சார்பற்ற எழுத்து என ஏதுமில்லை

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - தீக்கதிர் 18 ஜூலை 2017

சோவியத் புரட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தின் காத்திரமான எழுத்தாளர், சமூக மாற்றத்திற்கான தீவிர செயற்பாட்டாளர், கரிசல் மண் மக்களின் வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சிறுகதைப் படைப்பாளி பா.செயப்பிரகாசம் அவர்களை சந்தித்து உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்.

உலக அரசியலையே தலை கீழாகப் புரட்டிப் போட்டது ரஷ்யப் புரட்சி. இது பற்றி நீங்கள் எந்த வயதில் அறிந்து கொண்டீர்கள். அப்போது உங்களின் உணர்வு என்னவாக இருந்தது?

சோவியத் புரட்சி நிகழ்கிற காலத்தில் நான் பிறக்கவேயில்லை. 20-30 ஆண்டுகள் கழித்துதான் நான் பிறந்தேன். பள்ளிச் சான்றிதழ் படி எனது பிறந்த தேதி 2-6-1941. கல்லூரிக்காலத்தில் நான் திமுக சார்பாளனாக இருந்தேன். 1965 காலகட்டத்தில் இந்தித்திணிப்புக்கு எதிராகப் பேரலை எழுந்தது. இதன் காரணமாக1967ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஈடாகப் பதவிகளையும் ஆதாயங்களையும் எதிர்பார்த்தவர்கள் திமுக உறுப்பினர்களாகி விட்டார்கள். சிலர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் சிலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். ஆனால், எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாததால் விலகியே இருந்தேன்.

ஆட்சிக்குவந்த சிறிதுகாலத்திலேயே அவர்களின் அரசியலும் கலாச்சாரமும் அம்பலப்பட்டுப்போனது.அந்த சமயத்தில் 1971க்குப் பிறகு சேரன் தமிழ்நாடன் என்பவர் சிறந்த கவிஞர். அவர்தான் எனக்கு முதன் முதலில் சோவியத் புரட்சிபற்றியும் மார்க்சியம் பற்றியும் சொன்னவர்.1974ல் எனக்குத் திருமணம் நடந்தது. மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவத்சலம் (ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனின் சகோதரர்) குடும்பத்தில் பெண்ணெடுத்தோம். மைத்துனரான அவர்தான் எனக்கு மேலும் தெளிவாக மார்க்சியம் பற்றியும் சோவியத் புரட்சி பற்றியும் அங்குள்ள மேம்பட்ட சமூக வாழ்க்கை நிலை பற்றியும் கூறினார். அதன் பிறகு இதுபற்றி நிறையவாசித்தேன். அதனுடைய தாக்கம் திமுக அரசியலிலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் என்னை அப்புறப்படுத்தியது. அது செய்த முதல் வேலை இதுதான்.

சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான தங்களுக்கு சோவியத் இலக்கியங்கள் எவ்வகையில் ஈர்ப்பைத்தந்தன?

1960களில் நூலகம் சென்று வாசிக்கும்போது தமிழ் நூல்களை எல்லாம் முடித்து விட்டேன். இதனால் மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். டால்ஸ்டாயின் அன்னாகரீனா, கார்க்கியின் தாய், யான்பெற்ற பயிற்சிகள் போன்றவற்றை வாசித்தேன். இந்தப் படைப்புகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் இவை ரஷ்யப் புரட்சி பற்றி பேசுவதாக அப்போது எனக்குத் தெரியவில்லை.

தாய் போன்ற படைப்புகள் சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மட்டுமே என்னுள் எழுந்தது. மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்நிலைகளைப் பற்றியும் நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணம் இதனால் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் பசி பற்றியே பேசுவதை நீங்கள் பார்க்கலாம். அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சோவியத் நூல்களை வாங்கி அதிகப்படியாக விற்பனை செய்தோம். மதுரையில் கல்லூரியில் படித்தபோது நானும் கவிஞர் இன்குலாப்பும் ஒருசாலை மாணாக்கர்கள்.

அவர் இளங்கலை முடித்ததும் சென்னை வந்து விட்டார். நான் மதுரையிலேயே படிப்பைத் தொடர்ந்தேன். அப்போது கவிஞர் இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழில் கவிதைகள் எழுதியபோதுதான் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது இன்குலாப் ஆனார். இதே இதழில் கவிதை எழுதிய பா.செயப்பிரகாசம் சூரிய தீபன் ஆனார். இன்குலாப் வி.பி.சிந்தனால் ஈர்க்கப்பட்டு மார்க்சியரானார். நான் சென்னை வந்த பிறகு மே தின ஊர்வலங்களில் பங்கேற்று மார்க்சிய அரசியலுக்கு வந்தேன். சோவியத் இலக்கியங்களும் நூல்களும் தான் எனக்கு மார்க்சிய வெளிச்சம் தந்தது.

இலக்கியப்படைப்புகளில் யதார்த்தவாதம் சோஷலிசயதார்த்த வாதம் என சொல்லப்படுகிறது. சோஷலிச யதார்த்தவாதப் படைப்புகள் தான் சமூக மாற்றத்திற்கு உதவி செய்யுமா?

சோஷலிச யதார்த்த வாதம் என்பதே சோஷலிசக் கட்டமைப்பு உருவான பிறகு சொல்லப்பட்டது. சோஷலிசப்பார்வையால் உருவாக்கப்பட்டதல்ல யதார்த்தவாதம் அது நமக்குள்ளேயே இருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் போது சோஷலிசக் கருத்துக்கள் உள்ளே சென்றால் புது வெளிச்சம் கிடைக்கிறது. ‘‘வறுமையில் வாடும் ஒரு எழுத்தாளருக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். இவருக்கு விழா எடுப்பதன் மூலம் பேர்வாங்குவது அவர்களின் நோக்கம். வறுமையைப் போக்குவதல்ல. அந்த எழுத்தாளரின் பைஜாமா கிழிந்திருக்கும். அதை மறைப்பதற்கு மேல் சட்டையை இழுத்து விட்டுக் கொண்டே இருப்பார். அந்த நிலையில் உள்ள எழுத்தாளருக்கு தங்கப்பேனா பரிசளிப்பார்கள். அந்தப் பேனா அவருக்குப் பல் குத்தவாவது உதவுமா’’ என்று கதையை நிறைவு செய்திருப்பார் அப்பாஸ். இது யதார்த்தவாதம். இதிலிருந்து சமூகப் போலிமையை புரிந்து கொள்வது வாசகனிடம் விடப்படுகிறது.

கலை இலக்கியங்கள் வழி பிரச்சனைக்குத் தீர்வு சொல்வது சமூக மாற்றத்திற்கான பிரச்சாரம் செய்வது என்று குறை கூறப்படுவது பற்றி...?

இதற்கு லெனின் சொன்ன வாசகங்களே பதிலாக இருக்கும்.‘‘பிரச்சாரமற்ற எழுத்து என்றும் சார்புத் தன்மையற்ற எழுத்து என்றும் பேசுகிறார்கள். சவம் மட்டும்தான் சார்பற்றதாக இருக்கும். எல்லோரும் ஒரு சார்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். சார்புத்தன்மையற்ற எழுத்தாளர்கள் வீழ்க! இலக்கிய அதிமனிதர்கள் (சூப்பர்மேன்) ஒழிக!’’ என்றும் லெனின் கூறினார். எனவே சார்புத்தன்மை அற்ற எழுத்து என ஏதொன்றும் இல்லை; சார்புத் தன்மை அற்று எழுதினேன் என்பது போலித்தனம். எல்லாஎழுத்தும், ஒருவன் தனக்குள்ளும் தன்னைத் தாண்டிய இச்சமூகத்திற்குள்ளும் என்னவாக இருக்கிறானோ, எவ்வாறு சிந்திப்பானோ அவ்வாறே வெளிப்படுவான்.

அவன் உள்ளில் ஒருவனாகவும், வெளியில் இன்னொருவனாகவும் வெளிப்படமுடியாது. அவ்வாறு வெளிப்படின் அதுவும் போலிமையே. சொந்தக் காரியம் ஒன்றாகவும், பொதுக் காரியம் ஒன்றாகவும் இரட்டைக் கவனமாக ஒருவன் இயங்குவது சார்புத் தன்மையுடையதே. வரலாற்றின் பொது லட்சியம், முன்னகர்வு மக்கள் திரளினால் சாத்தியப்படுவது. அரிய சாதனையாளர்கள் அப்பொது லட்சியத்தின் திரட்சியாக, அந்த மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாக மாறுகிறார்கள். மக்கள் திரளின் பாத்திரத்தை மறுதலிக்கும் அதிமனிதக் கோட்பாடு ஆபத்தானது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்