பா.செயப்பிரகாசம் எழுதிய இன்குலாப்: சாகாத வானம் நூலிலிருந்து…


முன்புறம் அலை குதிக்கும் தெப்பக்குளம். பின்புறம் பெருகியோடும் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில் அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும். வைகை நதிக்கு- கரை எல்லைகள் தவிர கால எல்லை கிடையாது. தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி, இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக் காலத்தில் கவிதை வடித்ததுண்டு.

ஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல் என்ற பேர் கல்லூரிக்கு!

கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், அபி என தமிழில் தடம்பதித்த கவிஞர்கள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம். அப்போது தமிழ் இளங்கலை (பி.ஏ) இறுதியாண்டில் கவிஞர் நா. காமராசன். நான் தமிழ் இளங்கலையில் இரண்டாமாண்டு மாணவன். எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது என அறியப்பட்ட இன்குலாப் இளங்கலை முதலாண்டில் சேருகிறார். அவருடைய வகுப்பு நண்பர்கள் மேனாள் அமைச்சரும் சட்டப்பேரவைத் தலைவருமான மறைந்த கா.காளிமுத்து, கவிஞர் மு. மேத்தா அனைவரும் முன்பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சோலைப் பறவைகள்.

தமிழ்நாட்டில் மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - மூன்று கலாசாலைகள் அன்றைய அறுபதுகளில் தமிழ் வளர்ப்பில் முன்னணியில் இயங்கின.

நினைவுகள் பழுதுபடாதிருக்குமானால் அது 1963. சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியர் கவிஞர் மீராவின் மாணவராய் புகுமுக வகுப்பு முடித்த எஸ்.கே.எஸ். சாகுல் அமீது, தமிழ்க் காப்பில் முன்னிற்கும் தியாகராசர் கல்லூரியில் 1963-இல் இளங்கலை (பி.ஏ) சேருகிறார்.

மரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார். பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் வீரியமான சொல்லாடல்களைக் கைவசப்படுத்தினார்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி)

இஸ்லாமியரில் கீழ்சாதி என ஒதுக்கப்பட்ட ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டது. திருமணத்தின்பின் நாவிதர்கள் வீடுகள்மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

இஸ்லாமிய சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த நாவிதக்குடி- அவர் பிறந்தது.

நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை.

சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பவை. தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு- மரைக்காயர் முஸ்லிம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது. நாவித முஸ்லிம் இளைஞர்களின் அயராத முயற்சியால் “நாசுவக்குடி’ என்னும் அந்தப் பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள் எதிர்ப்புக் கங்கு சீராய் வளர்ந்தது என்பதின் நிரூபணம் அவர் எழுதிய யாப்புசார் கவிதைகளும், யாப்பு வழிப்படாத புதுக்கவிதைகளும், மரபுக் கவிதையானாலும் புதுக்கவிதையானாலும் எதை விதைத்தாலும் எதிர்க்கருத்தியல் பீறிட்டமைக்கு ஒடுக்கப்பட்டோர் குரலிலிருந்து உருவான வேர் காரணம்.

“செத்தும் கொடுத்த சீதக்காதியின்” பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை. சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. சீதக்காதிகள் இல்லை. கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி “ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய்முகங்களை” புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

“என் போன்ற எளிய குடும்பத்தவர்கள்மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.

புனைபெயர் வரித்துக் கொள்ளல்

மரபுக் கவிதை வடிவத்தில் காலடிவைத்த எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது, புனைபெயர் சூட்டிக்கொண்டவுடன் புதுக்கவிதையில் பயணித்தார். இளங்கலை முடித்த ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் பணி, 1967-இல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக நடத்திய “கார்க்கி’ இதழில் எஸ்.கே. சாகுல் அமீது- இன்குலாப் ஆகிறார். அதே கார்க்கியில் அந்நாட்களில் பா. செயப்பிரகாசம், சூரியதீபன் ஆனார். சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற அப்போதிருந்தே (1967) சொந்தப் பெயர் பின்னுக்குப் போய், இன்குலாப் என்ற பெயர் அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர் ஆகியது போல் எஸ்.கே.எஸ். சாகுல்அமீது மறைந்து இன்குலாப் இயற்பெயராகியது.

“ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம் புதுமைப்பித்தன்போல- அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக்கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்” என்கிறார்.

தியாகராசர் கல்லூரியில் பயின்றபோது அக்காலத்தின் இளைய தலைமுறை எப்படி உருவாகிற்றோ அப்படியே தி.மு.க. பற்றாளர்களாக நாங்கள் உருவானோம். சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 டிசம்பரில் 44 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை எம்மிடம் மார்க்சியத்திற்கு உறுதியான அடித்தளம் அமைத்தது. அரசதிகாரத்திலிருந்த தி.மு.க.வின் பண்ணை ஆதரவுப் போக்கு எம்மை மார்க்ஸீயச் சிந்தனையின் பக்கம் நடத்தியது.

“ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச் செல்வதுதான் பகுத்தறிவுபூர்வமானது.

அவ்வாறு உதறுவது பரந்துபட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்கவேண்டும்” என்பார் இன்குலாப்.

“ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார்

ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதலுக்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

கீழ்வெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்ட புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிமாணத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் வலுவான துணையாற்றி இருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி, மார்க்சிஸ்ட் கட்சி சார்புடையவராய் ஆகியதும், பின்னர் புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்சிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசிய விடுதலையில் ஊறி நிற்பதுவும் அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

புரட்சிகர மா.லெ சிந்தனைகளுக்குள் ஈர்க்கப்பட்டு நகர்ந்த வேளையில், இன்குலாபும் நானும் வேறுவேறு குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர விடுதலை முனைப்பில் ஒன்றாய்ப் பயணப்பட்டிருந்தோம். புரட்சிகர மா.லெ இயக்கச் செயல்பாட்டில் இணைந்தபோது “மனிதன்’, “புதிய மனிதன்’ என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் அவராக இருக்காதே தவிர, முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கினார். ஆனால் “புதிய மனிதன்’ இதழில் சிறப்பாசிரியர் இன்குலாப் என இருந்தது.

மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் “மனஓசை’ என்ற கலை இலக்கிய சமூக அரசியல் மாத இதழ் 1981 நவம்பர் முதல் பத்தாண்டுக் காலம் நடைபோட்டது. நிலவும் கருத்தியலுக்கு எதிராய் எதிர்க் கருத்தியலை முன்னிறுத்தி “மனஓசை’ நடந்த பத்தாண்டுக் காலமும் அதன் ஆசிரியராய் பின்னிலிருந்து இயக்கினேன். அப்போது அரசுப் பணியிலிருந்தேன். அதனால் தலைமறைவு ஆசிரியர். சூரியதீபன் என்னும் புனைபெயர் பலவழிகளிலும் உதவியது.

'மனஓசை’ முதல் இதழில் இன்குலாப் எழுதத் தொடங்கிய “விடியல் கீற்றுக்கள்” என்ற தொடர் ஒரு முக்கியமான பதிவு. மரபுவழிப்பட்ட கவிதைகளிலிருந்து புதுக்கவிதை உருவாகி வந்தது எப்படி என்பதையும், புதுக்கவிதையின் சிந்தனா வேகத்தை நாட்டுப்பாடல் இலக்கிய வகைகளில் இணைத்து, தமிழகத்தின் சனநாயகப் புரட்சிக்கான இலக்கியங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டியதன் அவசியத்தையும் பதிவிட்டிருந்தார். அக்கட்டுரையில் அவரே குறிப்பிடுவது போல் “இருண்ட வீட்டில் சிம்னி விளக்கு ஒன்று இருளுடன் போராடி ஒளி தருவதுபோல்” கோடிகாட்டின குறிப்புகள்.

காலத்தின் கவிதை இயல்

கவிதை இயலின் எழுச்சிக்காலம் அது. 70-கள், 80-கள் வசந்தத்தின் இடிமுழக்கத்தை எடுத்து வந்தவை. இந்திய மொழிகளில் ஏறக்குறைய பெரும்பான்மை மொழிகளின் கலை இலக்கிய வெளிப்பாடு புரட்சிகர உந்துதலை உருவாக்கும் உரைநடை, கவிதை, உருவகம் என எழுத்தாகவும், நாடகம், கூத்து, பாடல் என நிகழ்த்து கலைகளாயும் எழுச்சிகொண்ட காலம். அக்காலத்தின் கவிதை இலக்கியப் பிரதிநிதியாய் இன்குலாப் எழுந்துவந்தார். “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா” 1982-இல் அவர் எழுதிப் பாடிய கவிதைப் பாடல்.

இக்காலகட்டத்தில் கவிதையின் பாடுபொருள், சொல்முறை, வடிவம் போன்றவை வேறொரு எல்லைநோக்கி நகர்ந்தன. தமக்குள் வட்டமிட்டு, கும்மியடித்து செல்வாக்குச் செலுத்திய கலைப்பார்வை கொண்டோரிடமிருந்து மாறுபட்டு, மக்கள் பரப்பினை இக்காலக் கவிதையியல் முதன்மைப்படுத்தி இயங்கிற்று. மொத்தக் கவிதைகளும் இக்கவிதையியலின் சான்று. இதன் ஒரு துளி இன்குலாப்பின் 'நாடோடிகள்’ கவிதை.
“மூலைக் கோடியில் ஊரின் கடைசியில்
மணலின் விரிப்பில்
பந்தங்கள் ஏற்றி ஆடுகின்றாரோ
பந்தயம் போட்டுப் பாடுகின்றாரே
இவர்கள் தேசீயகீதம்
பாடத்தெரியாமல்
தெம்மாங்கு பாடத் தெரிந்த
நாடோடிகள்.
கூடுகட்டத் தெரியாத
குயில்களைப்போல்
வீடுகட்டத் தெரியாத
கூடாரக் குயில்கள்”
விளிம்புநிலை நோக்கிய சிந்தனைப் பார்வையுடன் அழகிய பகட்டற்று கவிதை வெளிப்பட்டது.

“ஒரு கவிதை அதற்குரிய கலைநியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் படைப்புகள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிக் கவிதைப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக எனது கவிதை இருந்துவந்துள்ளது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நேர்ந்தது.”

தன் படைப்புகள் பற்றி சுயவிமர்சனம் கொண்டிருந்தார். சுயவிமர்சனப் பார்வை கொள்ள, பிறர் தன்படைப்பு மீது வைக்கும் விமர்சனத்தைப் பங்கீடு கொள்ள அவர் தயங்கியதில்லை. தன்னளவில் நேர்மைகொண்ட ஒருவர் படைப்பாக்க விசயத்திலும் அவ்வாறுதான் இயங்க இயலும். சில கலை இலக்கியவாதிகள் போல் சுயமதிப்பீடு என்றால் காசுக்கு எத்தனை என்று கேட்கும் தன்மோகம் இல்லை. சுயமதிப்பீடு கொண்டதால் அவர் கவிதையின் வேறொரு தளத்துக்கு நகர்ந்தார்.

“என் குறைகளை நான் உணரும்போதும் பிறர் உணர்த்தும்போதும் ஏற்கத் தயங்கியதில்லை. இதை எழுதி என்னை நான் அம்பலப்படுத்திக்கொள்வது குறித்து எனக்கொரு கூச்சமுமில்லை.”

இந்த நேரத்தில் “இன்குலாப் எழுதியவைகளில் ஒரு வரியைக்கூட கவிதை என என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது” என்று வெளிப்பட்ட ஜெயமோகனின் முரட்டு முன்மொழிவையும் மறந்துவிடுவதற்கில்லை. அத்தனையும் கவிதைக் கனிகள் என்று சொல்கிற புகழ்வையும் அவர் ஏற்கவில்லை.

“இவை கவிதைகளே இல்லை என்பவர்களுக்கு எனது மௌனத்தை மட்டுமே விடையாக்கிக் கொள்கிறேன். என் கவிதைகளுக்கு நானே பரிந்துரை, விளக்கவுரை செய்கிற தவறுகளை ஒருபோதும் செய்யமாட்டேன். எனது நிறத்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகுமட்டும் பூப்பேன்.”

இது கவிதை என்போருக்கும் கவிதையில்லை என்போருக்கும் இடையில் ஒரு எல்லையில் அவர் ஜீவித்துக் கொண்டிருப்பார்.

அவர் கையிலெடுத்த புதிய கவிதையியலிருந்து, 2000-க்குப் பின் சன்னம் சன்னமாய் நிகழ்ந்து கலைக்குள் பிரவேசித்தார். நெறியாளர் அ. மங்கையுடன் இணைந்து அவ்வை, குறிஞ்சிப்பாட்டு, மணிமேகலை போன்ற நாடகப் படைப்பில் அவர் படைப்புப் பணி திரும்பியது இத்தகைய பயணத்தில் அ.மங்கையும் அவரும் இணைந்து புதிய நாடக நெறியியலை உருவாக்கினார். மராட்டியத்தில் வி.எஸ்.காண்டேகரின் யயாதி, இந்தியில் கோவிந்தாச்சார்யாவின் “மஹாபாரதத்தில் பெண்ணியம்’ தமிழில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்று மறுவாசிப்பில் நாடக உருக்கொண்டவை இவை. இங்கு எப்போதும் கலைஞனின் ஒருதுறைப் பணி என்பது பல்துறைப் பணியாய், பல்துறை சார்ந்தும் படைப்பு அனுபவமாய் சிறகு விரிக்கும். பன்முகத் தன்மை எனப்படுவது ஓரொரு கலைஞனும் தன் படைப்புத் திறனைக் கூட்டல் கணக்கிலேயே வைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு.

நாங்கள் ஒருசாலைக் கல்விப் பறவைகள், சமகாலப் படைப்பாளிகள், ஒரே திசையில் இணைகோட்டில் பயணித்தோம். வேறெந்த இலக்கியக்காரனையும் பற்றிப் பேசுவதிலும் இவரைப் பற்றிப் பேசுவதில் நெடுங்கால நெருக்கமும் கருத்துக்களும் உண்டு.

அவர் தனது திறமையை மட்டுமே நம்பியதில்லை. நேர்மையை நம்பினார். சொல்லும் செயலும் ஒன்றான வாழ்வியல்மீது நம்பிக்கை வைத்தார். திறமை எல்லாக் காலத்தும் துணைவராது என்பதை நம்மைப்போல் அவரும் அறிந்திருந்தார். திறமையினால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திவிடலாம் என்ற வல்லமை பின்னர் “ராஜதந்திரமாக’ மாறுகிறது. திறமை, ராஜதந்திரம் என்ற குணமாற்றம் கொள்கிற எல்லைதான்- வஞ்சனை, சூழ்ச்சி, துரோகம், ஏமாற்று, உள்ளீடற்ற உச்சரிப்பு, தன்னலம் போன்ற கீழ்மைகளில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

சுயமுரண்களற்ற சொல்லை, வாழ்வை அமைத்துக் கொண்டார். நேர்கோட்டுத் தன்மை கொண்ட கொள்கைரீதியான வாழ்வு கொண்டிருந்தார்.

ராஜதந்திர முன்னகர்வுகளில் மேலேறுகையில், வேறொன்று நிகழ்கிறது. தன்திறன்கள் கொஞ்சமாய்க் கரைதல் என்னும் பின்தள்ளிப் போதல் தானறியாமல் நடக்கிறது.
“எந்த சுரண்டல் சாம்ராஜ்யங்களின்
தர்பார் மண்டபங்களில்
நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ
அந்த சாம்ராஜ்யங்கள் பரிவாரங்கள்
வேதங்கள் பஜனைகள் எல்லாம்
இந்த யுகப் பிரளயத்தின்
கந்தக அலைகளால் சாம்பலாகின்றன”
உயர்த்திப் பிடிக்கிற உன்னதங்களும், புராணங்களும், வீரயுகப் பஜனைகளும் மக்கள்யுகத்துக்கு என்ன பொருத்தப்பாடு கொள்ள முடியும் என்கிற காலம் பற்றிய கணிப்பு வேண்டும். முந்திய பெருமிதங்களில் மனங்களை மூழ்கடித்து தலைஎழுந்து வரமுடியாமல் செய்வதல்லாமல் இதெல்லாம் வேறென்ன? சமகாலத்தின் கந்தக அலைகள் இவை அத்தனையையும் சாம்பலாக்கும் என்பதனை “கண்மணி ராஜம்” கவிதை இராஜராஜனையும் மீதம் வைக்காமல் எரித்துப் பொசுக்கியது. சிலையான பின்னும் மக்களாட்சி மகத்துவத்தை கேலிக்காட்படுத்தல் எவ்வகையில் நியாயம் எனக் கேட்கிற கேள்வியில் அறம் பொதிந்துள்ளது.

(பா.செயப்பிரகாசம் எழுதிய இன்குலாப்: சாகாத வானம் நூலிலிருந்து…)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்