ஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி

பிப்ரவரி 16, 2018 முதல் பத்துநாட்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

அந்தப் பயணம் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு…

ஈழத்திற்குச் வேளை, முன்னர் என் மனத்திலிருந்த – நான் நேசித்த பூமிதானா எண்ணத்தோன்றியது; மண்ணே, என் மண்ணே எனக் கதறியழலாமா எனவுமிருந்தது; அந்த வெக்கையான பயணத்தின்போதும் ஊடறுத்து என் நெஞ்சில் நிறைந்த நாட்கள் உண்டு.

ஒன்று: தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் முத்துலிங்கத்தின் முன்னெடுப்பில் கண்டியில் 17-2-2018 நிகழ்வுற்ற இலக்கிய ஒன்றுகூடலில், “உலக மயமும் சமகால தமிழிலக்கியப் போக்குகளும்” என்னும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வு, சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் - மலையகமான ‘கண்டி’யில் டெவோன் ரெஸ்டூரன்ட் மண்டபத்தில் நடைபெற்ற போது, நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையுரையாற்ற, தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உரையாற்றினார்.




இந்நிகழ்வில் கவிஞர் இன்குலாப் பற்றி பா.செ எழுதிய ’சாகாத வானம்‘ செழுமைப்படுத்திய மறுபதிப்பு வெளியிடப்பட்து. சமூகப்பணியாளர் வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் நூலின் முதற் பிரதியை பெற்றுக் கொள்ள, எழுத்தாளர் அந்தனி ஜீவா உடன் உள்ளார்.

இரண்டாவதாய் – மலையிலிருந்து கீழிறங்கி வந்து, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் பற்றி ”காலத்தின் கவி” என்ற பொருண்மையை வெளிப்படுத்திப் பேசியது.





பிப்ரவரி 20, 21, 22 ஆகிய நாட்களில் மட்டக்கிளப்பிலுள்ள “விபுலானந்தர் அழகியல் கற்கை மையத்தில்” நாடகத்துறை மாணவ மாணவிகளுக்கு கலைகள் இலக்கியம் குறித்து உரையாற்றினேன். ’தாய்மொழி’ நாள் நிகழ்வில் அனைவரும் பங்குபெற்ற போது, மொழியின் இன்றியாமை பற்றி, சமகால இலக்கியத்தில் மொழிப் பயன்பாடு பற்றி நிகழ்ந்த உரையாடல் மறக்கவியலா ஒன்று. இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், நாட்டார் இசை ஆகிய நிகழ்த்து கலையும், நுண் கலையும் கற்றுத் தருகிற கற்கை மையம் அது. கல்லூரி விரிவுரையாளர்கள் என்னுடன் உள்ளனர். இந்த மையத்தின் இயக்குநர் திரு.ஜெயசங்கர் சிறந்த நாடக நெறியாளர் மட்டுமன்று, பல கலைகளிலும் திறன் வாய்ந்த நிர்வாகத் திறன் கொண்ட தனி ஆளுமை.

மூன்றாவதாய், கொழும்பில் “பூபால சிங்கம்” தமிழ்நூல்கள் விற்பனையக உரிமையாளர் ஸ்ரீதர்சிங். தமிழ் ஊழியத்தைத் தன் வாழ்நாள்ப் பணியாய்க் கொண்டியங்கும் ஸ்ரீதர்சிங் அவர்களது இல்லத்தில் 22 பிப்ரவரி 2018 மாலை நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் பேரா.அ.மார்க்ஸ், நான், எழுத்தாளர்கள் அந்தணி ஜீவா, திக்குவல்லை ஜமால், பேரா. நா. ரவீந்திரன், கல்வியாளர் மதுசூதனன், மேமன் கவி, தயாபரன், பேரா.வசந்தி தயாபரன், ஜவ்வாது மரைக்காயர், ஞானம் ராஜசேகரன் எனப் பலரும் பங்குபெற்ற உரையாடல் நிகழ்வு, ஒரு தேநீர், சிற்றுண்டியுடன் நிறைவு கொண்டது.





நான்காவது நிகழ்வு: 24 பிப்ரவரி 2018ல், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம், புதிய தேசியவாதம்” என்னும் நூல் வெளியீடு. வடக்கு மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினர்; எழுத்தாளர் நிலாந்தன் தலைமை, யாழ்ப்பல்கலைத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் அருந்தாகரன், அரசறிவியற் துறைத் தலைவர் கலாநிதி கே.டி. கணேசலிங்கன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி டி கிருஷ்ணமோகன், சட்டத்துறைத் தலைவர் கே.குருபரன் ஆகியோர் வெளியீட்டுரை ஆற்றினார்கள். நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். நெஞ்சம் நிறைத்தது இந்நூல் வெளியீடு! (நிகழ்ச்சி உரையை இங்கு படிக்கவும்)






இடையில் தமிழ்நாளிதழான, தினகரன்’ அலுவலகம் சென்று ஆசிரியரை, ஆசிரியக் குழுவினருடன் சந்திப்பு.




தினகரன் வாரமஞ்சரி (இலங்கை) கட்டுரையை இங்கு படிக்கவும்.

மட்டக்கிளப்பு சென்றடைந்து ’விபுலானந்தர் அழகியல் கற்கை மையத்தில் ”தாய்மொழி நாள்” நிகழ்வில் பங்குபெற்று உரை நிகழ்த்தல் என நடந்தேறின. கல்லூரியின் பெயரைச் சற்று நோக்குங்கள் - ”விபுலானந்தர் அழகியல் கற்கை மையம்” ! நாடகம், இசை, ஓவியம், நாட்டியம், நாட்டார் இசை என்ற அழகியல் கலைகள் மாத்திரமே கற்றுத்தரும் இந்த மையத்தின் இயக்குநர் ஜெயசங்கர் குறிபிடப்படவேண்டிய ஆளுமை.

அனைத்துக்கும் மேலாய் தோழர் டொமிணிக் ஜீவாவை மறக்க ஏலுமா? பொதுவுடைமை இயக்க முன்னோடி ப.ஜீவானந்தம் கொழும்பில் தலைமறைவு வாழ்விலிருந்த போது உடனிருந்து உதவி பணிய்யாற்றிய மூத்த தோழர்; மல்லிகை இலக்கிய இதழினை 48 ஆண்டுகளாய் நடத்தி வருபவர். இது 270-ஆவது இதழ் என்றார் என்னிடம்.



“வயசு?”
”கொஞ்சம்தான்”
“எவ்வளவு?”
91 என்றார்.

91-ஐ, இந்த 75 சந்திக்கவில்லையெனில் அது பேரிழப்பாகியிருக்கும்.
மல்லிகை பொன்விழா மலர் வரவிருக்கிறது.

நன்றி: தமிழ்வலை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி