் டி.ராஜா, ஸ்டெல்லா மேரி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவி உலகநாயகி பழநி, விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன், புதுவைப் பல்கலைப் பேராசிரியர்கள் அறிவுநம்பி, சிவ.சந்திரகுமார், தருமராசன் மற்றும் சிலர்.

நன்றி: கீற்று 30 மே 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி