இலங்கை யாப்பு - இனப் பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி


அத்துவானக் காட்டிலிருந்து வருவது போல ஒரு குரல் கேட்கிறது: அனாதி காலமாய்க் கேட்காத ஒற்றைக் குரல்!

இராணுவத்தில் சேரப்போகும் பேரனை நோக்கி சிங்களக் குடும்ப முதுகிழவனின் குரல்.

“நீ எதுக்குப் படைக்குப் போகோணும்? நிலத்தை மீட்கவா? அது உனது நிலமா? தமிழர்கள் எப்போது உன் நிலத்தைத் தமதாக்கிக் கொண்டார்கள்? நமக்கே இங்கு நிலம் இருந்ததில்லை. உன்னை ‘நிலம் மீட்க வா’ என்றா சொல்றாங்கள்? இவங்களிடம் திருப்பிக்கேள். இந்த அரசியல்வாதிகளிடமும், புத்தபிக்குகளிடமும் – முதலில் இங்கு  நிலம் இல்லாமல் இருக்கிற நம் குடும்பங்களுக்கு, தேவைக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கிறவர்  களிடமிருந்து மீட்டுக் கொடுக்கச் சொல்லு. செய்வாங்களா? பிறகு எந்த நிலத்தை யாருக்காக மீட்கப் போகிறாய்?

“நீ சிங்களவன் தானே! உனது சொந்த ஊரிலேயே, உன் தலைமுறை வேர்விட்ட மண்ணிலேயே இவர்கள் உனக்கு நிலம் தரேல்லை. உன்னை ‘சிங்களவன் மண்ணை மீட்க வேணும், போருக்குவா’ என்கிறாங்கள். நீ தமிழரோட – அவங்கள் வேர்விட்ட மண்ணைப் பறிக்கப்போகிறாய். உன் தலைமுறை இருந்த மண்ணைத்தானே நீ மீட்கவேணும்? அது தானே நியாயம்? நீ யாரோட போர் செய்யவேணும்? இந்த அரசாங்கத்தோட தான் நீ போர் செய்யவேணும்! அதுதான் உன் எதிரி. உன்னை எங்கே கூட்டிப் போகிறார்கள்?

“இந்த அரசாங்கம் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்தது; அது யார் நிலம்? தமிழர் நிலங்களில் தானே! தெற்கில் (தென்னிலங்கையில்) நிலம் இல்லையா? சிங்களவரின் முதல் குடியேற்றம் தமிழர்கள் வாழுகிற ’கல்லேயாவில்’; அவசரகாலச் சட்டம் போல தமிழ்க்குடிகள் வெளியேற வேண்டும் என்று அறிவித்துத் தானே தொடங்கியது. இப்போ யார் இழந்த நிலத்தை மீட்டால் நிரந்தர சமாதானம் மெய்யாக வரும் இந்த நாட்டில் ”.

“நீ துவக்கு (துப்பாக்கி) இவங்களிடம் வாங்கிக் கொண்டு போய் தமிழரைத் சுடப்போறியா? அதுவும் இந்த சுயநல அரசியல் நாய்களிடம் வாங்கிக்கொண்டு போன துவக்கால சுடப்போறியா? இவங்கள் உன்னிடம் துவக்குத் தந்து, முன்னுக்கு அனுப்பி உன்னைச் சாகடிச்சு தாங்கள் பிழைப்பாங்கள். பிள்ளை, படையில் சேர ‘ஓமென்று’ சொல்லாத. கொலைத் தொழிலுக்குத் தான் உன்னை அனுப்புறாங்கள். கொலைத் தொழிலுக்குப் பிள்ளை உன் உசிரை விடாத. உன் உசிரை வைச்சிரு”.

பாட்டனான முதிய ’சீயா’ எழுப்பும் இந்தக் குரலின் தர்க்கம் சிங்களவரலாற்றில் இதுகாலமும் ஒலித்ததில்லை: முதன் முறையாக ஒலிக்கிறது. ஒரு சிங்களக் குடும்பத்தின் முதுபாட்டனின் வாய்வழியாக! எழுத்துக் கலைஞன் குணா கவியழகன் வடித்த ‘கர்ப்பநிலம்’ புதினத்தில் வரும் ‘ரத்ன நாயக்கா’ – என்னும் கிழவனது வாசகம், புதினத்தில் வரும் ஒரு பாத்திரம் உதிர்த்ததாயினும், அது உண்மை: அது சத்தியமான மூதுரை.

தமிழர் வாழ் பூமியைச் சிங்கள வசப்படுத்தும் உளவியல் சிங்கள இனத்துக்கு மட்டுமே உரியதா?  மானுட இனம் பிறந்து வளர்ந்து இருப்பைத் தொடரத் தொடங்கிய போதிருந்து உருவான ஆதிக்க உளவியலா?


இந்த உளவியல் சிங்களப் பேரினத்துக்குத் தோற்றமானது எக்காலம்?  இலங்கைத் தீவில் பிரித்தானிய ஆட்சியதிகாரம் சிங்களரின் கைமாறிய 1948 என நாம் எண்ணுகிறோம்: அது பிழை.

“2250 ஆண்டுகள் முன் தொடங்கப்பெற்ற ‘இலங்கை பௌத்த மகாசங்க’ வேரிலிருந்து உண்டானது இப் பேரின விச விருட்சம். உலக அரங்கிலேயே மிகநீண்ட வரலாற்றைக் கொண்டதும், ஒழுங்கமையப் பெற்றதுமான நிறுவனம் இது. இந்நிறுவனம் அரச சிந்தனை மரபை மதத்துடன் இணைத்துப் பணிபுரிந்து வருகிறது. உருக்குலையில் காய்ச்சிய இரும்பாய்ப் பழுத்த இராச தந்திரத்தை மகாசங்கம் காலத்திற்குக் காலம் மன்னர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடத்தித் தரும் மரபைக் கொண்டுள்ளது”.
(அரசறிவியல், வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு; கட்டுரை - எங்கிருந்து எங்கு)

பௌத்தத் தர்மத்தைக் காக்கப் போராடுவதாக சபதமேற்றிருக்கும் மகா சங்கத்தினது தர்மம், நிறுவனப்படுத்தப்படுகின்ற ஏதொன்றின் தர்மமும் அத்தகையது தான்: இத்தருணம் வரை தன்னுடைய பிக்குகள் வழி  மகா சங்கம் என்ன போதித்து வருகிறது?

“பௌத்த தர்மத்தைக் காக்கும் எந்தக் குழந்தையும் புத்தனின் குழந்தை” என்கிறார் பிக்கு.புத்தனின் குழந்தை புத்தனைக் காக்கப் பெரியவனாகையில், “மார்க்கத்தைக் காக்கப் போரிடுவது பௌத்தனின் கடமை” என்கிறார்.

குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ புதினத்தில் வரும் சிங்களப் பெண்ணான சுமத்திரியின் பேச்சு இது.

“போரை எதிர்த்தவனின் மார்க்கம் எப்படிப் போர் செய்யத் தூண்டுகிறது? போரை எதிர்க்கும் மார்க்கத்துக்காகப் போரா? அது என்ன தர்மம்? மும்மணிகளுக்குள் அடங்காத தர்மம். கொல்லாமையைப் போதிக்கும் மார்க்கத்தைக் காக்கக் கொல்வதே தர்மமா? தமிழர்கள் எமது  மார்க்கத்தை எங்கே அச்சுறுத்தினார்கள்? அதன் மீது எங்கே போர் தொடுத்தார்கள்?”

சுமத்திரியின் மனத்தில் பேரிரைச்சலாக இது இடிக்கிறது.

தனது மார்க்கத்தைச் சாராத எந்தவொரு மனிதனையும், எந்தவொரு இனத்தையும் போர் செய்து அழிப்பதே மகா சங்கத்தினதும், பிக்குகளினதும், அரசாங்கத்தினதும், அதிகார மோகிகளான அரசியல்வாதிகளினதும் குறிக்கோளாக நீடிக்கிறது.

இக்குறிக்கோளின் எழுத்து வடிவம் யாப்பு.

நாடுகள் எல்லாவற்றிலும், அரசியல் யாப்புகள் எழுதப்பெற்றன: இலங்கையில் 1931-லியே, பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஒப்புதலான ”டொனமூர்அரசியல் யாப்பு” வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போரை எடுத்துச் சென்ற இயக்கம், “இந்திய தேசிய காங்கிரஸ்”. அதே போல் இலங்கையில் சேர்.பொன்.அருணாசலம் என்ற தமிழர் தலைமையில் தொடங்கப்பெற்றது “இலங்கைத் தேசிய காங்கிரஸ்”.

ஆறு ஆண்டுகளின் பின் தமிழளைஞர்கள் தொடங்கியது ”யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்”. யாழ்ப்பாணவாலிபர் காங்கிரஸ் அழைப்பின் பேரில், 1927- நவம்பரில் காந்தி யாழ்ப்பாணம் வந்தார். காந்தியை முன்னிறுத்தி, இந்தியாவில் நடக்கும் சுதந்திர எழுச்சிபோல், இலங்கையிலும் உருவாக்க முயலும் தமிழிளைஞர்களின் உள்நோக்கத்தை பிரிட்டன் தனக்கு எதிராகக் கண்டது: தன் ஆதிபத்தியத்தைக் கேள்விக்குட்படுத்தும் பேரபாயப் போக்கு இது எனக் கருதியது.அப்போது எழுதி வடிவமைக்கப் பட்டது ”டொனாமூர் யாப்பு.”

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, 1947-ல் நடைமுறைக்கு வந்தது சோல்பெரி தலைமையிலான குழுவினர் எழுதிய ‘சோல்பரி யாப்பு’.

பிரித்தானிய ஆதிக்கக் கரங்களிலிருந்து விடுபட, அதன் அடிமை நுகத்தடியில் சிக்குண்டிருந்த நாடுகள் உலகெங்கும் விடுதலைப் போரைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்த நாட்களிலும், விடுதலை பெறவேண்டுமென்னும் முனைப்பு துளியும் இல்லாத சிங்களஇனம் பிரிட்டனுக்கு ஆதரவும் இந்தியாவுக்கு எதிர்ப்பும் என்ற அரசியல் கொள்கையைக் தொடர்ச்சியாகக் கொண்டிருந்தது.

சோல்பெரி  யாப்பு உருவாகி வந்த சந்தர்ப்பத்தைச் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்ள சிங்களத் தலைவர் சேனநாயகா, (பின்னர் இலங்கையின் முதல் பிரதமர்) முனைந்தார். முனைந்து அதில் வெற்றியும் பெற்றார்.சிங்கள இனத்துக்குச் சாதகமாய்ப்  ’சோல்பெரியின்’ அருகிருந்து யாப்பு உருவாக்கம் பெற ஒவ்வொன்றையும் எடுத்துக் கொடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பிச்சென்ற சோல்பெரி பிரபு “இப்போது நடத்தப்பெறும் இனக்கொடுமைகளுக்கு, நான் எழுதிய யாப்பு அடிப்படையாக அமைந்துவிட்டதே” என்று 1961- ஆம் ஆண்டில் புலம்பினார். 

யாப்பு – போரை எதிர்த்தவனின் மார்க்கத்தையே, போர் செய்யத் தூண்டும் மார்க்கமாக வரையப்பட்ட எழுத்துச் சாசனம்.ஒவ்வொரு காலகட்டத்திலும் யாப்பு இத்தேவையை நிறைவேற்றும் அடியாளாக இருந்து வந்துள்ளது.

‘யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே’ என்கிறது தமிழ். இனமுறுகல், அத்துமீறல் நாற்றம் முன்வர, அதற்கேற்ப ஒவ்வொரு முறையும் ‘அரசியல்யாப்பு’ தொடரும் என்பது சிங்கள மொழி. சிங்களப் பேரின வெறியை ஒவ்வொரு முறையும் முன்னகர்த்த யாப்புத் தேவைப்பட்டிருக்கிறது.

சிறீசேனாவை அதிபராகக் கொண்ட ஆட்சியின் இந்த யாப்பு – 2018ம்  முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான பரிகார நீதியைப் பற்றிப் பேசாது, இனப்படுகொலையை நியாயப்படுத்துகிறது. “அவ்வக்கால நடைமுறைகளுக்கு இயைபான ஓர் அரசியல் வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடு தாம் டொனாமுர் யாப்பு முதல் சிறீசேனா வரையான யாப்பு வரைவுகள்” – என மிகச் சரியாக மொழிகிறார் அரசறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. “யாப்பை அதன் வரிகளில் அல்ல; செயல்பாடுகளில் அடையாளம் காணவேண்டும்” என்று அவர் சொல்வார்.

யாப்பு – ஒரு நாட்டின் மக்களாட்சி எத்திசையில் இயங்க வேண்டுமென்பதற்கு வடிவம் கொடுக்கும் ஒரு சொல். இலங்கைக்கு அச்சொல் உண்மையான பொருளில் வெளிப்பட்டதில்லை. இலங்கை இனவாத அரசின் ‘குட்டுநெட்டை’ முழுதும் அறிந்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுக்கு இத்தகைய ஒரு எடுத்துரைப்பைச் செய்வது சாத்தியமாகியிருக்கிறது.

இன்று உலகெங்கும் ஈழத்தமிழர்கள் விரிந்து பரந்து வாழ்கின்றனர்: இந்நாடுகள் அவர்களின் பூர்வீக பூமியல்ல; இனவெறியால் எல்லாப் பிரதேசங்களுக்கும் தூக்கி வீசப்பட்டவர்கள். குறிப்பாக கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி நாடுகளில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். சொந்த மண்ணிலிருந்து தூக்கி வீசியெறியப்பட்ட கதையை தமக்குள் மட்டும் பேசிக்கொண்டிருத்தல் போதாது. உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அதன் கருத்தை நம்மை நோக்கித் திருப்பவேண்டும்: பிரான்சு எனில் பிரெஞ்சு மொழி: கனடா, பிரிட்டன் என்றால் ஆங்கிலம்; ஜெர்மனி என்றால் ஜெர்மானிய மொழி என அந்நாடுகளின்  மக்களுக்கு அவரவர் மொழியில் எடுத்துச்சொல்லும் கடப்பாடு ஈழத்தமிழருக்கு உண்டு.

இந்த முதன்மையான பணிக்கான ஒரு திறவுகோல் பிரெஞ்சில் மொழியாக்கமாகும் இந்த யாப்பு நூல். இந்நூலினை வெளியிடுவதன் வழி , எங்கள் விழைவு இதுதான் - இனி இது போன்ற மொழியாக்கங்கள் அந்த அந்த மொழியில் தொடர்ந்து பூத்து மணம் வீசிக் கொண்டிருக்க புலம்பெயர் தமிழர்கள் தம் கடமையினைத் தொடர்வாராக.

நன்றி: பொங்குதமிழ் - 30 ஜூன் 2018

In other Languages: French, English

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்