படைப்பாளிகளும் சாதியும்: சில கேள்விகள்

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் உயிரோட்டமான தலைமையாயிருந்த பெரியார், வன்னிய குல ஷத்திரியர், தேவேந்திர குல வேளாளர், நாடார் இனமக்கள் போன்றோர் நடத்திய மாநாடுகளில் பங்கேற்றார். இம்மாநாடுகளில் உரையாற்றுகிறபோது, தாழ்வின் பள்ளத்தில் நிற்கிற அவர்கள் தங்கள் பெயர்களை மட்டும் சிகரத்தில் கொண்டு எதை அடைய முயல்கிறார்கள் என விமர்சித்தார்.


பெரியார் வழியில் திமுகவின் தொடக்க காலத்தில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலைமை தாங்கின.

60களில் முழுமையாகத் தேர்தல் நீரோட்டத்தில் கலப்பது எனத் திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்தபின், முன்னர் அவர்கள் கைக்கொண்ட பெரியார் கொள்கைகளின் உறுதிப்பாட்டைக் கை நழுவவிடலாயினர். திராவிட தேசியம் இந்திய தேசியமானது. கடவுள் இல்லை என்ற முழக்கம் 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என உருமாறியது. "பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்" என்பன போன்ற நழுவல் வாதங்கள் நடைமுறையாயின. இத்தகைய நழுவல்களின் தொடர்ச்சியாகச் சாதிச் சங்கங்கள் ஏற்பாடுசெய்த மாநாடுகளில் பங்கேற்பதினூடாகத் தேர்தலை நோக்கிப் பயணப்பட்டனர்.

சென்னை திருமலை சாலையில் காமராசர் வாழ்ந்த இல்லம், 1979இல் நாட்டுடைமையாக்கப்பட்டபோது சில சான்றாதாரங்கள் கிடைத்தன. அதிலொன்று காமராசர் தன் கைப்பட எழுதியிருந்த 'ஒரு குயர் ரூல்டு' நோட்டு. அதில் காமராசர் வழக்கமாய்ப் போட்டியிடும் விருதுநகர்த் தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் சாதிவாரியாக இருப்பவர்களது எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது. சாதிக்கு அப்பாற்பட்டுத் தேர்தல் இல்லையென்ற உண்மைக்கு அவருடைய கையெழுத்து சாட்சியமாகியது.

திமுக வெற்றிகண்டு ஆட்சியைக் கைப்பற்றிய 1967 தேர்தலின்போது, விருதுநகர் தொகுதியில் காமராசரை எதிர்த்து, மாணவர் தலைவர் சீனிவாசனை வேட்பாளராய் நிறுத்த மாணவர்கள் முடிவுசெய்தார்கள். மதுரை வந்த திமுக தலைவர் அண்ணாவிடம், திமுக மாணவர்கள் எதற்காகச் சீனிவாசனை நிறுத்த வேண்டுமென விரும்புகிறார்கள் என விவரித்தபோது அண்ணா சொன்னார்: "தேர்தலில் நிற்பது வேறு, வெற்றி பெறுவது வேறு". அவரது பதிலில் சாதி பற்றிய குறிப்பு இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு இடையிலான அனைத்து நகர்வுகளுக்கும் தேர்தல் இலக்கு. அரசின் ஒவ்வொரு திட்டமும் அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு அசைவும் தேர்தல் திசையை நோக்கியே அமைகின்றன. தேர்தல் வெற்றியைச் சாதிக்கும் வாக்கு வங்கிகளாய்ச் சாதிகள் இன்றைய இந்தியாவில் செயல்படுகின்றன.

1950, 60களில் கலை, இலக்கியவாதிகளிடம் சாதி எதிர்ப்புணர்வு மேலோங்கியிருந்தது. சாதிய எதிர்ப்பும் தமிழுணர்வும் மேலோங்கிய கலை, இலக்கியவாதிகள் பெருவாரியான நடமாட்டப் பின்புலத்தில் திக, திமுக போன்ற இயக்கங்கள் இருந்தன.

மக்களைப் பிளந்து கூறுபோட்டுக்கொண்டிருக்கும் சாதி, மதத் தன்னிலைகளுடன் இப்போது புதிதாக வந்து இணைந்திருப்பது கட்சி.

கலைஞர் புகழ் பாடுதல் மட்டுமே ஒரே இலட்சியமாக ஆகிவிட்ட கட்சிக்கு, தமது இலக்கியப் பங்களிப்பினால் ஏற்கனவே சேர்த்துக்கொண்ட பெயரைத் தாரைவார்த்ததில் முன்னோடிகளான கவிஞர்கள் அப்துல் ரகுமான், வாலி, வைரமுத்து, மு. மேத்தா என்ற வரிசையில் கவிஞர் கனிமொழி, தமிழச்சி, சல்மா எனப் புதியவர்கள் வந்துவிட்டனர். இலக்கியவாதி என்ற பழைய முகத்தைத் தீனியாகக் கொடுத்து அரசியல்வாதி என்ற புது அடையாளத்தை ஒட்டவைத்துக்கொண்டதில் இன்னும் கைகளுக்குள் வந்து சேராத மக்கள் சனநாயகத்தையா அல்லது இன்றைய நாள்வரை நடைமுறையிலுள்ள முதலாளித்துவ சனநாயகத்தையா, எந்த சனநாயகத்தை நோக்கிய பயணம் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

அண்மையில் 'தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்' என்ற கலை, இலக்கிய அமைப்பு, பாமக அரசியல் கட்சியின் பின்புலத்தோடு தொடங்கப்பட்டுள்ளது.


தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பழமலய், அமைப்பின் பொதுச்செயலாளர் கவிஞர் செயபாஸ்கரன், இணைப் பொதுச்செயலாளர் ஓவியர் வீர சந்தானம், இணைச் செயலாளர் கவிஞர் பிரம்மராஜன், அமைப்பின் துணைச் செயலாளர் கவிஞர் பச்சியப்பன். இந்தப் பேரியக்கத்தின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ். நிகழ்வில் வாழ்த்திப் பேசிய மற்றவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சாதிவட்டத்துள் வராதவர்கள்.

எந்தவொரு குறிப்பிட்ட சாதியிலும் கலைஞர்கள் உருவாகவே செய்வார்கள். அந்தச் சாதியின் காரணமாக அவர்கள் படைப்பாளிகளாய் உருவாகவில்லை. தமக்குள்ளிருக்கும் கலைத் துடிப்புகளை வெளிப்படுத்த முனைவதின் காரணத்தால், ஒவ்வொருவரும் உச்சத்தைத் தொடுவர். ஆனால், கலைஞர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியாக ஒன்றிணைவது ஆபத்தானது. கவிதையின் 'பிரம்ம ராட்ஸஸ்' என்று சிலரால் வருணிக்கப்படுகிற கவிஞர் பிரம்மராஜன் இதில் ஐக்கியமாகியிருக்கிறார்.

"ஒரு குறிப்பிட்ட இன மக்களின் பண்புகளை, கலைகளைப் பற்றி, அந்த இனத்துக்கு வெளியே வாழும் இலக்கியக் கலாச்சாரவாதியால் முழுமையாய் இனம் காணவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது" என்று அதன் தொடக்க நிகழ்வில் உரையாற்றினார். அவரது பேச்சின் வாசகம், இனம் என்று உச்சரிப்பிலிருந்தாலும், அர்த்தத்தில் அது சாதிதான். அன்று அவருடைய உரை முழுதும் சாதிக்குள் நின்று, சாதிக்குள் வாழ்வது பற்றிய தேடலாக இருந்தது.

"எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்போர் ஏதொன்றையும் சரியாக அடையாளம் காண்பவர்கள். மக்களுக்குச் சரியான தலைவரை அடையாளம் காட்டுவதும் சரியற்ற தலைவர்களை, அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவதும் படைப்பாளிகள் வேலை. இங்கே அமர்ந்திருக்கிற மருத்துவரும் ஒரு படைப்பாளிதான்" என்று பேசியபோது, கவிஞர் பழமலயை வெளிப்படையாகக் காண முடிந்தது.

தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் சாதிய அடையாளத்துடன் இயங்குகின்றன. சாதியப் பிறவிகள் அவை. அந்த முகத்தை மறைத்துக்கொள்ள ஒவ்வொரு கட்சியும் முயல்வதுபோல, பாமகவும் "ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், மூன்றாவது மொழிப் போர், தமிழ்ப் பண்பாடு, கற்புக் கோட்பாடுகள், புகைபிடித்தல், குடி முதலானவைகளுக்கு எதிரான ஒழுக்க போதனை, உயர்கல்விக் குளறுபடிகள் எதிர்ப்பு" எனப் பொது அடையாள முகத்தை முன்னுக்கு எடுத்துவருகிறது. சாதி, அரசியல் பின்புலத்தில் மக்களுடைய நலன்களுக்கான பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் பொது அடையாளத்துடன் இணைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியில் பாமக தனக்கான சாதிய, கலை, இலக்கிய அமைப்பை நிறுவிக்கொள்ளும் வெளிப்பாடு தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்.

அது போலவே மதிமுக இலக்கிய அணியினருக்கு கி. ராஜநாராயணன் என்ற இலக்கிய மேதைமையை மட்டுமே முன்னிறுத்த முடிகிறது. வேறு மேதைகளைக் கொண்டாட அவர்கள் அறியார்.

சாதி, மதம், கட்சி சார்ந்த தன்னிலைகளில் நின்று நீதி பேச முடியாதென்பது அண்மைக் காலத்தில் நிரூபணமாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆற்றிய முதல் உரையில் "சில சமயங்களில் நமது சார்புகள் நமது கொள்கைகளைச் சார்ந்து உள்ளனவே தவிர, உண்மை நிலவரத்தை அல்ல" என்று யதார்த்த நிலைமைகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் சாத்தியமானதே என்று கட்சி நியாயத்தை ஆதரிக்கிறார்.

கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் இடதுசாரி அரசியலில் இயங்கினார். 1996இல் இடது சனநாயக முன்னணியின் ஆதரவில் சட்டமன்ற உறுப்பினர். கேரள மாநில நூலகக் குழுத் தலைவர். போராளி சி. கே. ஜானு தலைமையில், தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிக் குடிசைகள் போட்டு, வயநாடு பழங்குடி இன மக்கள் இரண்டு மாதங்கள் போராடியபோது, இடதுசாரிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. கட்சியிலிருந்து செயல்பட்ட கடம்மனிட்ட ராமகிருஷ்ணனும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அதே போராட்டக் களத்தில் போராடும் மக்களுக்காக முன்னர் பாடிய அவரது பாடல்,

"நீங்கள் யோசியுங்கள்

நீங்கள் எப்படி ஆனீர்களென்று."

முழங்கிக்கொண்டிருந்தது.

இதே மௌனம்தான் கேரளத்துடனான முல்லைப் பெரியாறு தண்ணீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கும் கேரள ஆட்சியாளர்களின் போக்கை இவர்கள் விமர்சிக்க முன்வரவில்லை. கேரளத்தில் அதிகாரத்திலிருக்கும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் குறை கூறினால் நடுச்செங்கல் உருவுகிற காரியமாகிவிடுமே என்று கட்சித் தன்னிலையைத் தாண்டிச் சிந்திக்காதபோது, ஐந்து மாவட்ட மக்களது வாழ்வாதாரம் பறிபோவது பற்றிக் கவலைகொள்ளாத துரோகம் உறுத்தவில்லை. அதே நேரத்தில் அமெரிக்காவின் நேரடிப் பின்புலத்தோடு இலங்கையில் ஏவிவிடப்படும் இனப்படுகொலைகளைக் கண்டுகொள்ளவும் மறுக்கின்றனர். ஈழ விடுதலைப் போராட்டத்தில் மார்க்சிய-லெனினியத்துக்கு முரணான முடிவுகள் மேற்கொண்டுள்ளனர் என்பதிலும் இவர்களின் இயக்கத் தன்னிலை வெளிப்படுகிறது.

2


சாதி, மதம், கட்சிகளில் குழு நியாயம் மட்டுமே உண்டு. இதில் ஏதாவது ஒரு வட்டத்துக்குள் நின்று அது தாண்டி வராத சிந்தனைப் போக்குக்கு ஆளாகும் கலை, இலக்கியக்காரன், நேர்படப் பேசும் துணிவை இழந்துவிடுகிறான்.

வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் "இலக்கியவாதிகள்தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்ல வேண்டும்" என்பார். விஞ்ஞானிகளிடம் எப்படிச் செய்வது என்பது ஒன்றே நடைமுறை. எதற்காகச் செய்வது, ஏன் செய்வது என்ற கேள்விகள் அவர்களிடம் எழுவதில்லை. சமூகத்துக்குள் வாழ்ந்து, சமூகத்துக்காக இயங்கும் இலக்கியவாதிகளிடம் மட்டுமே எழ முடிந்த கேள்விகள் இவை. இந்தச் சமூகத்துக்குள்ளிருந்து தனக்கான விசயங்களை வளர்த்தெடுப்பதால் அவர்களுக்கு இக்கேள்விகள் எழுவது நியாயமானதே. அதன் காரணமாகவே இலக்கியவாதி சமூகத்தின் மனச்சாட்சி, சமூக விஞ்ஞானி.

தங்கள் சிந்திப்பினைப் படைப்பாக்கமாய் வெளிப்படுத்தும்போது சுதந்திரம் கோரும் இயல்புடைய இலக்கியவாதிகள் இந்தச் சுதந்திரத்தினைச் சகலத் தளங்களுக்கும் எடுத்துச் சொல்லும் சுபாவம் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனைவருக்கும் யோசனை சொல்ல முடியும். சமகாலப் படைப்பாளிகளில் பலரும் தாங்கள் சமூக விஞ்ஞானிகளும் இல்லை; சமூகத்தின் மனச்சாட்சியும் இல்லை என்று பயணமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பு: பிரம்மராஜன் பொறுப்பேற்ற மூன்றாம் நாளே படைப்பாளிகள் பேரியக்கத்திலிருந்து விலகிவிட்டார்.

நன்றி: காலச்சுவடு - ஆகஸ்ட் 2008

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை