பா.செயப்பிரகாசத்தின் `புயலுள்ள நதி` சிறுகதை தொகுப்பு


பா.செயப்பிரகாசத்தின் `புயலுள்ள நதி` மிக எதார்த்தமான பின்ணனியில் சிறு குடும்பங்களில் உரசல்களை முன்வைக்கும் சிறுகதைத் தொகுப்பு. இவருடைய வெகு சில கரிசல் கதைகளை மட்டுமே முன்னர் படித்திருக்கிறேன். படித்த காலத்தில் பெரிதும் ஈர்க்கவில்லை. பிரச்சாரம் சற்றே கூடுதலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். முன்னர் இவர் எழுதிய கதைகளன் நகரச் சூழலில் இருந்து விடுபட்டு சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டவை.

கவிதைக்கான நடையில் எதார்த்தக் கதைகள் எழுதிப்பார்த்தவர். சமுதாயத்தில் மலர வேண்டிய புரட்சி பற்றிய கனவு, இலை நுனியின் ஈரம் போல அன்றாடம் விளிம்பில் மானத்தை தொக்க வைக்கப் போராடும் அடிமட்டத்து மக்களின் வாழ்வு என இரு எல்லைகளில் இவர் கதைகள் பயணிக்கின்றன. நான் படித்த பழைய தொகுப்பில் இவரைப் பற்றிய குறிப்பு குறைவாகவே இருந்தது. கதைகளில் ஜெயகாந்தனின் தாக்கமும் அதிகம் இருந்தது.

அதனாலேயே வாங்கி வைத்தும் பல மாதங்கள் `புயலுள்ள நதி` பக்கம் போகாமல் இருந்தேன். கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு கதையாகப் படித்து முடித்த பின்னர் புயலுள்ள நதியில் வழக்கமான எல்லையை சற்றே தாண்டியிருக்கிறார் எனத் தோன்றியது.

புயலுள்ள நதி 2000த்துக்குப் பிறகு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. மொத்தம் 11 கதைகள். முழுக்க நகர வாழ்விலேயே சுற்றி வருகின்றன.

வாழ்வின் திடமான கட்டுப்பாடுகளும் விட்டுக்கொடுக்கும் சமன்பாடுகளும்  சந்திக்கும் இடமாக நம் குடும்பங்கள் இருந்து வருகின்றன. சட்னியில் காரம் குறைவு என வாரம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பது, அதே நேரம் குழந்தைகளின் வருங்காலத்துக்காக தங்கள் வாழ்வையே தியாகம் செய்வது என பூமிக்கு அடியில் இருக்கும் கொதிக்கும் குழம்பாக இருப்பது உறவுகளுக்கிடையே இருக்கும் சிக்கல்.

உரசல்களும் உணர்வுச் சீண்டல்களும் அதீதமாகப் போகும் சமயத்தில் குடும்ப சிதைவுகள் நடக்கும். ஒற்றை மனதில் ஆரம்பித்து அது மெல்ல தன்னைச் சுற்றியுள்ள அனைவர் மனதிலும் விஷம் போல் ஒட்டிக்கொள்ளும். இதன் அடியாழங்களில் சமமில்லாத உணர்ச்சிகள், தேவை பற்றி தெளிவின்மை, மற்றவர் உணர்வுகளை புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல் என மெளன நதி ஓடிக்கொண்டேயிருக்கும். இவை வெளிப்படையாக வெடிக்கும் தருணங்கள் குடும்பத்துக்கு ஆபத்தானவை. அவை மின்சாரக் கம்பி போல்; புயலுள்ள நதி.

நகரம் சார்ந்த சிக்கல்கள் எனப் பார்க்கும்போது முதலிடத்தைப் பிடிப்பது தனிமனித எல்லைக்கோடுகள். சமூக அந்தஸ்து, சாதியப் படிநிலைகள், வயது வித்தியாசம் என எந்த பாகுபாடும் இல்லாமல் என் எல்லை இது; உன் எல்லை இது என தீர்மானமாக தங்களைச் சுற்றி வேலி போடுவது நகர மக்களின் இயல்பு. இதுவே இக்கதைகளின் முக்கியமான கரு.

`காற்றில்லாக் கூடுகள்` மிக வித்தியாசமான கதை. சின்னச் சின்ன உரசல்களுக்கு முருங்கை மரமேறும் மனைவி. எல்லோரும் காற்றுக்காக மொட்டை மாடியில் தூங்கும்போது மனைவி மட்டும் கோபத்தில் காற்றில்லாத அறையில் அடைந்து கிடக்கிறாள். பிறிதொரு சமயத்தில் கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி மொட்டை மாடியில் உட்கார்ந்துவிடுகிறாள். பனிரெண்டு வயதுப் பெண் தன்னுடன் மழையில் நனைய வரும்போதும் அவள் கோபம் தனியவில்லை; பிடிவாதம் குறையவில்லை.

இத்தொகுப்பில் நான் மிகவும் ரசித்த கதை `புயலுள்ள நதி`. நடுத்தர வாழ்வில் வாங்கப்படும் ஒவ்வொரு நுகர்பொருளும் குடும்ப உறவை எப்படி பதம் பார்க்கின்றன என இக்கதை கூறுகிறது. ரேடியோ வாங்குவதிலிருந்து கார் வாங்குவது வரை எல்லோருக்கும் எதிர்பார்ப்பு மூட்டையுடன் பல தேவைகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கப்பல் கேப்டன் போல எல்லோரையும் சமாளித்து ஓட்டும் லாவகம் அமையாத கணவன்; டிவி வாங்கிக்கொடுக்காததால் ஒரு வாரம் முழுவதும் சமைக்காமல் இருக்கும் மனைவி என தொட்டால் பிரச்சனை பற்றிக்கொள்ளும் குடும்பம். இயந்திரமயமாக்கல் தனி மனிதனை ஒரு கூண்டுக்குள் அடைப்பதோடு மட்டுமல்லாது, அதீத எதிர்பார்ப்பும், ஒப்பீட்டு முறையில் ஏக்கமும் அடைய வைக்கிறது. இது வெளிப்படையாக இக்குடும்பத்தில் தெரிகிறது.

எந்த கார் வாங்குவது என முறைத்துக்கொண்டு ஒருவழியாக ஏதோ ஒரு கார் வாங்கிய பின்னர் அதை யார் பயன்படுத்துவது எனற் சிக்கல் உருவாகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து கணவன் எடுத்துப்போனதால் மனைவிக்கு கை உடைந்தது போலாகிறது. அடுத்த ஒரு வாரம் கணவன் ஆட்டோவில் போக அவள் காரில் அலுவலகத்துக்குப் போகிறாள். அடுத்து அவன் கேட்டுக் கிடைக்காததால், கணவன் வெளியில் போவதை நிறுத்துகிறான். மனைவி ஆட்டோவில் அலுவலகத்துப் போகிறாள்.

`இரண்டு தனித்தனி குணங்களுக்கு நடுவே தானும் சடைத்துக்கொண்டு நிற்பது போல் கார் தனியாக நின்று கொண்டிருந்தது` - என கச்சிதமான வரியில் கதை முடிகிறது.

இப்படியாக பல நுகர் பொருட்களை தன்னகப்படுத்தும் ஆசை, சுய மதிப்பீடுகள், அதீத எதிர்பார்ப்புகள் என குழப்பத்தின் மத்தியில் குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தொகுப்பில் அடுத்ததாக ரசித்தது `எதையும் செய்வீர்` சிறுகதை. மிக வித்தியாசமான முறையில் கையாளப்பட்டுள்ளது. கம்பி மேல் உட்கார்ந்திருக்கும் புறா சொல்வது போல் கதை தொடங்குகிறது. அது பறந்து ஒரு தொலைக்காட்சி கேபிள் மேல் உட்கார்ந்துகொள்கிறது. கேபிள் வழியாக செல்பவை எல்லாம் தனக்கும் நடக்கக்கூடாதா என ஏங்கத் தொடங்குகிறது. கிரிக்கெட் நடக்கும்போது இடைவெளியில் வீரர்கள் குடிக்கும் செங்கருப்புத் திரவத்தை தானும் குடிக்க வேண்டும் என அலம்பல் செய்கிறது.

தன் நிறம் மீதுள்ள ஏக்கத்தால் விளம்பரத்தில் வரும் சர்ப் கொண்டு வெளீர் நிறமாக முடியாதா என நினைக்கிறது. அடுத்த ஜென்மத்திலாவது வெள்ளையாகப் பிறக்க வேண்டும் என மனிதனைப் போல் ஏங்குகிறது. உடனே பேர் அண்ட் லவ்லி விளம்பரம் வந்து அதன் கவனத்தை கவர்கிறது.

அதற்குள் புறாவுக்கு பசி எடுக்கிறது. மூளையை விழுங்கி மெல்ல கால் வழியே வழியவிட்டபடி தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருக்கும் மக்களிடன் முறையிடுகிறது. யாரும் அதை கவனிக்கவில்லை.மெல்ல அடுத்த வீட்டுக்குள் நுழைந்து அந்த தொலைக்காட்சியில் வரும் அருண் ஐஸ்கிரீம் விளம்பரத்தைப் பார்க்கிறது. `அருண் ஐஸ்க்ரீம், அருண் ஐஸ்க்ரீம்..` என புறா கத்த, அதுவரை புறாவையே பார்த்திராத குண்டு சிறுவன் `அப்பா புறா, புறா` என அலறுவதோடு கதை முடிகிறது.

அற்புதமான நடையில் ஆச்சர்யமான உவமைகளுடன் இக்கதை கையாளப்பட்டுள்ளது. உயிரை விட முக்கியமானது என தன்னகப்படுத்தும் பொருட்களின் மேலுள்ள ஈர்ப்பு எவ்வளவு தற்காலிகமானது? என் நண்பனிடன் ஐபேட் பற்றி கேட்டபோது அவன் `It's not something I need, but one I want` என சொன்னது நினைவுக்கு வருகிறது.

பா.செயப்பிரகாசத்தின் மொழி கவித்துவ உச்சத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்கிறது. முழுவதும் படிமங்கள் சார்ந்த கதை என எதுவும் இத்தொகுப்பில் இல்லை. எதார்த்தமான கதைகள், கூர்மையாக மொழி அலங்காரங்கள், சிக்கலான மெளனங்கள் என கரிசல் கதைகளைத் தாண்டி இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. ஆச்சர்யமூட்டும் வகையில் ஒரு தேய்வழக்கு கூட இல்லாமல், கதைகளை கட்டுக்கோப்பாக செப்பனிட்டுள்ளார்.

சில கதைகளில் பழைய பிரச்சார வாடை அடித்தாலும், மொழி இன்றைய காலகட்டத்தை கொண்டு அமைந்துள்ளதால் அவ்வளவாக உறுத்தவில்லை. நேரடியாக கருத்தாக்கங்களை முன் வைப்பது, தன்வயப்பட்ட சிந்தனைகளை கூறிச்செல்வது என பல உத்திகளை உபயோகப்படுத்தாததினால் பல கதைகள் நிறைவாக உள்ளன. இதனால் நவீன நகர வாழ்வின் உரசல்களை இயல்பாகச் சொல்லிச் செல்லும் சிறுகதை தொகுப்பாக இது அமைந்துள்ளது.

இவர் எழுதிய மற்ற தொகுப்புகளைத் தேடிப் படிக்க வேண்டும். முழு தொகுப்பாக வந்திருக்கிறதா என யாராவது சொன்னால் நல்லது. இப்புத்தகம் இணையக் கடைகளில் கிடைக்கிறதா தெரியவில்லை.

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்
முதல் பதிப்பு - 2001.

நன்றி: வார்த்தைகளின் விளிம்பில் - 5 செப்டம்பர் 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செ.வின் 'அம்பலகாரர் வீடு' - செ.சண்முகசுந்தரம்