தற்கொலை கலாச்சாரத்தின் வேர்கள்

கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை பதினெட்டு ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அப்போது தமிழக முதல்வராயிருந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து அளித்த தீர்ப்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவரது முதல்வர் பதவி பறிக்கப்படுவதற்கும் காரணமாயிற்று. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கடையடைப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் அவர் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட பிரார்த்தனைகளுக்கும் குறைவில்லை. முன்பு டான்சி நிலபேர வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது வேளாண் பல்கலைக்கழகப் பேருந்து தர்மபுரியில் எரிக்கப்பட்டதும், அதில் பயணம் செய்த மாணவிகளில் மூவர் உயிரிழந்ததும் பற்றிய நினைவுகள் பலருக்கும் இப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் உயிரிழப்பு வேறுவகையில் ஏற்பட்டிருக்கிறது.


அக்டோபர் 10ஆம் தேதி நமது எம்ஜிஆர் நாளிதழில் வந்த செய்தி இது. ‘கழகப்பொதுச் செயலாளர், மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால், ஏற்பட்ட மன உளைச்சல், பேரதிர்ச்சி, தாங்க முடியாத துயரத்தால் இதுவரை 154 பேர் உயிரிழப்பு. அவர்களில் தீக்குளித்து மரணமடைந்தவர்கள் 14 பேர், தூக்கிட்டுக்கொண்டவர்கள் 15 பேர், நஞ்சு அருந்தி மரணமடைந்தவர்கள் 7 பேர், பேருந்து, ரயில் வண்டி ஆகியவற்றின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் இருவர், ஆற்றிலும் நீர்வீழ்ச்சியிலும் பாய்ந்தவர்கள் இருவர், மற்ற 113 பேர் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள்.’

எதிர்பார்த்ததைப் போலவே இச்செய்தி தொலைக்காட்சிகளுக்கான விவாதப் பொருளாயிற்று. விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது இந்த எண்ணிக்கை 220ஆக உயர்ந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இருபது நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து பிணையில் விடுதலையான மறுநாளே 220 பேரின் குடும்பத்துக்கும் கட்சி நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்தச் சமயத்தில் தமிழக எல்லைக்குள் மாரடைப்பினால் நிகழ்ந்த மரணங்கள் அனைத்தும் இந்த எண்ணிக்கைக்குள் கொண்டுவரப்பட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் மாரடைப்பில் மரணம் அடைந்த இந்தப் பட்டியலில் உள்ள ஒருவருக்கும் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கும் தொடர்பே இல்லையென்பது தெரிய வந்தது. இதைத் தவிர்த்து மற்ற மாரடைப்புக்கள் ஜெயலலிதாவுக்காக ஏற்பட்டவை எனக்கொண்டால் தமிழினத்தின் குணவாகு, உளவியல் பாங்கு ஆகியவைபற்றி நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. அச்சு ஊடகத்தில், தொலைக்காட்சியில் வெளிப்பட்ட செய்திகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட்டுப் போக இயலவில்லை.

டான்சி ஊழல்வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி எனத் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தபோது ஏற்பட்ட வன்முறைகளுக்கும் இப்போது அரங்கேறியுள்ள நிகழ்வுகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தர்மபுரி பேருந்து எரிப்பு நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கொலை என்றால் இப்போது இந்த 220 பேரும் தம்மைத் தாமே பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


வாழ்க்கையை, அதன் நெருக்கடிகளை, சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போகும்போது தோல்விகளையும் ஏமாற்றங்களையும் துயரங்களையும் இழப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியாமல் போகும்போது தன்னுயிர் அழிப்பு எனப்படும் தற்கொலைகள் நிகழ்கின்றன. காதல் தோல்வி, குடும்ப வன்முறைகள் போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளும் கடன்தொல்லையால் நிகழும் தற்கொலைகளும் அதிகம். கடந்த இருபது ஆண்டுகளாக ஆந்திர விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில்கூட மடலேறுதல், வடக்கிருத்தல் எனத் தன்னுயிரழிப்பு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

தற்கொலையைப் போற்றும் சமூக மதிப்பீடுகள் எல்லாச் சமூகங்களிலும் இருந்திருக்கின்றன. போரோடு தற்கொலையை முதன்முதலாக இணைத்தவர்கள் சப்பானியர்கள். யுத்தத்தில் தோல்வியுற்றாலோ, தோல்விக்குத் தானே காரணம் என உணர்ந்தாலோ, தவறு செய்தாலோ அல்லது இக்கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டாலோ, தன் நடுவயிற்றில் குத்துவாள் அல்லது கத்தியால் குத்திக் கீறி உயிரை மாய்த்துக் கொள்வார்கள் சப்பானிய வீரர்கள். ஹராக்ரி (HARAKIRI) என்று இதற்குப் பெயர். உயிரழிப்பாக அல்லாமல் இது தியாகமாகக் கொண்டாடப்பட்டது. கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் தற்கொலையானது மதிப்பீடுகளோடும் அரசியலோடும் அது சார்ந்து இயங்கும் விசுவாசத்தோடும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியும். தான் செய்தது அரசியல் பிழை என்பது தெரிந்ததும் அரியாசனத்திலிருந்து கண்ணகியின் முன்னால் வீழ்ந்து மடியும் பாண்டியன் நெடுஞ்செழியன் மரணம் ஒருவகையில் தற்கொலைதான் அல்லவா? அல்லது மாரடைப்பு. ஜெயலலிதாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டதும் அதிமுக தொண்டர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பை இதனோடு ஒப்பிட முடியுமா என யோசிக்கலாம். சக்கரவர்த்தியின் முன்னால் வயிற்றில் கத்தியைப் பாய்ச்சிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வது எப்படி விசுவாசத்தின் வெளிப்பாடோ அப்படி அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் தமக்குள்ள விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என இந்த 193 மரணங்களையும் காட்ட முயல்கிறது அதிமுக தலைமை. விசுவாசத்திற்கு விலை தலா மூன்று லட்சம். விசுவாசிகளைக் கடவுளும் சக்கரவர்த்தியும் கட்சித் தலைமையும் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதன் அடையாளம் அது. அதனால்தான் தற்கொலை செய்துகொள்ள அல்லது மாரடைப்பால் செத்துப்போக ரயில், பேருந்துகளின் முன்னால் பாய நான், நீ என முண்டியடிக்கிறார்கள்.

தற்கொலை பற்றிய உளவியல், சமூகவியல், மானுடவியல் சார்ந்த பல விளக்கங்களுடன் அரசியல் சார்ந்த விளக்கங்களும் அவசியப்பட்டிருக்கிறது இப்போது. குறிப்பாகத் தமிழக அரசியலில் தற்கொலைகளுக்கு மதிப்பு அதிகம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது சில மாணவர் தலைவர்களின் தீக்குளிப்புதான். தலைவர்கள் கைது செய்யப்படும்போதும் அவர்களுக்கு உடல் நலம் குன்றுகிறபோதும் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் கருணாநிதி, வை.கோ போன்றவர்கள் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டபோதும் தொண்டர்கள் தீக்குளித்தார்கள். அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை தீக்குளிப்பதை அங்கீகரிக்கும், அதை ஊக்குவிக்கும் செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை. தற்கொலையின் எண்ணிக்கைக்கேற்பவே ஒரு தலைவருக்குள்ள அரசியல் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது என்பது இதிலுள்ள குரூரம்.

அரசியல் காரணங்களுக்காக இதுவரை நடந்துள்ள தற்கொலைகளைப் பார்த்தால் இது திராவிட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கலாச்சாரமா என்ற கேள்வி எழுகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் எவரும் விடுதலையை வலியுறுத்தித் தற்கொலை செய்துகொண்டார்களா எனத் தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்தின் ஒரு உத்தியாகத் தற்கொலையை முன்மொழிந்ததற்கும் ஆதாரமில்லை. அரசியல், சமூக விடுதலைக் காகப் போராடி வரும் மார்க்சிஸ்ட்கள் தற்கொலையை ஆதரித்ததில்லை. பி.டி. ரணதிவே, பி. ராமமூர்த்தி, எஸ்.ஏ. டாங்கே முதலான பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் மரணமடைந்தபோது தோழர்கள் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை ஒரு போராட்ட வழிமுறையாகவோ அரசியல் கோட்பாடாகவோ அவர்களால் முன் மொழியப்படவில்லை.

தற்கொலையை ஒழுங்குபடுத்தப்பட்ட கோட்பாடாக ஆக்கியமை சப்பானியரையே சாரும். இக்கோட்பாட்டின்படி ‘தற்கொலைப் படை’ என்னும் அமைப்பை சப்பானியர்கள் உருவாக்கியிருந்தனர்.

“புனித யுத்தத்தின் பெயரால் மரணிக்கிறவன் இறைவனை அடைகிறான்” என்று தற்கொலை முறையைப் புனித யுத்தக் கோட்பாடாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் கொண்டிருந்தது; மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் பரவிய வேளையில், இந்தத் தற்கொலைமுறை புனிதக் கோட்பாடும் எடுத்துச் செல்லப்பட்டது. கிறித்துவத்தில் இறை வனின் பெயரால் கொல்லப்படுபவர்கள் ‘இரத்த சாட்சிகள்’ என அழைக்கப்பட்டார்கள். சிலுவையில் அறையப்பட்டவர்களை இரத்த சாட்சிகள் என அழைப்பது, மதிப்பது இன்றும் காணக்கூடிய நடை முறையாக இருக்கிறது. யூதர்கள் - மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம். மேற்குலக நாடுகளுக்குப் போய் வசிக்க ஆரம்பித்தபின், தற்கொலைக் கலாச் சாரத்தைக் கைவிட்டார்கள்.

வல்லரசுநாடுகள் அறிவியல் நுட்பம்மிக்க ஏவுகணைகள் போன்ற போர்க்கருவிகளைப் பயன்படுத்துகின்றன. மரபுரீதியான ஆயுதங்கள் கொண்டவர்களால் அதனை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. எடுத்துக்காட்டாக (Missiles) என்ற ஏவுகணைகள் ஒடுக்கப்படுகிற நாடுகளில் போராடுகிற சாதாரண வீரனின் கையில் கிடைப்பது அரிது. ஆனால் கையெறிகுண்டுகளை அவனால் வீச முடியும். தன்னைக் குண்டுகளால் சுற்றிக்கொண்டு எதிரிப் படைமேல் பாயமுடியும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளை மத்திய கிழக்கு நாடுகளின் தற்கொலைப்படை இவ்வாறுதான் அச்சுறுத்துகிறது.


மத்திய கிழக்கினைச் சேர்ந்தவர்களிடமிருந்து கையகப்படுத்திய தற்கொலை ஆயுததாரிக் கலாச்சாரத்தை, மிகச் செழுமையான வடிவத்தில் (sophistication) கைக் கொண்டவர்கள் விடுதலைப்புலிகள். தன்யிரை அழித்தல் வழியாக ஒடுக்குமுறையாளர்களின் உயிர்களைப் பறித்தல், எதிரியின் படையைச் சிதைத்தல், முன்னேறவிடாது தடுத்தல் - என அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்ட வடிவமாகத் தற்கொலையை ஆக்கிக்கொண்டார்கள். தற்கொலை எத்துணை முக்கியத்துவம் கொண்டதாய் - தனிமனிதக் காரியமாகவோ சமுதாயக் காரியமாகவோ இருப்பினும் ஏற்க இயலாது . எத்தனை உடனடிப் பயன்கள் விளைவதாக இருப்பினும் தற்கொலை நடைமுறை தனக்கான வினையை - காரியத்தை வரலாற்றில் மிக அரிதாகவே சாதித்துள்ளது.

1960களின் மத்தியில் அமெரிக்க வல்லரசு வியட்நாமை ஆக்கிரமித்தபோது, யுத்தத்தில் ‘நாப்பாம் குண்டுகள்’ வீசப்பட்டது முதன்முதலாக நடந்தது. “எங்கள் அமைதியை அமெரிக்கா அழிக்கிறது. கிறிஸ்துவ மதத்தைக் கட்டாயமாகப் புகுத்த முயற்சி செய்கிறது” என்பதை உலகுக்கு எடுத்துரைக்க, அமைதியின் வடிவான புத்தபிக்குகள் தீக்குளித்து மாண்டனர். உலகம் அதிர்ந்தது. அதுவரை காதுகளையும் கண்களையும் மூளையையும் மூடிவைத்திருந்தது இவ்வுலகம் என்பது அம்பலமானது. அம்பலப்படுத்தப் பட்டபோதும் அதன்பின் பத்து ஆண்டுகளுக்கு மேலாய் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. வல்லரசுகள் எனப்பட்டவையும் ஆக்கிரமிப்புக்குத் துணைநின்றன.

கியூபாநாட்டில் அமெரிக்கா கைப்பற்றி வைத்துள்ள ஒரு தீவு ‘குவாண்டனமோ’. 2001 செப்டம்பர் 11க்குப் பின்னான காலத்தில் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டு உலகின் பல திசைகளிலுமிருந்து கைது செய்து குவாண்டனமோவில் கொடூரமாய் சிறைப்படுத்தியிருந்தது அமெரிக்கா. எவரொருவரும் தற்கொலை செய்து மரணத்தை அடைய முடியாத அளவுக்கு, ‘குவாண்டனாமோ’ கொடூரச் சிறை எல்லாப் பாதுகாப்போடும் அமைந்திருந்தது. தங்கள் அவல நிலையை உலகுக்குத் தெரிவிக்கக் கருதி கைதிகள் மூவர் 2006இல் தலையணை, போர்வையினால் முகத்தை இறுக்கிக்கட்டி மூச்சுதிணறி மாண்டனர். தற்கொலையால் உலகத்தின் தலையில் மிகப் பெரிய ‘குட்டு’ வைக்க முடிந்தது. அடிமை இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்க அதிபராக ஆனபின்னும் இதற்குத் தீர்வு வரவில்லை.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965இல் நடந்த பேராட்டத்தில் 12 ஈகியர் தீக்குளித்தும், நஞ்சருந்தி மாண்டும் ‘உயிரினும் மேலானது அல்ல அடிமைத்தனம்’ என உணர்த்தினார்கள். ஈழப்போர் உச்சத்திலிருந்த வேளையில் பொதுமக்கள் கொத்துக்கொத்தாய் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டபோது - இந்தியக் கொடூரர்களின் கவனத்தைத் திருப்பிட “போரைத் தடுத்து நிறுத்துங்கள்” என மன்றாடலாய் சென்னை சாஸ்திரிபவன் முன்னால் முத்துக்குமார் தீக்குளித்து மாண்டார். தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்டிருந்த மூவர் விடுதலையை வேண்டித் தன்னுடலையே தீக்கு ஏந்தினார் செங்கொடி.

தற்கொலை மூன்று தளத்தில் நிகழ்கிறது: முதலாவது - வாழ்வு அழுத்தம், அதிர்ச்சி, மன உளைச்சல் போன்ற தனிமனித உளவியல் நெருக்கடிகளால். இரண்டாவது - நாடு, இன, மொழி விடுதலையின் பொருட்டு, ஒடுக்குமுறை எதிர்ப்பு என இலட்சியங்கள் பேரால் நிகழ்பவை. ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தில் நிகழ்த்தப்படும் தற்கொலைகள் இந்த வரிசையில் சேரும். மூன்றாவது - தலைமை வழிபாட்டின் காரணமாய் நிகழ்த்தப்படும் தற்கொலைகள். தனிமனிதக் காரியமாக இருந்தாலும், சமுதாய நோக்கமாகக் கொள்ளப்பட்டாலும் தலைமை வழிபாட்டின் காரணமாய் நிகழ்த்தப்படும் உயிரிழப்பு மிக மோசமானது என்பதில் அய்யமில்லை.

புறநானூற்றுக் காலத்தில் தோன்றியது வீரவழிபாட்டு முறை. புறநானூற்றுக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும் போரில் வெல்லுதல், வீரமரணம் எய்துதல் போன்ற செயல்கள் வீரவழிபாட்டுக்குரியவையாய் இருந்தன. நடுகற்களை நடுதல், நினைவுச் சின்னங்கள் எழுப்புதல், செப்பேடு வெட்டுதல் போன்றவற்றின் மூலம் விசுவாசங்களும் தியாகங்களும் போற்றப்பட்டன. இத்தகைய வீரவழிபாட்டைத்தான் திராவிட இயக்கங்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றன. காப்பியக் காலங்கள் முடிவுற்றுவிட்டன. புராண இதிகாசக் காலங்கள் முடிவுற்றுவிட்டன. எனினும் இன்றைய ஒற்றை மைய உலக அரசியலுக்கு அதன் மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. மக்களை ஒரு தலைமையின் கீழ், ஒரு கோட்பாட்டின் கீழ், ஒரு குடையின் கீழ் திரட்டுவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் இந்த மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. கருணாநிதி, மாமன்னன் சோழனின் வழித்தோன்றலாகக் கட்டமைக்கப்படுவது ஒரு வகைக் காப்பிய மரபு என்றால் ஜெயலலிதாவை அனைவருக்கும் அம்மா எனக் கட்டமைப்பது புராண இதிகாச மரபு எனலாம். பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றும் பெரியாரின் திராவிடர் கழகம் இந்த மீளுருவாக்கக் கலாச்சாரத்தை ஏற்கவுமில்லை, பரப்புரை மேற்கொள்ளவுமில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

அரசியல் சார்ந்த பழமைவாத மதிப்பீடுகளுக்கும் தலைமை வழிபாட்டுக்கும் தற்கொலைகளுக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பு குறித்து ஆராயும்போது நவீன உலகில் நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பங்கு பற்றிய விவாதங்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது கோட்பாடு வகிக்கும் பங்கோடு தொடர்புடையது அது. இன்றைய ஒற்றை மைய, மீட்புவாத அரசியலுக்குத் தேவை அத்தகைய விவாதங்கள் அல்ல, தலைமையை வழிபடும் தனிநபருக்கு விசுவாசமாக இருக்கும் அரசியலே. அதனால்தான் அவை தற்கொலைகளை ஊக்குவிக்கின்றன. இரண்டு லட்சமோ மூன்று லட்சமோ கொடுத்து அவற்றைக் கொண்டாடுகின்றன.

இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என்பதால் தனக்கு அபரிமிதமான மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக அப்பாவித் தொண்டர்களின் தற்கொலைகளைக் கொண்டாடுகிறது அதிமுக. ஆனால் இதன் விளைவுகள் பொதுமனத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான பாதிப்புக்கள் மோசமானவை. அதைப் புரிந்துகொள்வதற்கு அவர் தயாராக இல்லை என்பது தமிழர்களின் இன்றைய வரலாற்றுத் துயரம் என்றுதான் சொல்ல வேண்டும்.


நன்றி: காலச்சுவடு - டிசம்பர் 2014



வாசகர் கடிதம்
பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள ‘தற்கொலை கலாச்சாரத்தின் வேர்கள்’ என்னும் கட்டுரை நம்மை மேலும் சிந்திக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவர் குறிப்பிடும் முதலாவது வகையான தற்கொலை வாழ்வு அழுத்தம், அதிர்ச்சி, மன உளைச்சல் போன்ற தனிமனித உளவியல் நெருக்கடிகளால் நிகழ்வது குறித்து விரிவாக ஆராய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாயை ‘வராக்கடன்’ என்று அறிவிக்கும் வங்கிகள் கல்விக்கடன், வேளாண் கடன் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவது இந்த நாடு மோசடிக்காரர்களின் கையிலுள்ளது என்பதைப் புலப்படுத்தவில்லையா? பூசணிக்காய்களை மறந்துவிட்டுச் சுண்டைக்காய்களைக் கண்காணிக்கும் வங்கிகளால் பாதிக்கப்படுவோர் தற்கொலை நிலைக்குத் தள்ளப்படுவது சமூக அவலமல்லவா?

தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்யும் அளவுக்கு இளம் உள்ளங்களின் நெஞ்சில் அச்சத்தை விதைத்தது நம் கல்விமுறை அல்லவா? மதிப்பெண் கிறுக்குப் பிடித்து அலையும் கல்வியாளர்கள் மாண வர்களின் சுயசிந்தனைக்கும் தன்னம்பிக்கைக்கும் வழி வகை காணாதிருப்பது மனஉளைச்சலைத்தானே தரும்.

அரசு அலுவலகங்களில் கையூட்டுத் தொகை அறிவிப்புப் பலகையில் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட வில்லை என்பதைத் தவிர வேறு என்ன வாழ்கிறது? அதிகாரவர்க்க ஆணவம் பொதுமக்களை அலைக்கழித்து அவமானப்படுத்திக் குரூர இன்பம் காண்பதால் நிகழும் தற்கொலைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை.

- தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு (காலச்சுவடு ஜனவரி 2015)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்