வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு

புத்தாண்டுக் கொண்டாட்டம் வாசலில் நிற்கிறது. வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, வாழ்வியல் என தமிழ்ச் சமூகத்திற்கு உரித்தானதாக எவைகளைக் கருதுகிறோமோ, அத்தனையையும் இவ்வளவுதானா என கழித்துக் கட்டும் அளவுக்கு ஒவ்வொரு தடவையும் அரங்கேறிப் போகிறது.

எல்லைமீறிப் போனாலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ”கடிதோச்சி மெல்ல எறிக” என்கிற கண்டும் காணா வழிமுறையை காவல் துறையும் அரசும் கைக்கொள்ளும் என்பதிலும் அய்யமில்லை. “எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான். நமக்கும் நம்மால் ஆளப்படுவோருக்குமிடையில் விவரங்களைப் பரிமாறக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்குவோம். அவா்கள் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். கருத்தாலும், மனத்தாலும், புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்”.

அதிகாரக் காற்றுக்கும், அடிமை மனோபாவத்துக்கும் வளைகிற நாணல்களை உருவாக்குவது பற்றி 1835-ல் மெக்காலே ஒரு புதிய செயல்பாதை அமைத்துக் கொடுத்தார். அவர் அமைத்துக் கையளித்தது கல்வி முறை மட்டுமல்ல. அதிகாரப் படிநிலைகளுள்ள நிர்வாக அமைப்புமுறையையும் சேர்த்தளித்தார். ஆட்சியை இடையீடின்றி எடுத்துச் செல்ல நியமிக்கப்பட்ட அந்தப் பகுதியினர் இந்திய நடுத்தரவர்க்கமாக உருக்கொண்டனர். அதற்கென வடிவமைவு செய்யப்பட்ட கல்வியும் கட்டியமைத்த அரசாளும் முறையும் நோக்கங்களை முழுமையாய் நிறைவுசெய்தன. தனக்குக் கிட்டிய மாதச்சம்பளம், அதனுடன் கித்தாப்பாய் பெற்றுக்கொண்ட கிம்பளம் என்ற ஒன்றையும் கைவசப்படுத்தி இந்த அதிகாரப் படிநிலையில் தன்னை வசமாய்ப் பொருத்திக் கொண்டது இந்தப் புதிய வர்க்கம்.

ஆட்சியிலிருந்த மேலாண்மை சக்திகளுக்கு கீழே இருப்பவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்று மன்னர் காலத்தில் இருந்த ஊழியமுறை மாதிரி மற்றொரு அதிகாரமுறை உருவானது. கீழிருக்கும் பணியாளர்கள் பற்றி மதிப்பீடு செய்து எழுதும் மந்தண அறிக்கை முறை (Confidential Report) கொண்டு வரப்பட்டது. மந்தண அறிக்கையை மேலிருக்கும் அதிகாரிகள் எழுதினர்கள். ஒரு அரசுப் பணியாளனின் பதவி நிரந்தரம், பதவிஉயர்வு, ஊதிய உயர்வு, வாழ்வு முன்னேற்றம் அனைத்தும் இந்த மந்தண அறிக்கையால் தீர்மானிக்கப்பட்டது.

அதேபொழுதில் மேலிருக்கும் அதிகாரிகள் பற்றி கீழிருக்கும் பணியாளர்கள் மந்தண அறிக்கை தருகிற சனநாயகம் அறிமுகப்படுத்தப் படவில்லை. 'மேலிருந்து கீழிறங்குவது அதிகாரம்: கீழிருந்து மேலாகப் பரவுவது சனநாயகம்’ என்ற இரு கோட்பாடுகளில், இந்த இரண்டாவது அம்சம் ஆட்சி செய்தோருக்குத் தேவையில்லாமல் போனது. அடிமைகளும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. சனநாயக அறம் குறித்து கவலை கொள்ளாதவர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க முடியும் என்ற இன்றைய தரிசனம் போலவே அன்றைய ஆங்கிலேய தரிசிப்பும் இருந்தது.

இந்தியர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேவகத்தின் ஒரு அம்சமாக ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினர் ஆங்கிலேயர். அவர்களின் நாடான இங்கிலாந்திலோ, மற்ற முதலாளிய நாடுகளிலோ யாரும் எவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து மகிழும் சனநாயக முறை இருந்தது. இந்தியாவில் அது ஆங்கில ஆட்சி மீதான விசுவாசத்தின் வெளிப்பாட்டுப் பக்கமாகக் காணப்பட்டது. புத்தாண்டுக்கு அதிகாரியைக் கண்டுகொள்ள வராதோர், ஒவ்வொரு கணுக்கணுவாக வஞ்சம் தீர்க்கப்பட்டபோது, அது கட்டயமாக நிறைவேற்ற வேண்டிய நேர்த்திக் கடனாகிற்று. அதிகார மையத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நேர்த்திக்கடன், இன்றைய அரசமைப்பிலும், தனியார்மயம் பெருகியுள்ளதால் அங்கும் இக்காலத்திலும் தொடருகிறது. புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி தன் விசுவாசத்தை உறுதிப் படுத்திக்கொள்ளும் இந்தப் பழக்கம் கட்சிஅரசியலிலும் வேரூன்றிவிட்டது.

முதலில் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளல் என்பதற்குப் பதிலாக விசுவாசத்தைப் பறைசாற்றிக் கொள்ளல் என குணமாற்றம் கொள்கிறபோது, அது மனிதனின் தனித்துவத்தை சாகடிக்கிறது. ஒருவரோடு ஒருவர் கொள்ளும் இயல்பூக்கமான உறவு, நட்பு, ஒன்றுபட்டஎதிர்ப்புக் குரல், மனித நேயம் இயல்பான குணங்களைச் நாசக் காடாக்குகிறது. கூட்டு அடையாளங்களான இன, மொழி, பண்பாடு, உறவு, போன்ற சிறப்பியல்புகளைத் தவிடுபொடியாக்கியுள்ளது. தனித்துவ அடையாளங்களை அழித்து பொதுச்சந்தை, பொது நுகர்வு, பொதுக்கலாச்சாரம் என ஆதிக்க வலையை விரிக்கிற உலக முதலாளியத்தின் கைப்பிடி வித்தையாக புத்தாண்டுக் கலாச்சாரம் ஆகிவிட்டது.

போகட்டும், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் திரைப்படம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், பக்தி, பஜனை, கோயில் என்று அனைத்தும் மக்களை வழி நடத்த ஆயத்தமாகின்றன. புத்தாண்டை நடுநரம்பாக்கி திரைப்படப் பேருருக்கள், தங்களை விட்டால் லோகத்துக்கு விமோசனமே இல்லை என்ற பாணியில் அறிவு ஜீவித் தோரணையில் இறங்கிவிடுவார்கள்! போட்டி போட்டுக் கொண்டு அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி! மத வழிபாட்டுப் பண்டிகைகளை முன்னிறுத்தி மட்டுமே ஆசி வழங்கும் மடாதிபதி, பீடாதிபதி, பகவான்கள், மத குருக்கள் வாரித் தெளிக்கும் அருளாசிகள்! ஆங்கிலப் புத்தாண்டுக்கு நள்ளிரவிலும் திறக்கின்றன நமது கோயில்கள்!

மேலை நாடுகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வாழ்வின் பகுதியாக மாறியுள்ளன. பிற திசைகளிலிருந்து  வரும் புதியனவற்றை நம் வாழ்வுக்கு உகந்ததாய் ஆக்கிப் பயன்படுத்துகிறோம். ஆங்கில ஆண்டு வரிசை, மாதங்கள், வாரங்கள், நாட்கள் என நம் வாழ்வின் நடைமுறையாக ஆகியுள்ளது. இதனை யாருடைதாகவோ நாம் கருதவில்லை. வரலாற்றில் நமக்களிக்கப் பட்ட அறிவியல் கொடை அது. காலத்தைக் கணக்கிடும் வரலாற்றுப் பயணத்தில், அறிவியல் பூர்வமாக விளைந்த இப்புதினத்தைப் பயன்படுத்துவது இயல்பாகியுள்ளது. விளைவும் பயன்பாடும் தான் ஒரு செயலின் முடிவினை தீர்மானிப்பதாகும். ஆனால் பயன்பாட்டுக்கும் பண்டிகையாக்கிக் கொண்டாடுதற்கும் நிறைய வேறுபாடுள்ளது.

இப்போது இது என்ன காலம்? எதனுடைய வாசலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்? செத்தை, சருகு, அழுகல் காய்கறி, கெட்டுப் போன உணவு என அனைத்துக் கழிவுகளும் குவிந்து கிடப்பது குப்பை. சில மாவட்ட மக்களின் வாழக்கையைக் குப்பையாக்கிவிட்டு வெள்ளம் ஓடிவிட்டது. வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. மென்மையான நீர் தீயினும் கொடிய புண்களை தந்து வடிந்துள்ளது. வெள்ளநீா் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக் காயமாய் நின்று கொண்டிருக்கிறது போல், நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டு எழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. எல்லா இழப்புகளையும் ஈடு செய்துவிடலாம். ஆனால் உயிரிழப்புகளை எதைக்கொண்டு ஈடு செய்வது? பணமோ, பொருளோ எது கொடுத்தும் மீளப்பெற முடியாத அளவில் பல உயிர்கள் பேரிடரால் பறிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், தூத்துக்குடிநகர் என கண்ணில் ரத்தம் வருகிற மாதிரி மக்கள் வாழ்விடங்கள் தண்ணீா் சூழ்ந்த கல்லறைகளாகின.

இயற்கைப் பேரிடர் என்ற வார்த்தையை நாம் ஏற்கத்தான் வேண்டுமா? நில நடுக்கம், கடல் சீற்றம், சுனாமி, காட்டுத்தீ போன்ற அழிவுகள் நேர்கிறபோது இயற்கைப் பேரிடர் என்ற சொல்லால் சுட்டலாம். அவை யாவனவும் இயற்கையின் தவறுகளால் உண்டாகின்றனவா? இயற்கையை மனித இனம் பயன்படுத்துக் கூடாத வகையில் பயன்படுத்துவதால் விளைவன பேரழிவுகள்.

“எல்நினோ – என்ற புவிவெப்பத் தாக்கத்தால் பசிபிக்கடலில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை கடும் வெப்பம் நிலவியது. இதனால் சில நாடுகளில் 2015 அக்டோபர் முதல் டிசம்பா் வரை கடும் மழை பெய்தது. இந்த மழை 2016 – துவக்கம் வரை தொடருகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும். பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தால் தான் அக்டோபர் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது. ஏற்கனவே சென்னை அபரிதமான மழையைப் பார்த்து விட்டது ”

ஐ.நா.வின் சமூக பொருளாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. புவி வெப்பமடைதலுக்கு எது காரணம்? முதலாளித்துவ நாடுகளின் வாகனப்புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு, சுற்றுச்சூழல் மாசு என அடுக்கிக்கொண்டே செல்லலாம். கண்ணுக்குத் தெரியாத பேரிடரை நம் வீட்டுக்குள் அழைத்து வந்த வல்லரசியமும் கண்ணெதிரில் செயற்கைப் பேரிடராக மாற்றிய உள்ளூர் நிர்வாகமும் தான் நம் வாழ்வுக்குள் வெள்ளத்தை அழைத்து வந்தவர்கள்.

ஆறு, குளம், ஏரிகளின் ஆவிகள் உலவி விட்டுப் போன வீடுகளுக்குள் மக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஈரம் உலா்ந்த போதும், இதயத்தில் அதன் அனல் உலராது தொடா்ந்து கொண்டிருக்கும். பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் தன் கையைத் தானே ஊன்றி கரணம் போட்டு எழும் காலத்தின் இறுதிவரை அனல் தகிப்பு நீடிக்கும்.

நம் இல்லங்களில் ஒரு நேர்த்தியான, உயரிய பண்பாடு நிலவுகிறது. குடும்பத்தில் சாவு நிகழ்ந்தால் அந்த ஓராண்டு முழுவதும் தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற விழாக்களும், திருமணம் போன்ற வாழ்வியல் நிகழ்வுகள் நிகழ்த்தமாட்டர்கள். ஆழப்பதிந்த துக்கப்பதிவினை தமிழ்ச் சமூகக்குடும்பங்களில் இவ்வாறு எழுதிக்காட்டினார்கள். ஓராண்டுக்கு கொண்டாட்டங்களைப் புறந்தள்ளுவார்களே அன்றி, எதிர்கொள்ளும் கடமைகளை ஆற்றாது விடுவதில்லை. இன்று வெள்ளக்காடான தமிழ்ச்சமூகத்தின் பிரதேசங்கள் இழவுவீட்டின் காட்சியாகியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னின்ன வகையில் துணை செய்யலாம் எனத் திட்டமிடுவது முதற்கடைமை. கடமை மட்டுமல்ல, மனிதநேய உணர்வின் வெளிப்பாடு.

எல்லாவற்றையும் அடித்துச் சென்ற வெள்ளம் மனித நேயத்தை அடித்துச் செல்லவில்லை. ஊருக்கு நூறு போ் என்ற உன்னதா்கள் அப்போது தெரிந்தார்கள். அந்த உன்னதர்கள் யார் என அடையாளம் காட்டியது வெள்ளம். இவர்கள் நாம் வாக்களித்துத் தேர்வு செய்யாத , நமக்காக உயிரையும் பொருட்படுத்தாத பிரதிநிதிகள். இந்தத் தொண்டூழியத்தை புதுப்பித்துக் கொள்ளும் வகையாக, நமக்குள் கிடக்கும் மனித நேயத்தினை மீட்டெடுக்கும் விதமாக புத்தாண்டு வந்து நிற்கிறது.சகலரும் கைகோர்த்து பாதிப்புகுள்ளான பல லட்சம் மக்களை அணைவாக கைதூக்கிவிட வேண்டிய காலமிது.

சாதி, மதம், குழு, வேண்டியவர், வேண்டப்படாதோர் என்னும் பேதம் கடந்து முன்னர் ஆற்றிய ஊழியத்தினும் கூடுதலாக துயர் துடைப்பது கடமை - ஆம், இது கடமை தான். இந்த ஓராண்டாவது புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து துயர் துடைப்புக் கடமையினை மேற்கொள்ள முயல்வோம்.

நன்றி: சங்கதி - 26 டிசம்பர் 2015

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்