இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்

ஈழத் தமிழர்களின் உரிமைக்குப் போராடிய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த பண்டார நாயகாவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் பண்டா - செல்வா ஒப்பந்தம்.


இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய அந்த ஒப்பந்தம் 1958ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1958 ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி புத்த பிக்குகள் 200 பேர் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்காக பண்டார நாயகாவின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். பிரதமர் பண்டார நாயகா அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு அவர்கள் விரும்பியபடி ஒப்பந்தத்தைத் தூள் தூளாகக் கிழித்து வீசியெறிந்தார். ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த செய்தி வெளியானதும், சிங்களவர்கள் தலைநகர் கொழும்பில் தமிழர்கள்மீது தாக்குதல் தொடுத்தனர். தமிழர்கள் அகதிகளாக மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். தமிழர் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இதன் எதிர்வினையாகத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

1958 ஜூன் மாதம் மூன்றாம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் பண்டார நாயகா “அதை எல்லாம் எனது அரசு முறியடித்துவிட்டது. தமிழர்களின் போராட்டங்கள் அடக்கப்பட்டுவிட்டன. இப்போது வடக்கு, கிழக்கிலும் எனது இராணுவம்தான் இருக்கிறது. இந்த இரு மாகாணங்களிலும் இராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது” என அறிவித்தார். மேலும் “அந்த இரு மாகாணங்களையும் இராணுவத்தின் மூலம் நான் பார்த்துக்கொள்வேன்” எனவும் கூறினார்.

ஈழத் தமிழர் பிரதேசம் இன்று இராணுவத்தால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாமிற்கு அருகிலேயே வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகளுக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா நாகஷாகி, ஹிரோசிமா மீது வீசிய அணுகுண்டுக்கு அடுத்ததாக நாசம் அதிகம் விளைவிப்பது இந்தக் கிளஸ்டர் குண்டு. கதிர்வீச்சு அபாயமும் அதிகம். உலகில் எந்த நாடும் அணுகுண்டையோ கிளஸ்டர் குண்டையோ பயன்படுத்தக் கூடாது என்னும் புரிந்துணர்வு ஏற்பட்டு, நடைமுறையிலும் கைக்கொள்ளப் படுகிறது. நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளின் முன்முயற்சியால் 107 நாடுகள் நார்வேயின் ஓஸ்லோ நகரில் ஒன்றுகூடி, கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என 2008 டிசம்பர் மூன்றாம் தேதி, ஓர் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளன. சொந்த நாட்டின் மக்கள்மீதே குண்டுபொழிகிற இலங்கையும் குண்டுவீசத் துணையாய் ரேடாரும் ரேடாரை இயக்குகிற பொறியாளர்களும் ஆயுதப் பயிற்சியும் அளித்துவருகிற இந்தியாவும் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

குண்டு வீச்சுகளால் இடம்பெயர்ந்து வதைபடும் தமிழ் அகதிகளைப் பார்வையிட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சென்றது. “பார்வையிட அனுமதி இல்லை” என இராணுவம் மறுத்துவிட்டது.

“நாங்கள் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அமைப்பு - அகதிகளைச் சந்திப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” என மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தபோது, அதற்கு வன்னிப்பகுதி இராணுவத் தளபதியின் கடிதத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இராணுவம் அவர்களைத் திருப்பியனுப்பியது.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தோற்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாக இருந்தாலும் நடைமுறையில் இராணுவ அதிகாரமே செல்லுபடியாகிவருகிறது.

2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டுக்குச் சென்றபோது, நாங்கள் இராணுவத்தின் அதிகாரத்தை நேரடியாக அனுபவித் தோம். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தொல். திருமாவளவன், நான் என ஐவர் சென்றிருந்தோம். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எங்களுடன் வந்தார்.

கொழும்பிலிருந்து புறப்படுகிறபோது, மாலை ஐந்து மணிக்குள்ளாக யாழ்ப்பாணத்துக்கு முன்னிருக்கும் சோதனைச்சாவடிக் கண்டத்தைத் தாண்டிவிட வேண்டும் என அவசரப்படுத்தினர். இந்தக் கண்டத்தைத் தாண்டிவிட்டால் பிறகு எல்லாம் சுகமே.


ஆனால் மாவீரர் துயிலுமிடத்தைக் காண இடையில் விலகிப் போனதால் தாமதமாகிவிட்டது. இராணுவத் தடுப்பு அரணைத் தொடுகிறபோது மாலை ஆறு மணி. உடன்வந்த சிவாஜிலிங்கம், தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் அடையாள அட்டையைக் காட்டினார். வெட்டரி வாளுக்கென்ன, குளிரா, வெயிலா! இராணுவ அதிகாரிகள் அசையவில்லை. பிறகு கொழும்பில் உள்ள முக்கிய அமைச்சரிடம் சிவாஜிலிங்கம் பேசி, அந்த அமைச்சர் அங்கே உள்ள இராணுவத் தலைமை அதிகாரியிடம் பேச, அவர் இங்கேயுள்ள தடுப்பு அரணிலிருந்த இராணுவ அதிகாரியிடம் பேசிய பிறகே கடந்துசெல்ல அனுமதிக்கப்பட்டோம். இராணுவத்துக்கு இராணுவமே கட்டளையிட வேண்டும். அமைச்சர்களின் அதிகாரம்கூடச் செல்லுபடியாகாது.

நாடாளுமன்றத்தின் மூலமாகவோ அமைச்சர்கள் வாயிலாக வருபவை ஆலோசனைகள்தாம்- கட்டளைகள் அன்று. ஆலோசனைகளை இராணுவம் தாங்கிப்பிடிக்கவோ உதறிவிடவோ செய்யலாம். இராணுவத்தை அதன் அதிகாரமே வழிநடத்துகிறது.

உண்மையில் பிரதமர், அதிபர் என்ற பெயருடையவர்களுக்குப் பின்னால் இராணுவம் ஆள்கின்றது. நாடாளுமன்றம் என்னும் பெயரில் மக்களின் பிரதிநிதிகளின் கையிலுள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் இராணுவம் பறித்துக்கொண்டுள்ளது.

தமிழினத்துக்கான உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்தலும், இராணுவத்தின் கையில் அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் கையளித்தலும் படிப்படியாக நடைபெற்றுவந்துள்ளன என்பதை இலங்கையின் ஆட்சிப் பயணம் பற்றி ஒரு பார்வை வீசுகிற எவரும் கண்டுகொள்ள முடியும்.

இராணுவ ஆட்சி நடைபெறுகிற நாடுகளுடன் ஒட்டுறவு வைத்துக்கொள்வதில்லை என்னும் நல்ல வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைபிடிக்கிற அதே பொழுதில், இராணுவ ஆட்சி நடைபெறுகிற இலங்கையுடன் நரித்தனமான வெளியுறவுக் கொள்கையைக் கைக்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியினர் அங்கே வாழுகிறார்கள் என்பது மட்டுமே அல்ல, உலகளவிலான மேலாதிக்க நாடுகளின் கைப் பிடிக்குள் சிக்கிவிடாது, தனக்குள் கட்டுப்பட்டே இலங்கை இயங்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாடு முதலாவதும் முக்கியமானதுமான அடிப்படை.

2

முதல் பிரதமர் நேருவுக்கு வல்லரசுக் கனவு இல்லை. பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கி, அணிசேரா நாடுகள் என்ற ஓர் உலக அணியை உருவாக்கியவர், நடுநிலை நாடு என்ற கம்பீரத்தை நிலைநிறுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

இந்திரா காந்திக்கும் உலக மேலாதிக்க வல்லரசுக் கனவு இல்லை. ஆயினும் தென்கிழக்கு ஆசியாவின் ‘சண்டியர்’ ஆகும் ஆசை இந்திராவுக்கு உண்டு. பங்களா தேசம் உண்டாக வங்கப்போரை நடத்தியதற்கும், இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியதற்கும் இந்த ஆசைதான் காரணம்.

இந்தியாவின் வேட்டி நுனியைப் பிடித்தவாறு நிற்கும் இலங்கைக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இலங்கையின் புவியியல் இருப்பிடமும் அப்படியொரு முக்கியத்துவத்துக்குக் காரணமாகிறது. ஈழத் தமிழரின் துயரங்களைக் கண்டும் காணாதது போல் இந்தியா இருப்பதற்கு இலங்கையின் இருப்பிடப் புள்ளி முக்கியமான காரணம்.

இலங்கையின் அரசியல் அமைப்புக் கோட்பாடு பௌத்த - சிங்கள நாடு என்பதாகும். அது ஓர் அரசியல் சித்தாந்தம் அல்ல. மக்கள் சமுதாயத்தை முன்னெடுக்கும் கொள்கையாக இல்லாததால், சமுதாயங்களை உள்ளடக்கிய கோட்பாடாக வடிவுபெறாத எதுவும் அரசியல் சித்தாந்தத் தகுதியை இழந்துவிடுகிறது. இனஅழிப்புக் கொள்கை மட்டுமே அதன் அரசியல் கோட்பாடு.

“தமிழர்களுக்குப் போவதற்கு இன்னொரு நாடு இருக்கிறது. அதுபோல் இஸ்லாமியர்களுக்கும் பல தேசங்கள் உள்ளன. சிங்களவர்களுக்கு இதுதான் ஒரே நாடு.”

இராசபக்சே முதல் புத்த பிக்குகள்வரை உதிர்க்கிற வாசகமாக மட்டும் அல்லாமல் அவர்கள் அனைவருக்குமான கோட்பாடாகவும் இது இருக்கிறது.


1958இல் கொழும்பில் தமிழர்கள்மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தியபோது, பல்லாயிரம் தமிழர்கள் அகதிகளாகிக் கப்பல்களில் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட காலத்தில் தல்பவல சீவன் சதேரா என்ற புத்த பிக்கு ஒரு நிகழ்ச்சியில் (மே 26, 1958) “ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்” எனப் பேசினார். புத்தனுடைய சொல்லைப் புதைத்து விட்டுப் பல்லை வழிபடும் (கண்டி புத்த விகார்) புத்த பிக்குகள், ‘பல்லுக்குப் பல்’, எனப் பழிவாங்குவதில் வியப்பேதும் இல்லை.

அமெரிக்கா இலங்கையைத் தாராளமய வர்த்தகத்தின் கொழுத்த தீனியாகப் பார்ப்பதுடன் , திருகோண மலைக் கடற்படைத் தளத்தையும் குறிவைத்திருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் உள்ளே நுழைந்துவிட்டன.

தான் வகுத்துக்கொண்ட கொள்கையைச் செயல்படுத்துவதற்கான அரசியல் வலிமையையோ பொருளியல் வலிமையையோ இலங்கை பெற்றிருக்கவில்லை. தமிழினத்தை எதிரினமாகக் காட்டி, அவர்களை அழித்து விடுங்கள் என்னும் சிங்கள உளவியலை விதைத்துத் தமிழர்கள்மீது போர் தொடுப்பதற்குத் துணையாக அரசியல் பலத்தையும் பொருளியல் பலத்தையும் உலக நாடுகளிடம் அதன் புவியியல் மையத்தைச் சாக்காக்கிப் பெற்றுவருகிறது.

இலங்கையின் சுயநல உத்திகளை அறிந்துகொண்டுள்ள போதிலும், இந்தியா விழுந்து விழுந்து உதவுகிறது.

“இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவைத்து அதனைக் கையாள்வதே ஒப்பீட்டு நிலையில் இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது. எனவே தமிழீழக் கோரிக்கையை, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தனது நலனுக்கு உகந்த வகையில் ஓரளவு தீர்த்துவைப்பதும் தனது தலைமையை இலங்கை அரசை ஏற்கவைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாக இருக்கிறது.” என அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.

தமிழீழப் பிரச்சினையை இந்தியா தீர்த்துவைக்கப் போவதில்லை. தீர்த்துவைப்பதும் இந்திய ஆதிக்க சக்திகளின் நலனுக்கு உகந்ததல்ல. எனவே எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இழுத்தடித்து இலங்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்துகாட்டுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிதந்து, ஆயுதங்களும் கொடுத்து, இலங்கைக்குத் தீராத தலைவலியை உண்டாக்கியது. இந்தச் சாபத்திலிருந்து, இலங்கை விமோசனம் அடைய வழியில்லாமல் போன இயலாமையைச் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்திய எதிரிகளுடன் கூட்டுவைத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஒரு பகை நாடாக இந்தியாவைப் பாவித்துக் காய் நகர்த்துகிறது இலங்கை. இந்தியாவை எவ்வளவு பயன்படுத்தலாம் என்பது மட்டுமே அதன் குறி.

‘அணைத்துக் கெடு’ என்னும் சிங்கள அரசின் கபட நாடகத்தைப் புரிந்திருந்தும் தானொரு வல்லரசாகி, தென்னாசியத் தலைவனாகி அமெரிக்கா போல் உலகப் பேரரசாகும் வலிந்த கற்பனையில் மிதப்பதால், இந்தியச் சார்பு இலங்கை அரசின் பக்கம் உள்ளது.

மு. திருநாவுக்கரசு வரையறுப்பதுபோல், “இன்றைய யுகத்தில் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தில் யார் ஈடுபட்டாலும் அது ஏகாதிபத்தியம்தான். அதில் இடது வலது என்னும் வேறுபாடு இல்லை. ஏகாதிபத்தியத் தத்துவமே அச்சாணியாகிவிடுகிறது.”

மக்கள் இந்தியாவைத் தமது தேசம் என்ற பற்றுக் கோட்டின் அடிப்படையில் நோக்குகின்றனர். ஆனால் ஏகாதிபத்தியக் கனவில், இந்தியா மிதந்துக்கொண்டிருக்கிறது, தங்களிடமிருந்து இந்நாடு அந்நியப்பட்டு நடக்கிறது என்னும் சிந்தனை பெரும்பான்மையோருக்கு வரவில்லை.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தவக்கோலத்தில் நிற்கிறார். கைக்குழந்தையோடு கண்ணீரும் கம்பலையுமாய் ஈழத் தமிழினம் கெஞ்சுகிறபோது, தவங்கலைந்த கோபமாய் ‘என்முன் வராதே போ’ எனக் கை உதறுகிறார். இந்தியா என்னும் நாட்டின் குறியீடு மன்மோகன் சிங். அவரது மௌனம் இந்திய மௌனம். இந்த மௌனம், இன்னொரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிட முடியாது எனச் சொல்லிக்கொண்டே ஆயுதமும் இராணுவப் பயிற்சியும் நிதியும் வழங்குகிற கள்ள மௌனம். இந்த மௌனம்தான் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேசுவரனை “ஈழத்துக்குப் பதிலாக வங்காளியர் அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றொரு சிக்கல் தோன்றியிருக்குமானால், இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப்போர் தொடங்கியிருக்கும்” எனக் கொதிப்படையச் செய்து பதவி விலகவைத்தது.

தமிழ்ச் சமூகத்தின் பல பகுதியினரும் இந்திய மௌனத்தை உடைக்க, ஈழத் தமிழரைக் காக்கக் குரல் எழுப்பிவருகின்றனர். ஏ. பி. வெங்கடேசுவரன் போல் இங்கு எவரும் பதவி விலகத் தயாரில்லை. பதினைந்து நாட்களுக்குள் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தா விட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பார்கள் என்று சர்வகட்சிக் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானம் அப்படியே உள்ளது.

ஈழத் தமிழனின் அவலம் துடைக்கத் தமிழ்ச் சமூகத்தின் பற்பல கரங்கள் நீளுகின்றன. மாதம் அரைக்கோடி ரூபாயை ஊதியமாக வாரிச் செல்லும் மென்பொருள் துறையினர் ஒரு பிற்பகலில் (17.11.2008) மனிதச் சங்கிலியில் கைகோத்தும் 13.12.2008 அன்று சென்னைக் கோயம் பேட்டில் ஒரு நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டும் பதிவுசெய்தனர். தமிழகத்திலுள்ள 221 ஓவியர்கள் எரியும் தமிழ் மக்களுக்காக 14.11.2008 முதல் 21.11.2008வரை ஓவியப் படையல் வைத்து விற்ற தொகை ஈழத்துக்கு உதவிடச் செல்கிறது.

திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் அமைப்பு, நடிகர் சங்கம், திரைத் தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள், வழக்குரைஞர்கள், மீனவர்கள், திருநங்கையர் எனப் பல தரப்பினரும் குரல் தந்துள்ளனர்.

இந்திய மௌனத்தை உடைக்கும் பணியில் தமிழக மக்கள் இன்னும் வெகுதூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது. இந்திய அரசுக்குத் துணைபோகும் கலைஞர் அரசையும் அசைக்க வேண்டியிருக்கிறது. மக்களது எதிர்வினைகள் அனைத்தையும் விழுங்கி மலைப் பாம்பாய் அசைகிறது இந்தியா. அது கருணாநிதியையும் விழுங்கித் தன் வயிற்றுக்குள் அடக்கிவிட்டது. அதிகார மேலாண்மையே குறியாய் ஒத்த கருத்தோட்டத்தில் இயங்குகிறவர்கள் உள்ளடங்கித்தான் போவார்கள்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது 1990இல் இங்கிலாந்தின் இந்தியத் தூதுவராக இருந்தவர் குல்தீப் நய்யார், தன் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு நிகழ்வைப் பதிவுசெய்கிறார். “1991இல் கருணாநிதியுடன் உரையாடியதை நினைத்துப் பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன் நான் லண்டனில் இந்தியத் தூதுவராக இருந்தபோது அங்கு இலங்கையின் உயர் அதிகாரியாக இருந்த டி.எஸ். ஆட்டிக்கல என்னைச் சந்தித்து ஈழப் பிரச்சினை தீர்வதற்காக, கருணாநிதியின் ஒத்துழைப்பை எவ்வாறு பெறுவது என்பது பற்றிக் கேட்டார். இதன் பின்னரே நான் கருணாநிதியைச் சந்தித்து உரையாடினேன். ஆனாலும் அவர் அது விசயத்தில் தனது அழுத்தமான மறுப்பைத் தெரிவித்துவிட்டார்.”

ஈழத் தமிழர்மீதான யுத்தத்தை நடத்துவது இலங்கை போல் ஒரு பார்வைக்குத் தோன்றினாலும் இந்தியாதான் யுத்தத்தை நடத்துகிறது. தில்லி, கொழும்புக் கூட்டணி இந்த யுத்தத்தில் தெளிவாகி உள்ளது. இப்போது உள்ள சூழலில் தில்லி-கொழும்புக் கூட்டணியோடு தமிழக அரசும் கூட்டுச்சேர்ந்துள்ளது. தமிழக எதிர்வினைகள் இன்னும் உறைப்பாய் விழுகையில் இம்மூன்று கூட்டும் உடைபடும். சென்னை அசைந்தால் தில்லியும் தில்லி அசைந்தால் இலங்கையும் அசைய, ஈழத் தமிழருக்கு ஒரு விடிவு பிறக்கலாம் எனத் தோன்றுகிறது.

நன்றி: காலச்சுவடு - ஜனவரி 2009



‘இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்’ என்னும் பா.செயப்பிரகாசம் கட்டுரை, இன்னொரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிட முடியாதெனச் சொல்லிக்கொண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதமும் இராணுவப் பயிற்சியும் நிதியும் வழங்குவது ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்குத் துணைபோவதை வெளிப்படுத்தியது. அணுகுண்டுக்கு அடுத்ததாக அதிகம் நாசம் விளைவிக்கும் கிளஸ்டர் குண்டை சொந்த நாட்டு மக்கள்மீது வீசுவது மிகவும் கொடூரம். தமிழ் அகதிகளைப் பார்வையிட இலங்கை மனித உரிமை ஆணையக்குழுவிற்கு அனுமதியில்லை. அங்கு அமைச்சர் களுக்கு அதிகாரம் இல்லை. ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம் என்று புத்தபிக்கு கூறியிருப்பதைப் படித்தபோது புத்த மதத்தின் பெயரை இவர்கள் கெடுப்பதுபோல் தோன்றுகிறது. தமிழர்களை அழித்துச் சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா? ஈழத் தமிழரின் நலனில் இலங்கை ஆட்சியாளர்களோ இந்தியாவோ மனது வைப்பதாகத் தெரியவில்லை.

- ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர் (காலச்சுவடு பிப்ரவரி 2009)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்