எதிர்ப்பில் முகிழ்க்கும் பண்பாடு

தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஈழத் தமிழர் மீதான போரை நிறுத்து என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் திருச்செந்தூரிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்ட 75 மாணவர்கள் 6.4.2009 அன்று காலை சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி முழக்கமிட்ட அவர்களை, பலரும் வரவேற்று உற்சாகப்படுத்தி அனுப்பினர். எழும்பூர் வந்தபோது மாணவர்களை வரவேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில் நடந்துகொண்டிருக்கிற வேளையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணிகளுக்குள் முடங்கிவிட்டதை மாணவர்கள் வெறுத்தனர்.

“வைகோவைக் கேட்கிறோம் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்; திருமாவளவனைக் கேட்கிறோம் கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள்; ராமதாஸைக் கேட்கிறோம் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்” எனக் கோபத்துடன் முழங்கினர்.

மாணவர்கள், தெளிவான முடிவுடன் திட்டமிட்டு இதைச் செய்தனர். ஒரு நாள் பயணத்தில் மட்டுமேயல்ல: முந்திய நாட்களில் தமக்குக் கிடைத்த அனுபவங்கள், நிகழ்த்திய உரையாடல்களின் முடிவில் இந்த முடிவுகளை வந்தடைந்திருந்தார்கள்.

“ஈழப் பிரச்சினைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு, அரசியல் வேறு” எனத் திருமாவளவன் பேசியதைப் பிழைப்புவாதமாக மாணவர்கள் கண்டனர். ஈழப் பிரச்சினையில் எதிர் நிலைப்பாடும் செயல்பாடும் உள்ளவர்களுடன் ஓரிடத்துக்கும் ரெண்டிடத்துக்கும் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகள் உடன்பாடு கொண்டது எரிச்சல் ஊட்டியது. திருமாவளவனும் ராமதாஸும் வரவேற்க வந்திருந்தால் அவர்களும் இந்த எதிர்வினையையே சந்தித்திருப்பார்கள். எதிர்ப்பு முழக்கங்களை எதிர்பார்க்காத வைகோ மாணவர்களைச் சமாதானப்படுத்திவிட்டுத் திரும்ப வேண்டியதாயிற்று.

மறுநாள் மதிமுக வெளியிட்ட அறிக்கையில் தன்னிலை விளக்கம் வெளிவந்தது. “ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்த சம்பவம்தானே தவிர, மாணவர்கள் வைகோவை அவமதிக்கவில்லை. மாணவர் அல்லாத இருவர் அரசியல்வாதிகளே வெளியேறுங்கள் என்றும், மற்றொருவர் கூட்டணியைவிட்டு வெளியே வாருங்கள், ஈழத் தமிழர் கூட்டணி அமையுங்கள் என்றும் கோசம் எழுப்பினர். மாணவர் அல்லாத ஒருவர் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் என்று கோசம் எழுப்பினார்” என்று பேசிய அறிக்கை ஈழத் தமிழருக்காக வைகோ செய்த போராட்டங்களை வரிசைப்படுத்தியிருந்தது.

முழக்கம் செய்தவர்கள் ஓரிரு மாணவர்கள் மட்டுமல்ல. இசை ஒழுங்குடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வைகோ வேண்டாம், திருமா வேண்டாம், ராமதாஸ் வேண்டாம் என்னும் முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தாலும் மற்றவர் எழுப்பியிருந்தாலும் ஈழப் பிரச்சினைக்கு எதிரான தேர்தல் கூட்டணி அரசியலை மறுக்கும் மக்களது கருத்தே அதில் வெளிப்பட்டது. தேர்தல் கூட்டணிக்குள் முடங்கிவிட்ட இந்த அரசியல்வாதிகளைப் பற்றி இலங்கை அரசுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பயமும் நீங்கி, படுகொலைகளை வேகமாக நடத்திவருகிறது இலங்கை அரசு.

“இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்தச் சூடான நிலைமை தணிந்துவிடும். இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை”

- இலங்கை செய்தித் துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். கொள்கையற்றவை தமிழக அரசியல் தலைமைகள் என்பது லக்ஸ்மன் யாப்பாவின் வாசகத்தினுள் அடங்கியிருக்கிற மெய்ப்பொருள்.


எவரும் கற்றுக்கொடுத்துச் செய்யவில்லை மாணவர்கள். தாம் காணவும் செயல்படுத்திடவும் எண்ணிய புதிய பண்பாட்டை இயல்பாக வெளிப்படுத்தினார்கள். இப்படி முகத்துக்கு நேரே முழக்கமிட்டிருக்கக் கூடாது. நாகரிகமாக நடந்துகொண்டிருக்க வேண்டுமென ஆசுவாசப்படுத்த முயல்கிறவர்களுக்கு நேருக்குநேர் பேசுதல், வெளிப்படப் பேசுதல் என்னும் முறைமை இல்லாததால்தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கிற கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டதாக ஆகியுள்ளது. இப்படி நாகரிகம் பார்த்துப் பார்த்துத்தான் அரை நூற்றாண்டுகாலத் தமிழினம் உள்ளொடுங்கிப் போயுள்ளது. அப்படி மாணவரல்லாத ஒருவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததாக, தவறாய் வழிகாட்டுதல் செய்ததாகச் சொன்னால் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய குற்றவாளி முத்துக்குமார்தான். எவை எவை நாகரிகமானவையாகக் கருதப்படுகின்றனவோ அவற்றை, எது எது உயரிய மதிப்பீடாகக் (ஸ்ணீறீuமீs) கொள்ளப்படுகிறதோ அவற்றை உடைத்தெறிய வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர் அவர்.

“உடனடியாகப் போரை நிறுத்து” என்ற கோரிக்கையை இந்திய அரசுக்கு முன்வைத்து, 13.4.2009 முதல் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட இருபது பெண்கள் சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொண்டனர். ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கி பிடித்துப் பேசவந்ததை அவர்கள் நிராகரித்தனர். ஈழப் பிரச்சினைக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள அரசியல்வாதிகள், ஈழப் பிரச்சினைக்கு ஆதரவாக இருப்பதாய் மக்களுக்குக் காட்டிக்கொள்ள இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதால் அனுமதிக்கவில்லை. இதுவரை இல்லாத ஒரு புதிய பண்பாட்டை அவர்கள் அறிமுகம் செய்தார்கள்.

ஒவ்வொரு அசைவிலும் புதிய பண்பாட்டைப் பிறப்பிப்பது சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்டவர்களுக்குச் சாத்தியம். தனிமனிதனுக்குள்ளும் இயக்கத்துக்குள்ளும் போர்க்குணத்தை மேலெடுத்துச் செல்லும் அடிப்படைகள் இவை.

எதற்கும் அடிபணிந்துபோகிற, சுயசிந்தனையற்ற ஒரு கூட்டத்தை நூற்றாண்டாய் உருவாக்கி வைத்துள்ளோம். இதன் காரணமாய்ப் போர்க்குணத்துடன் உருவாகிவரும் இளையோரைப் பழைய நிலைக்குத் தள்ள முயல்கிறோம். புதிய வரலாற்றுக் காலம் நம்முன்னே வந்துள்ளது. புதிய வரலாற்றைக் கையகப்படுத்திக்கொள்ள இளையோருக்குப் புதிய பண்புகள் முக்கியமாகின்றன. அழுகி நாற்றமெடுக்கும் பழைய பண்புகள் தூக்கி எறியப்பட வேண்டியவை.

இந்திய விடுதலைப் போர் என்ற எழுச்சி, மனித குணங்களில் மாபெரும் மாற்றங்களைத் தோற்றுவித்தது: போராட்ட காலத்தில் ஓடிய வீரமும் ஈகமும் நேர்மையும் முன்மாதிரியாகின. அதிகாரம் கைக்கு வந்த ஆகஸ்டு 15, 1948க்குப் பின் இவை ‘செல்’ அரித்த காகிதம்போல் பொலபொலவென்று உதிர்ந்தன. அடுத்த கட்டத்துக்குச் சமுதாயத்தை எடுத்துச்செல்லும் போர்க்குணம் தொலைத்தார்கள்.

1965இல் தமிழகத்தை உலுக்கியது மொழிப் போர். இந்தி மொழியை எதிர்த்த ஒரு போராட்டமாக மட்டுமே அதைச் சுருக்கிவிடக் கூடாது. ஒரு இனத்தின் மீது, வட இந்திய அதிகார மையத்தின் அடையாளமான இந்தி பேசும் தேசிய இனத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்த இன எழுச்சிப் போர் அது. எதிர்பார்ப்பு ஏதுமற்று, இளைய தலைமுறை அதைக் கையிலெடுத்தது. எதிர் பார்ப்புகளுடன் தேர்தல் அரசியல் நடத்தியவர்கள் அதன் பின் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்படாமல் கவனித்துக்கொண்டார்கள்.

கூட்டணி அரசியலில் தொகுதிப் பேரத்தில் ஒரு இனத்தின் துயரை ஓரங்கட்டிய துரோகத்தை எதிர்த்த மாணவர்களை, பின்னர் ஏற்பாட்டாளர்கள் அழைத்துச்சென்று வைகோவிடம் வருத்தம் தெரிவிக்கச் செய்தது தான் வேதனை தருவதாக அமைந்தது.

நிமிர்ந்து நிற்கும் குணத்தை வளைத்து முறிப்பதுதான் சமகால அரசியல். சமகால வாழ்வியல். நிமிர்ந்து நிற்கும் போர்க்குணம், வாழ்வுக்குள்ளிருக்குமானால் வாழவே முடியாமல்போகும் என்ற கருத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனிமனிதனாக நடமாடுகிறான். அவனுடைய இயக்கம் சமுதாயத்துக்குள் இருந்தாலும் தன்னைச் சமூக மனிதனாக உணர்வதில்லை. மாணவர்கள் சமூக மனிதனாகத் தம்மை உணரும் காலம் வந்து சேர்ந்திருக்கிறது. சுயமரியாதையும் சுயசிந்தனையும் உள்ள சமூக மனிதனாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள் என்பதையே ரயில் நிலைய நிகழ்வு காட்டுகிறது.

2

காலத்துக்குள்ளிருந்து, காலம் நிர்ப்பந்திக்கும் போராட்டங்களிலிருந்து அதை உணரும் நெஞ்சங்களிலிருந்து புதிய பண்பாடுகள் பிறக்கின்றன.

நீதிமன்றங்களில் கனம் நீதிபதி அவர்களே, மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே மைலார்ட், யுவர் ஹானர் என்றே விளிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. வழக்குரைஞர்கள் போராட்டத்தின்போது இத்தவறு களையப்படுகிறது. வழக்குரைஞர்கள்மீது நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக்கை விசாரிக்க வந்த நீதிபதி கிருஷ்ணா வழக்குரைஞர்களுக்கு எதிரான முடிவுகளை வழங்கியதில், உருவான எதிர்ப்பிலிருந்து இப்புதிய பண்பாட்டைக் கண்டெடுக்கிறார்கள். இவ்வாறு அழைக்கிற அடிமை மனோபாவத்திலிருந்து விடுபட முடிவெடுக்கிறார்கள்.

எதிர்ப்புக்குள்ளிருந்துதான், எதிர்ப்பின் உச்சத்தில்தான் புதிய பண்பாட்டு உருவாக்கம் நிகழ்கிறது. பழைய பண்பாட்டுக் காவல்களையும் மீறிப் புதியவை அறிமுகமாகின்றன. முந்தைய பண்பாடு ஒரு காலனி ஆதிக்கம்போல் நம்மேல் அழுத்திக்கொண்டுள்ள நிலையில், காலம் வீரியமான மனிதர்கள் வழியே புதியவற்றை அறிமுகம் செய்கிறது.

தேர்தல் பாதை இட்டுச்செல்லும் அரசியல் அதிகாரத்துக்குப் போராட்ட வழிகள் தேவையில்லை: மிதவாத வழியே போதும். போராட்டம் என்பதில் தொடங்கி அது போன்ற ‘பாவனை’ செய்தல் எனத் தொடர்ந்து கொண்டு போய்க்கொண்டிருத்தல் போதுமானது. ‘பாவலா’ பண்ணுதல் ஒன்றே சமகால அரசியல் கலாச்சாரமாக வடிவம் கொண்டுள்ளது.

“நல்ல அரசியல்வாதி எந்த வாய்ப்பையும் ஒருபோதும் புறக் கணிக்கமாட்டார்” என ஜெயலலிதா எந்த நேரத்திலும் எதோடும் சமரசம் செய்துகொள்ளலாம் என்பதை நாகரிகமான பொன்மொழியாக வெளிப்படுத்துகிற அளவுக்கு, இந்த ‘பாவலா’ கலாச்சாரம் நீள்கிறது.

இன்றைய தலைமைகளில் இளைய தலைமுறைத் தலைவர்கள் எவரும் புதிய பண்பாடுகளிலிருந்து முளைத்தவர்கள் அல்ல: எங்கிருந்து புறப்பட்டு வந்தார்களோ அதன் பழைய நாற்றத்தைத் தம்மோடு சுமந்து வந்தவர்கள். இவர்கள் புதியவர்கள் அல்ல; புதியதின் பெயரால் தோன்றிய பழையவர்கள்.

ஆனால் பகத்சிங்காலும் முத்துக் குமாராலும் வழிநடத்தப்படுகிற இளையோர், மாணவர் அப்படியல்ல. முன்னர் சொல்லப்பட்ட, கற்பிக்கப்பட்ட பண்புகள் பொய்யானவை; தவறானவை என அவற்றை நிராகரித்துப் புதிய ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறார்கள்.

நன்றி - காலச்சுவடு - மே 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்

வட்டார இலக்கியம்

பலியாடுகள்