இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலிருந்து ஈழப்போர் வரை…

பகிர் / Share:

01 முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லுரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பற...

01

முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லுரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பறைகளும் வைகைக் கரைக்கு மீது முதுகு காட்டியாவாறு விடுதிகளும் அதன் தனி அடையாளம்.

விடுதியிலிருந்த நண்பர் ஐ.ஜெயராமனின் அறையில் 1965 ஜனவரி 25 இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லுரி மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது.


அனைத்துக் கல்லுரிகளும் அவரவர் இடத்திலிருந்து புறப்பட்டு மதுரையின் மையத்தில் திலகர் திடலுக்கு வந்து சேருவது, பிறகு எல்லோரும் இணைந்து மாசி வீதிகள் வழியாய் மீண்டும் திலகர் திடலுக்கு வந்து சேரத் திட்டம்.

திலகர் திடல் அப்போது ஞாயிற்றுக்கிழமை சந்தையாய்ப் பயன்பட்டு வந்தது. சிறுவயதில் என்னைப் பிரமிக்க வைத்த திலகர் திடல் சந்தை இன்று என்ன கதிக்கு ஆளாகியிருக்கும் என்று தெரியவில்லை. அப்போதைய காலத்தில் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் அங்கே நடந்தன.

இந்தியே ஆட்சி மொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவை நண்பர்கள் காமராசன், காளிமுத்து எரிப்பதென முடிவு செய்யப்பட்டிருந்தது. நா.காமராசன் (கவிஞர்) முதுகலை முதலாண்டு கா.காளிமுத்து (முன்னாள் தமிழ்நாடு அமைச்சர்) இளங்கலை இரண்டாமாண்டு. முதலாமவர் எனக்கு ஒரு வகுப்பு மேலே. இவர் காளிமுத்து எனக்கு ஒரு வகுப்பு கீழே.

என்னுடன் இளங்கலை அறிவியல் இறுதியாண்டு பயிலும் ஹசன் முகமதுவுக்கு ஊர் மானா மதுரை அருகிலிருக்கும் இடைக்காட்டூர்.

சட்டத்தை எரிக்கு முன் கைது செய்து விடாமல் நண்பர்களுக்கு ஒரு தலைமறைவு வாழ்க்கை அவசியமாயிருந்தது. நண்பர் ஹசன் தன்னுடைய வீட்டில் அந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்தார். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரிய நியாயமில்லை.

போராட்ட நாளன்று முதலில் ராஜாஜி திடலைச் சென்றடைந்ததோம். தியாகராசர் கல்லுரி மாணவர்கள் அங்கு கொண்டு வரப்பட்டிருந்தார்கள். காளிமுத்துவும், காமராசனும் மாணவர்கள் சுற்றி பாதுகாப்புடன் வர, திடல் மேடையில் ஏறி சட்டப் பிரிவுக்குத் தீயிட்டார்கள்.

அவர்கள் கைதாகி காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு விளக்குதுண் காவல் நிலையத்திற்கு கொண்டு போகப்பட்டிருந்தார்கள்.

சந்தைத் திடல் பத்தாயிரம் மாணவர்களின் கொந்தளிக்கும் கடலாக மாறியிருந்தது. நான்கு மாசி வீதிகள் வழியாகச் செல்லும் திட்டப்படி வடக்கு வீதி முனையில் ஊர்வலம் நுழைந்த போது, காங்கிரஸ் கொடி கட்டிய ஒரு ஜீப் வேகமாக கடந்தது.

ஜீப்பில் இருந்தவர்கள் காறி உமிழ்ந்ததாக செருப்பைக் காட்டி மிரட்டியதாக சொன்னார்கள். மாணவர்கள் பதிலுக்கு சேட்டை தோள்கள் கொடுத்திருப்பார்கள். ஆனால் ஜீப் வேகமாக ஓடி விட்டது.

வடக்கு மாசி வீதியின் நடுவில் இருந்த மாவட்ட காங்கிரஸ் அலவலகத்தை பாதிக்கூட்டம் கடந்திருந்தது. காங்கிரஸ் அலுவலகத்திற்குள் இருந்து சிலர் மாணவர்களை மோசமாகத் திட்டினர். கோபம் கொண்ட மாணவர் கூட்டம் அவர்களை நோக்கிக் கத்தியது. வீரையா என்ற காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவன் மாணவர்களை அரிவாளால் வெட்டினான்.

அமெரிக்கன் கல்லுரி  மாணவர் இருவர், அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் வெட்டுப்பட்டனர்.

காங்கிரஸ்காரர்கள் மாணவர்களை வெட்டிவிட்டார்கள் என்ற சேதி எட்டியதும், முன் பகுதியில் கடந்து போய் விட்ட மாணவர் கூட்டம், காங்கிரஸ் அலவலகம் நோக்கித் திரும்பியது.

அந்தத் திரும்புதலில் நீண்ட தூரம் உள்வாங்கிய கடல் மறுபடி கரை நோக்கித் திரும்புகிற ஆவேசம். மிருதுவான நீருக்கே அந்த மூர்க்கமென்றால், இரத்தமும், சதையுமாய் உயிர்ப்புக் கொண்ட மாணவர்களுக்கு?

காங்கிரஸ் வாசல் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்புக்கு நின்ற போதும், மாணவர்கள் பக்கத்து வீட்டு வழியாய் ஏறி, மாடியில் பறந்த காங்கிரஸ் கொடியை இறக்கிக் கிழித்தனர். அதே கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றினர்.

கலவரம் நிகழ்ந்து விட்ட இடத்துக்கு காவல்துறை குவிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரியைச் சுழ்ந்து கொண்டு ‘உள்ளே இருக்கும் ரௌடிகளைக் கைது செய்” – என்று கூச்சலிட்டார்கள். காவல்துறை அதிகாரி உள்ளே போய் இருவரைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றினார்.

மறுநாள் கொண்டாடப் பட நிறுவியிருந்த குடியரசு தின வளைவுகள் தீக்கிரையாகின. மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. நகரம் முழுவதும் 36 கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கணக்குச் சொன்னார்.

மாணவர்கள் குத்து மண் எடுக்கும் கொம்புக் காளைகளாய் நகரெங்கும் ஓடிப் பறந்தார்கள். எங்கெங்கு காங்கிரஸ் கொடி காணுமோ, அதையெல்லாம் வெட்டிமுறித்து வீசினார்கள்.

மதுரை மாசி வீதிகள் தாண்டி வெளி வீதிகளுக்குப் பாய்ந்த போராட்ட மாணவர்களை பொலிஸ் விரட்டியது. மாணவர்கள் சந்து பொந்துகளில் புகுந்து ஓடினார்கள்.

செய்தி பரவிப் பரவி எல்லா இடங்களிலும் கடைகளை அடைந்திருந்தார்கள். மேலக் கோபுர வாசல் வீதியிலிருந்து சென்ட்ரல் திரையரங்கு முன்னால் மூடிய புத்தகக் கடை முன் களைத்துப் போய் உட்கார்ந்தேன்.

அந்த வழியாய் சில மாணவர்களுடன் வந்த மதுரைக் கல்லுரி மாணவர் ராமசாமி (என்று தணியும் இந்த மொழிப்போர் எழுதியவர்) என்னைப் பார்த்து வாங்க தீர்மானம் நிறைவேற்றி வந்து விடுவோம் என்று அழைத்தார். எந்த எதிர்ப்பை முன்னிறுத்தி, மாணவர்களின் அணிவகுப்புத் தொடங்கியதோ, அதன் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றும் பணி மீதி இருந்தது.

கொஞ்சப்பேரை இணைத்துக்கொண்டு மீண்டும் சிறு அணிவகுப்பு நடத்தி திலகர் திடலில் போய்க் கூடி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினோம்.

ஓன்று இந்தியை எதிர்த்து,

இரண்டாவது ஊர்வலமாய்ச் சென்றவர்கள் மீது காங்கிரஸ்காரர்கள் நிகழ்த்திய வன்முறையைக் கண்டித்து.

மதுரையில் மாணவர்கள் வெட்டுப்பட்டார்கள் என்ற செய்தி சென்னையில், சிதம்பரத்தில், கோவையில், நெல்லையில் எங்கெங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

இந்தி எதிர்ப்புப் போரின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது மதுரை.

மதுரைத் தீ, சென்னை, சிதம்பரம், கோவை, நெல்லை, விருதுநகர் என திசையெங்கும் பரவியது.

சென்னையில் பச்சையப்பன் கல்லுரி விடுதி, வெங்கடேஸ்வரா மாணவர் விடுதிகளில் தடியடி,
பேரணி சென்ற மாணவர்களை கோட்டையிலிருந்து கொண்டே முதலமைச்சர் பக்தவச்சலம் சந்திக்க மறுப்பு.

மதுரையில் மாணவர்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மறுநாள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 26.01.1965 இல் நடத்திய எதிர்ப்பு ஊர்வலத்தில் துப்பாக்சிச் சூட்டில் மாணவர் ராசேந்திரன் மரணம். ரத்தச் சேறாகியது தமிழகம்.

02

தமிழ்த் தேசிய இன விடுதலைப் போரின் தொடக்கப்புள்ளி அது. இன விடுதலைப் போராட்டம் நமது விருப்பம் மட்டுமேயல்ல.
வரலாற்றின் நிர்பந்தம்.

வரலாற்றின் கட்டளையைப் புரிந்து மாணவர்கள் நடத்திய இரு மாத கால இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தினை தொடர்ந்திருந்தால், அது இன விடுதலைப் போராக மாறியிருக்கும்.

வரலாறு தமிழர்களுக்கு இரு வாய்புகளைக் கையில் அளித்தது.

முதல் நிகழ்வு-

இந்திய விடுதலையின் போது, இந்தியா, பாகிஸ்தான் என்று இரு தேசங்கள் உருவாகிய வேளை.

இந்திய விடுதலைக்கு சற்று காலம் முன் வரையிலும் கூட தமக்கென்று தனிநாடு கோரும் எண்ணம் ஜின்னாவுக்கோ, அவருடைய குழுவுக்கோ உருவாகியிருக்கவில்லை.

இந்திய விடுதலையை கையளிக்கிற தருணம் வந்த போது அந்தத் தருணத்தை ஜின்னா உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார். இந்தியத் தலைவர்களுக்கு, தனியரசு என்ற கோரிக்கை அதிர்ச்சியைத் தந்தது.

நல்ல தருணமிது, நழுவவிடாதே என்று சமயோசிதமாகவும், வரலாற்றை வடிவமைக்கிற கடப்பாட்டினையும் புரிந்து கொண்ட ஜின்னாவுக்கு அது எளிதாயிற்று.

இந்துத்வா கருத்தாக்கத்தில், அன்றே தொடங்கிய விடுதலைப் போரை, அதன் இந்தியத் தலைவர்களை, ஜின்னா நம்பத் தயாராயில்லை. ஜின்னா

லேசாய் ஒரு சுண்டு சுண்டியதும், பிரிட்டன் போகிற போக்கில் பாகிஸ்தான் என்றொரு பாகத்தை பிளந்து தந்து விட்டுப் போனது.

வரலாறு கையளித்த இந்த முகூர்த்த வேளையை தமிழகத் தலைவர்கள் கை நழுவ விட்டார்கள்.

அந்த நேரத்தில் தமிழ்த் தேசிய இனத்துக்கென தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தால், பிரித்தானியனுக்கு அது ஒன்றும் கடினமான காரியமாக இருந்திருக்காது.

மொழி, இன, பண்பாட்டு அடிப்படைகளில், வட இந்திய ஆரியத்திடமிருந்து முற்றிலும்  வேறுபாடான அடையாளங்களைக் கொண்டிருந்த தமிழ் நிலம் தனிநாடாகியிருக்கும்.

இரண்டாவது நிகழ்வு-

1965 இந்தி எதிர்ப்புப் போர்:

மாணவர்கள் ஆவி தந்து நடத்திய போரை, இன விடுதலையாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.

தமிழினத்தின் முன்னோடியாக அவர்கள் தாம் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர்.

திட்டமிடல் அற்ற தன்னெழுச்சியில் விளைந்தது இந்தப் போராட்டம். இதனை தனித்தேச போராட்டமாக எடுத்துச் செல்ல முடியாது| என்ற கருத்தாக்கம் அண்ணா போன்ற மிதவாதிகளுக்குள் இருந்தது.

பல நிகழ்வுகளில் தன்னெழுச்சிகள் விடுதலையை வடிவமைத்துள்ளன. தன்னெழுச்சி என்பது, வரலாற்றுப் போருக்கான முன் உந்துதலாகவும் இருந்திருக்கிறது.

தன்னெழுச்சிகளின் வழியே போராட்டம் வழிந்து போய் விடாமல், தன்னெழுச்சியை சரியான திசை வழிக்குப் பயன்படுத்தி ஒரு கட்டுக்கோப்பை உருவாக்கி எழுச்சியாக வளர்த்து மேலேடுத்துக் சென்றிருக்க முடியும்.

‘புரட்சிகரச் சுழ்நிலை இருந்து விட்டால் மட்டும் போதாது - அதற்கோர் புரட்சிகர அமைப்பும் வேண்டும்” என்ற லெனினை இங்கு நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போனோம்.

கொஞ்ச காலம் திராவிட நாடு மாயையில் இருந்து, 1962 இல் இந்திய சீன எல்லைப் போரைக் காரணம் காட்டியும் அடக்குமுறைக்கு அஞ்சியும் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை பரணில் தூக்கி வைத்து விட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அப்படியொரு விடுதலை இயக்கமாக தம்மைக் கட்டியமைக்க விரும்பவில்லை.

திராவிட நாட்டுப் பிரிவினையைக் கைவிடுதலும் அரசாங்க அதிகாரத்தில் பங்கேற்பதை நோக்கிய பயணிப்பும் ஓரிணைவாக நடந்தேறின. தமிழக அதிகாரத்தினை கைவசப்படுத்துதல் அதற்கான தேர்தல் பாதை எல்லாமும் சுய நலமாய் நீர்த்துப் போகச் செய்தன.

விடுதலைப் போராட்ட இயக்கத்துக்கான தோற்றம் மட்டுமே 1962 வரை தி.மு.க.வுக்கு இருந்தது விடுதலை இயக்கத்துக்கான இயல்புகள் எதுவும் இருந்ததில்லை.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீரித்துப் பிறந்ததல்ல இந்தியக் கூட்டாட்சி முறை.

இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு, அப்படியொன்று இருப்பதே தெரியாது. தேசிய இனங்களின் பிரச்சினையை மட்டமல்ல. இனங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் தலையிடும் முண்டுதலோ, தீர்த்து வைக்கும் அவாவோ, தீர்த்துத் தரும் வலிமையோ அதற்கில்லை.

காவிரி நதி நீர்ப் பிரச்னை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் பிறகும் முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரளப் பிரச்னை, பாலாற்றில் தடுப்பு அணைகள் கட்டும் ஆந்திரம்- என அவரவர் எல்லைகளுக்குள் பயங்கரவாதத்தை நடத்த நடுவணரசு அனுமதித்துள்ளது.

நதி நீரை முடக்கி, இன்னொரு இனத்தின், மீது நடத்தும் வன்முறையை – இன்னொரு நிலத்து மக்களின் வாழ்வதாரப் பறிப்பை – இந்த ஒடுக்குமுறையை ஆட்சிக்கு வந்த எந்த மத்திய அரசும் தீர்த்து வைப்பதில்லை.

ஓவ்வொரு மாநிலமும், அவரவர் இன நலம் காக்கவே, இந்தியாவுக்குள் இயங்குகின்றன, ஆனால் தமிழன் மட்டும் உருவாகாத இந்திய தேசியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்டவனாகியிருக்கிறான்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்ற்றியது மட்டுமே இந்தி எதிர்ப்புப் போரில் கிடைத்த லாபம். ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர் பாதுகாப்பு பற்றிக்கூட சிந்திக்காது விட்டார்கள்.

நடுவண் அரசில் மாறி மாறி ஆட்சி வந்தால், அதைப் பயன்படுத்தி மத்திய அதிகாரத்திலும் பதவி சுகம் காணுவது என்று திராவிடக் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு – இந்தி எதிர்ப்பை மட்டுமேயல்ல, மாநில உரிமைகள் எல்லாவற்றையும் கைகழுவும் இடத்துக்குத் தள்ளியுள்ளது.

03

பாலஸ்தீனத்தில் காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலால் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டணத்தைத் தெரிவித்துக்கொள்வதாக சென்னை வந்து பேசியிருக்கிற இந்தியப் பிரதமர் (08.01.09) ஈழத்தில் கொல்லப்படும் ஆயிரக்கணக்hனவர்களுக்கு ஒப்புக்காக கூட கண்டனம் உதிர்க்கவில்லை.

செஞ்சோலையில் சிறுமிகள் 62 பேர் கொல்லப்பட்டபோது ஒரு இரங்கல் செய்தி தானும் இல்லை.

ஆனால் – சென்னையிலிருந்து இந்திய உளவு விமானங்களில் றோவின் (சுயுறு) அதிகாரிகள் புறப்பட்டு கிளிநொச்சி, வன்னிப்பகுதிகளில் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, கிழே ஒரு ஆள் நடமாடுவதைக் கூட படம் பிடித்துத் தரும் வல்லமையுடைய கருவிகளால் படம் பிடித்து இலங்கை இராணுவத்துக்குப் பகிர்ந்தளித்து விட்டுத் திரும்பியுள்ளனர்.

அமெரிக்கா, பாகிஸ்தான், இந்திய இராணுவத் தளபதிகள் கூட்டாக இலங்கை இராணுவத் தளபதிகளுடன் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சிக்குப் போய் போராளிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்புகளுக்கு திட்டமிட்டுக் கொடுத்து ஆலோசனை வழங்கி வந்துள்ளனர்.

இந்தி எதிர்ப்புப் போரில் ஆரம்பித்து இன விடுதலைப் போராய் மாற்றியிருந்தால், இங்குள்ள தமிழர்களை இளிச்சவாயர்களாய்க் கருதி, ஒதுக்கித் தள்ளும் அவலம் நிகழ்ந்திருக்காது.

வரலாற்றை நாமே சரணடைய வைத்து விட்டோம். தகுதியற்றவர்களிடம் சரண் அடைந்துள்ளோம்.

மும்பையில் நட்சத்திர விடுதிகளில் பத்து இருபது பேர் கொல்லப்பட்டதற்கு பதறித்துடிக்கிறவர்கள், இலங்கையின் இனவெறி பாசிசத்தால் இதுவரை ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு, ஒரு அசைவும் இல்லை.

இந்தி எதிர்ப்பைக் கொன்று முறித்துப் போட்ட இரத்தக்கறை, இன்று ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் துணை செய்யும் இரத்தக் கறையாக தி.மு.க.வின் கரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

2002 ஒக்ரோபரில் நாங்கள் ஈழம் சென்ற போது தலைமைப் போராளி பிரபாகரனைச் சந்தித்து உரையாடினோம்.

‘எங்களுக்கென்று ஒரு மண் இருக்கிறது.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று அந்த உரையாடலின் போது குறிப்பிட்டார்.

வருக மீண்டும் என்று வழியனுப்பியது பசுமை நினைவுகளாய் ஓடுகின்றன.

இந்த மண் நம்முடைய பூமியாக இல்லாத போது, அந்த மண்ணுக்கு நாங்கள் எப்படிப் போக? இந்த மண்ணில் எமது காலடிகள் சுயநிர்ணய உரிமையாய் உறுதியாகப் பதியாத போது, இன்னொரு பூமிக்கு நினைத்தவாறு பயணம் போக ஏலாது.

1970-களில் ஈழத் தமிழ்த் தலைவர்கள் பெரியாரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை எடுத்துரைத்த போது கவனமாய்க் கேட்டுக்கொண்ட பெரியார் சொன்னார்.

‘நாங்களே அடிமைகளாக இருக்கிறோம்.
அடிமைகள் இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்குத் துணை செய்ய முடியுமென்று தோன்றவில்லை.”

சுயநிர்ணய உரிமை கொண்ட ஆட்சியைக் கொண்டிருந்தால், ஈழச் சகோதரர்களுக்காக எவரையோ, கெஞ்சிக் கொண்டிருக்கிற அனாதரவான நிலையில் நின்றிருக்க மாட்டோம்.

எங்கிருந்து எங்கு செல்வது?

பா.செயப்பிரகாசம்,
எழுத்தாளர், செயலாளர்,
தமிழ்ப்படைப்பாளிகள் முன்னணி.

25 ஜனவரி 2009
நன்றி: தமிழ் நாதம், பொங்கு தமிழ், தமிழ் தேசியம்

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content