முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான விடுதலை அரசியல்

பகிர் / Share:

உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை எனும் வாழைத் தோட்டங்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நி...

உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை எனும் வாழைத் தோட்டங்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நிகழும் காற்றசைவு, பருவநிலை, கடல் என அனைத்தும் இன்றைய நாளில் உலகமய வானத்தால் இயக்கப்படுபவையாக ஆகியுள்ளன. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப்போல, உலகமயக் கருணையாலே தேசிய இனங்கள் விடுதலையை எட்டிப் பார்க்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொல்லி வைத்தது போல் நடந்த தேசிய விடுதலைகள் இப்போது வழமையாக இல்லை. கொசவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் விடுதலைகளும் ஒற்றை மைய அரசியல், நிதி மூலதன, தகவல் ஆதிக்க அரசியல் ஆகியவற்றின் கருணையால் நடந்தவையாக ஆகிவிட்டன. இடதுசாரி முகாம் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் இது போன்ற மக்கள் விடுதலைக்கு எதிர் முகம் கொண்டுவிட்டதால், உலகில் பொருளாதார, அரசியல் ஆதிக்கப் புதிய ஒழுங்கைத் தீர்மானிக்கும் சக்திகளே இவற்றையும் தீர்மானிக்கின்றன.


மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. நோய்களே உற்பத்தி செய்யப்படுகின்றன; புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பிற நாடுகளில் ஊன்றப்படுகின்றன. பிறகு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பின்தொடர்ந்து மருந்துகளை அனுப்புகின்றன. நோய்க்காக மருந்து அல்ல; மருந்துக்காக நோய் என்ற புதிய மருத்துவ ஒழுங்கைத் தோற்றுவித்துள்ளன. மக்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வணிகமயப் புதிய ஒழுங்கை நிறுவியதன் விளைவுகள் குறித்து, 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, 225 பக்கங்களுடைய “உலக அரசியல் 20-21’’ (Global Politics 20-21) என்றொரு அறிக்கையை வெளியிட்டது.

“உலகம் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. மிகப் பெரிய பணக்கார வர்க்கம் ஒன்று உலகெங்கும் உருவாகியுள்ளது. அதைச் சுற்றி அவர்களுக்குச் சேவை செய்யும் நடுத்தரவர்க்கம் ஒன்றும் உருவாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாகிப் போனார்கள். இந்த ஏழைகள் போராடுவார்கள். மக்கள்திரள் எழுச்சிகள், தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.’’


தொடர்ந்து அமெரிக்க முதலாளியச் சிந்தனையாளரான ஹென்றி கிஸிங்கர் அறிக்கை ஒன்றைத் தந்தார். “இந்தப் போராட்டத்தை எவ்வாறு கையாண்டு அடக்குவது? இது தொடர்பாக மிகப் பெரிய ஆய்வுகளைச் செய்ய வேண்டிய கடப்பாட்டில் நிற்கிறோம்.”

ஆயுதந்தாங்கிய போராக இருக்குமானால் அடுப்பு எரிக்க விறகுகள் வைத்தவனே விறகை வெளியே எடுத்து நெருப்பை அணைத்துவிட முடியும் என்பதைப் போல, ஆயுதங்கள் வழங்கிய நாமே வழங்கலை நிறுத்திவிடும்போது, ஆயுதப் போர் அடங்கிப்போகும் அல்லது ஆட்சித் தரப்புக்கு ஆயுதம் வழங்கத் தொடங்கினால், எழுச்சியை அடக்கிவிட இயலும் என்ற வகையில் அவர்களின் சிந்தனை ஓடியது. மக்கள் எழுச்சிகளை ஒடுக்க அந்தந்த நாட்டுப் பணக்காரவர்க்கத்தின் ஆட்சிகளுக்கு அடக்கும் தொழில்நுட்பமும் நவீன ஆயுதங்களும் வழங்கும் நிலையை மேற்கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலையும் இந்தியாவின் மத்திய மாநிலங்களின் பழங்குடி மக்கள் வேட்டையும் இம்மாதிரியான மக்களின் உத்வேகமான போராட்டங்களை அடக்குவதற்கான வெளிப்படையான சாட்சியங்கள். முள்ளிவாய்க்கால் சுற்றிவளைப்பையும் இந்திய மத்திய மாநிலங்களில் பழங்குடி மக்களை இராணுவம் சுற்றிவளைப்பதையும் போலவே கூடங்குளத்தின் சுற்றி வளைப்பையும் காண முடியும். மத்தியத் துணை ராணுவம், தொழில் பாதுகாப்புப் படை, கடலோரக் காவற்படை, தமிழகக் காவல்துறை ஆகியவற்றின் முற்றுகையில் - அரச பயங்கரவாதம் செயல்பட்ட விதம் மக்களுக்கான மின்சார விநியோகத்துக்காக அல்ல, உலகமயச் செயல்பாட்டுக்காகத்தான் என்பதாக இருந்தது.

சுருங்கச் சொல்வதாயின் மக்கள் எழுச்சிகள் உருவாகக் காரணமாக இருந்து, ஒரு எல்லைவரை வளர்ச்சிக்குக் கொண்டுசெல்வது, பின்னர் அதை அரச பயங்கரவாதம் வழியாக உள்மடங்கச் செய்வது என எல்லாமும் உலகமயம் உண்டுபண்ணும் கட்டம் கட்டமான நகர்வுகளே. மன்மோகன் சிங்குகளை அவர்களே உருவாக்கினார்கள். அதிலிருந்து பிறந்த மேதா பட்கர்களை அவர்களே எதிர்கொண்டார்கள். இலங்கையின் ஜெயவர்த்தன, ராஜபக்ஷக்களை அவர்களே உருவாக்கினார்கள். அங்கிருந்து அதனால் பிறப்பெடுத்த போராளிகளையும் அவர்கள் எதிர்கொண்டு இல்லாமல் செய்தார்கள். இரு துருவங்களை உண்டு பண்ணி இயக்குதலும் மோதலில் இரு துருவங்களிடமிருந்தும் ஆதாயத்தைக் கரந்துகொள்வதும் இந்தப் புதிய ஒழுங்குகளின் உலக நிரலாக ஆகியுள்ளன.

இன்னும் வெளிவராத அந்த ஈழத்து நாவல் என் பார்வைக்குக் கிடைத்தது. சுகுமார் என்னும் போராளி வாசகங்களால் நிறைந்தவன். அவனது வாசகங்கள் அனுபவங்களால் நிறைந்தவை. அவன் உடல் வயதைவிட மன வயது அதிகம். சுகுமார் சொல்லும் ஒரு வாசகம் இப்படி வருகிறது:

“விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக்கூடும்.”


ராசதந்திர அணுகுமுறைகளைக் கைவிட்டு, லட்சியவாதத்தையும் தியாகவாதத்தையும் ராணுவ வாதத்தையும் முன்னிறுத்தியதால் நாம் வீழ்ந்துபோனோம். எந்த விடுதலைப் போரிலும் இத்தனை ஆயிரம் கல்லறைகள் எழும்பிய வரலாறு இல்லை. தமிழீழம் பெறுவதற்கான போரில் எந்த எல்லைவரையும் செல்லலாம்; எவ்வளவு தியாகத்தையும் செய்யலாம் என்ற கருதுகோளே நம்மை வீழ்த்தும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவலில் முன்குறிப்பாய் உணர்த்துகிறார் ஒரு படைப்பாளி.

இரட்டைக் கோபுர மரணங்களும் முள்ளிவாய்க்கால் கொலைகளும் வெவ்வேறு நிகழ்வுகள் அல்ல. உலகமய அரசியலின் முன்னும் பின்னுமான விளைவுகள் இவை. மூவாயிரம் மரணங்கள் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பெற்ற விசுவரூபத்தை ஐம்பதாயிரம் பேர் கொலையுண்ட முல்லைவாய்க்கால் பெறவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராக இரட்டைக் கோபுரம் விசுவரூபம்கொண்டு ஈராக், ஆப்கான் எனத் தாண்டவம் ஆடி இறுதியாய்ப் பின்லேடன் அழிப்பில் முடிந்தது. சாட்சியங்களற்ற போரால் பொசுங்கிய இரட்டை வாய்க்கால் இன்றும் முள்வேலி முகாமும், புலம்பலும், கண்ணீருமாய்க் காத்திருக்கிறது.

2005 இலங்கைத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்ற நரியை ஆதரிப்பதைவிட ராஜபக்ஷக்களை ஆயுதங்களால் எதிர்கொள்ள முடிவெடுத்துத் தேர்தலைப் புலிகள் புறக்கணித்தனர். ஆயுதங்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்ற பழைய சுலோகம் காலாவதியாகிவிட்டதைக் கண்டுகொள்ளாமல் ஆயுதங்களால் எதிர்கொள்ள முடிவு செய்தனர். நரியைவிட, சிங்கமே நரவேட்டையாடும் மிருகம் என்பதைக் காலம் உணர்த்தியது. தேர்தல் புறக்கணிப்பு அமெரிக்கச் சார்பு ரணிலின் வெற்றியைத் தடுத்து, சீனச் சார்பு ராஜபக்ஷக்களை வெற்றிகொள்ளச் செய்தமையால் அமெரிக்காவும் மேற்குலகும் புலிகளின் வீழ்ச்சியை விரும்பின. நண்டு வளையான இலங்கையில் வால் நுழைத்து, இலங்கை என்ற நண்டையே இழுத்துச் சாப்பிடவிருந்த அமெரிக்காவுக்குத் தன் கனவைச் சிதைத்த விடுதலைப் புலிகளைச் சிதைப்பதே திட்டமாயிற்று. 2005ஆம் ஆண்டிற்குப் பின்பு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் ஐந்தை அமெரிக்கா மூழ்கடித்து உதவியது. ராஜபக்ஷ 2009ஆம் ஆண்டின் மத்தியில் இதை வெளிப்படையாக அறிவித்தார். அமெரிக்கத் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லை. இப்போது மார்ச் 23 ஜெனீவா தீர்மானத்தின்போது “விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆயுதங்களில் 40 சதவீத ஆயுதம் நீங்கள் வழங்கியது தானே” என்று கியூபா அமெரிக்காவை நோக்கி எள்ளலாகக் குற்றம் சுமத்தியது. “2007-இல் மட்டும் பிரிட்டன் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது’’ என்று டாக்டர் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பிப்ரவரி 13, 2009-இல் தெரிவித்தார். “அதற்காக வெட்கப்படுகிறோம்’’ என்று அவர் தெரிவித்தபோதும், உண்மை வெளியே வந்தது.

“பின்லேடன் கொல்லப்பட்டவுடன் இஸ்லாமிய உலகிற்கு எதிரான அமெரிக்க யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தன் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது’’ என்று சில மாதம் முன்பு சீன அமைச்சர் ஒருவர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்குக் காட்டமாய் அளித்த பதிலில் உண்மை அடங்கியிருக்கிறது. இலங்கையை ஆதாரப்புள்ளியாகக்கொண்டு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது விரிவாக்கத்தைப் பெருக்கி வருகிறது சீனா. மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் கடல்வழி வர்த்தகப் பாதையில், இலங்கைத் தீவு ஆதாரப்புள்ளியாக இருப்பதைக் கலைத்துத் தனக்குச் சாதகமான புள்ளியாக மாற்ற முனையும் அமெரிக்காவின் தாக்குதலே.

ஜெனீவா தீர்மானம். உண்மையில் அத்தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல, தன்னுடைய உலக ஆதிக்கத்தைக் கேள்வி கேட்டுப் போட்டியாக வளரும் சீனாவுக்கு எதிரானது என்ற சூட்சுமத்தைச் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இரட்டை வாய்க்கால் பேரழிவென்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வல்லரசுகளின் பரஸ்பர மறைமுக வியூகம், ஜெனீவா தீர்மானம் என்பது அந்த வல்லரசுப் போட்டிகளின் நேரடி வியூகம். இத்தீர்மானம் நிறைவேறிய அதே நாளில் கடலோரப் பாதுகாப்பு, கடல்வளையக் கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்பம், கண்காணிப்புக் கருவிகள் என ஆயுத வழங்கலுக்கு 30 ஆண்டுகளாய் இலங்கைக்கு விதித்திருந்த தடையை, அமெரிக்கா நீக்கிய செய்தி வெளியாயிற்று. அத்துடன் ஈரானிலிருந்து இலங்கை எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வதிலும் அமெரிக்கா நிறையச் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைமீது நடவடிக்கை மேற்கொள்ளும்படியாய் எதுவும் இல்லை. அது சொத்தையான தீர்மானம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பதுபோல், எல். எல். ஆர். சி. அறிக்கையில் இருப்பதுதானே தீர்மானத்தில் வரும் என இலங்கைக்குத் தோளோடு தோள் உரசிக் காதைக் கடிக்கிறது அமெரிக்கா என்றுதான் கொள்ள வேண்டும். இருந்த ஒன்றிரண்டையும் திருத்தங்கள் செய்து இந்தியா உருவி எடுத்துவிட்டது. உங்களுக்கு ஒன்றுமே நேராமல் என்னென்ன செய்தோம் என்று ராஜபக்ஷவுக்கு எழுதிப் புளகாங்கிதப்பட்டுக்கொண்டார் மன்மோகன்.

இந்தத் தீர்மானத்தையும் அதற்கு ஆதரவாக நின்றதுபோல் காட்டிக்கொண்ட இந்தியாவையும் பார்த்து அடங்காத ஆத்திரத்துடன் “பின்னொரு நாளில் பயங்கரவாத காஷ்மீர் உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கப்போகிறது’’ என்கிறார் ராஜபக்ஷ.

உள் அரங்கிலும் உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின் மீது அனல் கொப்புளங்களைச் சுமந்துகொண்டிருக்கும் இந்தியா, இலங்கை வழியிலேயே இனப் பிரச்சினையைக் கையாளும் என்பதற்குக் காஷ்மீரம் கண்முன்னான சாட்சியாக இருக்கிறது. இரு சகோதரர்கள் ஒருவர்மீது ஒருவர் கோபித்துக்கொள்வதுபோலத்தான், ராஜபக்ஷயின் மன்மோகன்மீதான கோபிப்பும் அமைகிறது.


எந்தப் பிரச்சினையின் தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தமை சிங்களப் பெருந்தேசிய இனத்திற்குள் பெரும் பகையை மூட்டிவிட்டுள்ளது. இந்தியாமீதான பகையை எப்போதும் தமிழர்கள்மீது திருப்பிப் பழிதீர்த்துக்கொள்வதை இப்போதும் தொடங்கியுள்ளனர். 1983இல் நிகழ்ந்த இனக் கலவரம் போல் இப்போதும் நிகழுமோ எனத் தமிழர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். குறிப்பாகச் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கொழும்பிலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்கள் மத்தியில் உயிர்ப் பயம் நிலவுகிறது.

தமிழர்களிடம் உலகளாவிய உளவியல் திருப்தி ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்திருக்கிறது என்ற திருப்தி அது. ஒன்றுமில்லாத தீர்மானமாக இருந்தாலும் இலங்கைமீது கேள்வி எழுப்ப முடிந்ததே என்று உள்ரசிப்பைத் தமிழர் அனைவரிடமும் காண முடிகிறது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல, ஆரம்பம் என்பதை உணர்த்திய இக்காலகட்டம் முக்கியமானது.

2


சர்வதேச அரசியல் வியூக நகர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே ஈழத் தமிழர் விடுதலை அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும். உலக அரசியலே உள்ளூர் அரசியலுக்கு வழிகாட்டி. “முள்ளிவாய்க்கால் அழிப்பு, தமிழினத்துக்கு ஏற்பட்ட அழிவை மட்டும் போதிக்கவில்லை. தமிழினத்துக்கு இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் பலத்தின் முக்கியத்துவத்தையும் போதித்துள்ளது’’ என்ற சமகாலம் பற்றிய கருத்து மனங்கொள்ளப்பட வேண்டும்.

தமிழர்களை இனி வாழவிட மாட்டோம் என்ற இடத்துக்கு அரசு, ராணுவம் மட்டுமல்ல மனோவியல்ரீதியாகச் சிங்களர்களும் வந்துள்ளார்கள். இணக்கப்பாடு, சமரசம் என்ற நல்நோக்கங்களைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டால்கூடச் சிங்களர் அந்த எல்லைகளைத் தாண்டிவிட்டார்கள். தமிழர் தமக்குக் கட்டுப்பட்ட அடிமைச் சமூகமாக இருக்கச் சம்மதித்தால் மட்டுமே வாழலாம் என்ற நினைப்பில் சிங்களர் இருக்க இலங்கைத் தீவு இரண்டாக உடையாமல் சிங்கள அரசியலை ஒருவராலும் இனிக் கையாள முடியாது என்ற புள்ளியில் அரசியல் ஆய்வுகள் உருவாகின்றன. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தன ஒப்பந்த வரைவு இறுதிசெய்யப்பட்ட வேளையில் இந்தியத் தூதராக இருந்த ஜே. என். தீட்சித் அதன் போதாமையைப் பற்றிக் கூறினார்

“சிங்களருக்கும் இலங்கைத்தமிழ ருக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத அதலபாதாளமான வேறுபாடுகள் உள்ளன. வெறுமனே பொருளாதார வளர்ச்சியாலோ சாதாரண அரசியல் சீர்திருத்தங்களாலோ சரிப்படுத்திவிட முடியும் என எண்ணுவது பிழையானது.’’

ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டமற்ற வழிமுறையை வரலாறு கோருகிறது. ஆயுதக் களம் இல்லாத நிலையில் சனநாயகத்திற்கான, வாழ்வாதார உரிமைகளுக்கான, தேசிய விடுதலைக்கான மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கான புதிய மூன்று களங்கள் திறக்கப்பட்டுள்ளன

முதலாவது - ஈழத் தமிழ் மக்கள்

இரண்டாவது - புலம்பெயர் தமிழர்கள்

மூன்றாவது - தாயகத் தமிழர்.

அவரவர் தளங்களுக்கெனத் தனித்தனிக் கடமைகள் முன்னிற்கின்றன.

தெளிவான, மெய்மையான, எதார்த்தமானஅடிப்படையைத் தமிழினம் வகுத்துக்கொள்ள வேண்டிய காலம் இது. நாம் விடுதலையின் ஆதரவு சக்திகள் என்ற வரையறை அது. உலகளாவிய ஆதரவைப் பெறவும் உலகிற்குள் போய் பயணத்தை முன்னெடுக்கவும் இது வழி அமைக்கும்.

முதல்தளம்-ஈழம்

அனாதரவான ஈழமக்களின் மனத்தின் எல்லா அசைவுகளும் மூடப்பட்டுள்ளன. கை, கால்கள் மட்டுமல்ல, மனத்தை வெளிப்படுத்தும் நாக்குகளும் வெட்டப்பட்டுவிட்டன. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாலைவனத்தில் அவர்கள் ஜீவிக்கின்றனர்.

இனிப் பொறுக்க முடியாது என்று டுனிசியா, எகிப்து, சிரியா, லிபியா போல் மக்கள் எழுச்சி பரவச் சாத்தியமில்லை. எங்கோ ஒரு புள்ளியில் ஏதோ ஓர் உயிர் தொடங்கிவைக்கக் காட்டுத் தீயாய் வெடிக்கும் தன்னெழுச்சியும் பொய்த்துள்ளது.

மார்ச் 23இல் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவின் அறிவுரைப்படியே பங்கேற்காது ஒதுங்கினர் எனச் சொல்லப்படுகிறது. அதே நாட்களில் ராஜபக்ஷயுடனான புரிந்துணர்வு நடந்து முடிந்தது. இந்தப் புரிந்துணர்வுச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் தள்ளாடும் தலைவர் சம்பந்தர், சுமேந்திரன் எம்.பியை உடன் அழைத்துச் சென்றார். தனதாளாகவும் அதேசமயத்தில் ராஜபக்ஷயின் ஆளாகவும் இயங்கும் வல்லமையுடடைய சுரேந்திரனை அழைத்துச் சென்றது மிகப் பாதுகாப்பானது. ஜெனீவா மனித உரிமை அவையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த புலம்பெயர் தமிழர்கள் சொந்த ரத்தமே பேசவரவில்லையென்கிறபோது அந்த ரத்தத்தின் மீது அவர்களுக்கு ஐயம் எழுந்தது. அந்த ஐயம் தொடர்தடம் பதித்துச் செல்கிறது என்பதில் துளிச் சந்தேகமும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இங்குள்ள கருணாநிதிபோல் என்று சொல்லப்படுகிறது.

ஈழத் தமிழர்களின் பூர்வீகத்தில் இன்றைக்கு அரசியல் களத்தில் உள்ள சக்திகள் இரண்டு. ஒன்று இந்திய ஆதரவுச் சக்தி. மற்றொன்று இலங்கையில் உள்ள நேரடி ஆதரவுச் சக்தி. இந்தியாவின் தயவில் எதையாவது பெற்றுக்கொள்ள முடியாதா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். இந்திய அழுத்தத்திலேயே இலங்கை செய்யும் என நினைக்கிறார்கள். அதற்காக ஈழமக்கள் அனைவரையும் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ளுமாறு வழிநடத்தும் வகையில் கூட்டமைப்பினரின் செயல்கள் அமைந்துள்ளன. இந்தியாவை வல்லரசு நாடாக உலகில் உயர்த்திட வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் அவாவும் இதுவே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாயகம், தேசியம் சுயநிர்ணயம் என்னும் தமிழினத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டது தமிழ்ப் பிரதேசங்களான வடக்கு - கிழக்கு இணைப்புக் கோரிக்கையைக் கைவிட்டது, சுய அதிகாரமற்ற மாகாணச் சபைகளை வலியுறுத்தும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொண்டது போன்ற செயல்கள் இலங்கைப் பேரினவாத அரசியலுக்குள் தனது இனத்தின் அரசியலைக் கரைக்கும் முயற்சிதான் என்பதைக் காட்டுகின்றன. சிங்களப் பேரினவாத அரசியலை முழுமையாய் முன்னகர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மே தினப் பேரணியை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அவர்கள் நெஞ்சுரமற்ற தலைமைகள் என்பதை அப்பட்டமாகக் காட்டியுள்ளது.

இந்திய சரணாகதி அரசியல் என்பது இலங்கை சரணாகதி அரசியலுக்குச் சமமானது. இரண்டு சரணாகதி அரசியலையும் தாண்டி மக்கள் அரசியலை நடத்தும் சக்திகள் அங்கு எழுமானால் ஈழத் தமிழனுக்கு அங்கு சுவாசிக்க இடம் உண்டு.

இரண்டாம் தளம்: புலம்பெயர் தமிழர்

உலகெங்குமுள்ள பெரும்பான்மையான நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர் ஈழத் தமிழர் வாழ்கின்றனர். யூதர்களுக்கு அடுத்து, நாடற்றவர்களாய் ஆகிய ஈழர்கள் உலக அளவிலும் எண்ணிக்கையளவிலும் யூதர்களைவிடப் பெரிய சக்தி. சில நாடுகளில் சில பகுதிகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை, நகரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும் சக்தியாகவும் திரண்டுள்ளார்கள். அந்தந்த நாடுகளில் கருத்தியல் அழுத்தத்தைச் செலுத்தும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. சிதைக்கப்பட்ட ஈழத் தமிழர்களைவிட, செயலற்ற தாயகத் தமிழரைவிட, உலகின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் இவர்கள்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கால்வைக்க முடியாமல் ராஜபக்ஷயைத் திருப்பி ஓடவைத்தது, ஐ. நா சபை விசாரணைக் குழு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் போன்ற காரியங்கள் இவர்கள் செயலாளிகள் என்ற சேதியைச் சொல்கின்றன. தம் வாழ்வையும் கவனித்துக்கொண்டு, தம் மண்ணின் விடுதலைக்கும் உழைப்பார்கள் என்பதை உணர்த்துகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று மேற்குலகம் தொடங்கிய கருத்தியலைத் தனக்கானதாகச் சுவீகரித்து ராஜபக்ஷ எப்படி முள்ளிவாய்க்காலை நடத்த முடிந்ததோ அதுபோல் உலகம் உரு வாக்கிவைத்திருக்கும் பொதுமக்கள் வாக்கெடுப்பு என்னும் கருத்தியலை ஈழத்துக்குச் சாதகமாகப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்த முடியும். தமிழர் பிரதேசங்களில் மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழரையும் உள்ளடக்கிய பொதுமக்கள் வாக்கெடுப்பை நடத்தக் கோரித் தத்தம் வாழ்விடங்களில் அழுத்தம் தரும் செயல்முறையைப் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இது அவர்களின் பிரதானக் கடமையாக இருக்கும். அவர்களிடமிருந்து புறப்படும் வாக்கெடுப்புக் கோரிக்கை, அந்நாடுகளிலுள்ள சிந்தனையாளர்கள், சனநாயகவாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரை ஒரு செயல்தளத்தை நோக்கி ஈர்க்கும். அமெரிக்க எழுத்தாளராக உருவாகி - கியூபா வெனிசுலா ஆகிய நாடுகளில் களப்பணி ஆற்றிய ரான் ரைட்வைரை இதன் முன்னுதாரணமாகக் காட்டலாம். ஜெனீவா மனித உரிமை அவையில் கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் மேற்கொண்ட இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியவர் அவர். விவாத அரங்கு, நேர்காணல்கள், பேரணிகள் போன்ற மக்களிணைப்பு நடைமுறைகளில் இத்தகைய மனிதகுலச் செயல்பாட்டாளர்களைப் புலம் பெயர் தமிழர் முன்னிறுத்த வேண்டும்.

ஜெனீவாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளுடனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுடனும் உரையாடலைத் தொடங்கியுள்ளார்கள் புலம்பெயர் தமிழர்கள். இது தேவையான முயற்சி. ஒரு நாட்டு அரசு இன்னொரு நாட்டுடனான உறவை அரசு மட்டத்திலேயே வைத்துக்கொள்ளும். அரசற்ற ஓர் இனத்தின் குரல் எடுபடுமா? அரசு மட்டங்களில் எடுபடவில்லையென்றாலும் அந்நாட்டில் இயங்கும் சனநாயகவாதிகள், மனித உரிமைச் செயல் பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற தளத்துக்கு எடுத்துச் செல்கையில் அங்குக் கவனப்படுத்தப்படும். எதிராக வாக்களித்த இந்தோனேஷியா, தாய்லாந்து, சவூதி அராபியா, கத்தர், குவைத் போன்ற நாடுகள் சிறுபான்மை இனங்கள்மீது அடக்குமுறையைத் தொடர்ந்து செலுத்துகின்ற நாடுகளாயினும் அங்குப் போராடும் இனங்களிடம் அணுகி உரையாடும் எல்லையை இனித் திறக்க வேண்டும்.

1948க்கு முன்னும் பின்னும் பெற்ற ராசதந்திர வல்லமை எதிரிக்கு மிகப் பெரிய வளம். அறுபதாண்டுகளுக்கு மேலாய் அவனை வீழ்த்த அனுப்பும் அம்புகளையெல்லாம் பாதிவழியிலேயே முறித்துத் தன் கைவசப்படுத்தும் மாயாஜால வல்லமை அவனுக்கு உண்டு. “எதிரி நமது ராணுவ அரண்களை மட்டும் நொறுக்கவில்லை. கூடவே நம்மிடமிருந்த கற்பனைகளையும் தவறான சிந்தனைகளையும் நொறுக்கியிருக்கிறான்’’ என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும். எனவே நாம் முடிக்கப்பட்டதற்கான, வீழ்ந்தததற்கான காரணத்தை நம்மிடையேயும் உலக சமூகத்திடையேயும் தேடும் போதே சுயவிமரிசனமாய்க் கற்றுக்கொள்ளவும் வேண்டும். சுயவிமரிசனமாய்க் கற்றுக்கொள்ளலிருந்தே நாம் வீழ்ந்துபடாமல் இருப்பதற்கும் முடிக்கப்படாமல் தொடர்வதற்குமான வழிவகையைக் காண முடியும்.

“ஜெனீவா வெற்றியானது தமிழினத்தைப் பொறுத்தவரையில் புலம் பெயர் தமிழர்களையே சாரும். எனவே இன்னும் அவர்கள் வலுப் பெறுவார்கள். அது போன்ற சூழல் வருமானால் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனிநாடு என்ற இலக்கை நோக்கியதாகவே இருக்கும்’’ என்று கண்காணிப்பு ஆய்வு மையம் (Observe Research Foundation) சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளதைக் காணலாம்.

மூன்றாம் தளம்: தாயகத் தமிழர்

முள்ளிவாய்க்கால் முடிவுக்குக் களத்தில் போராடி மடிந்த போராளிகளும் மடிந்த எண்ணிக்கையில்லாப் பொதுமக்களுமா காரணம்? இந்திய அரசுக்கு முன் மண்டியிட்டு மடங்கிய தமிழகமும் காரணம். தமிழகமே காரணம். தமிழக அரசியல் தலைமைகள், தத்தமது இயக்கங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஈழப் பிரச்சினையைப் பணயப் பொருளாக்கியபோது இது தெளிவாகியது.

இவர்களின் எதிர்ப்பு எவ்வகையிலும் இலங்கைக்கான இந்தியக் கரங்களைத் தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. யுத்தம் நடைபெறுகையில் நாடாளுமன்றத்துக்குள்ளும் சட்டமன்றத்துக்குள்ளும் நீடிப்பது என்பது நடைபெறும் யுத்தத்துடனான பேரமாக அமைந்தது. பிரதிநிதித்துவ சபைகளுக்கு அப்பால், வெளியில் சமுதாயக் களத்தில் நடந்த போராட்டங்களும் நடுவணரசை நிலைகுலையவைக்கவில்லை. குறைந்தபட்சம் நடுவணரசு அலுவலகங்கங்களையோ மாநில அரசின் அலுவலகங்களையோ செயல்படவிடாமல் சில நாட்கள் செய்திருந்தால்கூட எல்லாம் சரியாகி இருக்கும். எல்லை மீறாத, வரையறுக்கப்பட்ட போராட்டங்களால் எல்லாமும் சரிப்படுத்தப்படும் என்பது இவர்களின் நம்பிக்கையாயிருந்தது.

இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவைத்ததன் மூலம் தமிழக சக்திகள் இப்போதுதான் நல்ல செயலாற்றியிருக்கின்றன. தமிழக அரசியல் இயக்கங்கள் கொடுத்த நெருக்கடியால் இந்தியா எதிரான முடிவுக்குப் போயிருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விரக்தியை வெளிப்படுத்துமளவுக்கு நடந்துவிட்டது. இந்தியாவின் இந்த முடிவுக்கு ஒவ்வொருவரும் உரிமை பாராட்டிக்கொண்டாலும், ‘எவ்வாறோ அரைகுறையாகவேனும் ஒரு காரியம் நடந்திருக்கிறது.’ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம் ‘இந்தியா நெருப்பு வளையத்தில் உள்ளதாக’ ப. சிதம்பரத்தைப் பதறவைக்கிறது.

இந்திய வெளியுறவுக்கொள்கையில் தாங்களும் பங்காற்ற முடியும் என்பதை முதன்முதலாகத் தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இலங்கையுடனான இந்திய வெளியுறவுக் கொள்கை இந்தியப் புலனாய்வுத் துறையான ஸிகிகீவால் வழி நடத்தப்படும் நிலைக்கு மாறாக முதன்முதலாகத் தமிழக அரசியல் சக்திகள் தீர்மானிப்பதாக ஆகியிருக்கிறது. இதில் ஒரு தொடர்ச்சியைக் கொடுப்பதில்தான் தாயகத் தமிழர், ஈழத் தமிழரின் விழிகளில் கொஞ்சமேனும் ஒளிக்கீற்றை ஏற்ற முடியும். தமிழக அரசியல் கட்சிகளைப் போல், சந்தர்ப்பவாதத்துக்குத் தாலிகட்டிக்கொண்ட இயக்கங்களை, இதற்கு முன் நாம் கண்டதில்லை. இனி அதுபோல் இல்லை என்ற புதிய நம்பிக்கையுடன் சந்தர்ப்பவாதத்துக்கு, உள்மடங்காத, புதிய சக்திகள் தமிழகமெங்கும் உருவாகிவருகிறார்கள். இவர்கள் தேசிய இன விடுதலையில் மட்டுமல்லாது, மக்களின் ஒவ்வோர் அசைவிலும் பங்குகொள்கிறவர்களாகத் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஜெனீவா தீர்மானமோ அதை நடைமுறைக்குக் கொண்டுசெல்லும் நகர்வுகளோ அந்தந்த நாட்டின் உள் அரசியல், புவிசார் உலக அரசியல், நாடுகளின் ஆளும் வர்க்கக் குழுக்களின் நலன் என்ற வகையில்தான் அமையப் போகின்றன. அதன் தெளிவான வெளிப்பாடுகள் புலப்படத் தொடங்கிவிட்டன. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது உடனே தொடங்கி, உடனே முடிவதல்ல. மூன்று தமிழர்களின் தோள்களும் சுமக்க வேண்டிய தொடரும் போராட்டமென உணர்வதில் விடுதலை அரசியல் உள்ளது.

நன்றி: இனியொரு - 05 அக்டோபர் 2012 , காலச்சுவடு - மே 2012

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content