தலித் இலக்கியம் மானுட விடுதலைக்கான கலகம்

காலச்சுவடு இதழ் 101இல் இடம்பெற்ற 'தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா' கட்டுரைக்கான எதிர்வினை.

கலை, இலக்கியங்களுக்கான அழகியல், கலைத் தரம், கலை நேர்த்தி, பொது மொழி போன்ற மதிப்பீடுகள் கல்வி வாய்க்கப்பெற்ற மேன்மக்களால் வளர்க்கப்பட்டவை. அனைத்துக் கலை இலக்கியங்களுக்கும் பொதுவான மதிப்பீடு இருக்க முடியாது. எல்லோரும் ஏற்றுக்கொள்கிற அழகியல் கோட்பாடு என எதுவும் இல்லை. அழகியலில் வகைமைகள் உண்டேயன்றி, வரையறுக்கப்பட்ட அழகியல் என்றெல்லாம் ஒன்றில்லை. ஒவ்வொரு கருத்தியலுக்கும் பொருத்தமான அழகியல் உண்டு. ஆனால், தமிழ்ச் சமூகத்துக்குள் ஆணையிலிருக்கும் வல்லாண்மைக் கருத்துகள், இலக்கிய வகைகள் அனைத்துக்கும் பொதுவான அழகியல் என வைப்பதன் மூலம் தமக்கான நிலை நிறுத்தலை உறுதிசெய்வதில் முனைப்புக் கொள்கின்றன. அடிமட்டங்களிலிருந்து கிளம்பிவரும் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், அடிநிலை வர்க்கத்தினர் போன்றோருக்கான கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்குத் தனித்த அழகியல்தான் உண்டு. பொது மொழி, பொது மதிப்பீடுகளுக்குள் அடங்காதன அவை.

இமையம் இந்தப் பொது மதிப்பீடுகளுக்குள்ளிருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். "ஒரு படைப்பு எந்த அளவுக்கு விவாதத்தையும் உரையாடலையும் சமூகத்தில் நிகழ்த்துகிறதோ, அதை வைத்துத்தான் ஒரு படைப்பின் தரம், மதிப்பு நிர்ணயமாகிறது" என்று அளவுகோலை ஏந்திவருகிறார்.

விவாதமும் உரையாடலும் எது சார்ந்து நிகழுகிறது? குழு சார்ந்து, சாதி சார்ந்து, வர்க்க நிலை சார்ந்து, வட்டாரம் சார்ந்து, தனி மனிதர்களின் உறவு சார்ந்து, விருப்பு, வெறுப்பு அடிப்படையில் நிகழுகிறது. ஒரு காலத்தில் நிகழ்ந்த உரையாடல், மற்றொரு காலத்தில் நிகழ்த்தப்படாமல் போகிறது. ஏற்கனவே நிகழ்த்தப்படாத ஒன்று இப்போது நிகழ்த்தப்படுகிறது. (உ.ம்: புதுமைப்பித்தன்)

"இலக்கியப் படைப்புக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லா இலக்கண அழகியலையும் கொண்டு வாழ்வின் சாரம் சார்ந்து எழுதப்பட்ட படைப்பு இலக்கியமாவதாக" என்று மேன்மக்கள் வகுத்த பொது மதிப்பீடுகளுக்குள் போய் நிற்கிறார் இமையம்.

இலக்கியம் எனக் கட்டமைக்கப்பட்ட பொது ஒழுங்குக்கு அப்பால் அடங்கித் திமிறி மேலெழும்போது, எல்லைகளற்ற வெளியைக்கோருகிற போது, வகைப்பாடு என்ற அளவில்கூட அங்கீகாரம் பெறாமல் உதாசீனம் செய்யப்படுகிறது. உதாசீனம் என்பது ஒரு தினுசான அடக்குமுறை. பெண் எழுத்து தொடங்கி, தலித் எழுத்துவரையான பல வகைப்பாடுள்ள எழுத்தின் மீதான தணிக்கை முறை இவ்வாறு பலமுறைகளில் செயல்படுகிறது.

இந்தியச் சமூகமானாலும் தமிழ்ச் சமூகமானாலும் சாதிகளின் சமூகமே. சாதி அடிப்படையில் உருவாகித் தொடர்ச்சியான விதைகளை நட்டு, படர்ந்த நச்சு மரமே இந்து மதச் சமூகம்.

அகண்ட பாரதத்தின் இந்துச் சமூகத்தில் இதுவரை படைக்கப்பட்ட இலக்கியங்கள் அனைத்தும் சாதிய இலக்கியங்கள்தாம். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள், காவியங்கள் எல்லாமும் சாதியம் போற்றி, அந்த நாயகர்களை மேன் மக்கள் எனத் தருக்கித் திரிபவையே.

"இந்திய-தமிழ் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட எல்லாப் படைப்புகளின் மொத்த நோக்கமும் சாதியையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான்" என்று இமையம் சரியாகவே கணிக்கிறார்.

அவர் காட்டுகிற சித்தர்கள் முதல் வள்ளலார் வரை சாதி மறுப்பாளர்களாக மட்டும் இருந்தார்கள். முதன் முதலாகச் சாதி ஒழிப்பை ஒரு கொள்கையாய் முன்வைத்தார் பெரியார்.

தலித்தியம் என்பது சாதி மறுப்பல்ல; சாதி ஒழிப்பு. சாதிகளை முற்றாய் ஒழித்துத் துடைப்பது. சாதியற்ற ஒரு சமுதாய உருவாக்கத்துக்குக் கால் ஊன்றுவது.

"ஒரு பாட்டாளி, தன்னை விடுதலை செய்துகொள்கிறபோது, இயல்பாக முதலாளி வர்க்கத்தையும் விடுதலை செய்கிறான். தானொரு வர்க்கம் என்பதை இல்லாமல் செய்கிறபோது, முதலாளி என்றொரு வர்க்கத்தையும் இல்லாமல் ஆக்குகிறான்" என்பது மார்க்சியம். அது மானுட விடுதலையாகிவிடுகிறது.

அது போலவே, தலித் என்ற ஒரு சாதி தன்னை இல்லாமல் செய்து கொள்கிறபோது, தனக்கு மேலே இருக்கிற எல்லாச் சாதிகளையும் இல்லாமல் செய்துவிடுகிறது. தன்னை விடுதலைசெய்வதன் மூலம் எல்லாச் சாதிகளையும் விடுதலைசெய்கிறது.

தலித் இலக்கியம் விடுதலைக்கான இலக்கியம். விடுதலை என்ற இலக்கிலிருந்து அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. சிறப்பு மலர் வெளியிடுதல், தலித் படைப்புகளின் தொகுப்பை மட்டுமே கொண்டுவருதல் என்பதெல்லாம் ஒடுக்கப்பட்ட அடிமைகளை விடுதலை செய்தல் என்ற வேரிலிருந்து உண்டாகவில்லையெனில் அதன் நோக்கம் வேறாக இருக்குமெனில் அப்போது, அது தலித்துகளை எழுச்சிக்கு நடத்திப்போதல் என்ற மாபெரும் சாதனைக்குப் பதில், உயர் சாதியினரை மகிழச் செய்வதாக மாறிவிடும்.

தமிழ்ச் சமூகத்தில் வேளாண்மைச் சமுதாயமும் அதனடிப்படையிலான அரசு உருவாக்கமும் வந்தபோது, அதனுள் கடுகினும் சிறிதாய் உருவாகி வந்த சாதி பற்றிய குறிப்புகள், பழம் இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சாதியை நிலைப்படுத்த எழுந்த போற்றுதலும் இல்லை, சாதி மறுப்பு உருவாகும் அவசியமும் இல்லை. ஒரு சமுதாய இயங்குதல் முழுமையையும் பிடிக்குள் கொண்டுவருவதாகச் சாதி வடிவெடுத்தபோது சித்தர்கள் சாதி மறுப்பாளர்களாய், சாதி எதிர்ப்பாளர்களாய் உருவெடுத்தனர்.

"பழந்தமிழ் இலக்கியங்களும் தலித் இலக்கியங்களும் சாதி இருப்பதைச் சொல்கின்றன. சாதி ஒழிய வேண்டுமென்று சொல்வதில்லை" என இமையம் இரண்டினையும் சமப்படுத்துவதன் மூலம் காலத்தையும் கால வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாத கணக்கில் கொள்ளாத வரலாற்றுப் பார்வையற்றிருக்கிறார் எனக் காட்டுகிறது.

சாதி ஒழிப்பு தலித்துகளின் மூலநாடி. தலித் ஒரு சாதியல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு இனம். அதற்கும் கீழே ஒடுக்கப்பட்ட வேறொரு இனம் இல்லை. ஒடுக்கப்பட்டோரின் விடுதலையைப் பேசுவது சாதி இலக்கியமல்ல. அது மக்கள் இலக்கியம். தலித் விடுதலை எனும் தத்துவம் சார்ந்த ஒரு இலக்கியம் இது. எந்தத் தத்துவமும் கலைஞனுக்குத் தேவையில்லை. மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்றவை உலக நோக்குகள், தத்துவங்கள்.

எல்லாத் தத்துவ நோக்கையும் ஒரே கோட்டில் வைத்துக் காண்கிற மனித சமூகத்துக்கு முன்னகர்வு தேவையற்றது எனப் பார்க்கும் முதலாளிய இடத்துக்கு இமையம் அவசர அவசரமாக ஓடுகிறார். அவருக்குள் தன்னிச்சையாக, வளர்ச்சிக்கு எதிரான தத்துவம் அமர்ந்துள்ளது.

சமகாலக் கலைஞன் ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்து விசயங்களைப்பகுத்துக் காண வேண்டிய காலகட்டத்தில் தத்துவப் புரிதலில்லாமல் படைப்பை உருவாக்க இயலாது.

"மார்க்சியமாகட்டும், பெண்ணியமாகட்டும், தலித்தியமாகட்டும், எல்லாமே எழுத்தாளனுக்குத் தடைகள்" என்று காணுகிறார் இமையம். புத்தியில் படிந்துள்ள அபிப்பிராய பேதங்களை, கோட்பாடுகளை, கொள்கைகளைவிட்டு எழுத்தாளன் விலகிவர வேண்டுமென்கிறார். தத்துவங்களை உள்வாங்காமலே அவற்றிலிருந்து விலகி வர வேண்டுமென்கிற 'அறிவுத் தீண்டாமை' வெளிப்படுகிறது.

தத்துவப் புரிதலினூடாகப் படைப்பில் ஈடுபடுகிற கலைஞன், அதனின்று விலகிப் படைப்பாக்க மனநிலை கொள்வது எவ்வாறு?

"எழுத்தாளன் கொள்கையைத் தோளில் சுமந்துகொண்டு திரிந்தால் சுதந்திரமாக எழுத முடியாது. அவன் கொள்கையைக் குதிரையாக்கி வாழ்க்கையை விசாலமாகச் சுற்றிப்பார்த்து எழுத வேண்டும்" எனத்தத்துவத் தடை(?) மீறிப் படைப்பாக்கும் வித்தையைத் தொ. மு. சி. ரகுநாதன் விவரிக்கிறார்.

தலித் இலக்கியத்தின் தனித்தன்மை தன் இழிவுகளைப் பேசுவது, இழிவுகளைப் பேசி சமநீதியைப் பறிப்பது தான். இழிவுகளைச் சொல்லாமல், அவமானத்தைச் சித்தரிக்காமல் ஒளிப்பது, மறைப்பது எனில் வேறு அவமானம் என்ன இருக்க முடியும்? ஒரு தலித், தனது வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புதைத்துவிட்டு, புதைகுழி மேல் புனைவாய் ஒரு செடி நட்டு பூ மலர்த்த வேண்டுமென எதிர்பார்த்தல் நல்ல கற்பனை!

தன் வரலாறு என்ற இலக்கிய வகை பற்றி முதலில் புரிதல் வேண்டும். அது பற்றிய புரிதலில்தான் இதற்கான பதில் அடங்கியுள்ளது. ஒரு வாழ்க்கை வரலாறு அல்லது தன் வரலாறு ஒரு மனிதரின் உண்மையான வரலாற்றுக் கதையாக இருக்கிறது. அது தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தினது வரலாற்றையும் சேர்த்துத் தருகிறது. தனக்குத்தானே உண்மையாக இருத்தல், ஏதொன்றையும் ஒளிவு, மறைவற்றுத் தருதல் என்னும் கலை அது. அது இதயத்தின் மொழி, உண்மை. ஏற்கனவே தயாரித்துவைக்கப்பட்டிராத சொற்களில் வெளிப்படுகிறது. தயாரித்து வைக்கப்பட்ட சொற்களில் வெளிப்படுகிறபோது அது புனைகதை யதார்த்தமும் புனைவும் மாற்றி மாற்றிச் சுற்றி கலை நோக்கம் பெறுகையில், அது நவீனம் அல்லது புனைகதையாகி விடும்.

ஒரு புனைகதை போலல்லாமல் முழுமையான நேர்மையுடன் வழங்கப்படுகிற வரலாறு. ஒரு தனி மனிதரின் அல்லது சமூகத்தின் இழிவுகள், அவமானங்கள் எல்லாவற்றையும் இடுக்கிக் கொண்டு கந்தலும் கதக்கலோடும் வரும்.

தலித்தின் அழகியல் தன் இழிவுகளை, அவமானங்களை, எடுத்துப் பேசுகிற கலக அழகியல். அது நாசூக்கான, பதவிசான, உரத்தக் குரல் எழுப்பாத மேன்மக்கள் மொழியில் பேசாது.

அடிமைப்பட்ட இனம், தன் இழிவிலிருந்துதான் தன் எழுச்சியை, எல்லாவற்றையும் மீட்டெடுக்கும். "இலக்-இயப்படைப்பு என்பது கலாச்சாரச் செயல்பாடு. அதனுடைய நோக்கம் சமூக மேம்பாடு" என்று இமையமும் அவர் போன்ற மற்றோரும் கருதுவாரேயானால், அது இந்த இழிவிலிருந்துதான் தொடங்க வேண்டும். அது மாற்றியமைத் தலின் உச்சம் நோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இமையம் வரையறுக்கும் "எல்லா இலக்கண அழகியலையும் கொண்டு" அது வெளிப்படாது. தனக்கென ஒரு அழகியலைக் கொண்டு அது தன்னை வளர்த்துக்கொள்ளும்.

தலித் அழகியல் தனி. அது தன்னைத்தானே நிறுவிக்கொள்ளும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இலக்கியத் தரத்திலிருந்து தன்னை உருவிக்கொண்டு தனக்கான புது அம்சங்களை உண்டாக்கி விரியும்.
மெல்லிய
புலால் நாற்றம் வீசுகிற நானும்
தசை முற்றாகப் பிய்த்தெடுத்த
எலும்புகள் நொறுங்கும்
என் வீடும்,
கொட்டாங்கச்சியில் தோலைக் கட்டி
பறையலி வழங்கும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியிலிருப்பதாய்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக
- சுகிர்தராணி
ஏற்கனவே இருப்பதை மாற்றிப் போட்டதும் தனி அழகு சேர்ந்துவிடுகிறது. இந்த அழகு, இருக்கிற ஒழுங்கைக் குலைத்துப்போடும் கருத்துக்குள்ளே அடங்கியிருக்கிறது. இந்த மாற்று அழகியல், மாற்றுக் கருத்து, மாற்று அரசியலைச் சுட்டிக்காட்டுகிறது.

எது முதலில் இருப்பதாகக் கருதப்படுகிறதோ அதைக் கடைசியாகவும் சமுதாய அடுக்கில் எது கடைசியாய் நிற்பதாக எண்ணப்படுகிறதோ அதை முதலாகவும் மாற்றிவைக்கிற புள்ளியில் தெரிக்கும் இக்கருத்துப் புரட்சிதான் அதிலுள்ள முதல் அழகியல். இக்கவிதை எழுப்புகிற தொடர் அதிர்வுகள்தான் தலித் இலக்கிய அழகியல்.

இந்த நேரத்தில் தலித்திய சிந்தனையாளர் உஞ்சை ராசனின் ஒரு கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்வது தவிர்க்க இயலாதது. "தலித்துகளால்தான் தலித் இலக்கியம் முழுமையடையும் என்றாலும், பிறப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டும் தீர்மானித்துவிடுகிற விஷயமல்ல இது. மாறாக தலித் உணர்வு கொள்கிறவர்களாலேயே தலித் இலக்கியம் படைக்க முடியும் என்பதே உண்மை.

தலித் உணர்வு என்பது அரசியல் உள்ளடக்கம் கொண்ட பரிமாணங்களையுடையது. தலித் இலக்கிய வாதிகளென்போர் தலித் விடுதலைக்காக, தலித் இயக்கங்களுடனும் தலித் விடுதலைப் போராட்டங்களிலும் ஏதாவதொரு வகையில் பங்கு கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணமாக இருக்கிறது. அவ்வாறில்லாமல் எங்கோ, எப்படியோ இருந்துகொண்டு எழுத்தாற்றலை வெளிப்படுத்துவதான போக்கு எந்த மக்களுக்காகப் படைக்கப்படுகிறதோ அந்த மக்களாலேயே புறந்தள்ளப்படும்.

நன்றி: காலச்சுவடு - ஜூன் 2008

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்